Showing posts with label SG50. Show all posts
Showing posts with label SG50. Show all posts

Mar 25, 2015

சிங்கப்பூர் பயணம் - 4



உட்லண்ட்ஸ் நூலகத்தின் அந்த சரிவான அரங்கம் அமைதியாய்க் காத்திருந்தது. இதுவரையிலான எல்லா நிகழ்வுகளுக்கும், உரைகளுக்கும் சாட்சியமாய் அந்த அமைதி தென்பட்டது. வாசகர் வட்ட தோழமைகள் அங்குமிங்குமாய் நிகழ்வின் துவக்கத்திற்காக இயங்கிக்கொண்டிருந்தனர். பொதுவாக எந்த ஒரு நிகழ்வும், துவக்கப் புள்ளி வரைதான் அழுத்தமும், அலை பாய்ச்சலும், பதட்டமும், நெருக்கடியும். துவங்கிய நொடியிலிருந்து ஆற்றில் விழுந்த மழைத்துளிபோல அதன் போக்கில், அது செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்றுவிடும்.

முன் வரிசையில் அமர வைக்கப்பட்டேன். தெரிந்த நண்பர்கள் ஒவ்வொருவராய் வந்து ஆங்காங்கே அமரத் தொடங்கினர். சிலரை நான் அடையாளம் கண்டு கொண்டேன். பலர் அடையாளம் கண்டு பேசினார்கள்.

ஒரு நிறுவன ஒழுங்கோடு நிகழ்ச்சி கச்சிதமாகத் துவங்கியது. நேர நிர்வாகத்தில் உறுதியாக இருப்பார்கள் என முன்பே எனக்கு பல வகைகளில் உணர்த்தப்பட்டிருந்தவாறே நிகழத் தொடங்கியது.

அழகுநிலா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளருக்கான ஆளுமையும், நளினமும் அவருக்கு மிகப் பெரிய பலம். மாணவி ஒருவரின் இறை வணக்கம், மாணவிகளின் நடனம், அனிதாவின் வரவேற்புரை, சித்ரா ரமேஷின் வாசகர் வட்ட நிகழ்வுக் குறிப்புகள், புத்தக அறிமுகங்கள் என ஒவ்வொன்றாய் அதனதனன் அளவுக்குள் நேர்த்தியாக நிறைவேறின. புத்தக வெளியீடுகள், நினைவுப் பரிசுகள் என எல்லாமே கச்சிதம். இது போன்ற கச்சிதமான விழாக்களை நாங்களும் பலமுறை நடத்தியுள்ளதால், ஒவ்வொன்றையும் அதன் இயல்போடும் நேர்த்தியோடும் பொருத்திப் பார்த்துக்கொண்டேன். நேரம் அதிகம் எடுத்துக்கொண்டவரை அழகு நிலா கையாண்ட விதம் சுவாரஸ்யத்துக்குரியது.

புத்தக அறிமுகங்களுக்கு பிறகு, புத்தக விற்பனைக்காக மேடை ஒத்திவைக்கப்பட்டது ஒரு நல்ல செயல் எனப்பட்டது. பொதுவாக விழாவின் இடையில் இடைவெளி விடுதல், தொய்வை ஏற்படுத்தும் என்பது நான் கருதியிருந்த ஒன்று. ஆனால், நிகழ்வின் முக்கிய நோக்கத்தில் குறிப்பிடத்தக்கது புத்தக வெளியீடுகள் எனும்போது அதற்கான நேரம் ஒதுக்கியது நான் கற்றுக்கொண்ட ஒரு செயல். இடைவெளிக்குப் பிறகு வாழ்த்துரை வழங்க அழைக்கப்பட்டேன்.






