பெயர்க்கவியலா முத்தம்
ஒவ்வொருமுறை பருகும்போதும்
நீ அந்தக் கோப்பையைத்தான்
கவனமாய்த் தேர்ந்தெடுப்பாய்
பருகும்போது பருகிவிடுவதுபோல்
பார்க்கவும் செய்வாய்

அகமும் புறமும் தந்த
எல்லா வலிகளையும்
சொற்களால் சலித்துக் கொட்டிவிடும்
வாய்ப்பிருந்த பொழுதொன்றில்
நீதான் உதட்டுச் சுழிப்பின் மூலம்
ஒரு முத்தத்தாலும் மருந்திடலாமென
குறிப்புணர்த்தினாய்

பிரியம் இழுத்துச் சென்ற
மோகம் முதிராவொரு நொடியில்
நிதானமாய் நெகிழ்வாய்
கன்னி முத்தத்திற்காய்
உன் இமைகளில் இதழ்கள் படர்கையில்
உலகம் ஒளி கூடியதாயிருந்தது

மோகமேந்தி நீயளித்த சுடு முத்தம்
வெண்பனி இரவிலும் உறையவில்லை
உறங்கவிடவும் இல்லை

நீ எப்போதும் பருகும் கோப்பை
இன்று என் கைக்கு வந்திருக்கிறது
காப்பிக் குவளையின் விளிம்பில்
தேய்த்தும் அகலாமல் இருக்கும் கறை
நீ மிச்சம் வைத்துப்போன
பெயர்க்கவியலா முத்தம்தானே!

-

No comments: