சவால்தனையது உள்ளம்


எச்சரிக்கை :  இதுவொரு சுயபுராணக் கட்டுரை

ஈரோட்டிற்கு குடி பெயர்ந்து பத்து ஆண்டுகளில் எனக்கென்று மிகப்பெரிதாக இருந்த ஒரு சிறிய கனவு, ’காலையில் நேரத்தில் எழுந்து இந்த உடலின் நல்லதுக்கு எதாச்சும் செய்யனும்’ என்பதுதான். அதற்காக வாக்கிங் (நடைப்பயிற்சி) துவங்கலாம் என பல முறை துவங்குவதும் ஓரிரு நாட்களில் கை விடுவதுமான கள்ளாட்டம் ஆடிக்கொண்டிருந்தேன். அந்தக் கோமாளித்தனம் குறித்து 2009ல் ஒரு கட்டுரை (http://maaruthal.blogspot.in/2009/07/25.html) கூட எழுதிப்பார்த்தும்…. ம்ஹூம்… ஒரு பயனும் இல்லை.

வாக்கிங் செல்ல ஒரு துணையிருந்தால் நன்றாக இருக்குமென நினைக்க, நான் எது சொன்னாலும் கேட்கும் இளவல் ரமேஷ் சிக்கினார். அவர் வீட்டிலிருந்து என் வீட்டிற்கு 5 கி.மீ பைக்கில் வந்து சேர, அதன்பின் இருவரும் கிளம்பினோம். இரண்டு மாத கால அளவில் மொத்தமாக ஒரு பத்து பதினைந்து நாட்கள் நடந்திருப்போம். அதன்பின் பெரியதொரு இடைவெளி… இடைவெளி என்றால் நாட் கணக்கு, வாரக் கணக்கு கிடையாது… மாதக் கணக்கு, வருடக் கணக்குதான். அதன் பின் வெவ்வேறு நபர்கள், வெவ்வேறு பாதைகள், வெவ்வேறு நேரங்கள் என நடந்துவிட எடுத்த முயற்சிகளும் தோல்விதான்.

இதற்கிடையில்  வீட்டிலேயே யோக கற்றுக்கொள்ள ஆரம்பித்து அதுவும் நான்கைந்து தினங்களில் ஓய்ந்து போனது. ஒரு கட்டத்தில் மனைவியும், என் அம்மாவும் புதிதாக யோகா, உடற்பயிற்சிகள் எனத் தொடங்கி, ஏதேதோ வித்தைகள் செய்ய… “அடச்சே…. நாமெல்லாம் உருப்படவே வாய்ப்பில்ல போல!” என்றாகிப் போனது. எப்படியாவது நாளைக்கு ஆறு மணிக்கு முன்பு எழுந்துவிடவேண்டுமென தீர்மானித்த எல்லா விடியல்களிலும் தோற்றுப்போனேன்.

இந்தச் சூழலில்தான் நீச்சல், சைக்கிள், மாரத்தான் ஓட்டம் எனக் கலக்கிக் கொண்டிருந்த நண்பர் ஷான் கருப்புசாமி தம் 21 நாள் சவாலைத் தொடங்கினார். எதையும் மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்தால் அது பழக்கமாக மாறிப்போகும் சாத்தியமுண்டு என்பதை தீர்க்கமாக நம்புபவன் நான் என்பதாலும், ஷான் மீதான அன்பினாலும் அவரின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கவனித்தலில் இயலாமையின் பொறாமையும் இருந்திருக்கலாம்.

அவரின் சவால் நிறைவு தினத்தில் 21 கி.மீ தூரம் ஓடிவிட்டு… புதிதாக சவாலை ஏற்க என்னை அழைத்தார். ஒரு வகையில் நான அந்தச் சவாலுக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் ஆவலிலும், எனக்கான சுய நிர்பந்தத்திலும் இருந்தேன். அவர் அழைத்துப் பேசும்போது, ”செய்றேன் ஆனா, வீடு மாத்துற வேலை இருக்கு, முடிஞ்சவுடன் தொடங்குகிறேன்” எனச் சொல்லிவிட்டு, அவரின் ஃபேஸ்புக் அழைப்பில் என் பதிலாக ”தொடங்குவது குறித்து 21 நாட்களில் அறிவிக்கிறேன்!” என சமாளித்தேன்.

ஜூன் இரண்டாம் வாரத்தில்தான் துவங்கமுடியுமென்றிருந்த மனநிலையை சட்டென மாற்றி ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு வாங்கியிருந்த பழைய ஷூவைத் துடைத்து, ஜூன் 3ம் தேதி காலையில் சமரசங்களின்றி துவங்கினேன். முதல் நாள் நடந்து முடித்து வீடு வந்து வியர்வையுடன் அமர்ந்து சிலுசிலுவென காற்று வியர்வையில் உரச… உடல் சிலிர்த்து குழைந்து கிறங்க… “ஒரு உணர்வு வந்துது பாருங்க... ம்ம்ம்... அத எப்படிச் சொல்றது.... எப்படியாச்சும் சொல்லியாகனுமே... ஆங்...

