போக்கத்த பொழப்பு


”நாந்தா, யென்ன பண்றது, எதப் பண்ணாலும் பொழைக்கத் தெரியாத போங்குன்னு சொல்றாங்க”

”மவராசனுங்களா, நீங்களே சொல்லுங்க, நானென்ன தப்பு பண்ணன்னு”

”எங்கப்பெ குடிச்சழிச்சது போவ மிச்சமுட்டதுல்ல எனக்கு ஒன்னேமுக்கா, தம்பிகாரனுக்கு ஒன்னேமுக்கான்னு, தண்ணிக்கு கொறைச்சல்லதா வயக்காடு.”

”கெணரு பொதுவுதான். ஆளுக்கொரு நாளைக்கு தண்ணி மொற, அவனுக்கு தெக்குப் பக்க பங்குல கொட்டாயி, எனக்கு வடவரத்துல., கொட்டாயிக்குப் பக்கத்துல தனித்தனியா பெரிய தொட்டி கட்டி, வூடு வாசல் கட்டுத்தரன்னு நல்லாத்தான் இருந்துச்சு”

எங்கம்மா செத்தப்பொறவு, அது வட்டிக்யுட்ருந்த காசுல, காரியம் கருமாதின்னு செலவு போவ தலைக்கு முப்பதாயரம் ரூவா வந்துச்சு”

அம்மாளுக்கு எரும வச்சு பாலூத்துறதுன்னா கொள்ள ஆச. தண்ணிப்பஞ்சம் இருந்த காலத்துல கூட கொடம்போட்டுக்கிட்டு அமுத்துப் பைப்புக்கு போயி தண்ணி கொண்டாந்து எருமய வளர்த்துச்சு. அதெல்லாம் ஒரு காலம். கடைசி காலத்துல எருமை ஒன்னு ஊட்ல இல்லீங்ற கவலையே பெருங்கவல அதுக்கு.,

செரி அம்மா காசு தானே அது நாவகார்த்தமா எரும வாங்கலாம்னு, சந்தைக்குப் போயி தலச்சன் கெடாரியா, கிட்டக்கி ஈனற மாதர, நல்ல செனையா ஒன்னு வாங்கியாந்தேன். சந்தைக்கு போயி புரோட்டா தின்னது, புரோக்கருக்கு கொடுத்ததுன்னு, வண்டியேத்தி கொண்டு வந்த செலவு வரைக்கும், முப்பதாயிரம் முடிஞ்சு கைக்காசு ஒரு ஆறுநூறு ரூவா செலவாயிடுச்சு”

பாக்குற விவசாயம் பத்தலைன்னு, பக்கத்துக்காட்டுக்கு அப்பப்ப கூலி வேலைக்கும் போன பொண்டாட்டிகாரி மொனகிட்டே கெடந்தா, இருக்குற பகுமானத்துல எரும வச்சு சம்பாதிக்ரையாக்கும்னு.

அம்மா மேல நம்ப பாசமா இருந்தானேன்னு, தம்பிக்காரன கேட்டேன்,
”தென்றா, நீய்மு எருமகிரும வாங்கறயா?”

அவன் அப்பவே சொன்னான், ”இல்லீணா நான் பிசுனசு பண்றேனு”

”அட என்றா பிசுனசுன்ன்னு” கேட்டதுக்கு

”இப்பவெலாம் சொல்ல மாட்டேன். சொன்னா நீ ஊரு முச்சூடும் போய்ச் சொல்லுவே, பொறுத்துப் பாரு, ஒரு வரசம் கழிச்சு, உம்பட எரும பெருசா, எம்மட பிசுனசு பெருசான்னுன்னான்”

நானும் மாட்டுத்தீவனம், தவுடு, பருத்திக்கொட்டை, வக்கிப்பில்லுன்னு வாங்கியாந்து வச்சுக்கிட்டு, காத்தாலயும், வெய்யத்தாழவும் எருமய வாய்க்கா வறப்புன்னு மேயவுட்டுக்கிட்டிருந்தேன்”



ரெண்டு நா கழிச்சு, தம்பிகாரனூட்டுக்கு மினிடோருல அஞ்சாறு பொட்டி வந்து எறங்குச்சு. கூடவே பளபளன்னு பிளாஸ்டிக் கேனு நெறையா எறங்குச்சு

மேய்ஞ்சிக்கிட்டிருந்த எருமய புடிச்சுக் கட்டிப்போட்டு, வெசையாப் போயி “”தென்றா இது”ன்னு கேட்டா, ”தண்ணி மெசின்னுனான்.”