படைப்பாளிகள் குறித்த ஒரு சிறுகவிதையோடு துவங்கி, ஒவ்வொருவருடைய புத்தகங்களின் உள்ளடக்கங்களை நானறிந்த வரையில் பாராட்டி, ஷானவாஸ் புத்தகத்தை படிக்க ஆவல் கொண்ட நண்பன் குறித்த சம்பவத்தில் நிறுத்தி… ஆழ்கடலையும், அந்த உப்புக்காற்றையும், அடர் மேகங்களையும் கடந்து வந்திருப்பது, வழங்கப்படும் 600 நொடிகளுக்குள் வாழ்த்துரையாற்றிட மட்டுமே என்பதாக இல்லாமல், சற்றே அவர்கள் மனதோடு உரையாட வந்திருப்பதையும் சொன்னேன்.

அங்கு சென்றதிலிருந்து அண்ணா, தம்பி, மாப்ள, நண்பா, சார் என அவரவருக்குப் பிரியப்பட்ட மாதிரி அழைத்த நட்புகளிடமிருந்தது, இவர் ஃபேஸ்புக் நண்பர், வலைப்பதிவர், எழுதுகிறவர் என்பதையெல்லாம் கடந்து, தம் மண்ணிலிருந்து, தம் மண் வாசனையை, தம் வட்டார மொழியை, தாம் சுவாசித்த காற்றை சுமந்து வந்திருக்கிறவர் என்பதாகவே இருந்ததாய் நான் உணர்ந்தேன்.

சிங்கப்பூரென்றால் ஒரு சுற்றுலா தளம், விதிகள் கடுமையானவை, சுத்தமாக இருக்கும் என்பதோடு, வருமானத்தையும், செலவையும் 45 ரூபாயால் பெருக்கி அவரவர் நிலைக்கேற்ப பெருமிதமும், பொறாமையும் கொள்ளும் ஒரு நாடாகவே பெரும்பாலும் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அத்தோடு சென்னையை சிங்கப்பூராக்குகிறேன் என அரசியல்வாதிகளும், எங்கோ விளைந்துகொண்டிருந்த நிலத்தை விலை நிலமாக்கி அதற்கு சிங்கப்பூர் சிட்டி எனப் பெயர் வைத்த வியாபாரிகளும் நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் என்பது வேறொரு தனிக்கதை.

உண்மையான சிங்கப்பூரை நமக்கு அடையாளப்படுத்த வேண்டிய கடமை அங்கிருக்கும் படைப்பாளிகளுக்குத்தான் மிக முக்கியமாய் இருக்கின்றது. நானெல்லாம் எழுத வந்த காலத்தில் வலையுலகத்தை ஆளுமையோடு ஆண்டு கொண்டிருந்த பல வலைப்பதிவர்கள் சமீப காலங்களில் எழுதுவதில்லை என்ற ஆதங்கம் எப்போதுமுண்டு. எழுத்தாளன் செத்துவிட்டதாக அறிவித்த எழுத்தாளரைச் சந்தித்தபோதும்கூட, அவரே முன்பு கூறியிருந்ததை வைத்து, அவர் இன்னும் எழுத வேண்டிய பதினைந்து நாவல்களின் கடன் மிச்சமிருப்பதாகச் சொன்னதை நினைவு கூர்ந்தேன். அதேபோல் ஒவ்வொரு பதிவருக்கும், ஒவ்வொரு படைப்பாளிக்கும், வாசகருக்கும் தாம் எழுதவேண்டிய அளவுக்கான பக்கங்கள் எழுதப்படத் தயாராகவே இருக்கின்றன, அவர்கள் எழுத வேண்டியது மட்டுமே அப்போது அவசியமாய் இருக்கிறதென்பதைச் சொன்னேன்.

ஆயிரம் சொற்கள் எழுதி எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாத நிலையில், இரண்டு வரி நிலைத்தகவலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திட முடியும் என்பதை, நான் சமீபத்தில் தந்தைக்கும் மகளுக்குமான ஒரு நிகழ்வினை, ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாய் எழுதியதையும், அதன் விளைவுகளையும் கூறி, உரை நிறைவு செய்து இறங்கினேன்.

