எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?

வாழ்க்கையில் ஒன்றை இழந்தால், பெரும்பாலும் அதீத முயற்சி எடுத்தால், ஏதோ ஒரு கட்டத்தில் அதற்கு நிகராக இன்னொன்றைக் கொண்டு நிரப்பிட முடியும். உறவுகளின் பிரிவையும், குடும்பத்தில் நிகழும் சில அகால மரணத்தையும் மட்டும் எதைக் கொண்டும் ஈடு செய்யமுடிவதில்லை

சின்னச் சின்ன சந்தோஷங்களாக மெல்லிய சாரலாக, சில சமயம் ஆலங்கட்டி மழை போல மகிழ்ச்சி நம் மீது விழுந்து வாழ்க்கையை ஆசிர்வதித்துக்கொண்டே இருக்கும். ஆனால், துக்கம் என்பது எவ்வளவு சந்தோசச் சாரல் நம்மீது வீசிக்கொண்டிருந்தாலும், ஒரு கரிய நாளின் கனத்த பொழுதுதில் சட்டென வந்து, நம் வாழ்க்கையின் அத்தனை சந்தோசங்கள் மீதும் பரந்து படர்ந்து படியும். அதன் பின் அந்த வெம்மை மட்டும் தினம் தினம் வாழ்ந்து கொண்டேயிருக்கும். அப்படிப்பட்ட துக்கம் ஏற்படுத்திய பள்ளத்தை எது கொண்டும் நிரப்ப முடியாமல், இன்னும் எத்தனையோ குடும்பம் நாட்களை நகர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.

தாய் மீது கட்டிப் புரண்டு விளையாடும் நாய்க்குட்டி போல், காட்டுக்குள் தனக்கென பாதை வகுத்துக் கொண்ட சிற்றோடை போல் மகிழ்ச்சியாக கடந்து போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் குடும்பத்தில் இருக்கும் சக உறவின் எதிர்பாராத மரணம்... பூச்செடிமேல் இறங்கிய மிகப் பெரிய இடியாக அத்தனை சந்தோசங்களையும் சின்னாபின்னமாக்கி விடும்.

அந்த மரணத்தைச் சந்திக்கும் நபர், பாசமிகு தந்தையாக, காதலனாக, கணவனாக, காதலியாக, மனைவியாக, சகோதரனாக, சகோதரியாக, இளம் வயது மகனாக, மகளாக, பூப்போன்ற குழந்தையாக..... இப்படி ஏதோ ஒரு அன்பான உறவாக, இனிமேல் கிடைக்காத பொக்கிசமாக, ஆனால் என்றுமே இழக்க விரும்பாத உறவாக இருப்பார்.

சட்டென துண்டிக்கப்படும் மின்சாரம் போல், திடீரென சொல்லாமல் கொள்ளாமல், அறிந்தோ அறியாமலோ ஏதோ ஒரு காரணத்தால் மரணத்திடம் காவு கொடுக்கும் போது... அந்த குடும்பத்தின் அத்தனை சந்தோசங்களும் அந்த உறவோடு அடக்கம் செய்யப்படும்.

மரணத்தை சந்தித்த கொடுங்காலத்தில், அன்பிற்குரிய உறவை இழந்த அந்த கரிய தினத்தில் காலம் மிக வேகமாக கடந்து ஒவ்வொன்றையும் அதன் போக்கில் நகர்த்தி நடக்க வேண்டிய காரியங்களை நடத்தி விட்டுப் போய்விடும். அதன் பின் வரும் ஒவ்வொரு நாட்களின் இரவுகளும் மிக மோசமான இருளைச் சுமந்து வரும். இழப்பைத் தாங்க முடியாமல், இரவுகளில் தூக்கம் தொலைத்து, வெறுமை சுமக்கும் விடியலை நோக்கி... அப்பப்பா... அதுதான் நிஜமான நரகம். அனுபவித்தவர்களுக்கு வலி தெரியும்.

அதன்பின் அந்த குடும்பத்தில் சின்னச் சின்னதாய் சந்தோசப் பூக்கள், வேவ்வேறு கணங்களில் பூத்தாலும் அதை முழுதாய் அனுபவிக்க முடியாமல், அடி மனது கனத்தே கிடக்கும். மற்றவர்களிடம் பேசும் போது இழந்தவர்கள் பற்றிய எண்ணம் மீண்டு வரும் போதும், இழந்தவர்களின் பிறந்த நாள் வரும்போதும், இழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும்போது மனம் படும்பாடு, அடையும் வலி... எந்த வார்த்தை கொண்டு எழுத முடியும்.

எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை புதிய உறவுகளைச் சந்தித்தாலும், எத்தனை வெற்றிகளைச் சந்தித்தாலும், அந்த உறவு ஏற்படுத்தி விட்டுப்போன ஆழமான காயத்தின் மீது காலம் வேண்டுமானால் சதையையும், தோலையும் வளர்த்து ஆறிப்போனதாக காட்டலாம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் ஆறாத புண்ணாக அது தரும் வலி... முடியவே முடியாதது என்றாலும்..... அனுபவித்துத்தான் ஆக வேண்டும், ஏனெனில், அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?

________________________________________________________

39 comments:

வானம்பாடிகள் said...

/சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?/

இந்த ஒற்றை வரியில் மொத்த இடுகையின் சாரமும் இருக்கிறது கதிர்.

/எவ்வளவு சந்தோசச் சாரல் நம்மீது வீசிக்கொண்டிருந்தாலும், ஒரு கரிய நாளின் கனத்த பொழுதுதில் சட்டென வந்து, நம் வாழ்க்கையின் அத்தனை சந்தோசங்கள் மீதும் பரந்து படர்ந்து படியும். அதன் பின் அந்த வெம்மை மட்டும் தினம் தினம் வாழ்ந்து கொண்டேயிருக்கும்./

பெரிய நரகம் இது. மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

Anonymous said...

தலைப்பே வித்தியாசமாக இருக்கேன்னு வந்தேன்..

நான் உணர்ந்த வலியை மீண்டும் இதை படித்த பின் உணர்ந்தேன்..ஏதோ ஒரு சோகம் மனதை அழுத்துகிறது..என் தங்கையின் மகன் மரணம் இன்னும் எனக்குள் வலியாகவே....

நாடோடி இலக்கியன் said...

/அதன் பின் அந்த வெம்மை மட்டும் தினம் தினம் வாழ்ந்து கொண்டேயிருக்கும்./

ஆம் உறங்கா இரவுகளைத் தின்று அது வாழ்ந்துகொண்டேதான் இருக்கும்/கிறது.

கலகலப்ரியா said...

நெகிழ வைக்கும் இடுகை..கதிர் ! ஆமாம் இந்த வலி... ரணம்... வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது..!

தியாவின் பேனா said...

வலி, சோகம் மனதை அழுத்துகிறது

அன்புடன் அருணா said...

மனம் தொட்ட பதிவு.

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். எத்தனை சந்தித்திருப்போம் அவரவர் வாழ்வில்.

//ஏனெனில், அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?//

தேடினாலும் பதில் கிடைக்காத கேள்வி.

உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் அருமை கதிர்.

ரோஸ்விக் said...

இந்த விளைந்த "கதிர்" பல சிந்தனை விதைகளையும் தூவிக்கொண்டே இருக்குறது...வழக்கம் போல. :-) வாழ்த்துகள்.

ஆரூரன் விசுவநாதன் said...

nice article......


aruran

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆழ்ந்தவொரு பதிவு. பொருத்தமான தலைப்பு. பெரும்பாலானோருக்கு இப்படியொரு சோகம் இருக்கலாம்.

நண்பர் நர்சிம்மின் இன்றைய பதிவு.
http://www.narsim.in/2009/12/7.html

Sangkavi said...

படிக்க படிக்க மனதில் இனம்புரியாத ஒரு வழியை ஏற்படுத்துகிறது............

க.பாலாசி said...

//தாய் மீது கட்டிப் புரண்டு விளையாடும் நாய்க்குட்டி போல், காட்டுக்குள் தனக்கென பாதை வகுத்துக் கொண்ட சிற்றோடை போல் மகிழ்ச்சியாக கடந்து போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் குடும்பத்தில் இருக்கும் சக உறவின் எதிர்பாராத மரணம்... பூச்செடிமேல் இறங்கிய மிகப் பெரிய இடியாக அத்தனை சந்தோசங்களையும் சின்னாபின்னமாக்கி விடும்//

உண்மைதான். எத்தனை வலிகளை விட்டுச்செல்கிறது இந்த எதிர்பாராத உறவுகளின் மரணங்கள்...

இந்த கறுமையை எந்த நிறத்துடன் ஈடுகட்டுவது??? இயலாதவொன்றே விடை...

நல்ல இடுகை....

நாய்க்குட்டி மனசு said...

//அதன்பின் அந்த குடும்பத்தில் சின்னச் சின்னதாய் சந்தோசப் பூக்கள், வேவ்வேறு கணங்களில் பூத்தாலும் அதை முழுதாய் அனுபவிக்க முடியாமல், அடி மனது கனத்தே கிடக்கும்.//
உங்களுக்கு நெருங்கிய வட்டத்திலோ அல்லது ஒரு சுற்று அடுத்த வட்டத்திலோ ஒரு மரணம் உங்களைப் பாதித்திருந்தால் தான் இந்த வார்த்தைகள் வரும். புத்தரின் உப்புக் கதையை நினைத்துத் தான் எல்லோரும் சோகத்திலிருந்து வெளியே வர வேண்டும்.