”தண்ணிக்கெதுக்குடா மெசினு”ன்னேன்

“அட இதுல தண்ணிய சுத்தம் பண்ணிக் குடுத்தா லிட்ரக்கு ஒரு ரூவா கிடைக்கும்னான்”

மெசினு ஒன்னு நாலாயிரம் ரூவான்னு அஞ்சு மெசினும், பத்தாயிரம் ரூவாக்கு தண்ணிக் கேனும் வாங்கியாந்தானாம்.

”தென்னடா, நானு பாலு விக்கிலாம்னு இருக்கேன், நீ தண்ணி விக்கப்போறியா”ன்னு சொல்லிட்டு வந்தேன்.

மொதத்தடவ தண்ணிய போட்டு, குடிச்சுப்பாருன்னு கொண்டாந்து குடுத்தான். கொஞ்சம் ருசியாத்தான் இருந்துச்சு.

அடுத்த நாள்ல இருந்து டிவிஸ் வண்டீல அஞ்சஞ்சு கேணா கட்டிக்கிட்டு அப்ப்டியே காலணிப் பக்கம், பஞ்சாயத்தாபிஸ் பக்கம்னு நாலஞ்சு தடவ போய்ப்போட்டு போய்ப்போட்டு வந்தான்.

“தென்றா பண்றீன்”னதுக்கு, ”கால்னீல கேனு இரவதுன்னு வாங்ராங்ணான்னான்”

எருமைக்கு தண்டு நறுங்கிருச்சு, மேய்சலுக்கு புடிக்கிறதில்லை, எப்பவேணா கண்ணுப் போட்ரும்போல இருந்துச்சு.

முதல்ல ரெண்டு நட போனவன், இப்ப எடப்பட்ட நேரத்லியு ரெண்டு கேனு, மூனு கேனுன்னு வேற போயிட்ருந்தான்”

வெடிகாத்தால கெடாரிக்கன்னாப் போட்டுச்சு, நஞ்சு போட்டபொறவு, சீம்பால பீச்சி பாதிய காச்ச சொல்லீட்டு, மீதிய தம்பி கொட்டாய்க்கு கொண்டு போனா, புருசம் பொண்டாட்டிக்கு பேசக்கூட நெரமில்லாம கேனக் கழுவறதும், தண்ணி புடிக்றதும்னு கெடந்தாங்க.

செரி, ரெண்டு நாள்ல நல்ல பாலும் திரும்பீறும், நாமுளும் பால்காரனுக்கு ஊத்துனா படி இரவத்தஞ்சுக்குத்தான் போவும், கால்னீல ஊத்னா, முப்பது வெரைக்கும் போவும்ண்டு, சின்னவங்கிட்ட “டேய், ராசு கால்னீல ஆராவது பால் வேணும்னு கேட்டாச் சொல்றா”ன்னு வந்துட்டேன்.

மொதக்கறவைனாலும் காத்தால நாலு படி, பொழுதோட நாலு படின்னு கறவ பரவால்ல. கோழிகூப்ட எந்திருச்சு பாலப்பீச்சிட்டு, கட்டுதர சுத்தம் பண்ணீட்டு கேன எடுத்துக்கிட்டு கால்னீ சுத்தறதுக்குள்ளயே போழுது மேல வந்துறுச்சு.

அல்லாரும், எனக்கு குடு, உனக்கு குடுன்னு போட்டி போட்டுக்கிட்டு வாங்னாங்க.

”ஏனுங், தண்ணீக்காரக்கு அண்ணன்னு சொல்லி தண்ணி கலந்துறாதீங்னு ஒரம்மா சொல்லுச்சு”
இன்னொரம்மா, ”தண்ணீ, பாலுன்னு அண்ணனும் தம்பியும் நல்ல யாவாரந்தான்னு” பெரும பேசுச்சு

எல்லாம் இளிச்சிளிச்சு பேசுனாங்களே தவர காசு தர, வாரக் கணக்கு, மாசக் கணக்குன்னு இழுத்தடிச்சாங்க. தம்பிக்கார மட்டும் தண்ணிய வெச்சாப் போதும்னு காசுக் குடுத்துட்டாங்க

தலச்சன் கெடாரின்னாலும் பால் கறக்க மடி பூவாட்டம் நல்லாத்தான் இருந்துச்சு. நாலு மாசத்துல கெடா சேத்துனதுல்ல பயிராச்சு. செரியான நேரத்திக்கு செனப் புடிக்குதேன்னு சந்தோசப் பட்டப்பவே, கறவ வத்தாரம்பிச்சிடுச்சு, தீவனத்துல கொறச்சலில்ல, பாலு மட்டும் படி எட்லருந்து அஞ்சுக்கும் ஆறுக்கும் எடப்பட்றுச்சு. கால்னீல காசுக்கு இழுத்த ரெண்டு வூட்டுக்கு, இதச்சொல்லி பால நிறுத்த வேண்டியதப்போச்சு.

