சிறைச்சாலை கைதிகளோடு சிறிது நேரம்...


நூலக வார விழாவினையொட்டி, ஈரோடு கிளை சிறைச்சாலை கைதிகளிடம் உரையாடும் ஒரு வாய்ப்பு. நிகழ்ச்சி திட்டமிட்டத்திலிருந்தே மனதிற்குள் 'என்ன பேசுவது, எவ்விதம் அவர்களை அணுகுவது?’ என்பதுள்ளிட்ட குறுகுறுப்பு.
மாவட்ட நூலகர் திரு.மாதேஸ்வரன், மத்திய மற்றும் கிளை நூலகர்கள், நவீன நூலக நூலகர் திருமதி.ஷீலா, இளவல்கள் ஜெகதீஷ், சரிதா உள்ளிட்ட பலரும் உடன் கலந்து கொண்டனர்.

அறிவுரையெல்லாம் எடுபடாது, ஆலோசனை தரும் அளவிற்கு அவர்களை, குற்றங்களை, அதற்கான நிர்பந்தங்களை அறிந்ததில்லை. இறுதியாக இதுவரை வாசிக்காமல் தள்ளிப்போட்டிருந்த திருடன் மணியன் பிள்ளைபுத்தகத்தை நேற்று வாசிக்கத் தொடங்கினேன். அது வேறொரு உலகத்திற்குள் இட்டுச் சென்றது. இன்னும் சொல்லப்போனால் இரவில் உறக்கம் முழுக்க மணியன் பிள்ளை உடனிருந்தார். அவர்களைச் சந்திக்கும் மனநிலையைக் கொடுத்தது.

ஈரோடு கிளை சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் அனைவரும் கொலை முயற்சிக்கும் குறைவான பிக்பாக்கெட், வழிப்பறி, சிறு ஊழல் உள்ளிட்ட சிறு குற்றங்களில் சிக்கியவர்கள். வழக்கமாக 25-30 பேர் என இருக்கும் எண்ணிக்கை தீபாவளி சீஸன் என்பதால், 52 பேராக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் டிப்ளமோ முதல் எம்.காம் (சி.ஏ) வரையிலான படித்தவர்களும் உண்டு.

மைனர் பெண்ணைக் காதல் திருமணம் செய்ததால் ஒரு இளைஞன் போக்ஸோ சட்டத்தில் கைதாகியிருக்கிறான். 30-40% பேர் திரும்பத் திரும்ப வருகின்றவர்கள். அவர்களிடம் ஏன் திரும்ப வருகின்றீர்கள் எனக் கேட்டால், வேறு வழி தெரியவில்லை என்கிறார்கள். பிணையில் எடுக்க யாரும் இல்லாதவர்களும் அங்குண்டு. மூன்று நாட்களுக்கு முன்பு பிணையில் வெளியில் சென்ற ஒரு இளைஞன் ஆடு திருடிய வழக்கில் வேறொரு ஊரில் கைது ஆகியிருப்பதாக செய்தித்தாளைக் காட்டி சிறை அதிகாரிகள் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.



பெரியார் நகர் கிளை நூலகம் ஒன்றின் சார்பில் கணிசமான புத்தங்களோடு ஒரு சிறு நூலகம் அங்கே அமைக்கப்பட்டிருக்கிறது. ஐம்பது பேர்களில் பத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து வாசிப்பில் இருக்கிறார்கள்.

வெளியில் இருக்கும் பலருக்கும், உள்ளே இருக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான். குற்றம் வெளியில் தெரிவது - தெரியாமல் இருப்பது, சட்ட வரம்பிற்குள் உட்படுவது - உட்படாதது, சிக்கிக் கொண்டது - தப்பித்துக் கொண்டது, பலம், செல்வாக்கு - பலமின்மை, செல்வாக்கின்மை என அந்தக் கோட்டிற்கு பல பெயர்கள் உண்டு.

திருடன் மணியன் பிள்ளை புத்தகத்தை உரையில் சுட்டிக் காட்டிருந்தேன். அந்தப் புத்தகத்தின் விறுவிறுப்பு குறித்துப் பேசுகையில், அடுத்தடுத்த கட்டுரைகள் படிக்கும்போது மணியன் பிள்ளையின் திருட்டுகளின் மீது ஒரு சுவாரஸ்யம் ஏற்பட்டு, ஒரு திருட்டைச் செய்து பார்த்தால் என்ன எனும் ஆர்வம்கூட வந்துவிடலாம் எனச் சொல்லிவிட்டேன். உரை முடிந்ததும், ஒருவர் அந்தப் புத்தகம் வாசிக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார். திருந்தக் கேட்டாரா, திட்டமிடக் கேட்டாரா என்பதுதான் யோசனையா இருக்கின்றது!!! 😂😂

மு.கு:
மற்ற நிகழ்வுகளில் பங்கேற்பாளர்களை, பார்வையாளார்களைப் படம் எடுப்பது போல், இவர்களை எடுக்கவேண்டாம் என முடிவு செய்திருந்தேன்.


1 comment:

Ragul said...

அருமை ஐயா.நன்றாக இருந்தது. அந்த கைதி திருத்துவதற்காக தான் அந்த புத்தகத்தை கேட்டிருப்பார் என்பது என்னுடைய கருத்து. ஏனென்றால் எப்படி தவறு செய்வது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் அதிலிருந்து திருந்துவது எப்படி என்று தெரியாததால் அந்தப் புத்தகத்தை கேட்டிருப்பார். மேலும் சொல்லப்போனால் உங்கள் உரையை கேட்டவுடன் மனம் மாறி இருக்கும்.