சிறப்புரையாற்றிய எழுத்தாளர் ஜோ.டி.க்ரூஸ், நான் இறுதியாகச் சொன்ன அந்த குழந்தை உதாரணத்தை மிக அழகாக மீனவர்கள், அரசு குறித்து பொருத்தி இரண்டு முறை பேசினார். ஆளுமையும், உடல் மொழியுமாய் மிகச் சிறப்பாகப் பேசிய ஜோ.டி.க்ரூஸ், உரையின் நிறைவில் கேள்வி கேளுங்கள் என்றார். உங்கள் புத்தகம் எங்கு கிடைக்கும் என்ற ரீதியில் எழுந்த கேள்விகள் கண்டு ஆச்சரியமாய் இருந்ததைவிட, அயர்ச்சியாய் இருந்தது. சில கேள்விகள் சவாலாய் அமைந்தன.

அன்பிற்குரிய ஏ.பி.ராமன் என்னருகில் இருந்தார். ஒரு பத்திரிக்கையாளருக்கே உரிய கவனத்தோடு குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். அடுத்த நாள் அது அழகியதொரு பகிர்வாக வந்தபோது, குறிப்பேட்டில் சேகரித்த கிறுக்கல்கள் இத்தனை அழகாய் பூக்குமா என ஆச்சரியப்பட்டேன்.

2008ல் நான் முதன் முதலில் பதிவுலகத்திற்கு வந்திருந்தபோது, பதிவுலகத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த நண்பர்கள் கோவி.கண்ணன், குழலி புருஷோத்தமன், வெட்டிக்காடு ரவிச்சந்திரன், கே.வி.ஆர், சிங்கைநாதன், தம்பிகள் முஸ்தபா & வெற்றிக்கதிரவன் ஆகிய மூத்தபதிவர்களின் வருகை கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். அவர்களில் கே.வி.ராஜாவை மட்டும் முதன்முறையாக சந்தித்தேன். கே.வி.ஆருடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என்பதற்கு, தனிப்பட்ட காரணமும் உண்டு.

ஹரிகிருஷ்ணன், ஆமருவி தேவநாதன், எம்.கே.குமார், அபிராமி. பழனியப்பன், முனைவர்.தின்னப்பன், புஷ்பலதா நாயுடு, தினமலர் புருஷோத்தமன், நிர்மலா, அமல் ஆனந்த், தியாக ரமேஷ், அன்வர், சரவணன், முத்துக்குமார், நசீர், அதியன், ராம் சந்தானம், லலிதா சுந்தர், ஆறுமுகம், டாம் சண்முகம், கருணாகரசு, கண்ணன், பனசை நடராஜன், ரமேஷ், ஹாஜா, சசிக்குமார் என அன்பு ததும்பும் பலரை ஒரே இடத்தில் சந்தித்தது மிக மகிழ்வான ஒன்று.

உணவு அரங்கில் திகட்ட திகட்டப் பாராட்டினார்கள். அநேகமாக நான் வாழ்நாளில் எதிர்கொண்ட அடர்த்தியான, அதிகமான பாராட்டு அதுவாகத்தான் இருக்கும். ஒரு வகையாய் பாராட்டு அலைகளிலிருந்து சற்றே விலகி நிதர்சனத்திற்குள் நடக்க ஆரம்பித்தேன். இவர்கள் பாராட்டும் அளவிற்கு பேசியிருக்கிறேனா என்ற கேள்வி எனக்குள் குறுக்கும் மறுக்குமாய் ஓடிக்கொண்டேயிருந்தது. பதிவுலக நண்பர்களின் பாராட்டு கூடுதலாய்த் தெம்பு தந்தது. எனினும் வழக்கம்போல் இன்னும் சிறப்பாக பேசியிருக்கலாம் என்பதாய் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இதுவரையிலும் இந்த உரைதான் சிறப்பு, கச்சிதம் என்ற நிறைவினை நான் உணர்ந்ததேயில்லை. யார் எவ்விதம் பாராட்டினாலும், இன்னும் சிறப்பாய் பங்களித்திருக்கலாம் எனும் ஒருவித குறுகுறுப்பு இருந்துகொண்டேதான் இருக்கின்றது. அதே நேரம் வாசகர் வட்ட நிகழ்வில் நான் சிறப்பாக ஏதேனும் செயல்பட்டிருந்ததாக பெருமை கொண்டால், அது அத்தனையும் அனிதாவிற்கும், ஷானவாஸ், சித்ரா ரமேஷ் உள்ளிட்ட வாசகர் வட்ட நண்பர்களுக்குமே சாரும்.