வால்பையன் said...

அந்த வலிக்கு ஏது மருந்து!

அனைவருக்கும் அந்த வலி உண்டு!

நிலாமதி said...

சோகத்தை மறக்க முயலுங்கள். சோகம் மட்டும் வாழ்க்கையல்ல. இன்னும் வாழ வேண்டி இருகிறது.
மற்றவர்களுக்காக. பதிவு அருமை.

காருண்யா said...

இதயம் நெருடும் கனங்களை கூட , வலிக்காமல் சொல்லியிருகிறீங்க...

இறந்து போன உறவுகள் மட்டுமல்ல ...
சூழ்நிலை கைதியாகி பிரிந்து போன உறவுகள் கூடவும் தான் .......

seemangani said...

உன்னமைதான் அண்ணே...நம் பாசமிகு உறவுகளை பிரிந்து வாழும்போதும் அத போல் வலிதான்...அருமை பதிவு...

ஹேமா said...

கதிர் இந்த வலியிலிருந்து யாரும் தப்பிப் போவதாயில்லை.அன்றழுது பின் வாழ்வு தொடர்ந்தாலும் நாம் சாகும்வரை தொடர்ந்திருக்கும் வலி அது.

அப்பன் said...

நிைனக்க தொிந்த மனமே,, மறக்க தொியாதா,,,

பிரபாகர் said...

மனம் கனத்து நிறைய வலிகளை உணர்கிறேன்... பாதிப்பின் தாக்கம் பார்ப்பவர்களை விட பாதித்தவர்களுக்கு மிக அதிகம் என்பது உண்மையென்றாலும், அவர்களுக்கு நமது ஆறுதலைத்தவிற வேறென்ன தர இயலும்?

பிரபாகர்.

காமராஜ் said...

தோழர் கதிர் வணக்கம்.
பெரிய்ய வணக்கம் - சொல்லாத நிலுவை வணக்கங்
களையும் சேர்த்து.
நீண்ட நாட்கள் உங்கள் வலைப்பக்கம் வராமல் போன வெறுமை நெருடுகிறது. மீண்டும் பணியிடத் துயர்.
அந்த ஆதங்கங்களை உங்களோடு நேரில் பேசியது போலொரு பதிவு இது. இழப்புகளை இன்னொரு வரவால் இன்னும் நெருக்கமான, அன்பால் மறைக்கலாம். ஆனால் வலி இருக்கும்.

ஆ.ஞானசேகரன் said...

//அப்படிப்பட்ட துக்கம் ஏற்படுத்திய பள்ளத்தை எது கொண்டும் நிரப்ப முடியாமல், இன்னும் எத்தனையோ குடும்பம் நாட்களை நகர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன.//

உண்மை....

ஆ.ஞானசேகரன் said...

//அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?//

வலிகளின் உணர்வை புரிந்துக்கொள்ள முடிகின்றது உங்க இடுகையில்

தமயந்தி said...

பூச்செடிமேல் இறங்கிய மிகப் பெரிய இடியாக அத்தனை சந்தோசங்களையும் சின்னாபின்னமாக்கி விடும்//
......)::::;

prabhu bharathi said...

theederendru thundikkapatta minsaram pola" intha varthai appadiye thideer ilapai uvamaiai kaatugirathu
sameepathil yerpatta palli van vibathai ninaivootugirathu ungal idiugai.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உறவுகளின் பிரிவையும், குடும்பத்தில் நிகழும் சில அகால மரணத்தையும் மட்டும் எதைக் கொண்டும் ஈடு செய்யமுடிவதில்லை//

:( மரணம் ஈடு செய்யப்படாத இழப்பு - அதனை அனுதினமும் அனுபவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு.

காவிரிக்கரையோன் MJV said...

கதிர் உண்மை அத்தனையும் உண்மை, நேற்று நிகழ்ந்த நிகழ்வுகள் இன்னும் என்னை சாதாரண நிலைக்கு கொண்டு வரவில்லை. நெருங்கிய தோழரின் அக்காவின் மரணம்....., வாழ்க்கை என்ற தூரிகைக்கு கட்டாயமாக கறுப்பு நிறம் கொடுக்கும் நிகழ்வு மரணம்.

ILA(@)இளா said...

தலைப்பே சொல்லும் ஆயிரம் அர்த்தங்கள்

Priya said...

