தேன் இல்லாப் பூவிலமர்ந்துமெல்ல நெளியும்
பாம்பின் உடல் போல்
மின்னி மின்னி வளர்கிறது
பிரியமிகு வெயில்

புழுவொன்றைத் தேடும்
கழுகின் நிழலில் இளைப்பாறுகிறது
காலடியில் கிடக்கும்
சற்றுமுன் உதிர்ந்த மாவிலையொன்று

சொற்கள் கூடமறுத்து
வெம்பி நிற்கும் கவிதையாய்
வாடிக் கிடக்கிறது
அற்ற குளத்து தாமரை வேரொன்று

முட்டை சுமக்கும்
பசித்தலையும் வெண்புறாவொன்று
அலையடிக்கும் கானல் நீர் நோக்கி
திசை மாறுகிறது

தேன் இல்லாப் பூவிலமர்ந்த
தேனீயொன்று கால்களில் படிந்த
மகரந்தத்துகள்களோடு
மேகம் நோக்கி பறக்கின்றது!