சிங்கப்பூர் பயணம் - 3 (லீ க்வான் யூ - அஞ்சலி)


விடியலொன்றில் மரணச் செய்தியைக் கேள்வியுறுவதொன்றும் எனக்குப் புதிதல்ல. அப்படியான ஒரு விடியல்தான் இன்றும். விழித்தபின் அணைத்து வைத்திருந்த கைபேசியை இயக்கி, இணையத்தை முடுக்கியபோது வாட்ஸப்பில் இருக்கும் குயில் தோப்பு நண்பர்கள் குழுமத்தில் அந்தச் செய்தியை பகிர்ந்திருந்தனர். சிங்கப்பூரின் சிற்பி ”லீ க்வான் யூ” அவர்களின் மரணச் செய்திதான் அது. உண்மையில் எனக்கு அதுவொன்றும் அதிர்ச்சியான செய்தியாகப்படவில்லை. ஆனால் மிகக்கனமானதொரு செய்தி. நிதானமாய் எழுத நினைத்திருந்ததை சற்று அவசரமாக்கியிருக்கும் செய்தி. மரணம் என்பது உண்மை. எவராலும் பொய்யாக்க முடியாத உண்மை. அந்த மரணம் ”லீ க்வான் யூ” மூலமாகவும் தன் உண்மையை நிரூபித்திருக்கிறது.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஒரு பயிற்சி வகுப்பில், சிங்கப்பூரின் எழுச்சியை உதாரணம் காட்டிப்பேசியதாக நினைவிலிருக்கிறது. மேலோட்டமாக ஏதோ ஒன்றை வாசித்தோ அல்லது கேள்விப்பட்டதன் வாயிலாகவோதான் அதை நான் அப்போது பேசியிருந்தேன். அது தவிர்த்து சிங்கப்பூர் குறித்து வேறொன்றும் தெரியாது. 2013ல் சிங்கப்பூர் சென்றிருந்தபோது கூட, ஊரைச் சுற்றவும், கட்டிடங்களின் உயரங்களில் வியக்கவும், போக்குவரத்து வளர்ச்சி கண்டு மயங்கவும், நண்பர்களைச் சந்தித்து உரையாடவும் மட்டுமே என்னால் இயன்றது. ஒரு வெளிநாட்டுப் பயணம், அதுவும் சிங்கப்பூர் பயணம் என்பதாக மட்டுமே ஊர் திரும்பினேன். எதற்கு சிங்கப்பூர் போனாய், அங்கிருந்து என்ன கொண்டு வந்தாய் என்பதற்கு என்னிடம் பதிலெதுவுமே இல்லை.

மிகச்சரியாக 17 மாதங்கள் கழித்து இந்த முறை மேற்கொண்ட பயணம் தந்த அனுபவம் சொற்களில் அடங்காதவை. எதற்குப் போனாய் என்பதற்கும் பதிலிருக்கிறது, என்ன கொண்டு வந்தாய் என்பதற்கும் பதிலிருக்கிறது. இரண்டாவது கேள்விக்கான பதில் “லீ க்வான் யூ”



இந்த முறை எனக்கு இடங்களைப் பார்ப்பதில் விருப்பமிருக்கவில்லை. விரும்பியவண்ணம் நண்பர்களைச் சந்தித்தேன். நான் சந்தித்தேன் என்பதைவிட, அவர்களாக என்னை வியப்பிற்குள், பெருமிதத்திற்குள் இழுத்துச் சென்றார்கள். எந்தவித திட்டமிடலும் இல்லாமல், எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், எந்தவித கேள்விகளும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக நான் சந்தித்த அத்தனை மனிதர்களும் ஒருமித்த குரலில் பேசியது சிங்கப்பூரின் மேன்மை, உயர்வு் மற்றும் அதையெல்லாம் சாத்தியமாக்கிய அந்தத் தலைவர் ” லீ க்வான் யூ” குறித்துதான்.

எங்களுக்கு வாழ்க்கையில் பயம், வருத்தம், கோபம், பதட்டம் உட்பட எதுவுமேயில்லை என ஈரோடு வந்திருந்த ஏ.பி.ராமன் சார் சொன்னதில் தொடங்கி, எப்படிப்பட்டவரையும் தனக்கேற்ற மாதிரி செதுக்கிக்கொள்ளும் சிங்கப்பூர் எனச் சொன்ன ஷானவாஸ் உரையாடலில் வழியாக, நான்கு நாட்கள் இருந்த அனிதா குடும்பத்தின் சிங்கப்பூர் வாழ்க்கைமுறை உட்பட, இறுதியாக விமான நிலையத்தில் கை அசைத்த அமல் ஆனந்த், வெற்றி வரை ஒவ்வொருவரிடமும் சிங்கப்பூரின் மேன்மைகள் குறித்தே நான் கேட்கவும், உணரவும் வேண்டியிருந்தது.