-

நிகழ்ச்சி குறித்த தாளம் நிகழ்ச்சி காணொளி


மேலும் வாசிக்க..


சிங்கப்பூர் பயணம் - 1
சிங்கப்பூர் பயணம் - 2

சிங்கப்பூர் பயணம் - 3

-

Mar 23, 2015

சிங்கப்பூர் பயணம் - 3 (லீ க்வான் யூ - அஞ்சலி)


விடியலொன்றில் மரணச் செய்தியைக் கேள்வியுறுவதொன்றும் எனக்குப் புதிதல்ல. அப்படியான ஒரு விடியல்தான் இன்றும். விழித்தபின் அணைத்து வைத்திருந்த கைபேசியை இயக்கி, இணையத்தை முடுக்கியபோது வாட்ஸப்பில் இருக்கும் குயில் தோப்பு நண்பர்கள் குழுமத்தில் அந்தச் செய்தியை பகிர்ந்திருந்தனர். சிங்கப்பூரின் சிற்பி ”லீ க்வான் யூ” அவர்களின் மரணச் செய்திதான் அது. உண்மையில் எனக்கு அதுவொன்றும் அதிர்ச்சியான செய்தியாகப்படவில்லை. ஆனால் மிகக்கனமானதொரு செய்தி. நிதானமாய் எழுத நினைத்திருந்ததை சற்று அவசரமாக்கியிருக்கும் செய்தி. மரணம் என்பது உண்மை. எவராலும் பொய்யாக்க முடியாத உண்மை. அந்த மரணம் ”லீ க்வான் யூ” மூலமாகவும் தன் உண்மையை நிரூபித்திருக்கிறது.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஒரு பயிற்சி வகுப்பில், சிங்கப்பூரின் எழுச்சியை உதாரணம் காட்டிப்பேசியதாக நினைவிலிருக்கிறது. மேலோட்டமாக ஏதோ ஒன்றை வாசித்தோ அல்லது கேள்விப்பட்டதன் வாயிலாகவோதான் அதை நான் அப்போது பேசியிருந்தேன். அது தவிர்த்து சிங்கப்பூர் குறித்து வேறொன்றும் தெரியாது. 2013ல் சிங்கப்பூர் சென்றிருந்தபோது கூட, ஊரைச் சுற்றவும், கட்டிடங்களின் உயரங்களில் வியக்கவும், போக்குவரத்து வளர்ச்சி கண்டு மயங்கவும், நண்பர்களைச் சந்தித்து உரையாடவும் மட்டுமே என்னால் இயன்றது. ஒரு வெளிநாட்டுப் பயணம், அதுவும் சிங்கப்பூர் பயணம் என்பதாக மட்டுமே ஊர் திரும்பினேன். எதற்கு சிங்கப்பூர் போனாய், அங்கிருந்து என்ன கொண்டு வந்தாய் என்பதற்கு என்னிடம் பதிலெதுவுமே இல்லை.

மிகச்சரியாக 17 மாதங்கள் கழித்து இந்த முறை மேற்கொண்ட பயணம் தந்த அனுபவம் சொற்களில் அடங்காதவை. எதற்குப் போனாய் என்பதற்கும் பதிலிருக்கிறது, என்ன கொண்டு வந்தாய் என்பதற்கும் பதிலிருக்கிறது. இரண்டாவது கேள்விக்கான பதில் “லீ க்வான் யூ”



