நம்பிக்கை நுனி







காசு கேட்டு நேற்று தொடர்ந்து வந்த
தம்பியின் குறுந்தகவல்கள்...

பேசும்போதெல்லாம் செருமிச் செருமி
இருமிய அப்பாவின் கம்பீரமற்ற குரல்...

காதுகுத்தி மொட்டையடிக்க காத்துக்
கிடக்கும் முடிவளர்ந்த தங்கச்சி பையன்...

மூன்று நாளாய் நண்பனைத் தவிர்க்க வைத்த
திருப்பி கொடுக்காத கைமாத்து....

வறண்டு கிடக்கும் கறுத்த பணப்பை
எட்டாத மதிய உணவுக்கு எரியும் வயிறு

சாமானியனின் சரித்திரம் இதுதான் என
சாட்டை சுழற்றி விரட்டும் மாதக்கடைசி...

வாகனத்தை விரட்டி பறக்க, அலறி அழைக்கும்
அலைபேசிக்கு பதில் சொல்ல காலூன்ற

சாலையோரத்தில் காக்கை எச்சம் வழியும்
தலைவரின் கருப்புச் சிலை நிழலில்

இருளை மட்டும் கண்களில் தேக்கியவன்
வாசித்து வழியவிடும் புல்லாங்குழல் இசையில்

கனமாய் இருந்த சுவாசம் மெலிகிறது
எங்கோ நம்பிக்கை விளக்கு எரிகிறது

தவித்து தேடிய கடைசி வரி கிடைத்த
கவிதையாய் மனம் சிலிர்க்கிறது

_________________________________________________________

27 comments:

vasu balaji said...

/இருளை மட்டும் கண்களில் தேக்கியவன்
வாசித்து வழியவிடும் புல்லாங்குழல் இசையில்

கனமாய் இருந்த சுவாசம் மெலிகிறது
எங்கோ நம்பிக்கை விளக்கு எரிகிறது/

இப்படி சின்ன துரும்ப புடிச்சிதான் கரையேறி திரும்ப முங்கின்னு ஓடுது வாழ்க்கை. அபாரம்.

/தவித்து தேடிய கடைசி வரி கிடைத்த
கவிதையாய் மனம் சிலிர்க்கிறது/

இந்த குசும்புதானே வேணாங்கறது. ஆனாலும் இது நிஜம்.

அழகான கடங்காரன் மனது:)

அகல்விளக்கு said...

அருமை அண்ணா...

//தவித்து தேடிய கடைசி வரி கிடைத்த
கவிதையாய் மனம் சிலிர்க்கிறது//

நம்பிக்கை நுனிகளை ஒளிர வைக்கும் கவிதை...

Anonymous said...

ஒரு சாமான்யனின் நிலையை துள்ளியமாய் எடைப் போட்டு இருக்கு கவிதை....

Anonymous said...

//இருளை மட்டும் கண்களில் தேக்கியவன்
வாசித்து வழியவிடும் புல்லாங்குழல் இசையில்

கனமாய் இருந்த சுவாசம் மெலிகிறது
எங்கோ நம்பிக்கை விளக்கு எரிகிறது

தவித்து தேடிய கடைசி வரி கிடைத்த
கவிதையாய் மனம் சிலிர்க்கிறது//


என்னையும் கொஞ்சம் தெளிவாக்கியது இந்த வரிகள் நன்றி கதிர் இதை எனக்கென எடுத்துக்கொள்கிறேன் பாடமாய்...

க.பாலாசி said...

//வறண்டு கிடக்கும் கறுத்த பணப்பை
எட்டாத மதிய உணவுக்கு எரியும் வயிறு

சாமானியனின் சரித்திரம் இதுதான் என
சாட்டை சுழற்றி விரட்டும் மாதக்கடைசி...//

இதுதான் பலரின் வாழ்க்கை...

நிலாமதி said...

எங்கோ நம்பிக்கை விளக்கு எரிகிறது.
நம்பிக்கை நுனிகளை ஒளிர வைக்கும் கவிதை...

butterfly Surya said...

அருமை.

எதற்கும் இந்த மாத கடைசியில் அதுவும் பொங்கல் முடிந்த பிறகு மீண்டும் ஒரு முறை படிக்கிறேன்.

Romeoboy said...

\\சாமானியனின் சரித்திரம் இதுதான் என
சாட்டை சுழற்றி விரட்டும் மாதக்கடைசி...//

உண்மையான வரி தலைவரே ..

அன்புடன் மலிக்கா said...

நுணுக்கமான வரிகளில் மிக அழகான
கவிதை. அருமை அருமை..

நேரம்கிடைக்கும்போது என் தளங்களுக்கும் வருகைதரவும்..

காமராஜ் said...

அற்புதமான மத்திமர்க் கவிதை.
தேதிகளுக்கும் கடிகாரத்துக்கும்
பயந்தோடும் மனிதர் கவிதை.
நல்லாருக்கு கதிர்.

பிரபாகர் said...

தவித்துத்தேடிய எனும் வார்த்தையை என்ன அழகாய் உபயோகித்திருக்கிறீர்கள்!

அருமை என் அன்பு கதிர்!

பிரபாகர்,

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அருமை அருமை கவிதை அருமை
நம்பிக்கை நுனி - தவித்துத் தேடிய கடைசி வரி - கற்பனை அருமை அருமை

நல்வாழ்த்துகள் கதிர்

Unknown said...

கவிதை அருமை. பட்டர்ஃப்ளை சூர்யா சொன்னதை வழிமொழிகிறேன்..

கலகலப்ரியா said...

அருமை...

ஹேமா said...

வாழ்வின் வறுமையை யதார்த்தமாய் சொல்கிறது கவிதை.அரசியலையும் சாடுகிறது மெல்லமாய்.

Anonymous said...

kavithai arumai...

மாதவராஜ் said...

சொல்லிய விஷயம் அருமை. வார்த்தைகளை இன்னும் சிக்கனமாக்கி, அர்த்தங்களை இன்னும் அடர்த்தியாக்கி இருந்தால் கவிதை இன்னும் செறிவாய் இருக்கும் எனத் தோன்றுகிறது. தொடருங்கள் இப்படியான எழுத்துக்களை நண்பா!

புலவன் புலிகேசி said...

கவிதையில் சானியனின் வறுமையும் ஏக்கமும் மிளிரச் செய்திருக்கிறீர்கள்...

புலவன் புலிகேசி said...

இறுதியில் கொடுத்த நம்பிக்கை அருமை

பரிசல்காரன் said...

நன்றாகவே இருக்கிறது!

ஆரூரன் விசுவநாதன் said...

அருமை கதிர்....வாழ்த்துக்கள்

முத்தமிழ் said...

"சாமானியனின் சரித்திரம் இதுதான் என
சாட்டை சுழற்றி விரட்டும் மாதக்கடைசி..." ENNA VARIGAL

puthiyavan said...

எனக்கும் நம்பிக்கை துளிர்த்தது தங்கள் வரிகளின் வார்த்தைகளில்

ஈரோடு கதிர் said...

நன்றி @ வானம்பாடிகள்
நன்றி @ அகல்விளக்கு

நன்றி @ தமிழரசி

நன்றி @ பாலாசி

நன்றி @ நிலா

நன்றி @ butterfly Surya

நன்றி @ Romeoboy

நன்றி @ மலிக்கா

நன்றி @ காமராஜ்

நன்றி @ பிரபா

நன்றி @ சீனா

நன்றி @ முகிலன்

நன்றி @ ப்ரியா

நன்றி @ ஹேமா

நன்றி @ satturmaikan

நன்றி @ மாதவராஜ்

நன்றி @ புலிகேசி

நன்றி @ பரிசல்

நன்றி @ ஆரூரன்

நன்றி @ MYTHILY

நன்றி @ sasi

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{{{{ கனமாய் இருந்த சுவாசம் மெலிகிறது
எங்கோ நம்பிக்கை விளக்கு எரிகிறது }}}}}}}}}}}}}}}}}


அற்புதமான வார்ப்பு வாழ்த்துக்கள் நண்பரே !

Prapavi said...

தவித்து தேடிய கடைசி வரி கிடைத்த
கவிதையாய் மனம் சிலிர்க்கிறது\\ amazing!

Unknown said...

pppppppppppppppppppaaaaaaaa.........