தம்பி சளைக்காம தெனத்திக்கும் தண்ணிக் கேனோட ஓடிக்கிட்டேயிருந்தான். கன்னும் பெருசாச்சு, கறவை ஒரு நேரமாச்சு, எண்ணி எட்டாவது மாசம் பாலு வத்திப்போச்சு. தீவனதுக்கும், தவுட்டுக்கும், முடிஞ்ச வெச்ச காச அவுத்து செலவு பண்றதாச்சு.

செரியா ஒரு வருசம் முடிஞ்சுது. சொன்ன மாதரயே தம்பிக்காரன் வந்தான்
”ஏண்ணா, இந்தக் கருமத்தவுட்டுப்போட்டு நீயும்தான் தண்ணி செமக்குறதுதானேன்னான்”

எனக்கு, கருக்குன்னுச்சு, “தேண்டா இப்டிச்சொல்றேன்னு” கேட்டா

சொல்றான் பாருங்க கணக்கு, ”மனுச மக்கா, பாலு வாங்காம காபி, டீத்தண்ணி குடிக்காம கூட இருந்துருவாங்க போல, தண்ணிக்கு அத்தன டிமாண்டுண்ணா, தெனத்திக்கும் 20-25 கேனு வச்சா 400-500 ரூவா கை மேல காசு வந்துறுது. நுப்பதாயரத்துப் போட்டு எனக்கு எல்லாச் செலவும் போவ மாசத்திக்கு பத்துன்னு சீட்டுப்போட்டதுல லட்சத்தி சில்றல சீட்டுப்பணம் இருக்குது…. எருமயக் கட்டிட்டு கெடக்றியே உங்க்ட்ட எவ்வளவு இருக்குது”ன்னு கேட்டான்

கருமாந்தரம் நானெங்க எழுதியா வெச்சேன். வாய்க்கணக்காப் போட்டுப்பார்த்தா, மொத்தமா பாலூத்துன காசு நாப்பத்தாஞ்சாயரம் கணக்கு வந்தது, மாட்டுத்தீவன மூட்ட, தவுடு வக்கிப்பில்லுன்னு போனதே நுப்பத்தஞ்சாயரம். இருக்குற கன்னு கெடாரிங்றதால ஒரு மூனு நாலுக்கு போவும். மேய்ச்ச கூலிக்கு வூட்டுக்குப் பாலும், காட்டுக்குச் சாணியும் கெடச்சது போவ முக்கி முக்கி கணக்குப்போட்டாலும் பத்தாயிரத்து மேல கணக்குல வரலையே,

”தென்றா கொடுமயிது, தண்ணிய புடிச்சு பாட்டல்ல அடச்சு குடுத்தா படி பாஞ்சு ரூவான்னும், கேன்ல வித்த இரவதுபடி இரவத்துஞ்சுன்னு வாங்றாங்க, விக்கரவன்னு லட்சத்தலயும் கோடிலயெல்லாம் சம்பாதிக்கலாமாட்ருக்குது. ஒரு சீவனக்கொண்டாந்து கட்டி வளர்த்து, ராத்திரி பகலா பராமரிப்புப் பண்ணி, சாணியெடுத்து, நோவு நொடி வரமா பாத்து, பச்சப் புல்லாப் போட்டு, தவுடு புண்ணாக்குன்னு வெச்சு, தின்னதயும், குடிச்சதயும் இரத்தமா ஊறவச்சு,  அதப் பாலா மாத்திக் கொடுக்றத, எட்டி ஒதச்சாலும் தாங்கிட்டு கறந்து கொண்டாந்து வித்தா, மிஞ்சர காசுல பிஞ்ச கோவணத்துக்கு மாத்துத் துணிக்குக்கூட பத்தாது போலன்னு” சொல்லிட்ருக்கும் போது, வூட்டுக்குள்ளருந்து இதெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த பொண்டாட்டிகாரி போன வேகத்துல கீழ கெடந்த மட்டைய எடுத்து எருமைய ரெண்டு சாத்து சாத்துனா, அவ அங்க சாத்துன சாத்து, பிஞ்ச சீமாத்த சாணியில நலச்சு என்ற மூஞ்சியில அடிச்ச மாதர இருந்துச்சுங்க..

