குழந்தைகள் குரோட்டன்ஸ் செடிகளா?

என் மகள் படிக்கும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு. (ஒன்னாப்பு தானுங்க படிக்குது) கடந்த மாதம் காலண்டுத் தேர்வுகள் முடிந்த பின், அதில் பெற்ற மதிப்பெண்களை வைத்து பிள்ளைகளின் தரத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வு.

முதலில் வகுப்பாசிரியையோடு சில நிமிடங்கள் பேசிவிட்டு, அடுத்து சோசியல் பாடம் எடுக்கும் ஆசிரியை சந்திக்கச் சென்றபோது, அந்த வகுப்பில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சரி மற்ற ஆசிரியைகளைப் பார்த்து விட்டு பின்னர் அவரைச் சந்திக்கலாம் என நினைத்து, மற்ற ஆசிரியைகளிடம் சில சில நிமிடங்களைச் செலவழித்து விட்டு கடைசியாக வந்த போதும், அந்த அறை கூட்டமாகவே இருந்தது.

சரி வேறு வழியில்லையென்று கூட்டத்தோடு நின்று கவனிக்கும் போது தெரிந்தது. கிட்டத் தட்ட எல்லாப் பெற்றோர்களும்
* எப்பா பார்த்தாலும் விளையாட்டு
* அடங்காத குறும்பு
* வீட்டிலே படிக்கிறதேயில்லை
* சீக்கிரம் தூங்கறதில்லை
என அந்த ஆசிரியையைச் சுற்றி நின்று கொண்டு ஒவ்வொருவராக புகார் சொல்லிக் கொண்டேயிருந்தனர்.

என் மகள் என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, அடிக்கண்ணால் என்னைப் குறுகுறுப்பாக பார்த்தது.

என் மகள் குறும்பு என்ற புகார் எப்போது என்னிடம் இருந்ததில்லை. நாற்காலியில் நான் உட்கார்ந்து இருக்கும் போது, பெரும்பாலும் என் கால்களின் மேலேயேதான் நின்று கொண்டிருக்கும், சில சமயம் பக்கவாட்டில் ஏறி கழுத்து மேல் உட்கார்ந்து சரிந்து சறுக்கல் விளையாடுவதும் நடக்கும்.

எல்லோருக்கும் ஒரு புன்னைகையோடு அந்த ஆசிரியை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். “இதுகெல்லாம் குழந்தைங்க, குழந்தைங்னா விளையாடத்தானே செய்யும். தயவுசெய்து குறும்பு செய்யும் குழந்தையை மிரட்டி மிரட்டி அடக்கி வைக்காதீங்க. நீங்க வீட்டில் அதைத் தொடாதே, அங்க போகாதேனு தொடர்ந்து மிரட்டினா, எதற்கெடுத்தாலும் அந்த குழந்தைக்கு பயம் வர ஆரம்பிக்கும் அல்லது அங்கே அடக்கி வைத்ததெல்லாம் பள்ளியில் வந்து வெளிப்படுத்த முயலும். நான் 40 நிமிட வகுப்பில் 25 நிமிடங்களுக்கு மேல் பாடம் நடத்துவதில்லை. மீதி 15 நிமிடங்கள் கட்டாயம் கதை பேசுவேன்” என்றார்.

இது போல் தொடர்ந்து நிறைய பகிர்ந்து கொண்டேயிருந்தார்...

மனது விட்டேத்தியாக இருந்தது. ‘ஏன் குழந்தைகள் பற்றி பெற்றோரிடம் இத்தனை புலம்பல்கள்’

*சமீபகாலமாக குழந்தைகளை அதிகமாக பொத்திப் பொத்தி வளர்க்கிறோமோ?
அதிக தூரம் நடக்க பழக்குவதில்லை
*வீட்டு வாசலிலிருந்து வாகனத்தில் அழைத்துச் செல்ல வசதி செய்து கொடுத்திருக்கிறோம்
*வீட்டிற்கு வெளியே விளையாடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை அல்லது அனுமதிப்பதில்லை
*நமக்கு சிரமம் கொடுக்கும் நேரங்களில் ஒன்று மிரட்டி தூங்க வைக்கிறோம் அல்லது தொலைக்காட்சி பார் என ஒதுக்கி வைக்கிறோம்.

நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்பங்களில் குழந்தைகளை அழகாகவும், சொகுசாகவும் குரோட்டன்ஸ் செடி போல் வளர்க்க ஆரம்பித்து விட்டோமோ என அச்சம் வருகிறது.

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

36 comments:

Unknown said...

போன்சாய்களாக வளர்க்காமல் இருப்பது மனநிம்மதியைத் தருகிறது.

பிரபாகர் said...

எப்படி கதிர்... இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறீர்கள்? பிரம்மிப்பாய் இருக்கிறது. மிகவும் பயனுள்ள ஓர் பதிவு இது... கலக்குங்கள்...

பிரபாகர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையாக இடுகைங்க கதிர். தலைப்பு மிகவும் அருமை.

இப்பொழுதெல்லாம் குழந்தைகள் விளையாடுவதற்கு இடமில்லை. விளையாட்டுகள் என்றால் அது கணினியில் தான்.

பரவாயில்லை.. உங்கள் மகள் உங்களிடமாவது விளையாடுகிறாள் :)

Rekha raghavan said...

இக்கால பெற்றோர்களுக்கு அவசியமான இடுகை.

ரேகா ராகவன்

vasu balaji said...

நமக்கு தொல்லையில்லாம, அலைய விடாம, குழந்தைங்க இருந்தா போதும். அதுதாங்க இன்றைய எதிர்பார்ப்பு. நல்லாச் சொல்லி இருக்கீங்க.

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அறிவியல் வளர்ச்சியிலும் வேகமாக் ஓடும் உலகத்தினாலும் - நாம் குழந்தைகளை நாம் வளர்ந்த மாதிரி வளர்ப்பதில்லை. பல வித பயிற்சிகள் பள்ளி முடிந்ததும் - பல வித திறமைகளை ஒரே நேரத்தில் வளர்க்க முயலுகிறோம்.

என்ன செய்வது .....

நல்ல சிந்தனை நல்வாழ்த்துகள்

அமுதா கிருஷ்ணா said...

மிக சரியாக சொன்னீர்கள்..எனக்கு இந்த சந்திப்பே பிடிக்காது..ஒரே கம்ப்ளெண்ட்டாக தான் இருக்கும்..

ஹேமா said...

கதிர் பதிவு மனசுக்குள்ள என்னமோ பண்ணுது.பாடசாலை விட்டு வந்தா அந்த இடத்துப் புழுதியும் மண்ணும் சாம்பலும் எங்க தலைலதான்.நாங்க அப்பிடி வளர்ந்தோம்.புகார் சொன்ன ஆசிரியடம் சொல்லுங்க "நாங்க பிள்ளைங்களைத்தான் பெத்து வச்சிருக்கோம்.பொம்மைங்களை இல்ல"ன்னு.

கலகலப்ரியா said...

ரொம்ப தேவையான பதிவு.. ! ஹிஹி.. அங்க பரவால்ல.. வெளிநாட்ல குழந்தைங்கள நம்ம ஆளுங்க படுத்துற பாடு இருக்கே.. யப்பா.. தாங்கல..

மாதவராஜ் said...

தலைப்பும் , கேள்விகளும் முக்கியமானவை...

தேவன் மாயம் said...

உண்மைதான் உங்கள் ஆதங்கம் புரிகிறது!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நான் டாக்டர் ஆகவில்லை ,எஞ்சினியர் ஆகவில்லை ,என் குழந்தையாவது ஆகணும் என்று பெற்றோர்கள் நினைப்பதும் அவர்களின் பால்யம் பறிபோனதற்கு ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

நிலாமதி said...

