Jan 12, 2016

பவழமல்லி மரத்தடி











பவழமல்லி மரத்தடி நிழல்
உனக்கு போதுமானதாய் இருக்கிறது
எப்போது வைத்த மரமெனத் தெரியவில்லை
நிழல்தரும் அளவிற்கு
உயரத்திலிருப்பதைக் கண்டபோதுதான்
அது வளர்ந்திருப்பதையே உணர்கிறேன்

உன் கை அசைவில் அதிரும் அணிலொன்று
கிளையிலிருந்து சுவர் மீது தாவுகிறது
தென்னை மரமேதும் இல்லாத வீதியில்
எதை நம்பி அணிலென யோசிக்கையில்
மீசை வரை நா சுழற்றும்
பூனையொன்று மெல்லக் கடக்கிறது

உதிர்ந்த மலர்களேதும்
நசுங்கிவிடா வண்ணம் கவனமாய்த்தான்
காலடிகள் வைத்திருப்பாய் என்றும்
காலுக்கு கீழே மலர்களேதும்
கசங்கியிருக்காதென்றும்
நானாகக் கருதிக்கொள்கிறேன்

மௌனம் சலித்துப்போகிறது
சொற்களெதுவும் அகப்படவில்லை
சுவற்றுக்கப்பால் ஒரு குழந்தை அழுகிறது
இறைந்து கிடக்கும் பூக்களெல்லாம்
மடிந்த சொற்களாய்த் தோன்றுகிறது
வீச்சம் அடிக்கிறது
உதிர்ந்திருக்கும் பூக்கள் யாவும்
எப்போதோ நாம் பரிமாறிய
முத்தங்களென நினைக்கிறேன்
நறுமணம் சூழ்கிறது
இக்கணத்திற்கு இது போதும்

மீண்டும் சந்திப்போம்
அணிலையும் பூனையையும்
அந்தக் குழந்தையின் அழுகையையும் கூட!

-

2 comments:

Durga Karthik. said...

Mmm.

http://rajavani.blogspot.com/ said...

கவிதையோடு பயணித்தால் சுகம்தான் கதிர்...

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...