- குப்பை லாரியில் வைத்து,
- கார் ஸ்டெப்னியில் வைத்து,
- 108 ஆம்புலென்சில் வைத்து,
- சவம் சுமக்கும் அமரர் ஊர்தியில் வைத்து,
- காவல்துறை வாகனத்தில் வைத்து,
- காய்கறி மூட்டைக்குள் வைத்து,
- பஸ்ஸில், லாரியில், அரிசி மூட்டையில்......என இடம் விட்டு இடம் விதவிதமாய் பணம் கடத்தியாகிவிட்டது.
- உறையில் போட்டு வீட்டுக்குள் வீசி,
- செய்தித்தாளோடு இணைத்து வீசி,
- குடும்பத்திற்கு ஒரு இருசக்கர வாகனம் வாங்க கூப்பன் கொடுத்து,
- பண்ட பாத்திரம் வாங்க கூப்பன் கொடுத்து,
- கோவில் திருவிழாவிற்கு என கோடியில் கொடுத்து
- பால்காரர் மூலம் பால்வாங்கிய கணக்கு கழித்து,
- ஸ்டிக்கர் பொட்டு அட்டைகளுக்குள் வைத்து,
- பேனாவில் ரீபிள்ளை கழட்டி பணத்தை சுருளாக வைத்து,
- வண்டி டேங்கை முழுதும் பெட்ரோல் நிரப்பி,
- கேபிள் வசூலுக்குப்போகும் போது பணம் கொடுத்து,
- கைமாத்து என்ற பெயரில் பணம் கொடுத்து,
- கந்து வட்டிக்காரர்களிடம் தவணை கட்டி….. என..... அடேங்கப்பா… வாக்களர்களுக்கு பணம் கொடுக்க வேட்பாளர் சார்ந்தவர்கள் உழைக்கும் உழைப்பு உலகம் இதுவரை கண்டிராத தந்திரம்.
மக்களுக்கு காசு போய்ச்சேர இத்தனை யுக்திகளை, தந்திரங்களை யோசிக்கும் இந்த தேசத்தை ஆள நினைக்கும் பெருமை(!) வாய்ந்த ஆத்மாக்கள், ஒரே ஒரு நாளாவது தங்கள் ஆட்சி இருக்கும்(வரும்)போது, இந்த மக்களுக்கு எந்தப் பிரதிபலனும் பாராமல், மனதார நல்லது செய்யணும் என்று நினைத்திருப்பார்களா? அப்படி அன்று சிந்தித்திருந்தால், அது எவராக இருப்பினும், இன்று கேவலம் குப்பை லாரியில் பணத்தை கடத்த வேண்டிய இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பார்களா என்ன?
இதுநாள் வரையிலும் இருந்த அதே சட்டங்களை வைத்துக்கொண்டே, இதுவரை இல்லாத அளவு நேர்மைத்திறனோடு அதை செயல்படுத்த முயலும் தமிழக தேர்தல் ஆணையர் திரு.பிரவீண் குமார் அவர்களுக்கு தமிழகம் என்றும் கடமைப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க வாகனப்பரிசோதனை, வங்கிக்கணக்குகளை கண்காணித்தல், டாஸ்மாக் கடைகளின் விற்பனை விகிதத்தை கண்காணித்தல் என புதுப்புது முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுப்பதும், அதைத்தாண்டி புதியதொரு யுக்தியை அரசியல்வாதிகள் புகுத்துவதும் என ஒரு யுத்தம் நடந்துகொண்டு இருக்கிறது.
எனினும் நாலரைக் கோடி வாக்களர்களை நாலரைக்கோடி இராணுவ வீரர்களை வைத்தா கண்காணிக்க முடியும். அடுத்த தலைமுறை குறித்த அக்கறையும், நம்பிக்கையும் கொண்ட மனிதர்களின் அதிகபட்ச ஒத்துழைப்பும், உதவியும் தேர்தல் ஆணையத்திற்கு தேவை! தமிழகத்தின் தேர்தலை முடிந்தவரை அனைவரும் பாராட்டும் வண்ணம், நேர்மையாக, ஒழுக்கமாக நடத்த முனைந்த தேர்தல் ஆணையத்தை பாராட்டவோ, நன்றி சொல்லவோ விரும்பினால், அதற்கு ஒரே வழி நூறு சதவிகிதம் நமது வாக்குகளை பதிவு செய்வதுதான். வாக்கு யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது 49 ஓ-விற்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கட்டாயம் நமது வாக்கு பதிவு செய்யப்படவேண்டும். விரல் நுனியில் படியும் ”கறை ரொம்ப நல்லது”
கூடவே… சீமான் சொல்வது போல்.....
“ஏன் ராசா, இம்புட்டு சிரமப்பட்டு எனக்குன்னு தேடிவந்து காசு தர்றியே, இது ஏது ராசா?, எங்க ராசா இத்தன காசு சம்பாதிச்ச?
களை பறிச்சியா? கரும்பு வெட்டினியா? கல்லு ஒடைச்சியா? கட்டிடம் கட்டுனியா? ஆட்டோ ஓட்னியா? ரிக்ஷா ஓட்னியா? ஏவாரம் பண்ணினியா? விவசாயம் பண்ணினியா? ஆடு மேச்சியா? மாடு மேச்சியா? பால் பீச்சினியா? தண்ணி பாச்சினியா? தறி ஓட்னியா?…..