சிங்கப்பூர் அரசியல் குறித்தும், லீ க்வான் யூ குறித்தும் எதுவும் பேசாமல் இருத்தல் நலம் என வாசகர் வட்ட நண்பர்கள் அவர்களுக்கும் உரையாடிக்கொண்டிருந்ததை, அரசியல் மீது, தங்கள் தலைவன் மீது அவர்கள் வைத்திருந்த மரியாதையாகவே நான் உணர்ந்தேன். இரவு குயில்தோப்பு நண்பர்களோடு கடற்கரை உரையாடலில் இடையிடையே அவர்கள் ”லீ க்வான் யூ” குறித்துப் பகிர்ந்த செய்திகளையும், அதை அவர்கள் பகிரும்போது குரலில் இருந்த நெகிழ்வினையும் மிகப்பெரிய ஆச்சரியத்தோடே பார்த்தேன். அருங்காட்சியகத்தில் 700 ஆண்டுகால சிங்கப்பூரைச் சுற்றிவரும்போது, மலேசியாவுடன் இணைந்து பின், உதறிவிடப்பட்டு வீழ்ந்து எழுந்ததை அறிந்தபோது பிரமித்து நின்றேன். மெரினா பே பகுதியில் கண்ணன் கேட்ட ஒரு கேள்வியையும், சொன்ன நகைச்சுவையையும் ஒட்டி நகர்ந்த உரையாடலில், ஊர் நினைவுகள் குறித்து வெற்றியிடம் கிளறிவிட, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் தான் இறங்கும்போது ”ரொம்ப பாதுகாப்பா உணர்வேண்ணே” எனச் சொன்னபோது எனக்குப் பெருமூச்சு வந்தது.

தேசிய நூலகத்தில் புஷ்பலதா நாயுடு அவர்களிடம் உரையாடும்போது, நூலகம், அதன் கட்டமைப்பு, சிங்கப்பூர் இலக்கியங்களுக்கான இடம் என்றெல்லாம் அவர் உதிர்த்த சொற்களில் பிரமித்து சிலையாய் நின்றுகொண்டிருந்தேன்.

வெட்டிக்காடு ரவி அண்ணனுடனான, இரவு உணவின்போது அவருடைய இருபது ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கையையும், பல பயணங்களையும் குறித்துப் பேசும்போது, அவர் உதிர்த்த சொற்களில் நிரம்பியிருந்த சுவை கண்டும், குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அமல் ஆனந்த் சொன்னதில் இருந்த நிம்மதி கண்டும் பெருமிதமும், பொறாமையும் கொண்டேன்.

மூத்தவர் ஏ.பி.ராமன், திரு.ஹரிகிருஷ்ணன், தாம் சண்முகம், ஹாஜா என ஒவ்வொருவருடனுமான தனிப்பட்ட சந்திப்புகளில் நேரிடையாகவும், அவர்களையறியாலும் சிங்கப்பூரின் பெருமைகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன. கனக்கக்கனக்க நான் சுமந்து கொண்டேயிருந்தேன்.

அதே நாட்களில் இத்தனை பெருமைகளுக்கும், பிரமிப்புகளுக்கும் காரணமான சிங்கப்பூரின் சிற்பி “லீ க்வான் யூ” தன் கடைசி நாட்களை மருத்துவமனையில் கழித்துக் கொண்டிருந்தார். அவர் மருத்துவமனையில் இருப்பதாய்ச் சொல்லும்போது எல்லோருக்கும் குரல் தணிந்துபோகிறது.

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தைச் சுற்றி முடித்தபோதுதான், சிங்கப்பூர் கடந்து வந்திருந்த நாட்கள் குறித்தும் பாதை குறித்தும் ஓரளவு அறிந்திருந்தேன். அதன்பின் ஒவ்வொருவரும் கடந்த ஐம்பதாண்டுகள் குறித்துப் பேசுவதைக் கேட்டு வியப்பின் உச்சத்தில் இருந்தேன்.

பதினான்காம் நூற்றாண்டில் ஒரு முக்கியத் துறைமுகமாக மாறிய சிங்கப்பூர், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிடம் பிடிபடுகிறது. மிகப்பெரிய தாக்குதலையும் பாதிப்பையும் அடைந்த சிங்கப்பூர் போரின் முடிவில், தன்னாட்சி பெற்ற அரசாக மாறுகிறது. குடிக்க தண்ணீர்கூட இல்லாத ஒரு தீவா, நாடாக இருக்கும் சிங்கப்பூர் தாமாக விரும்பி 1963ஆம் ஆண்டு தன்னை மலேசியாவுடன் இணைத்துக் கொள்கிறது. 1965ல் மலேசியா சிங்கப்பூரை தன்னிடமிருந்து விடுவிக்கிறது, பிரித்துவிடுகிறது அல்லது சுதந்திரம் கொடுக்கிறது. உலக வரலாற்றில் தாம் விரும்பாமல், கேட்காமல் சுதந்திரம் என்ற பெயரில் கழட்டிவிடப்பட்ட ஒரு தேசம் சிங்கப்பூராகத்தான் இருக்க வேண்டும்.