//இழப்பைத் தாங்க முடியாமல், இரவுகளில் தூக்கம் தொலைத்து, வெறுமை சுமக்கும் விடியலை நோக்கி... அப்பப்பா... அதுதான் நிஜமான நரகம். அனுபவித்தவர்களுக்கு வலி தெரியும்.//....
நானும் கூட இப்படி ஒரு வலியை அனுபவித்து வருகிறேன்.... கண்கள் கலங்க படித்து முடித்தேன்!

ஈரோடு கதிர் said...

எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி...

ramanathan said...

வணக்கம் நான் தங்கள் பதிவுகளை தொடர்ந்து (சு)வாசித்து வருகிறேன்."எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?"
இந்த தலைப்பில் மட்டுமல்ல, பதிவின் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளது நிஜமான
இழப்பின் / சோகத்தின் கருமை.
நன்றி

sasksv said...

உங்களுடைய அனைத்து படைப்புகளையும் தொடர்ந்து படித்து மட்டும் வரும் நான் முதல் முறையாக உங்களுடைய அனைத்து படைப்புகளுக்கும் நன்றி சொல்லி தங்களுடன் இனையகிறேன்.
உங்களுடைய கருப்பு நிற படைப்பு என் தந்தை இறந்த நாட்களை திரையில் காண்பித்தது.

Chitra said...

//எத்தனை வருடங்கள் ஆனாலும், எத்தனை புதிய உறவுகளைச் சந்தித்தாலும், எத்தனை வெற்றிகளைச் சந்தித்தாலும், அந்த உறவு ஏற்படுத்தி விட்டுப்போன ஆழமான காயத்தின் மீது காலம் வேண்டுமானால் சதையையும், தோலையும் வளர்த்து ஆறிப்போனதாக காட்டலாம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் ஆறாத புண்ணாக அது தரும் வலி... முடியவே முடியாதது என்றாலும்..... அனுபவித்துத்தான் ஆக வேண்டும், ஏனெனில், அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?// ................அனுபவித்த சோகத்தின் வலி உங்களுக்கு மட்டும் இல்லை. இதை வாசிக்கும் அனைவரின் உள்ளங்களில் உள்ள வலியையும் உணர வைக்கிறது.

இரசிகை said...

thalaippu arumaiyaa irukku.......!

சத்ரியன் said...

//ஏதோ ஒரு காரணத்தால் மரணத்திடம் காவு கொடுக்கும் போது... அந்த குடும்பத்தின் அத்தனை சந்தோசங்களும் அந்த உறவோடு அடக்கம் செய்யப்படும்.//

கதிர்,

நிஜம்.!

//சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?//

கதிர்.

சி. கருணாகரசு said...

காதல் இல்லாத காரியங்களை செய்யாமலிருக்க ஏதேனும் காரணங்களை தேடித் தேடி சொல்லிக் கொண்டேயிருப்போம். அடுத்து எப்படியாவது அந்த வேலையை செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலில் பின்னால் தள்ளிப்போடுவோம். இதில் மிக முக்கியமான கொடுமை அப்படித் தள்ளிப் போடப்பட்ட காரியம் மனதில் சுமையாய் குடியேறிவிடும். அந்தச் சுமை மிகப்பெரிய பாரமாக மாறி பரவலான ஒரு அழுத்தத்தை கொடுக்கும். அது படிப்படியாக செய்ய வேண்டிய மற்ற காரியங்களில் இருக்கும் ஈடுபாட்டையும் சிதைக்கத் தொடங்கும்.//

தெளிவா சொல்லிட்டிங்க கதிரண்ண.....
தன்முனைப்பு பதிவுக்கு பாராட்டுக்கள்.

Mrs.Saran said...

ரொம்ப அருமையான பதிவு, அனுபித்தவர்க்கு தான் தெரியும் அந்த வலியும் வேதனையும். நான் என் அம்மாவை சமிபத்தில் இழந்திருக்கிறேன்.

goma said...

அந்த உறவு ஏற்படுத்தி விட்டுப்போன ஆழமான காயத்தின் மீது காலம் வேண்டுமானால் சதையையும், தோலையும் வளர்த்து ஆறிப்போனதாக காட்டலாம், ஆனால் உள்ளுக்குள் இருக்கும் ஆறாத புண்ணாக அது தரும் வலி... முடியவே முடியாதது என்றாலும்..... அனுபவித்துத்தான் ஆக வேண்டும், ஏனெனில், அதுதான் வாழ்க்கையாம்.... சரி எந்த வண்ணத்தால் கறுப்பு நிறத்தை மாற்ற முடியும்?

உண்மைதான்.
இன்று என் சகோதரியின் 4வது ஆண்டு நினைவுநாள்.இன்னும் துக்கம் தொண்டையை அடைக்கிறது ,கண்ணீர் கசிகிறது

lakshmi indiran said...

ம்ம்ம்ம்.....