Nov 24, 2010

கனக்கும் அன்பு – இலங்கைப் பயணம்


வெறும் நான்கு நாட்கள் அவகாசத்தில் இலங்கை சுற்றுலா செல்ல ஒரு நிறுவனத்தின் மூலம் நண்பர் சார்பில் அந்த வாய்ப்பு கிடைத்தது. இலங்கையில் எங்கே என்றதற்கு, மூன்று நாளும் கொழும்புதான் என்று அறிய வர, நான் மட்டும் யாழ்ப்பாணம் வரை சென்று வர அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாமே என நினைத்தேன். ஆனால் தனியாக, எப்படி அந்த நாட்டின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்வது என்ற கேள்வி பெரிதாக எழுந்தது.

அதுநாள்வரை இலங்கையிலிருந்து என்னோடு, அதுவும் எப்போதாவது மின் அரட்டையில் உரையாடும் ஒரே பதிவர் சிதறல்கள் றமேஸ் மட்டுமே. றமேஸிடம் முதலில் கொழும்பு வருவதாகவும், அங்கிருந்து யாழ்ப்பாணம் வரை சென்று வர விருப்பம், அதற்கு என்ன செய்ய வேண்டும் என அரட்டையில் கேட்க, உடனே கைபேசிக்கு அழைத்தார். தான், கொழும்பில் இல்லையென்றும், அங்கிருக்கும் சக பதிவர் நண்பர் நா மதுவதனனை அழைக்கச் சொல்வதாகவும் கூறினார். சிறிது நேரத்தில் மதுவதனன் அழைக்க இலங்கை நட்பின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது. மது பதிவர் லோஷன் அவர்களோடு பேசி பயண விபரம் குறித்து திட்டமிடுவதாகச் சொல்ல, அதையொட்டி பதிவர்கள் மதுவதனன், லோஷன், தமிழ்நதி ஆகியோருக்கு கொழும்பு வந்தடையும் நாள் மற்றும் திரும்பும் நாள் ஆகியவற்றைக் குறித்து மின் மடலிட்டு பயணத்திட்டத்தை வகுத்துத்தர வேண்டினேன். அடுத்த சில மணி நேரத்தில் கனடாவில் இருக்கும் பதிவர் தமிழ்நதி, வவுனியாவில் இருக்கும் தனது சகோதரி மகன் செந்தூரனை என்னிடம் தொடர்பு கொள்வார் என மடலிட்டார். சில மணி நேரத்தில் செந்தூரன் அழைத்து, கொழும்பு வந்த பின் தொடர்பு கொண்டு விட்டு வவுனியா வந்துவிடச் சொன்னார். அடுத்தடுத்த நாட்களில் மது, லோஷன், தமிழ்நதி என மின்னஞ்சல்களிலேயே பயணத் திட்டம் ஒரு மாதிரியாக வகுக்கப்பட்டது.

ஒருமாதிரி புரிந்தும் புரியாத திட்டங்களோடு அக்டோபர் 21ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கொழும்புவில் எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதியை அடைந்தேன். என்னோடு வந்தவர்களில் ஓரிருவரைத் தவிர வேறு யாருக்கும் நான் தனித்து வெளியில் செல்வது பற்றித் தெரிவிக்கக்கூட இல்லை.

குளிரூட்டப்பட்ட அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் மிதந்து கொண்டிருந்த என்னை ஏழு மணிக்கு அதிர்ந்த கைபேசி எழுப்பிய போது அது மதுவாகத்தான் இருக்கும் என உணர முடிந்தது. அடுத்த சில நிமிடங்களில்  மெலிந்த, சிவந்த, சுறுசுறுப்பான மதுவின் கைகுலுக்களில் அன்பு நிறைந்த வெப்பத்தை உள்வாங்க முடிந்தது. வேற்று மண்ணில் முதன் முதலாய் முகம் பார்த்திராத ஒரு நட்பின் அன்பை உள்வாங்கும் சுகம் மிக அலாதியான ஒன்று. பேச வாய் திறக்கும் போதெல்லாம் வார்த்தைகளுக்கு முன் சிரிப்புதான் சிதறி விழுகிறது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் உற்சாகமாய் பேசி, உடனிருந்து, வவுனியாவில் இருக்கும் செந்தூரனோடு பேசி, தெளிவான ஒரு பயணத் திட்டத்தை திட்டமிட்டார். முன்னரே இலங்கையில் பயன்படுத்த ஒரு தற்காலிக கைபேசி இணைப்பு கேட்டிருந்ததையொட்டி, தன்னுடைய கைபேசி இணைப்பு ஒன்றினை என்னிடம் கொடுத்து விட்டு, பதிவர் லோஷனோடு பேசி அடுத்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிவிட்டு விடைபெற்றார். 