1965ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி மலேசியாவின் தந்தை என அழைக்கப்படும் அப்போதை பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் சிங்கப்பூர் பிரித்துவிடப்பட்டதை அறிவிப்பதையும், பிரித்துவிடப்பட்டது குறித்து தன் உணர்வுகளை அழுகையோடு சிங்கப்பூரின் தந்தை ”லீ க்வான் யூ” வெளிப்படுத்துவதையும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரு ஆவணம். 50 ஆண்டுகளுக்கு முன் அவர் கண்ணில் துளிர்த்த நீரைக் காண்கையில், ஒரு கணம் என் கண்களிலும் நீர் திரண்டது.

1965ல் பிரித்துவிடப்பட்ட சிங்கப்பூர் தனது பொன்விழாவைக் கொண்டாடுகிறது. SG50 என்ற முழக்கம் நாடெங்கும் ஒளிர்கிறது. நான் சந்தித்த அத்தனை மக்களின் பிரார்த்தனையும் ”லீ க்வான் யூ” குறைந்தபட்சம் வருகின்ற ஆகஸ்ட் 9 வரையேனும் நலமாய் இருக்க வேண்டுமென்பதாகவே இருந்தது. ஆனாலும் மரணம் சற்று முன்கூட்டியே வென்றிருக்கிறது.



அந்தக் காணொளியில் பால்ய காலம் முழுதும் மலேசியாவுடனானது என வலியோடு பகிரும் ”லீ க்வான் யூ”, மலேசியா இல்லாமல் ”சிங்கப்பூர் வாழமுடியாது” என்றும் பிரகடனப்படுத்துகிறார். உழைப்பும், தீர்க்கமும், காலமும்,  அவருடைய பிரகடனத்தையே அவருடைய மற்றொரு பிரகடனம் கொண்டு முறித்துப் போடுகிறது. அவரின் நம்பிக்கை அவராலேயே தோற்கடிக்கப்படுகிறது. ஆமாம், பிறிதொரு சமயத்தில், எந்த வாயால் சிங்கப்பூரால் வாழமுடியாது என்று சொன்னாரோ அதே வாயால் திடமாய், உரத்த குரலில் அவரே பிரகடனப்படுத்துகிறார் ”மற்றவர்களின் விளையாட்டை ஆடுவதற்காக நான் இங்கில்லை. நான் பல லட்சம் மக்களின் வாழ்வைக் கொண்டிருக்கிறேன்.” ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு அழுத்தமாய் அறிவிக்கிறார் ”சிங்கப்பூர் வாழ்ந்து காட்டும்”. சிங்கப்பூர் வாழ மட்டும் செய்யவில்லை… உலகத்தின் முன் வென்று காட்டியிருக்கிறது.

வணக்கங்கள் ”லீ க்வான் யூ”

-

7 comments:

ராமலக்ஷ்மி said...

அஞ்சலிகள்.

சிங்கப்பூரின் தந்தைக்கு சிறப்பு சேர்க்கும் அருமையான பதிவு.

Kumaresh said...

அருமையான வார்த்தை வரிகள்..அபூர்வமான தகவல்கள்..நன்றிகள் பல அண்ணா..:-)

கரந்தை ஜெயக்குமார் said...

அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

Rathnavel Natarajan said...

சிங்கப்பூர் பயணம் - 3 (லீ க்வான் யூ - அஞ்சலி) = அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார் திரு Erode Kathir

Unknown said...

அருமையான அஞ்சலி கட்டுரை.

i'm விக்னேஷ் said...

சிங்கப்பூரின் சிறப்பு உங்கள் எழுத்துக்களால் இன்னும் சிறப்பாக..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஆசியா வரலாற்றிற்களித்த மாமனிதர் அவர். அவர் இருக்கும் போது தூற்றியவர்கள் சிலரைக் கண்டு நான் வெந்திருக்கிறேன்..அவரது வாழ்வு, சிந்தனைகள், சாதனைகள் பலவற்றைப் படித்தும் எது அவரைச் செலுத்தியது என்பது இன்றுவரை புதிர்தான்!
ஆசியா உலகிற்களித்த உலகத் தலைவர் ! இன்னும் 50 வருடங்களில் கூட அவர் போல இன்னொருவர் வருதல் அரிது!