கவுண்டமணிக்கு லாட்டரில காசு விழுந்தவுடனே... “அய்யோ... நான் இப்ப எதையாச்சும் வாங்கியாகனுமே.... அடேய்... இந்த வீதி என்ன வெலைனு கேளுடா” என்பாரே... அந்த மாதிரி ஒரு ஃபீல்ல்ல்!


இரண்டாம் நாள் பேருற்சாகம். மூன்றாம் நாள் மனசு கெஞ்சியது. நான்காம் நாள் மனசு முரண்டு பிடித்தது. மனசு பின் வாங்கு எனச் சொன்னபோதெல்லாம் புத்தி இன்னும் கூடுதலாய் முன் செல் என்றது.

பத்தாம் நாள் அதிகாலையிலேயே ஒரு மலைக்கிராமத்திற்கு பயணம் இருந்ததால், வழக்கத்திற்கு மாறாக முன்பே எழுந்து நடையை முடித்தேன். மலைப்பாதைகளில் வாகனம் தடுமாறிய சில கிலோ மீட்டர்கள் தொலைவிற்கு ஏற்றத்தில் நடக்க வேண்டிய சூழலை, குறையேதும் சொல்லாமல் விரும்பி நடந்தேன்.

பதினொராம் நாள் நிறைவில் 21 நாள் சவால் குறித்து ஃபேஸ்புக்கில் எழுத, ”உள்ளத்தனைய உடல்” குழுமத்தில் பலர் இணைந்தனர். அதில் உடற்பயிற்சியில், நடைப்பயிற்சியில் மிகப் பெரிய எல்லைகளைத் தொட்டவர்கள் இருந்தாலும், புதிதாக சவாலைத் துவங்கியவர்கள் எனக்குள் இன்னும் கூடுதல் பொறுப்புகளை ஏற்படுத்தினார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவம். நடைக்காக ஒதுக்கப்பட்ட நேரங்களில் உழவர் சந்தைக்குச் செல்லவேண்டும் என இரண்டு முறை மனைவி மூலம் சவால் வந்தபோது, அவரை உழவர் சந்தை வரை வண்டியில் சென்றுவிட்டு, அங்கிருந்து நடந்து திரும்பினேன். இரண்டாம் வாரத்தில் பழைய ஷூ நார்நாராய் கிழிந்துபோக, அமேசானில் புது ஷூ வாங்கி அது காலுக்கு வரும் வரை கிழிந்த ஷூவோடு சமாளித்து, புதிய ஷூ காலுக்குப் பழகும் வரை மாறி இரண்டு கால்களிலும் மாறி மாறி கொப்புளங்களை பெற்றதும் உண்டு. 
21ஆம் நாள் குறித்த நினைவுகள் ஒரு பரவசத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தன. திடீரென 21ம் நாளான இன்று அதிகாலை கூடுதல் தூரம் கூடுதல் நேரம் என்ற ஆசையோடு தயாராகி சூரியன் படத்தில் "காந்தக் கண்ணழகி... ஆங்... லெப்ட்ல பூசு.... இந்தா ரைட்ல பூசு" என பூ மிதிக்கப்போன கவுண்டமணி மாதிரி உற்சாகமான மனநிலையோடு வீட்டின் கதவைக் திறக்கையில் சாரல் மழை பொழிந்துகொண்டிருந்தது. சிலபல தயக்கங்களுக்குப் பிறகு, மனைவியின் கண்டிப்புகளையும் மீறி கூடுதலாய் ஒரு தொப்பியோடு துவங்கிவிட்டேன். வழக்கமான அந்தப் பாதைகளில் தென்படும் நபர்களில் ஒரே ஒருவரைக்கூட இன்று பார்க்க முடியவில்லை. பூந்தூறலில் வியர்க்க வியர்க்க இருபது நாட்களில் ஒரு போதும் எட்டாத 6 கி.மீ தொலைவை முன், பின் நடை, மித ஓட்டம் என 50 நிமிடங்களில் முடித்தேன்.