இந்த முறை எனக்கு இடங்களைப் பார்ப்பதில் விருப்பமிருக்கவில்லை. விரும்பியவண்ணம் நண்பர்களைச் சந்தித்தேன். நான் சந்தித்தேன் என்பதைவிட, அவர்களாக என்னை வியப்பிற்குள், பெருமிதத்திற்குள் இழுத்துச் சென்றார்கள். எந்தவித திட்டமிடலும் இல்லாமல், எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், எந்தவித கேள்விகளும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக நான் சந்தித்த அத்தனை மனிதர்களும் ஒருமித்த குரலில் பேசியது சிங்கப்பூரின் மேன்மை, உயர்வு் மற்றும் அதையெல்லாம் சாத்தியமாக்கிய அந்தத் தலைவர் ” லீ க்வான் யூ” குறித்துதான்.

எங்களுக்கு வாழ்க்கையில் பயம், வருத்தம், கோபம், பதட்டம் உட்பட எதுவுமேயில்லை என ஈரோடு வந்திருந்த ஏ.பி.ராமன் சார் சொன்னதில் தொடங்கி, எப்படிப்பட்டவரையும் தனக்கேற்ற மாதிரி செதுக்கிக்கொள்ளும் சிங்கப்பூர் எனச் சொன்ன ஷானவாஸ் உரையாடலில் வழியாக, நான்கு நாட்கள் இருந்த அனிதா குடும்பத்தின் சிங்கப்பூர் வாழ்க்கைமுறை உட்பட, இறுதியாக விமான நிலையத்தில் கை அசைத்த அமல் ஆனந்த், வெற்றி வரை ஒவ்வொருவரிடமும் சிங்கப்பூரின் மேன்மைகள் குறித்தே நான் கேட்கவும், உணரவும் வேண்டியிருந்தது.

சிங்கப்பூர் அரசியல் குறித்தும், லீ க்வான் யூ குறித்தும் எதுவும் பேசாமல் இருத்தல் நலம் என வாசகர் வட்ட நண்பர்கள் அவர்களுக்கும் உரையாடிக்கொண்டிருந்ததை, அரசியல் மீது, தங்கள் தலைவன் மீது அவர்கள் வைத்திருந்த மரியாதையாகவே நான் உணர்ந்தேன். இரவு குயில்தோப்பு நண்பர்களோடு கடற்கரை உரையாடலில் இடையிடையே அவர்கள் ”லீ க்வான் யூ” குறித்துப் பகிர்ந்த செய்திகளையும், அதை அவர்கள் பகிரும்போது குரலில் இருந்த நெகிழ்வினையும் மிகப்பெரிய ஆச்சரியத்தோடே பார்த்தேன். அருங்காட்சியகத்தில் 700 ஆண்டுகால சிங்கப்பூரைச் சுற்றிவரும்போது, மலேசியாவுடன் இணைந்து பின், உதறிவிடப்பட்டு வீழ்ந்து எழுந்ததை அறிந்தபோது பிரமித்து நின்றேன். மெரினா பே பகுதியில் கண்ணன் கேட்ட ஒரு கேள்வியையும், சொன்ன நகைச்சுவையையும் ஒட்டி நகர்ந்த உரையாடலில், ஊர் நினைவுகள் குறித்து வெற்றியிடம் கிளறிவிட, எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, சிங்கப்பூர் விமான நிலையத்தில் தான் இறங்கும்போது ”ரொம்ப பாதுகாப்பா உணர்வேண்ணே” எனச் சொன்னபோது எனக்குப் பெருமூச்சு வந்தது.

தேசிய நூலகத்தில் புஷ்பலதா நாயுடு அவர்களிடம் உரையாடும்போது, நூலகம், அதன் கட்டமைப்பு, சிங்கப்பூர் இலக்கியங்களுக்கான இடம் என்றெல்லாம் அவர் உதிர்த்த சொற்களில் பிரமித்து சிலையாய் நின்றுகொண்டிருந்தேன்.