”நாந்தா, யென்ன பண்றது, எதப் பண்ணாலும் பொழைக்கத் தெரியாத போங்குன்னு சொல்றாங்க”


***********************

32 comments:

Unknown said...

nice :-)
unmai sudum..

ராமலக்ஷ்மி said...

வட்டார வழக்கில் நல்ல சிறுகதை.

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்...கலக்கல்

வெட்டிப்பேச்சு said...

//வூட்டுக்குள்ளருந்து இதெல்லாம் கேட்டுக்கிட்டிருந்த பொண்டாட்டிகாரி போன வேகத்துல கீழ கெடந்த மட்டைய எடுத்து எருமைய ரெண்டு சாத்து சாத்துனா, அவ அங்க சாத்துன சாத்து, பிஞ்ச சீமாத்த சாணியில நலச்சு என்ற மூஞ்சியில அடிச்ச மாதர இருந்துச்சுங்க//

நண்பரே நெஞ்சைத் தொட்டது/ தின்றது...உங்கள் சிறுகதை.

நல்ல நடை.. வாழ்த்துக்கள்.

vasu balaji said...

அட அட! ஒரு வெள்ளந்தி மனிதனின் பிழைப்பு அவன் மொழியில்.எங்கோ வரப்போரம், அல்லது மரத்தடியில் வெயிலுக்கு ஒதுங்கி கேட்டாற்போல் ஒரு உணர்வு. சீமாத்து அடி நமக்கும் விழுது சாமி:).

பழமைபேசி said...

பாரெங்கும் இயற்கைய ஒட்டிப் பிழைக்குறவன் கதி இதுதாங்க மாப்பு; நேர்த்தியான படைப்பு!!!

Ahamed irshad said...

அருமைங்க‌ க‌திர் அண்ணே..

'பரிவை' சே.குமார் said...

Anna supernna...

unga vattara vazakkil oru arumaiyana sirukathai...

mikavum rasiththtup patiththean.

இளங்கோ said...

கொங்கு சொல்லாடல்கள் அருமைங்க. அதிலும் "பிஞ்ச சீமாத்த சாணியில நலச்சு என்ற மூஞ்சியில அடிச்ச" வரி டாப்புங்க.

அப்புறம், எங்க ஊர்ல சொல்லுவாங்க 'தண்ணிய வித்தவங்க வூட்ல காசு நிக்காது' ம்பாங்க. என்ன சொல்ல, கொஞ்ச நாள்ல தண்ணிக்குதான் அடுத்த போரா இருந்தாலும் இருக்கும்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர் / r

அழகான கதை - இயல்பான நடை - வட்டார வழக்கு - படிப்பதற்கே மனது இதமாக இருக்கிறது. இன்றைய உண்மை நிலை இதுதான் - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

மோதி said...

நல்ல கதை, nenjorathil koncham vali...

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.

பவள சங்கரி said...

நல்ல கதை.......நிழலாக பர்த்தது போன்ற நினைவு...வாழ்த்துக்கள்

அகல்விளக்கு said...

நெஞ்சை சுடும் நிதர்சனம்...

வட்டாரவழக்குச் சேர்ப்பு அருமையா இருக்கு அண்ணா...

Unknown said...

அடடா! கதிர வாரி அடிச்சா மாதிரி இல்ல இருக்கு.
சூப்பருங்க. பால் பவுடர் வாங்கிப் பழகிக்க வேண்டியது தான்.

க ரா said...

அண்ணே கலக்கிபுட்டிங்க..

vasan said...

மண்ணை பொன்னாக்கினான் பொரிய‌வ‌ன் மாட்டின் சாணியும்,
கழித்த‌ குப்பைக‌ளாலும். எத்த‌னையே கால‌ணி குழந்தைக‌ளுக்கு
தாயாய் இருந்த‌து அவ‌ன் விற்ற‌ பால். ஆன‌ல், த‌ண்ணியை
சுத்த‌ம் ப‌ண்ணி வித்த த‌ம்பி, நிலத்த‌டி நீர்வ‌ள‌த்தை கெடுத்தார்.
பிளாஷ்டிக் கேன் க‌லாச்சார‌த்தை புகுத்தினார். இப்போது சொல்லுங்க‌ள்
பிழைக்க‌த் தெரிந்த‌ தம்பி நல்ல‌வ‌னா? பிழைக்க‌ வைக்கும் அண்ண‌ன் நல்ல‌வ‌னா?