பதிவர் லோஷன், அவர் நண்பர் விமல்
பதினொரு மணி சுமாருக்கு விடுதி வாசலில் நின்று கொண்டிருக்க, வாகனம் ஒன்று நின்று நிதானித்து, கடந்து விடுதியின் வாகன நிறுத்தப் பகுதிக்குச் சென்றது. ”ஒருவேளை இது லோஷனாக இருக்குமோ” என்று நினைத்தேன், நினைத்தபடியே அது லோஷன் தான். ஊடகத்துறையில் இருப்பதால் பணி நிமித்தம் பரபரப்பாக இருப்பவர் என மது சொல்லிருந்தார். ஆனாலும் எந்த வித பரபரப்பும் காட்டாமல் இடம் தேடி வந்து அழைத்துக் கொள்ள, கொழும்பு நகர வீதி வழியாக கோட்டை பேருந்து நிலையம் நோக்கி பயணப்பட்டோம். செல்லும் வழியில் அவருடைய நண்பர் விமல் அவர்களும் இணைந்து கொண்டார்.

பதிவுலகம் குறித்து, ஈழத்தில் இந்திய அரசியல் குறித்து, கொழும்பு நகரத்தில் இருக்கும் கைபேசி விளம்பரங்களில் அசின் ஆங்காங்கே தென்படுவது குறித்து, அவர் இந்தியா வந்திருந்த பயணம் குறித்து என நிறைய வழி நெடுகப் பேசிக்கொண்டேயிருந்தோம். யாழ்ப்பாணம் செல்ல பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டி, கடவுச்சீட்டின் பிரதியை பெற்றுக் கொண்டு, அனுமதிக் கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்புவதாகத் தெரிவித்து விட்டு என்னை மிகப் பத்திரமாக வவுனியா செல்லும் பேருந்தில் ஏற்றி அமர்த்திவிட்டு விடைபெற்றார்.
வவுனியா சென்ற பேருந்து... (நம்ம ஊரு அசோக் லைலேண்ட் பேருந்து)
வவுனியா பேருந்து ஏறியது முதல் செந்தூரன் என்னை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துக் கொண்டார். ஏழுமணி நேரப் பயணம், இரவு ஏழு மணிக்குத்தான் வவுனியா சென்றடைவேன் என்றாலும், குறைந்தது 15 முறையாவது அழைத்து நான் எந்த இடத்தில் வருகிறேன் என்பதை தொடர்ச்சியாக கேட்டறிந்து கொண்டேயிருந்தார். முகம் தெரியாத இருட்டு கவிழ்ந்த பொழுதில் சிலுசிலுக்கும் குளிரோடு வவுனியா பேருந்து நிலையத்தின் எதிரில் பேருந்திலிருந்து இறங்கித் திரும்பிய நொடி, சிநேகமாய் கை அசைத்தார் செந்தூரன். முதல் பார்வையிலேயே சிநேகம் கொப்பளித்தது. கை பற்றிப் பயணம் குறித்து கேட்டு புறப்பட எத்தனித்தபோது எங்கே என்று கேட்டேன், வீட்டுக்கு என்றார். 
இளவேனில் - தமிழ்நதி வீடு
நகரத்தின் வீதிகளைக் கடந்து, காற்று சிலுசிலுக்க தமிழ்நதி அவர்களின் இளவேனில் வீட்டிற்கு சென்றடைந்தேன். அந்நிய தேசம், முன்பின் அறியாத அந்நிய மனிதன் என்ற உணர்வு ஏதுமின்றி அன்பு நிறைய அந்த வீட்டின் பிள்ளைகள் என்னை வரவேற்றனர். புதிய ஊர், முன்பின் அறியாதவர்களின் வீடு என்ற உணர்வும் துளியும் இல்லாமல், என்னால் சட்டென அந்த இல்லத்து மனிதர்களோடு மிக இயல்பாக பழக முடிந்ததுவும் ஆச்சர்யமாகவே இருந்தது. 