வெட்டிக்காடு ரவி அண்ணனுடனான, இரவு உணவின்போது அவருடைய இருபது ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கையையும், பல பயணங்களையும் குறித்துப் பேசும்போது, அவர் உதிர்த்த சொற்களில் நிரம்பியிருந்த சுவை கண்டும், குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அமல் ஆனந்த் சொன்னதில் இருந்த நிம்மதி கண்டும் பெருமிதமும், பொறாமையும் கொண்டேன்.

மூத்தவர் ஏ.பி.ராமன், திரு.ஹரிகிருஷ்ணன், தாம் சண்முகம், ஹாஜா என ஒவ்வொருவருடனுமான தனிப்பட்ட சந்திப்புகளில் நேரிடையாகவும், அவர்களையறியாலும் சிங்கப்பூரின் பெருமைகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன. கனக்கக்கனக்க நான் சுமந்து கொண்டேயிருந்தேன்.

அதே நாட்களில் இத்தனை பெருமைகளுக்கும், பிரமிப்புகளுக்கும் காரணமான சிங்கப்பூரின் சிற்பி “லீ க்வான் யூ” தன் கடைசி நாட்களை மருத்துவமனையில் கழித்துக் கொண்டிருந்தார். அவர் மருத்துவமனையில் இருப்பதாய்ச் சொல்லும்போது எல்லோருக்கும் குரல் தணிந்துபோகிறது.

சிங்கப்பூர் அருங்காட்சியகத்தைச் சுற்றி முடித்தபோதுதான், சிங்கப்பூர் கடந்து வந்திருந்த நாட்கள் குறித்தும் பாதை குறித்தும் ஓரளவு அறிந்திருந்தேன். அதன்பின் ஒவ்வொருவரும் கடந்த ஐம்பதாண்டுகள் குறித்துப் பேசுவதைக் கேட்டு வியப்பின் உச்சத்தில் இருந்தேன்.

பதினான்காம் நூற்றாண்டில் ஒரு முக்கியத் துறைமுகமாக மாறிய சிங்கப்பூர், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிடம் பிடிபடுகிறது. மிகப்பெரிய தாக்குதலையும் பாதிப்பையும் அடைந்த சிங்கப்பூர் போரின் முடிவில், தன்னாட்சி பெற்ற அரசாக மாறுகிறது. குடிக்க தண்ணீர்கூட இல்லாத ஒரு தீவா, நாடாக இருக்கும் சிங்கப்பூர் தாமாக விரும்பி 1963ஆம் ஆண்டு தன்னை மலேசியாவுடன் இணைத்துக் கொள்கிறது. 1965ல் மலேசியா சிங்கப்பூரை தன்னிடமிருந்து விடுவிக்கிறது, பிரித்துவிடுகிறது அல்லது சுதந்திரம் கொடுக்கிறது. உலக வரலாற்றில் தாம் விரும்பாமல், கேட்காமல் சுதந்திரம் என்ற பெயரில் கழட்டிவிடப்பட்ட ஒரு தேசம் சிங்கப்பூராகத்தான் இருக்க வேண்டும்.

1965ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி மலேசியாவின் தந்தை என அழைக்கப்படும் அப்போதை பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் சிங்கப்பூர் பிரித்துவிடப்பட்டதை அறிவிப்பதையும், பிரித்துவிடப்பட்டது குறித்து தன் உணர்வுகளை அழுகையோடு சிங்கப்பூரின் தந்தை ”லீ க்வான் யூ” வெளிப்படுத்துவதையும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரு ஆவணம். 50 ஆண்டுகளுக்கு முன் அவர் கண்ணில் துளிர்த்த நீரைக் காண்கையில், ஒரு கணம் என் கண்களிலும் நீர் திரண்டது.

1965ல் பிரித்துவிடப்பட்ட சிங்கப்பூர் தனது பொன்விழாவைக் கொண்டாடுகிறது. SG50 என்ற முழக்கம் நாடெங்கும் ஒளிர்கிறது. நான் சந்தித்த அத்தனை மக்களின் பிரார்த்தனையும் ”லீ க்வான் யூ” குறைந்தபட்சம் வருகின்ற ஆகஸ்ட் 9 வரையேனும் நலமாய் இருக்க வேண்டுமென்பதாகவே இருந்தது. ஆனாலும் மரணம் சற்று முன்கூட்டியே வென்றிருக்கிறது.