Chitra said...

வட்டார வழக்கு பேச்சு முறையை ரசித்தேன்..... சூப்பர்ங்கோ!

Paleo God said...

// பழமைபேசி said...
பாரெங்கும் இயற்கைய ஒட்டிப் பிழைக்குறவன் கதி இதுதாங்க //

வேறென்ன சொல்ல?? :(

Ramesh said...

கலக்கல். வட்டார சொல்வழக்கு கொஞ்சம் கஸ்டமா இருந்தது. நல்ல நடை. அற்புதம்.


/மாப்பு இம்புட்டு ஆடுறியே அண்டைக்கு ஏனோ பிட்புபோட்ட என்று கேக்கணும் போல தோணித்து/

அரசூரான் said...

உங்க பேச்சு நடையில் பதிவும், அதிலுல்ல கருத்தும்... அருமை.

அதை என் பாணியில் முன்பு பதிவிட்டிருந்தேன்...
http://arasooraan.blogspot.com/2008/02/blog-post_23.html

Anonymous said...

உலாவரும் உண்மையை கதையாக்கிய விதம் நளினம்,,, நல்லாயிருக்கு கதிர்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நிதர்சனம்..

வட்டார வழக்கு சூப்பர்ங்கோ..

நிலாமதி said...

நெசமாலும் நல்லாத்தான் இருக்குதுங்க உங்க கிராமத்து பேச்சு வழக்கு .

தாராபுரத்தான் said...

யோசிக்கவைத்தால் நம்ம பொழப்பு விளங்கும்..நாதாரி பொழப்பால போயிக்கிட்டு இருக்கு.

கதிர்கா said...

நல்ல கதை, அதுவும் வட்டார வழக்கில். அருமை

Anisha Yunus said...

அண்ணா,
நான் உங்கள் வலையை UnFollow செஞ்சு மறுபடியும் Follow செஞ்சு பார்த்தேன், இப்ப Feeds கரெக்டா வருது. எல்லாம் நம்ம வழில செஞ்சாதேன் உண்டு. ஹி ஹி... :)

Subhash said...

எங்களது நண்பர் தமிழ் மணம் காசி உங்களது படைபை மின் அஞ்சல் மூலமாக அனுப்பியிருந்தார். எங்கள் நண்பர்கள் குழு படித்து விட்டு “பேச்சுத்தமிழில் அற்புத்மாக எழுத்ப்பட்டுள்ளது” என்று பாராட்டினர். எனது பாரட்டையும் அவர்களது பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
க.சுபாஸ் சந்திரன், கோவை.

a said...

ரொம்ப நல்ல பதிவு............. தங்களின் வட்டார வழக்குப்பதிவுகள் எப்போதுமே அருமையாய் இருக்கும்....

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நெஞ்சை நெகிழ வைக்கிறது.
இன்று வியாபாரம் 'தண்ணீரும், சாராயமும் தான்". பாலை விட கூடுதலாக விலை கொடுத்து தண்ணீர் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் நல்ல பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
மிக்க நன்றி சார்.

krishna said...

உண்மை. விவசாயத்தின் மூலம் எந்தவகையிலும் விவசாயி முன்னேற வழியில்லை. அதிக நிலம் உள்ளவர்கள் சிறிது சிறிதாக விற்றுத்தான் சமுதாயத்தில் நிலைகொள்ள முடிகிறது. விவசாயம் சார்ந்த துணைத் தொழில்களும் அவ்வாறே.

Rathnavel Natarajan said...

”இதென்றா கொடுமயிது, தண்ணிய புடிச்சு பாட்டல்ல அடச்சு குடுத்தா படி பாஞ்சு ரூவான்னும், கேன்ல வித்த இரவதுபடி இரவத்துஞ்சுன்னு வாங்றாங்க, விக்கரவனும் லட்சத்தலயும் கோடிலயெல்லாம் சம்பாதிக்கலாமாட்ருக்குது = அருமை சார் திரு Erode Kathir. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் ஆழ்ந்து, புரிந்து படிக்க வேண்டுகிறேன். பதிவையும் திறந்து படிக்க வேண்டுகிறேன். = தம்பி செய்தது தான் Practical thing.