மரங்கள் சூழ அழகியதொரு வனமாய்
இளவேனில் இல்லம், ஒரு மிக அழகியதொரு பறவைக் கூடு. தமிழ்நதி அவர்களின் சகோதர உறவுகளின் பிள்ளைகள் செந்தூரன், தீபா, சாந்தினி, கோபி என சிறகடிக்கும் அன்புப் பறவைகள். எல்லா வார்த்தைகளிலும், எல்லா நடத்தைகளிலும் அந்தப் பிள்ளைகளிடம் அன்பு கொப்பளித்தது. முதல் நாள் இரவு முழுக்க பயணம், அடுத்து பகல் முழுதும் பயணம் என்று களைத்துக்கிடந்த உடம்பை அந்தப் பிள்ளைகளின் உற்சாகப் பேச்சு மனதை குதூகலிக்கச் செய்து, தொடர் அரட்டையில் நடுநிசி வரை நகர்த்தி உறங்கவிடாமல் உற்சாகமாகவே வைத்திருந்தது. 
தீபாவின் கை வண்ணம்
செந்தூரன் உட்பட அவர்கள் அனைவருமே சில வருடங்கள் சென்னையில் தமிழ்நதியோடு வசித்திருக்கிறார்கள். நிறைய தமிழகத்து எழுத்தாளர்களை, பதிவர்களைச் சந்தித்த அனுபவம் அவர்கள் பேச்சில் தெரிந்தது. தீபாவிடமிருந்து புத்தகங்கள் குறித்து, சென்னையில் நடந்த சில விழாக்கள் குறித்து, தமிழ்நதி குறித்து, அவர்களின் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் குறித்தென பேச்சு அருவியாய் விழுந்து கொண்டேயிருந்தது. ஆச்சரியமாய் அவதானித்துக் கொண்டிருக்க மட்டுமே செய்தேன், காரணம் தீபா குறிப்பிட்ட அளவிற்கு எனக்கு பரிச்சயம் இல்லை என்பதுவும் ஒரு காரணம்.

புத்தகம், காஃபி - உபசரிப்பு
”மாமிய (தமிழ்நதி) சென்னையில் கண்டுறீக்கீங்கதானே”? என தீபா கேட்டபோதுதான் இதுவரை தமிழ்நதியிடம் நான் பேசியது கூட இல்லை, சில மாதங்களுக்கு முன் கானல் வரி வாசித்துவிட்டு மின்னஞ்சல் இட்டது, தற்போது இலங்கைப் பயணத்திற்காக மின்னஞ்சல் அனுப்பியதையும் கூறினேன். அங்கு தங்கியிருந்த தினத்தன்று தமிழ்நதி செந்தூரனை கைபேசியில் அழைத்த போதுதான் முதன்முறையாக அவர்களிடம் பேசினேன். நீங்கள் வழக்கமாக சாப்பிடு உணவுகள் வேண்டாம் என, நான்கு வேளைகளும் இலங்கை உணவு வகைகள் என மிகச் சிரத்தையாய் உணவு பரிமாறி, இந்த புத்தகம் வாசிங்க, அந்தப் புத்தகம் வாசிங்க என, ஒவ்வொரு செய்கையிலும் அன்பால் அந்தப் பிள்ளைகள் என்னை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தார்கள்.

அடுத்த நாள் மதியம் வரை யாழ்ப்பாணம் பயணத்திற்கு முயன்று அனுமதி கிட்டாததால் மாலை வீட்டிற்கு திரும்பினோம். கொழும்புவிற்கு அன்று இரவே திரும்பலாமா? அல்லது அடுத்த நாள் அதிகாலை புகையிரதத்தில் கிளம்பலாமா என குழப்பத்தோடு யோசித்த நேரத்தில் மது அழைத்தார்.

