கீச்சுகள் தொகுப்பு - 71


என்ன செய்ய... ஒப்பனை அன்பு பேரழகுதான்!

*

நினைவில் உறங்கும் முத்தம் விழிக்கும் தருணம் இரவு!

*
எந்த ஈகோவும் பார்க்காமல், “எனக்கு இன்னிக்கு பர்த் டே... விஷ் பண்ணுங்கஎனக் கேட்பவர்கள் தம் வாழ்க்கையை மிகவும் நேசிக்கிறவர்களாக இருக்க வேண்டும்!

*
பதில்களுக்கென்ன தேவை!? கேள்விகளிலேயே இளைப்பாறுகையில்...!

*

இரைச்சலை நிறுத்து இல்லையேல் இடம் விட்டகல்... எவ்வளவு நேரம் காதுகளைப் பொத்துவாய்!?

*

ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கின்றதா...? கையில் இருப்பதை கீழே வைத்துவிடு!

*

'என்னைத் தெரியாதா!?' என்றாய். மௌனமாய் இருந்தேன்! 'உன்னைத் தெரியாதே!' என்கிறாய் மௌனமாய் இருக்கத் துவங்குகிறோம்!

*

எதிர்காலத்தை மட்டுமே யூகித்து திட்டமிடுவது மட்டுமேயல்ல வாழ்க்கை. நிகழ்காலத்தில் உணர்ந்ததை உணர்ந்தவித்ததில் வாழ்ந்துவிடுவதும் தான்!

*

நீங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருங்கள். உடம்பையும் உறவுகளையும் பத்திரமா வச்சுக்குங்க. அதிகாரத்தின் உச்சம் ஒன்று படுக்கையில் நோய்மையில் ஒரு குழந்தைபோல் குலைந்து கிடைப்பதைப் பார்க்க நோகுகிறது.

*

விழிப்பு கூட அரிதாக கொடியதுதான். காரணமேயின்றி உறக்கம் பிடிக்கா ஒரு இரவில்தான் அது தெரிய வரும்.

*
மனிதர்களிடையே 143உணர்வு மங்கும்பொழுது 144தடையுத்தரவு தேவைப்படுகிறது!

*

நரகம் என்பது மரணத்திற்கு பிறகு மட்டுமே வருவதல்ல. வாழும்போதே நேசிப்புக்குரியோரை வதைக்கும் துன்பத்தில் உதவ முடியாமல் போகும் தருணமும்தான்.

*

உடற் பிணியென்பது பெரும்பாலும் என் பிணக்கின் மொழி கேள்என உடல் கொள்ளும் ஊடலே!

*
சொல்வதால், எழுதுவதால் அது சொல் ஆகிறதா! சொல்லாத, எழுதாத 'சொல்லிற்குப் பெயர் என்ன?

*

வாழ்க்கைப் பயணத்தின் மைல் கற்கள் ஆண்டுகள் அல்ல, 'மனிதர்கள்'

*

ஒரு பிரச்சனையை முடித்து வைக்க 'மன்னிப்பு கோருதல்எளிய தீர்வாக இருக்கின்றது. இதில் இருக்கும் நகை முரண் என்னவென்றால், மன்னிப்பு கோரியதும் முடித்துக்கொள்ளத் தயாராகும் எதிர் தரப்புக்கு அந்த மன்னிப்பை வைத்துக் கொண்டு என்ன செய்வதெனத் தெரியாது என்பதே!

*

மூச்சுணரும் அருகாமையில் பேச்சு எதற்கு!

*

சிங்கத்தின் பசி மட்டுமே மானினுடைய பிரச்சனையாக இருக்க முடியாது. வாழும் அளவிற்கு ஓடாமல் இருப்பதுவும் மானின் பிரச்சனையாக இருக்கலாம்.

*

எதுவுமே பேசிக்கொள்ளாத தினங்களிலும் உறவு, நட்புகளில் 'குட் நைட் / குட் மார்னிங்' மட்டும் சொல்லும் சம்பிரதாயமும் ஒருவித போலித்தனம்தான்!

*

பிரச்சனை என்னவென்றே புரியாமலிருப்பதுதான் பல நேரங்களில் பெரும் பிரச்சனை!

*


No comments: