”என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா” புகழ் ’சொல்வதெல்லாம் உண்மை’
நிகழ்ச்சி ஜீ தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. சுதா சந்திரன் ஒரு பெண்மணியோடு
பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பெண் தன்மேல் யாரோ ”பீய்ங்...பீய்ங்” (ஆமாங்க…. அதேதான்
பீப் சவுண்டை ஒரு பாதுகாப்புக்காக பீய்ங்… பீய்ங்னு போட்டிருக்கேன்) எனும் ஒருவர்
மலையாள மாந்திரீகம் மூலம் ஆவியை ஏவி விட்டு தன்னுடைய ஸ்பிரிட்டை கட்டுப்படுத்தி
வைத்திருப்பதாக புகார் சொன்னார். அந்த ஆவி அவரை உடல் ரீதியாக பாலியல் தொந்தரவு
செய்வதாகவும் சொன்னவர். போகிற போக்கில் ”ஆவிகளிடையே விபச்சாரம்” நடப்பதாகவும் கூட
ஒரு வரி சொன்னார். விறுக்கென நிமிர்ந்தபோது “”என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா”
என்ற வரி மனசெங்கும் அசரீரியாய் ஒலித்தது
அவர் பேசுவது மிகத் தெளிவாகவும், சரியாகவும் இருப்பதாகவே
தோன்றுகிறது. படபடவெனப் பேசினாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளில் பதட்டமின்றிப்
பேசுகிறார். 2008 ஆம் ஆண்டு துவங்கி அந்த ஆளின் ஆவி தன்னைக் கட்டுப்படுத்தி
வருவதாக புகார் சொல்கிறார். தன்னோடே அந்த ஆவி இருப்பதாகவும், தன்னை நெருங்கும்போது
தள்ளி விடுவதாகவும் சொல்கிறார். தற்போது அரங்கில் ஆவி தென்படுகிறதா எனக் கேட்டால்,
இங்கு வரவில்லை என்கிறார்.
நிகழ்ச்சியாளர்கள் அவருக்குத் தீர்வு காண்கிறோம் என திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த மூவரை அழைத்து வந்தார்கள். அதில் இருவர் வயதானவர்கள். சடை முடி தரித்தவர்கள். மூவரும் இணைந்து ஏதோ பூஜையெல்லாம் செய்தார்கள். ஒருவர் நீண்ட நேரம் சமஸ்கிருத மந்திரம் சொன்னவர், அந்தப் பெண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, துர் ஆவிகள் தொந்தரவு இல்லை என்றார். உடன் இருந்த பெரியவர் இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்தப் பெண்ணுக்கான எல்லாப் பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் எனச் சொல்லிவிட்டு கிளம்பினர்.
பாதிக்கப்பட்ட பெண்மணி இது குறித்து கமிஷனரிடம் புகார்
அளித்திருப்பதாகவும், பல அதிகாரிகளிடம் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வழக்குரைஞரோடு தொடர்ந்து இதுகுறித்து விவாதித்து வருவதாகவும் கூறினார். இந்தப்
பிரச்சனையால் மட்டுமே ஐ.டி வேலை மற்றும் அரசு வேலையை இழந்ததாகவும் கூறினார்.
இதேபோல் ஒரு ஆளை 15 வருடங்களுக்கு நான் முன்பு சந்தித்தது
நினைவிற்கு வருகிறது. ஆள் உருக்குலைந்து இருப்பார். கரித்துண்டில் கிறுக்கப்பட்டது
போல் புரியாத சொற்களில் எழுதப்பட்ட ஒரு காகிதத்தோடு வருவார். தன்னை மிரட்டும்
ஆவிகள் குறித்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு ஒரு புகார் மனு தட்டச்சு
செய்து தரச்சொல்வார். சரியாகப் பேச்சு வராது. என்னேரமும் இரண்டு தாடைப் பற்களையும்
மென்றுகொண்டே இருப்பார். காற்றில் கையை வீசுவார். தட்டச்சு செய்து தர எவ்வளவு காசு
வேண்டுமானாலும் தருவதாக பையிலிருந்து காசை அள்ளுவார். முடியாது என எப்படிச் சொல்லி
மறுத்து அனுப்பினாலும் அரை மணி நேரம் கழித்து, அப்போதுதான் புதிதாக வருவது போல் வருவார்.
இன்று முடியாது நாளை பார்க்கலாம் எனச் சொல்லித் தப்பிக்கப் பார்த்தால், அடுத்த
நாள் அலுவலகம் திறக்குமுன்பே வந்து நின்று கொண்டிருப்பார். அப்பொழுது அந்த ஆளை
எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல் என்னவென்னவோ சொல்லி சமாளிக்க வேண்டியிருந்தது. இன்னொரு
முறை அந்த ஆளை பார்த்துவிடக் கூடாது என்பதே அந்த நாளைய வேண்டுதல்களாக இருக்கும்.
நிகழ்ச்சி அரங்கில் அடுத்ததாக ஹிப்னாடிசம் மூலம் சிகிச்சை அளிக்கும் ஒரு பெண்மணியை அழைத்தார்கள். அவர் தெளிவாகப் பேசினார். பாதிக்கப்பட்டிருக்கும் பெண்மணியின் சூழல், அவரின் தனிமை, அப்படியானவர்களின் மத நம்பிக்கை மீதான ஈடுபாடு, சிறுவயதில் பாலியல் துன்புறுத்தலில் பலியாகியிருத்தல் என பல காரணிகள் இன்றைய பிரச்சனைக்குக் காரணமாக இருக்கலாம் என்றார்.
தீர்வாக முதலில் அவர் அமைதி அடையவேண்டும், அதற்காக சில மாத்திரைகள் மூலம் அவரைக் கட்டுப்படுத்த அவர் சம்மதிக்க வேண்டும், அடுத்து சிகிச்சைக்கு அவர் முழு ஒத்துழைப்பும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டால், ஆழ் மனதில் இருக்கும் சிக்கலைக் கண்டு சரி செய்ய முயற்சி செய்யலாம் என்றார்.
இதையெல்லாம் கேட்கும்போதே இடை மறித்த பாதிக்கப்பட்ட பெண்மணி தனக்கு அமைதி இருப்பதாகவும், தன்னைக் கட்டி வைத்திருப்பதிலிருந்து அவிழ்த்துவிட்டால் மட்டும் போதுமென்றும் முரண்டு செய்ய ஆரம்பித்தார். இது ஒருவகையில் எதிர்பார்த்ததுதான். அதோடு பேட்டியை முடித்துக்கொள்ளலாம் என்று, தானே தன் பிரச்சனையை பார்த்துக் கொள்வது போல் ஏதோ சொல்லிவிட்டு எழுந்து செல்ல ஆரம்பித்தார்.
என் அருகில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு 80 வயது கருப்பாயி பாட்டியை பேய், பிசாசுகள் குறித்து எதேனும் அனுபவங்களைச் சொல்வார் எனும் ஆர்வத்தோடு திரும்பிப் பார்த்தேன்....
“எந்தப் பெசாது கிழிக்கிதாம்... அவுளுக்கு மனசுல என்னுமோ பிரச்சன இருக்குதாட்டோ. இப்டியேருந்தானா பைத்தீகாரி தா ஆவா” எனத் தீர்ப்பு சொன்னார்.
ஓரிரு கோடிகள் உதவி செய்வற்காக நம்மில் பலரும் கொண்டாடும் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து மாபெரும் வெற்றியடையும் பேய்ப் படங்களை மட்டுமே, அதுவும் குழந்தைகள் வெறித்தனமாக பார்க்க விரும்பும் வகையிலான படங்களை எடுப்பது குறித்து அந்த ஆயாவிடம் பொறுமையாக ஒருநாள் கருத்துக் கேட்கவேண்டும்.
-
3 comments:
ஹ ஹ ...அருமை
கருத்தெல்லாம் எதற்கு? எல்லாம் காசுதான்!
Super.....
Post a Comment