இரவு கிளம்பி அதிகாலை கொழும்பு அடைவதுதான் சிறப்பு என்று வழிநடத்தத் துவங்கினார். ஆனால் அதே இரவு மது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லப் பயணம் துவங்கினார். நான் வவுனியாவிலிருந்து கொழும்பு கிளம்பினேன். தான் கொழும்பில் இல்லாவிட்டாலும், நான் கொழும்பை வந்தடையும் அதிகாலை நேரத்தில் தனது நண்பர் நிமல்ராஜ் மூலம் கொழும்பில் இறங்கும் பேருந்து நிறுத்தத்திலிருந்து நான் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் நிமல் ராஜ் அழைத்து ”காலை ஐந்து மணி சுமாருக்கு கொழும்பு நகரை அடைவீர்கள், பேருந்திலிருந்து இறங்கும் முன் பத்து நிமிடங்களுக்கு முன்பாக என்னை அழையுங்கள், நான் அழைத்துக்கொள்கிறேன்” என்றார்.
பேருந்து கிளம்பும் போது, என் கைபேசி உரையாடல்களைக் கவனித்த திருகோணமலையைச் சார்ந்த நபர் ”என்ன சார் தமிழ்நாடா” என விசாரித்து, காலை எங்கு இறங்குவது, அந்த நண்பரை எங்கு வரச்சொல்வது என்று வழிநடத்தத் துவங்கினார். காலை கொழும்பை அடைந்து நான் இறங்க வேண்டிய இடத்தில் அவரும் இறங்கிக் கொண்டார். மதுவின் நண்பர் நிமல்ராஜ் வந்து என்னை அழைத்துக் கொள்ளும் வரையில் கூடவே இருந்து அவரோடு அனுப்பிவிட்டுச் சென்றார். நிமல்ராஜ் என்னை அழைத்து விடுதியில் சேர்த்தார்.

கன்கோன் கோபியுடன் நான்!
பயண அலைச்சலை கொஞ்சமாய் விடுதி அறையில் கரைத்துக் கொண்டிருந்த வேளையில், அமைதியாய் அறைக் கதவைத் தட்டி, அன்றைய பொழுதை அர்த்தமுள்ளதாக்க வந்தார் கன்கோன் கோபி, எது கேட்டாலும் சிரிப்பு, அதையொட்டி சன்னமான குரலில் ஒரு சின்ன பதில். பதிவுலகில் கிரிக்கெட் சுரங்கம் லோஷன் என்று சொன்னால், கான்கோன் கோபி லோசனின் வாரிசு என்று சொல்லலாம் அப்படியொரு கிரிக்கெட் ஆர்வம். நீண்ட நேரம் எங்கள் கடிகளைத் தாங்கிக் கொண்டிருந்ததை, சில கணங்களில் பார்க்க பாவமாகவும் இருந்தது.

இந்தப் பயணத்தில், சந்திக்க பெரிதும் விருப்பப்பட்ட றமேஸ் கொழும்பு வரும் திட்டத்தில் சில தனிப்பட்ட சிரமங்கள் ஏற்பட, அவரால் வரமுடியாமல் போனது வருத்தமாய்ப் பதிந்தது. மீண்டும் யாழில் அல்லது கொழும்பில் சந்திப்போம் என நினைத்து கை அசைத்துப்போன மது நான் கொழும்பு வந்த நாளில், யாழ்ப்பாணம் சென்றுவிட மதுவையும் மீண்டும் சந்திக்க முடியவில்லை என்பது மிகப்பெரிய வருத்தம். மூன்று நாட்களாக, இலங்கை இந்தியா எனப் பேசித்தீர்த்து கைபேசி இணைப்பை திருப்பியளிக்கும் போது, எவ்வளவோ வற்புறுத்தினாலும் முதல் சந்திப்பில் பணத்தை முன்னிறுத்தக் கூடாது என மதுவதனன் அதற்கான செலவுகளைப் பெற மறுத்தது மட்டும் சமாதானமாக முடியாததாக இருந்தது.

இரண்டு இரவு, மூன்று பகல் என அழகான, அர்த்தமுள்ள 60 மணி நேரம், இதயத்துக்கு மிக நெருக்கமாய் அமர்ந்து வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத மாதிரி அன்பை சொட்டுச் சொட்டாய் சுரக்கச்செய்த இந்த மனித உள்ளங்களை, நினைக்கும் நேரமெல்லாம் நெஞ்சம் முழுதும் நிறைந்து துள்ளுகிறார்கள்.

