எர்ணாகுளம் அருகே நெட்டூர் நெடுஞ்சாலையில் காலை பதினொரு மணியளவில் அதிவேகத்தில் வந்த அந்த விலை உயர்ந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தில் மோதுகிறது. மோதிய வேகத்தில் காரின் ஏர்பேக் திறந்து முன்னிருக்கையில் இருந்த இருவரைப் பாதுகாக்கிறது. ஆனால் இரு சக்கர வாகனத்தில் ஒரு கணவன் மனைவியுடன் வந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று அதே இடத்தில் இறந்து போகிறது. மற்ற மூவரும் மிக மோசமாக அடிபட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சம்பவத்தை நேரில் கண்ட அருகாமை கிராமத்து மக்கள் கோபத்தில் காரை மிக மோசமாக அடித்து சிதைக்கின்றனர். காரில் சென்றவர்கள் போதையில் இருப்பது தெரிந்ததும் கோபம் மூர்க்கமாகிறது. நான்கு பேரையும் சரமாரியாக அடித்துத் துவைக்கின்றனர். நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து அடித்ததில் நால்வரும் மிக மோசமாக தாக்கப்படுகின்றனர். விரைந்து வந்த காவல்துறை நால்வரையும் மீட்கிறது. காவல் துறை இன்னும் சில நிமிடங்கள் தாமதித்து வந்திருந்தாலும் நால்வரும் அடித்தே கொல்லப் பட வாய்ப்பிருந்திருக்கிறது.
இறுதியாய் காரை ஓட்டியவர் போதையில் இருந்ததாகவும், அதிவேகத்தில் வந்து மோதியதாகவும் இ.பிகோ 304ன் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓட்டிய நபர் சிறையில் இருக்கிறார். ஒரு பாவமும் அறியாக் குழந்தையை பலி கொடுத்து இன்னும் அந்தக் குடும்பம் இன்னும் மருத்துவமையில் இருக்கிறது. காரை ஓட்டியவரின் குடும்பமும், நண்பர்களும் கோவைக்கும் எர்ணாகுளத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கிறனர்.
-0-
இரவு நேரம் விருந்தில் சிறப்பாக சாப்பிட்டத்தோடு, கூடுதல் மகிழ்ச்சியாய் மதுவோடு சரசமாடிவிட்டு இரவு பத்து மணிக்கு நாமக்கல்லில் இருந்து காரில் நண்பர்கள் இருவர் புறப்படுகின்றனர். வாகனத்தை இயக்கச் சென்ற கார் உரிமையாளரை ”இருங்க.. நான் ஓட்டுறேன், நீங்க தூங்குங்க” என்று கட்டாயப்படுத்திவிட்டு நண்பர் காரை ஓட்டத்துவங்குகிறார். எப்போதும் மிகச் சிறப்பாக காரை ஓட்டும் திறமை கொண்டவர்தான்.
கண்ணாடிகள் ஏற்றப்பட்டு குளிரூட்டப்பட்ட நிலையில் கார் திருச்செங்கோடு நகரைத்தாண்டி பள்ளிபாளையம் அருகே நெருங்கும் போது, இடது பக்க இருக்கையில் உறக்கத்தில் இருந்தவர் திடுக்கிட்டு எழுந்து ”எதோ சப்தம் வருது, டயர் கருகுகிற வாசம் அடிக்குது” என நிறுத்தச் சொல்கிறார். இறங்கிப் பார்த்தால் இடது பக்க பின் சக்கர டயர் நார்நாராக் கிழிந்து புகை பறக்கிறது. வரும் வழியில் பஞ்சர் ஆனது கூடத் தெரியாமல் பல கி.மீ. தொலைவிற்கு காரை ஓட்டி வந்தது புரிகிறது.
-0-
இது அவ்வப்போது கேள்விப்படும், சா(ச)தா’ரணமான’ சம்பவங்களே. இந்த நிகழ்வுகளில் இடம் பெறுபவர்கள் நாம் எனில் பாதிப்பின் சூட்டை, அழுத்தத்தை, வலியை நேரிடையாக உணர்கிறோம். நிகழ்வுகளில் இருப்பவர்கள் நம் நண்பர்களெனில், அவை கொஞ்சம் கூடுதல் கவனத்தையும் ஆர்வத்தையும் பெறுகின்றன.
ஒவ்வொரு பயணமும் மறுபிறவி என்பதை அனுதினமும் நாம் சந்திக்கும், கேள்வியுறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திக் கொண்டேயிருக்கிறது. எல்லோரையும் மீறி விபத்து நிகழ்வதை ஒருபோதும் தடுக்க முடிவதில்லை. அது நியதியாய் இருக்கும் மரணம் போன்றது. குடி போதையில் ஏற்படுத்தும் விபத்துகள் தற்கொலைக்கும், கொலைக்கும் நிகரானது. தடுப்பது நம் கையில் இருக்கிறதென்பதை மறுக்கவும் வேண்டாம், மறக்கவும் வேண்டாம். குறைந்த பட்சம் குடி போதையில் வாகனம் இயக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவோம்!
-0-
14 comments:
//குடி போதையில் ஏற்படுத்தும் விபத்துகள் தற்கொலைக்கும், கொலைக்கும் நிகரானது//
உண்மைதான்... கடந்த 4 நாட்களில் மட்டும் குடிபோதையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 தொடும்...
குடி போதை, குடி போதையில் வண்டி ஓட்டுவதைப் பற்றி பல இடுகைகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த விசயத்தைப் பல கோணங்களில் பார்க்க முடிகிறது.
ஒன்று சுய கட்டுப்பாடு - குடி போதையில் இருந்தால் ஓட்டாமல் இருப்பது.
இரண்டு - சட்டம் - குடித்துக் கொண்டு வண்டியை ஓட்டுபவர்களுக்கு.. என்ன தண்டனை..
மூன்று - சாலையில் எந்த அளவிற்கு சோதனைகள் நடக்கின்றன..
இன்னொரு கேள்வி..
இந்த இடுகையைப் படிப்பவர்களுள் எத்தனை பேர் ஒரு முறையேனும் குடித்துக் கொண்டு வண்டி ஓட்டியிருக்கிறீர்கள்?
குடித்துக் கொண்டு வண்டி ஓட்டிய எவருக்கும் இங்கே பின்னூட்டமிட தார்மீக உரிமை கிடையாது என்பதே என் கருத்து.
அடுத்தது கார் வாங்கினால் air bag வாங்கணும்
பத்து ரூபாய்க்கு இட்லி வாங்கினா நாலு வகைச் சட்னி கொடுக்கறாங்க, டாஸ்மாக்ல எழுபது ரூபாய்க்கு சரக்கு
வாங்கினா தொட்டுக்க ஊறுகாய் கூட குடுக்கமாட்றாங்க
அதுனால இன்னைல இருந்து சரக்கடிகறத உட்டாச்சு
( மாலை போட்டிருக்கிறேன் )
படிக்காதவன் ரஜனியோட டாக்சி மாதிரி குடிச்சிருந்தா வண்டி கெளம்பகூடாது. அந்தமாதிரி ஒன்னு கண்டு புடியுங்கப்பா. jokes apart பலபேருக்கு வேகமே ஒரு போதை. அதும் போதையில் வேகமும் சேர்ந்தா விபரீதம்தான்.:(
வேதனை தரும் நிகழ்வுகள்.
சிந்திக்க வைக்கும் பகிர்வு.
//சா(ச)தா’ரணமான’//
இந்த ஒரு சொல்லில் அத்தனையும் அடங்கியிருக்கிறது.
ரொம்ப வேதனையா தான் இருக்கு
ஆசான் அதிகமா சினிமா பார்க்குறீரு... சட்டம் கடுமையாகனும் கதிர்... எம்.எல்.ஏ பேரனோட கிளாஸ்மேட் அப்பான்னாக்கூட போலீஸ் கேஸ் இல்லாம விட்டுடறாங்க...
பிரபாகர்...
குடித்துக் கொண்டு வண்டி ஓட்டிய எவருக்கும் இங்கே பின்னூட்டமிட தார்மீக உரிமை கிடையாது என்பதே என் கருத்து.
ஆமாமுங்க எசமான்...நெத்திபொட்டுல சுட்டாப்புல நச்சுன்னு சொல்லிபோட்டீங்க போங்க....
இல்லைங்க குடியை தடுக்கவே முடியாது அது ஒன்னும் அந்நிய கலாச்சாரமும் இல்லை குடியும் ஒரு வித உணவு பண்டம் தான் . ஆனால் இப்போது இருக்கும் சட்டங்கள் எல்லாம் அலட்சியத்தின் பாதையை வகுக்கிறது . வெளிநாட்டில் உள்ளது போன்ற அனுமதிக்க படும் அளவிற்கு குடித்தால் வண்டி ஓட்டலாம் எனும் சட்டம் வந்தால் தேவலைங்க .
இன்றைக்கு எத்தனையோ தொழில் நுட்பம் வந்தாச்சுங்க ..... அதுல ஒண்ணு நம்ம தமிழ்நாட்டை சார்ந்த கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்தது . அது என்ன செய்கிறது என்றால் குடித்து விட்டு வண்டியை இயக்க சாவியை திருகினால் சிவப்பு விளக்கு எரிந்து வண்டி நகர்வதை தடை செய்கிறது . இது போன்ற கருவிகளுக்கும் கண்டுபிடிப்புகளும் போது நலன் பேசும் அமைப்புகளும் தனியார் ஆர்வலர்களும் ஊக்கம் கொடுக்க முயற்சிக்கலாம் .
குற்றத்தை தடுக்கவே முடியாது ஆனால் குற்றம் நடப்பதை தவிர்க்கலாம் .
நல்ல இடுகை.பாராட்டுகள்.
பூங்கொத்து!
அட!இந்தப் பதிவுக்குக் கூட ஒரு மைனஸ் ஓட்டா???!
ஒவ்வொரு பயணமும் மறுபிறவி.
Correct Anna.
பல நாட்கள் தப்பித்தாலும் ஒரு நாள் வசமா சிக்குவோம்..நான் இன்னும் சிக்கில்லை...
Post a Comment