என்ன வேலை செஞ்ச சாமி? இதெல்லாம் செஞ்ச நானு, உங்கிட்ட காசு வாங்குற நெலைமையில கை ஏந்தி நிக்கிறனே!
ஆமா, இத்தன கஷ்டப்பட்டு, எப்டியாவது எனக்கு காசு குடுத்து, எனக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறியே, அவ்வளவு நல்லவனா நீ!!!?” என என்று, இந்தச் சமூகம் ஒன்றுபட்டு குரல் உயர்த்துகிறதோ, அன்று கிடைப்பார்கள் நல்ல ஆட்சியாளர்கள்.
-0-
19 comments:
//எனக்கு நல்லது செய்யனும்னு நினைக்கிறியே, அவ்வளவு நல்லவனா நீ!!!?//
நல்ல கேள்வி. பதில் சொல்லத்தான் ஆளில்லை!
**********************
எனது தேர்தல் குறித்தைப் பதிவை நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்களேன்.
விவசாயம் செய்வோம், வாருங்கள்...!
நன்றி.
காசு கொடுத்து செயிக்கிற ஈனப் பொழப்பு...நடத்துறவன் எல்லாம் தலைவன்...!!!!
பகிர்வுக்கு நன்றிகள் கதிர்!
இந்த முறை மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர்...
Excellent Kathir. Sariyaana saattai adigal. Nallaa sodukunga.
அருமை. இதைப் படிக்கிறவர்கள் கண்டிப்பாக ஓட்டுப் போடவேண்டும் என்ற எண்ணம் வரும்.
விரல் நுனியில் படியும் ”கறை ரொம்ப நல்லது”
......கண்டிப்பாக!
எத்தனை பேருக்கு இந்தப் பதிவு போயி சேரும் என்று தெரியவில்லை ஆனால் இதை வாசிக்கும் நூற்றில் ஒருவருக்காவது விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது மட்டும் திண்ணம் . தேர்தல் ஆணையத்தின் இதே துரிதம் தொடரும் என்றால் விரைவில் நாமும் ஒரு சிறந்த நல் ஆட்சியாளரை பெறுவது உறுதி . பகிர்வுக்கு நன்றி நண்பரே
நச்!
சீமானின் கேள்விகள் சாட்டையடி. இத்தனை வழியில் பணம் கொடுக்க யோசித்தவர்கள் நல்லாட்சி தருவதற்கு கிஞ்சித்தேனும் யோசித்திருந்தால் நாடு எப்போது சுபிட்சமடைந்திருக்கும். நாலரைக் கோடி விரல்களிலும் படியும் கறை தேசத்தின் மோசமான அழுக்குகளை அகற்றுவதற்காக இருக்கட்டும்.
அருமையான இடுகை கதிர் அண்ணா.
தமிழ்நாட்டின் இந்தத் தலையெழுத்து அவ்வளவு சீக்கிரம் மாறப் போறதில்லை. :(
அடிமையாய் இருப்பதே சுகம் என்று இருப்பவர்கள் மாறும் வரை எதுவும் மாறாது. என்ன செய்வது அவர்களுக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள், நமக்கு வாய்த்தது சரி இல்லை (நான் நம்ம பிரதிநிதிகளை சொல்றேன்)
அற்புதமான கருத்து. காசு வாங்க ஒவ்வொருவருக்கும் தன்மானம் உறுத்த வேண்டும்! அதுவரை இப்படித்தான்!
பணம் கொடுக்க எவ்வளவு வழியிருக்கிறதே அத்தனை வழியையும் கையாண்டது கட்சிகள்...
அதை தடுக்க அரும்பாடுபட்டது தேர்தல் ஆணையம்..
தேர்தல் நியாயமாகத்தான் நடத்தியது ஆணையம்..
வாழ்த்துக்கள்..
உங்களுக்கும் ஆணையத்திற்கும்...
மக்கள் தெளிவா இருக்காங்கன்னு நினைச்சிட்டு இருக்கோம்... ஒரு ஓட்டுக்கு அம்பது ரூவா கொடுத்த காரணத்துக்காக ஒரு குடும்பமே இந்த பாழாப்போனவனுங்களுக்கு ஓட்டுப்போட்ட கொடுமைய என்னன்னு சொல்றது. இதுல அந்தக் குடும்பமே பட்டதாரிகள் குடும்பம், இதில் நண்பனும் அடக்கம்.
பணத்தை கொடுத்தவர்கள் முகத்தில் வீசி எரிந்த வாக்காளர்களையும் இந்த தேர்தலில் பார்க்க நேர்ந்தது.... அவர்கள் நிச்சயமாக பணக்காரர்கள் இல்லை.... நடுத்தர வர்கமும் இல்லை.... அது வறுமையின் கோபம்.... பொங்கட்டும் விழிப்புத் தீ....
சாதனை அளவில் வாக்குகள் பதிவாகி விட்டன. முடிவைப் பார்ப்போம்!
மாப்பு, உங்களுக்கு என்ன கிடைச்சதுங்க??
நச்! பதிவு கதிர்ண்ணா... முள் போன்ற கடைசி பாரா..!! அரசியல்வியாதிகளுக்கு இதெல்லாம் புரியாது. மக்களுக்கு புரிந்தால் சரி.
ம்ம் என்னவோ கொடுத்து என்னவோ பெறுகிறீர்கள்..:))
Post a Comment