அளிக்கும்போது அன்பைப் போல் இலகுவானதாகவும்
பெறும்போது அன்பைப்போல் கனமானதாகவும் எதுவும் இல்லை.

அன்பிற்கு ’நன்றி’ என்ற ஒற்றை வார்த்தை போதுமா என்று தெரியவில்லை, அதையும் தாண்டி அந்த அன்பை சக மனிதர்களிடம் இறக்கிவைப்பதே நியாயமான தீர்வாகவும் இருக்க முடியும்.

சந்திக்கும் வரை சற்றும் நேரிடைப் பரிச்சயம் இல்லாமல், பார்த்த கணத்தில் பாசத்தால் கட்டி இழுக்கும் இந்த நட்புள்ளங்களை நினைத்துப் பார்க்க…. 24.11.2008-ல் பதிவுலகத்திற்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆண்டில் கனிணி விசைப்பலகையில் எழுத்துகளைத் தேடி விரல்கள் பாயும் இந்த நேரமே ஏதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

______________________

Nov 22, 2010

பகிர்தல் (22.11.2010)


சேமிக்காத மழை: 

எனக்குத் தெரிந்து இந்த ஆண்டுதான் தொடர்ந்து பல நாட்களாக நம் பகுதியில் இவ்வளவு மழை பெய்கிறதென்று நினைக்கிறேன். ஓரேயடியாய் பேய் மழையாய் இல்லாமல் அவகாசம் விட்டு அவ்வப்போது ஆர்பாட்டாம் இல்லாமல் பெய்துவருகிறது. சில பழைய சுற்றுச்சுவர் கட்டிடங்களில் கேரளா போல் பாசி பிடித்திருப்பதைக் காண முடிகிறது.

நகர்புறத்தின் நடுவே இருக்கும் சாக்கடைப் பள்ளங்களில் மழைநீர் கரை புரண்டோடி அக்கம் பக்கம் இருக்கும் குடிசைகளை இழுத்துச் செல்வதை என்றைக்கும் தடுக்க முடியாதது. காரணம், எல்லாக் குப்பைகளையும் சாக்கடைகளில் கொட்டி ஏதோ ஒரு இடத்தில் தேங்க வைப்பதுவும், மழை நீர் சேமிப்பு என்றால் அது எந்தச் சேனலில் வருகிறது என்பது போன்ற அக்கரையின்மையின் வெளிப்பாடே!. காங்கிரீட் காடுகளுக்குள் பெய்யும் மழையை துரத்தியடிப்பதில் இருக்கும் வேட்கை, நிலத்துக்குள் புகுத்தி சேமிக்கும் வள்ளமையை எந்த கண் துடைப்புச் சட்டத்தால் திணித்திட முடியும்!


மூச்சு முட்டும் பேச்சு :

ஒவ்வொரு முறையும் சாலைகளில் செல்லும் போது, கவனிக்கத் தவறாதது, இன்றைக்கு எத்தனை பேர் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். சராசரியாக 1 கி.மீ தூரம் செல்லும் சாலைகளில் எதிரில் வருபவர்கள், பக்கவாட்டில் இருப்பவர்கள், நடமாடுபவர்கள் எனக் கவனிப்பதில் குறைந்தது 30% பேர் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. பத்து வருடங்களுக்கு முன் பேசியதை விட போன் மூலமாக குறைந்தது பத்து மடங்காவது சராசரியாக பேசுகிறோம் என நினைக்கிறேன். அப்படிப் பேசிப்பேசி என்ன சாதித்தோம் என்பதுதான் தெரியவில்லை. சினுங்கும் போனைப் பார்த்தாலே அயர்ச்சி கூடுகிறது.

இதையும் கொஞ்சம் பாருங்களேன்…

 


நல்ல கேள்வி

எந்த அரசாங்கமும் இதுவரை வாங்காத அளவுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது. ம்ம்ம் குட்டு மட்டுமா!?

இன்றைய லேட்டஸ்ட் குட்டு….
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் (கேரளாக்காரர்!!!!) நியமன வழக்கில் நியமனம் குறித்த சீல் வைத்த கவரில் கோப்புகளை அளித்த அட்டர்னி ஜெனரலிடம் கவரைப் பிரிக்காமலே உச்ச நீதிமன்றம் கேட்கிறது ஊழலில் கைதாகி ஜாமின்ல வந்தவரை எப்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையரா போடுறீங்க

இலவச விளம்பரம்:

எங்கள் அரிமா சங்க இதழ் சுவடுகளின் இந்த வருட ஆசிரியர் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. இதுவரை இரண்டு இதழ்கள் வெளிவந்திருக்கிறது. இன்னும் மூன்று இதழ்கள் இருக்கின்றன. சொட்டும் கவிதைகள் பக்கத்தில் பதிவர்களின் கவிதைகளைப் பயன்படுத்தி வருகிறேன். குறுங்கவிதைகள் அனுப்ப விரும்பும் பதிவர்கள் எனக்கு மடலிடவும். ஏற்கனவே வலைப்பூவில் வெளியான கவிதையாக இருந்தாலும் சரி.

சுவடுகள் இதழ்களை வாசிப்பதற்கான சுட்டி சுவடுகள் - ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்

உயிர்களின் விலை :

ஈரோடு நகரத்தின் நான்கு முக்கியச் சாலைகளிலும் அகலமாக தடுப்புச் சுவர் கட்டிவிட்டார்கள். அந்தத் தடுப்புச் சுவர் எதிரெதிராய் வாகனங்கள் வரும், இடது வலது சாலையை பிரிப்பதற்கு என்பதைத் தாண்டி. விளம்பரப் பலகைகளி நடுவதற்கே என்பது போல் அவ்வளவு அகலம். அதுவும் மிக நெருக்கமாக நடப்பட்டிருக்கும் பலகைகளால் எதிர் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல், இடது பக்கச் சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பும் இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் அவ்வப்போது அடிபட்டு வருவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. விளம்பரப் பலகை மூலம் வரும் காசு பணத்திற்கு முன் உயிரா முக்கியம் ((:

கொஞ்சம் ’கிறிச்’சுகள் (அட...... ட்விட்ஸ்ங்க)

தோல்விகள் துன்பங்கள் என வலிக்க வலிக்க சுயசரிதையில் எழுதும் வாய்ப்பு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது!

000000

நான்காவது ரவுண்டில் சேர்ந்த நண்பன் ராவா ஒரு புல் அடிப்பேன் எனச்சொல்ல, பாதி மப்பு காலி, ஒரு கிங்பிஷர்பீர் என ஆர்டர் செய்தபோது புல் மப்பும் காலி

000000


அரிசி, கோதுமை, பால் எதிலும் நினைச்ச இலக்கை அடைய முடியறதில்ல, தீபாவளிக்கு டாஸ்மாக் சேல்ஸ் 200+ கோடி டார்கெட் சொல்லி அடிக்கிறாங்க # பெருமை


000000


ஊழல் செய்பவர்கள், ஊழலில் அமைதிகாப்பதில்லை. அது குறித்து பேசும் போது ஒட்டுமொத்தமாய் அமைதி காக்கிறார்கள் # வாழ்க பணநாயகம்


000000


பீரையும், ஒயினையும் சேர்த்தா, முறைப்பெண்+மல்லிகைபூ மாதிரி செம காம்பினேசன் போல # பில்டப்பு


000000


இரண்டு திருமணமானவரோடு மாணவிஓட்டம்போலீஸ்வலைவீச்சு’- இன்னும் எத்தனை நாளைக்குத்தான்ஓட்டம்’ ‘வலைவீச்சுனே ஒப்பேத்துவீங்க  #வார்த்தைப் பஞ்சமோ


000000


குதூகலமாய், உற்சாகமாய் பேசவாவது செய்யும் பிரதமர் எப்போதான் கிடைப்பாங்க இந்தியாவுக்கு # பேராசை


000000


இந்தியாவில் உச்ச நீதி மன்றம் என்று ஒன்று இல்லாமல் போயிருக்கக் கூடாதா? # மன்மோகன்சிங்