இந்த 21 நாட்களின் இடையில் தோப்புக்கரணத்தை இணைத்துக் கொண்டேன். கடந்த இரண்டு நாட்களாக பின் பக்கமாக நடக்கும்-ஓடும் முயற்சிகளை செயல்படுத்துகிறேன். எந்த இலக்கையும் அடைய, அந்த இலக்கை அடைந்தால் என்ன பலன் கிட்டும் என்பதை அறியவேண்டுமெனச் சொல்வார்கள். ஒவ்வொரு நாள் நடைக்கும் நான் எதிர்பார்த்து காத்திருக்கும் பலன், நிறைவில் உடல் முழுக்க பொங்கி வழியும் வியர்வை. தொப்பலாய் வியர்வையில் நனைந்தபடி ஆசுவாசமாய் சிலுசிலுக்கும் காற்றில் வியர்வை கரையக் காத்திருக்கும் அந்தச் சுகம் வார்த்தைகளுக்குள் அடங்காத ஒரு கவிதை. அந்த கவிதையான அனுபவம்தான் கூடுதல் தொலைவிற்கும், நடையை விரைவாக்குவதற்குமான காரணங்களாகவும் இருந்தன.

  • இந்த 21 நாட்களில் ஒருபோதும் சவாலிலிருந்து பின்வாங்கும் எண்ணம் வரவில்லை. ஆனால் இந்தச் சவால் இல்லாமல் இருந்திருந்தால் குறைந்தது ஐந்து தருணங்களிலேனும் நடையைக் கைவிட்டிருப்பேன். எப்போது 21 நாட்கள் ஆகும் எனும் தவிப்பு இருந்தது உண்மை.
  • இந்த 21 நாட்களில் பல தருணங்களில் மனது கெஞ்சிய போதும், முரண்டு பிடித்தபோதும், கெஞ்சிய மற்றும் முரண்டு பிடித்த மனதிற்கு அபராதமாக நடக்கும் தொலைவினைக் கூட்டினேன்.
  • இந்த 21 நாட்களில் அலாரம் இல்லாவிட்டாலும் கூட 4.45 மணிக்கு விழித்துக் கொள்ளுமளவிற்குத் தயாராகியிருக்கிறேன். சராசரியாக இரவு 10.30 மணிக்குள் தூங்கப் பழகிவிட்டேன். அதில் ஒருநாள் 9.15 மணிக்கே உறங்கிப்போனேன். சராசரியாக 6 – 6.30 மணி நேரங்கள் மட்டுமே தூங்கும் பழக்கத்திற்கு மாறியிருக்கிறேன்.
  • இந்த 21 நாட்களில் புதியதொரு முயற்சியாக காலை நேரங்களில் எழுதத் துவங்கியிருக்கிறேன். குங்குமத்திற்கு இரண்டு, நம்தோழிக்கு ஒன்று என மூன்று கட்டுரைகளை இந்த சவாலால் எனக்குக் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறேன்.
  • இந்த 21 நாட்களில் கூடுதலாய் ஆங்கில தினசரியொன்று வாசிக்கத் துவங்கியிருக்கிறேன்.
இனி இது இவ்வாறே தொடரும். சுவாரஸ்யமான புதிய முயற்சிகள் இணையும். சைக்கிள் ஒன்று வாங்குவது அடுத்த ஆசை. நீச்சலும், அருகில் உள்ள மலைகளில் ஏறுதலும் இன்னபிறவும் இணையலாம்.

இதனால் கிட்டிய மகிழ்ச்சி அனைத்திற்கும் நண்பர் ஷான் மட்டுமே காரணம் எனச் சொல்வதிலும் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி் ஷான்… நன்றி ”உள்ளத்தனைய உடல்” குழும நட்புகளே!

நான் நிறைவு செய்ததன் நினைவாக, இந்தச் சவாலை புதிதாய் ஏற்க என்னோடு முதன்முதலில் நடக்க வந்த இளவல் ரமேஷ் @ கோபாலகிருஷ்ணனை அழைக்கிறேன். 21 நாட்கள் சவாலை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த எவரும் முன்வரலாம். அப்படி முன்வருபவர்களை 21 நாட்கள் தொடர்ந்து ஊக்கப்படுத்த நானும், குழுமத்திலும் பலரும் இருக்கின்றனர்..

உள்ளத்தனைய உடல் என்பது நிதர்சனமான ஒன்றுதான். கூடுதலாக நான் அதில் இணைக்க விரும்புவது ”சவால்தனைய உள்ளம்

அடுத்த 21 நாட்கள் சவாலாக நான் நாளையிலிருந்து தொடங்க விரும்புவது.


  1. ஒரு நாளில் சமூக வலை தளங்களுக்கு ஒதுக்கும் நேரம் மொத்தமாக 60 நிமிடங்கள் மட்டுமே.
  2. தினசரி 60 நிமிடங்கள் புத்தக வாசிப்பை வாசித்த நேரம், பக்கங்களோடு உறுதி செய்வது
  3. இருக்கும் இடத்தில், சூழலில் 30 நிமிடங்கள் எந்தச் செயலும் செய்யாமல், அமைதியாக மட்டுமே இருப்பது


சவால்தனைய உள்ளம் – உள்ளத்தனைய உடலும் செயல்களும்!

-