குழந்தைகளை குழந்தைகளாக வளர விடுவதே சிறந்தது....அதற்கேற்ற சூழலை அமைத்து கொடுக்கவேண்டும் அம்மாதான் முக்கிய நண்பி குழந்தைக்கு. நல்ல பதிவு .

இராகவன் நைஜிரியா said...

அருமையான இடுகை. பலருக்கும் குழந்தைகள் மன எண்ணங்கள் புரிவதில்லை.

எனக்கு ரொம்ப பிடிச்ச இடுகை.

ஆ.ஞானசேகரன் said...

நல்லது நண்பா,... இருகி போய் இருக்கும் பெற்றோர் உள்ளங்களை பிழிவதுபோல இருக்கு... நல்ல இடுகை பாராட்டுகள்

விஜய் said...

ஒரு மனநல நிபுணர் கூறினார், இனிமேல் genius உருவாகப்போவதில்லை என்று, ஏனென்றால் ஐந்து வயது முடிந்து குழந்தையை பள்ளியில் சேர்த்தால் தான் அதற்கு முழுமையான motor skills இருக்கும். அவசர உலகில் இரண்டரை வயதில் பள்ளியில் சேர்த்து நடமாடும் ரோபோவாக வளர்த்து விடுகிறோம்.

நாடோடி இலக்கியன் said...

நல்ல இடுகை கதிர்.

butterfly Surya said...

அருமை. தேவையான பதிவு.

இதை http://parentsclub08.blogspot.com
இங்கேயும் பதியலாம் நண்பரே.

அன்புடன் அழைக்கிறோம்.

ப்ரியமுடன் வசந்த் said...

//வீட்டிற்கு வெளியே விளையாடுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை அல்லது அனுமதிப்பதில்லை//

இப்போ மட்டுமா இருபது வருஷத்துக்கு முன்னாடியே இப்பிடித்தான் வளர்த்தாய்ங்க என்னிய ம்ம் இப்போ பாருங்க நாடு கடந்து பிரிஞ்சு வந்து கஷ்டப்படுறேன்...விதி..அது அவங்க விருப்பம் எவ்ளோ நாளைக்கு பொத்தி பொத்தி வளர்ப்பாங்க ....

Anonymous said...

//இதுகெல்லாம் குழந்தைங்க, குழந்தைங்னா விளையாடத்தானே செய்யும். தயவுசெய்து குறும்பு செய்யும் குழந்தையை மிரட்டி மிரட்டி அடக்கி வைக்காதீங்க. நீங்க வீட்டில் அதைத் தொடாதே, அங்க போகாதேனு தொடர்ந்து மிரட்டினா, எதற்கெடுத்தாலும் அந்த குழந்தைக்கு பயம் வர ஆரம்பிக்கும் அல்லது அங்கே அடக்கி வைத்ததெல்லாம் பள்ளியில் வந்து வெளிப்படுத்த முயலும்.//

அந்த டீச்சர் பாராட்டுக்குரியவர். பயனுள்ள வாசிக்க சுகமாக இருக்கும் பதிவு.

கார்த்திகைப் பாண்டியன் said...

அக்கறையுடன் கூடிய அருமையான இடுகை..

பித்தனின் வாக்கு said...

குழந்தைகளின் மீது அதிக அக்கரை மற்றும் எதிர்பார்ப்பின் வெளிப்பாடு இவை. நாளை படித்து டாக்டராக அல்லது எஞ்சினியராக இப்போதே கட்டுப்பாடுகள் விதிக்கின்றார்கள். நல்ல பழக்கங்களை போதிக்கின்றேம் என்ற பெயரில் குழந்தையின் சுதந்திரத்தில்(இயல்பில்) கை வைக்கின்றார்கள்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ராஜா | KVR
(ஆமாங்க)

நன்றி @@ பிரபாகர்
(நடக்கும் நிகழ்வுகளின் இயல்பான வெளிப்பாடுதான் பிரபா)