000000



சின்னக் குழந்தைகள் வீதிகளில் தீபங்களோடு. டிவிக்களிலிருந்து பிய்த்தெடுப்பதற்காக வேணும் இத்தருணங்கள் தொடரட்டும். # கார்த்திகை தீபம்


000000


RADIA னு பேர் வச்சதுக்குப் பதில் RADIO னு பேர் வச்சிருக்கலாம் # Niira Radia Tapes


000000



Nov 19, 2010

தூரிகை விரல்













________________________
கால்கள் இல்லாத குழந்தை
பிடறி சிலிர்த்தோடும்
குதிரையை வரைந்து
வேண்டும் இடத்துக்கெல்லாம்
பயணப்பட்டுக் கொள்கிறது


________________________

மீனை வரையச் சொன்னேன்
முதலில் தண்ணீரை வரைந்தாள்
பறவையை வரையச் சொன்னேன்
முதலில் வானத்தை வரைந்தாள்
ஏனென்று கேட்டேன்….
தண்ணியில்லாட்டி மீன் செத்துடும்
வானம் இல்லாட்டி எப்படி பறக்கும்?


Nov 17, 2010

ஒரு ஏழு மணி எழவு


செல்லாத்தா செழிப்பா வாழ்ந்தது பட்டிக்காடு
புருசனுக்கு பிறகு பட்டணத்துல பையனோட
நாலாவது மாடியில பளபளன்னு தங்க(க்) கூடு
எல்லாம் வீட்டுக்கே வந்துடும் மனுசமக்கா தவிர

வேலைக்கு ஆளு, வெளுக்கறதுக்கு மெசினு
போகவரக் கார், பெரிய கலர் டிவி, ஏசி மெசின்
படுக்க பஞ்சு மெத்தை, பக்கத்திலயே கக்கூஸ்
காசு இருந்தா என்ன குறை பட்டணத்துல

நெஞ்சுல சுருக்குங்குதேன்னு கூப்பிட
பரிட்சை புத்தகத்தோட ஓடிவந்த பேத்தியும்
பதறியடிச்சு ஓடிவந்த மருமகளும்
தந்த தண்ணியில ரெண்டு வாய் எறங்கல

மேல் வீட்டு கம்பவுண்டர கூப்பிட்டுப் பார்க்க
பேச்சும் இல்ல பேசறதுக்கு மூச்சும் இல்ல
எந்தச் சிரமும் வைக்காம ஏழுமணிக்கு
செத்துப் போச்சு செல்லாத்த கெழவி

கடிகாரத்தப் பார்த்து நேரத்த குறிச்சிட்டு
பாயை விரிச்சு பாட்டி உடம்ப படுக்கைல போட்டு
கலைஞ்சு கெடக்குற வீட்ட கொஞ்சம் அடுக்குறதா
கண்ணுமூடுன பாட்டிக்கு அழுவறதான்னு நிக்க

செல்லாத்தா மகனுக்கு தகவல் வந்தப்போ
ஏழுமணி வியாபாரக் கூட்டம் பிதுங்குச்சு
கல்லா மாத்திவிடற கணக்குப்பிள்ளை லீவு
எப்படியும் கடைமூட இன்னொரு மணி ஆகும்

வெளியூருக்கு லைனுக்குப் போன பேரனுக்கு
எந்த போன்லயிருந்து கூப்பிட்டாலும் ஏனோ
தொடர்பு எல்லைக்கு வெளியவே இருக்கானாம்
எப்போ வருவானோ கொள்ளிக்குச் சொந்தக்காரன்

பங்காளி வீட்டுக்கும் ஊருக்கும் சொன்ன கையோட,
பக்கத்து வீடு, எதுத்த வீடுன்னு தட்டிச் சொல்லியும்
ஏனோ இன்னும் ஒருத்தரும் வந்து சேர்ந்தபாடில்ல
ஒருவேள ராத்திரி சோறு தின்னுட்டு வருவாங்களோ

அசையாம கிடந்த செல்லாத்தா மூஞ்சியில
அழைக்காமலே அலையலையா மொய்க்குது ’ஈ’
எல்லாம் சுளுவா கிடைக்கிற பட்டணத்துல
ஏனோ எழவுக்குத்தான் ஒரு சனத்தையும் காணல

___________________

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...