நன்றி @@ செந்தில்
(ஆனாலும் குழந்தைக்கு தேவையான நேரத்தை நானும் கூட கொடுக்க முடிவதில்லை)

நன்றி @@ RAGHAVAN

நன்றி @@ வானம்பாடிகள்
(அண்ணா... தொல்லையில்லாம, அலைய விடாம இருக்கனும்னா... பெத்துக்காம கூட இருந்திருக்கலாம்)

நன்றி @@ சீனா
(உண்மைதான்)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ அமுதா கிருஷ்ணா
(புகாரை பெற்றோர்கள் வாசிக்கிறார்கள்)

நன்றி @@ ஹேமா
(மண்ணும், புழுதியும் பல குழந்தைகள் பார்த்ததேயில்லை.
புகார் சொன்னது ஆசிரியை இல்லை ஹேமா)


நன்றி @@ ப்ரியா
(ஓ... அங்கே இதவிட மோசமா)

நன்றி @@ மாதவராஜ்

நன்றி @@ தேவன் மாயம்

நன்றி @@ ஸ்ரீ
(நிச்சயமாக அந்த ஏக்க மாயைதான்)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நிலா
(அம்மாதான் தொலைக்காட்சி தொடரில் பிஸியாயிடராங்களே)

நன்றி @@ இராகவன்
(புரிவதில் நிறைய சிக்கலை உருவாக்கிக் கொண்டோம்)

நன்றி @@ ஞானசேகரன்
(கொஞ்சமாவது தளரட்டுமே)

நன்றி @@ கவிதை(கள்)
(100% உண்மை உங்கள் கூற்று)


நன்றி @@ நாடோடி இலக்கியன்

நன்றி @@ butterfly Surya
(பதிகிறேன்)

நன்றி @@ வசந்த்
(வருத்தமாக இருக்கிறது வசந்த்)

நன்றி @@ சின்ன அம்மிணி
(அந்த ஆசிரியை வணக்கத்திற்குரியவர்)

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி @@ பித்தனின் வாக்கு
(குழந்தைத்தனமே தொலைந்துவிட்டது)

க.பாலாசி said...

//என் மகள் என் கையை இறுகப் பிடித்துக் கொண்டு, அடிக்கண்ணால் என்னைப் குறுகுறுப்பாக பார்த்தது.//

ரொம்ப படுத்தியிருப்பீங்களோ?

//(பார்த்தது,கொண்டிருக்கும்)//

//நடுத்தர மற்றும் அதற்கு மேற்பட்ட குடும்பங்களில் குழந்தைகளை அழகாகவும், சொகுசாகவும் குரோட்டன்ஸ் செடி போல் வளர்க்க ஆரம்பித்து விட்டோமோ என அச்சம் வருகிறது. //

உண்மைதான். குழந்தைகளின் சுதந்திரத்தை நாமே கெடுத்துவிடுகிறோம். அவர்கள் மீது அக்கரை காட்டுவதாய்க் கூறிக்கொண்டு.

நல்ல இடுகை...

கண்ணகி said...

அக்கரயுள்ள அப்பா. அக்கரயுள்ள டீச்சர். தங்கள் குழந்தை லக்கி. உங்கள் ஆலோசனைப்படி செயல்பட்டதில் தமிழ்மணம் பத்வுப்பட்டை இணைக்கப்பட்டுவிட்டது. நன்றி கதிர்.

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அருமையான பதிவு.....குழந்தைகளை நாம் குழந்தைகளாக பார்ப்பதில்லை...... நாளைய நம்பிக்கைகளாக பார்க்கிறோம். அது மட்டுமன்றி அவர்கள் மீது நம் விருப்பத்தை திணிக்கின்றோம்.

அவசியமான பதிவு

உச்சம்.... கதிர்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பாலாஜி
(உண்மைதான்)

நன்றி @@ வாத்துக்கோழி
(அக்கா..... அந்த ஆசிரியை பாராட்டுக்குரியவர் தான்)

நன்றி @@ ஆரூரன்
(நாளைய தீர்வாகவும் பார்க்கிறோமோ)

பின்னோக்கி said...

ஆசிரியரின் பதில் மகிழ்ச்சியை கொடுத்தது. நல்ல பள்ளியில்தான் உங்கள் குழந்தைகளை சேர்த்திருக்கிறீர்கள்.

என் அண்ணன் பையன் படிக்கும் பள்ளிக்கு போன போது, வாசலில், ஒரு நவநாகரீக பெண்மணி, தன் 12 வயது பையனை, கன்னத்திலே அறைந்துவிட்டார் (மதிப்பெண் குறைவு என நினைக்கிறேன்), அதோடு விடவில்லை. வீடு வரை நடந்து வா என விட்டுவிட்டு அவர் வந்த வண்டியில் கிளம்பி விட்டார். அப்பொழுது அந்த பையன் முகத்தை பார்க்க வேண்டுமே கொடுமை.

கண்டிப்பது வீட்டுக்குள் குழந்தையின் மனநலனை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

நல்ல வேளையாக இப்பொழுது கிரேடு சிஸ்டம் வந்திருக்கிறது. பிள்ளைகளின் மேலான பெற்றோரின் படிப்பு டார்ச்சர் குறையும் என நினைக்கிறேன்.


"டீச்சர், என் பையன் கிளாஸ் எடுக்கும் போது உங்களை டிஸ்டர்ப் பண்றதில்லையே ?” - இப்படித்தான் கேட்டேன் நான்.

பெரும்பாலானவர்க்கு ஒரு குழந்தை. மேலும், நோய்களைப் பற்றிய அதிக விழிப்புணர்வு. தன்னை விட இன்னம் புத்திசாலியாக வரவேண்டுமென்ற, போன தலைமுறையை விட அதிக அளவு Anxiety.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவசியமான கருத்து, நல்ல இடுகை.

வால்பையன் said...

நல்ல ஆசிரியை!

pudugaithendral said...

மதிப்பெண்கள் குறையும்போது பிள்ளைகளை திட்டி, உதைப்பது, ஆசிரியர்களிடம் கலந்தாலோசிப்பது எல்லாம் செய்வதை விட, பிள்ளைகள் தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொணர வேண்டியது பெற்றோர்களின் கடமை.

இதை உணராத, செய்யத்தவறிய பெற்றோர்கள்தான் நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்வது.

ஒருஆசிரியையாக, தாயாக இது என் அனுபவம்.

அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடட்டுமா?(தாங்கள் அனுமதித்தால் மட்டுமே)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பின்னோக்கி
(அந்த ஆசிரியை பாராட்டுக்குரியவர்தான்)
//பெரும்பாலானவர்க்கு ஒரு குழந்தை. மேலும், நோய்களைப் பற்றிய அதிக விழிப்புணர்வு. தன்னை விட இன்னம் புத்திசாலியாக வரவேண்டுமென்ற, போன தலைமுறையை விட அதிக அளவு Anxiety.//
(சரிதான்)

நன்றி @@ அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி @@ வால்பையன்

நன்றி @@ புதுகைத் தென்றல்
(நல்ல பகிர்வு)

(இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் வெளியிடுங்கள்)

pudugaithendral said...

http://parentsclub08.blogspot.com/2009/10/blog-post_13.html//

பதிவு போட்டாச்சு நன்றி

Unknown said...

இந்த புகார் +2 வரை தொடரும் பாருங்களேன்...எனக்கு எப்போதுமே பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு ரொம்ப சுவாரஸ்யத்த கொடுக்கும்...குழந்தைகளை குறை சொல்கிறோம் என்ற பெயரில் தன்னை அப்பட்டமாக வெளிப்படித்துபவர் அதிகம் இங்கே...
அவர்கள் சொல்லும் குற்றசாட்டை நினைத்து 2 நாளுக்கு சிரிக்கலாம் ,அப்படி இருக்கும்....