அந்தக் காணொளியில் பால்ய காலம் முழுதும் மலேசியாவுடனானது என வலியோடு பகிரும் ”லீ க்வான் யூ”, மலேசியா இல்லாமல் ”சிங்கப்பூர் வாழமுடியாது” என்றும் பிரகடனப்படுத்துகிறார். உழைப்பும், தீர்க்கமும், காலமும்,  அவருடைய பிரகடனத்தையே அவருடைய மற்றொரு பிரகடனம் கொண்டு முறித்துப் போடுகிறது. அவரின் நம்பிக்கை அவராலேயே தோற்கடிக்கப்படுகிறது. ஆமாம், பிறிதொரு சமயத்தில், எந்த வாயால் சிங்கப்பூரால் வாழமுடியாது என்று சொன்னாரோ அதே வாயால் திடமாய், உரத்த குரலில் அவரே பிரகடனப்படுத்துகிறார் ”மற்றவர்களின் விளையாட்டை ஆடுவதற்காக நான் இங்கில்லை. நான் பல லட்சம் மக்களின் வாழ்வைக் கொண்டிருக்கிறேன்.” ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு அழுத்தமாய் அறிவிக்கிறார் ”சிங்கப்பூர் வாழ்ந்து காட்டும்”. சிங்கப்பூர் வாழ மட்டும் செய்யவில்லை… உலகத்தின் முன் வென்று காட்டியிருக்கிறது.

வணக்கங்கள் ”லீ க்வான் யூ”

-

Mar 18, 2015

சிங்கப்பூர் பயணம் - 2


சுமார் பதினைந்து நாட்களுக்கு முன்பே சிங்கப்பூர் பயணத்திற்கான விமான பயணச்சீட்டுகள் வந்துவிட்டன. பயணம் குறித்து துளியும் சிந்திக்காத அளவுக்கு வேலை நெருக்கடி. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ரயில். புதன்கிழமை இரவு 11 மணிக்குத்தான் உடைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தேன். பயணம் குறித்து எந்தச் சலனமும், சிலிர்ப்புமின்றி புறப்பட்டது இந்தப் பயணமாகத்தான் இருக்க வேண்டும். காரணங்களும், இலக்குமற்ற எத்தனையோ பயணங்களில் கொண்டிருந்த குறுகுறுப்பும், மனவோட்டங்களும் அற்று, காரணங்களோடும், காரியங்களோடும் கிளம்பிய இந்தப் பயணம் ஏன் சலனமற்ற மனவெளியைத் தந்திருந்தது எனப் புரியவேயில்லை. மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை பெய்த அந்த மாசி மாதத்துப் பெரு மழையை மறக்கவே முடியாது.

என்னோடு அனிதாவின் அம்மாவும் பயணப்பட்டார்கள். நாள் முழுக்கவும், விமானத்தில் கைபேசியை அணைக்கும் வரையிலும் அனிதாவிடமிருந்து திரும்பத் திரும்ப ஒளி(லி)த்தது “அம்மாவ பத்ரமா பாத்துக்க… அம்மாவ பத்ரமா பாத்துக்க”

வெள்ளிக்கிழமை காலை 4.30க்கு சிங்கப்பூரில். நண்பர் மோகன்ராஜ் காத்திருந்தார். வீடு சென்று நிறையப்பேசி, கொஞ்சம் உறங்கி எழுந்தபோது சிங்கப்பூர் வெயிலும், வெளிச்சமும் உரசத் துவங்கியது. 25ம் மாடியில் இருக்கும் வீட்டிலிருந்து அருகாமையில் கடலும், அதில் மிதக்கும் கப்பல்களையும் பார்க்கலாம். 2013ல் இரண்டு நாட்கள் இருந்து அந்தக் காட்சிகளில் உறைந்திருந்த நினைவுகள் மீட்டியது.

மதியம் ஷானவாஸ் வந்தார். சிங்கப்பூர் வாழ்க்கை குறித்தும், அங்கிருக்கும் மனிதர்கள் குறித்தும் உரையாடல் நகர்ந்தது. எப்படிப்பட்ட மனிதர்களையும் சிங்கப்பூர் அதன் தரத்திற்கேற்ப செதுக்கிக்கொள்ளும் எனச் சொன்னபோது அவர் வார்த்தைகளிலிருந்த உறுதியின் கடினத்தன்மை என்னை பெரு வியப்பில் ஆழ்த்தியது. பத்து காசு குறைவாக வைத்துக்கொண்டு ஒரு பொருளை வாங்க தடுமாறிய மலாய்க்காரர் குறித்துச் சொல்லும்போது, மனதார அந்த பத்துக்காசை விட்டுத்தருகிறாயா என கேட்டதாகச் சொன்னது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிங்கப்பூர் குறித்து இந்தக் கேள்விப்படல்கள் புதுவித அனுபவம் எனக்கு. ஷானவாஸ் ஆகச்சிறந்த ஒரு கதை சொல்லியாக இருக்கிறார். ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு காட்சியை, நிகழ்வை அவர் உணர்வுப் பூர்வமாக விவரிக்கும் விதம் அலாதியானது. அவரோடு கிளம்பினேன்.

கோமளவிலாஸ் உணவகத்தில் கமலாதேவி அரவிந்தன், ஜோ.டி.க்ரூஸ், சித்ரா ரமேஷ், சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர் ராம கண்ணபிரான், பாடலாசியர் நெப்போலியன், ராஜேஷ் ஆகியோருடன் மெல்ல ஒன்ற ஆரம்பித்தேன். குழுவாய் அமர்ந்து உரையாடும் மனிதர்களோடு இணைந்துகொள்ளும் போது சொற்களற்று அவர்கள் உரையாடுவதைக் கேட்டுக் கொண்டேயிருப்பது ஒருவித போதையாய் அமைந்துவிடுகிறது.




இடையில் விடைபெற்றுக்கொண்ட ஷானவாஸ் சரவணன் அல்லது கண்ணன் உங்களைக் கவனித்துக்கொள்வார்கள் எனச் சொல்லியிருந்தார். ஜோ.டி.க்ரூஸ் அவர்கள் தங்கியிருந்த அறைக்குத் திரும்பியபோது சரவணன் காத்திருந்தார். அப்போது தெரியாது அவர் எனக்குள் சில சன்னல்களைத் திறந்துவிடப்போகிறார் என்று.

மீண்டும் ஒரு சிறு உரையாடலுக்குப் பிறகு பிரிந்தோம். கண்ணன் வருகை தாமதமானதால் சரவணனுடன் பைக்கில் கிளம்பினேன். பைக்குகள் மிக அரிதாகத் தென்படும் சிங்கப்பூரின் சாலைகளில் சீறும் அவர் பைக்கில் செல்வதே ஒரு அலாதியான அனுபவம்.

எழுத்து குறித்தும், அவர் எழுதாமை குறித்தும், எழுத்தாளர்கள் குறித்தும் ’மெரிலயன்’ சிலையின் பின்பக்கமாய் அமர்ந்து, மிரட்டும் அந்த பெரிய காபி கோப்பையைக் கையில் பிடித்தவாறு பேசுவதும், பருகுவதுமாய் இருந்தோம். எதைச் சொன்னாலும் மறுக்காமல், முடக்காமல், முழுதாய் உள்வாங்கி தன் கருத்தைச் சொல்லும் சரவணன் உரையாடலுக்கு மிக உகந்த நபர் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை. நிறைய நேரம் பேசிய பிறகு ஒரே ஒரு விசயம் குறித்து நான் நிறையப் பேசிவிட்டேனோ என்ற சங்கட உணர்வும் வந்தது. உரையாடலில் மனம் நிறைந்ததற்கு நிகராய், பெரிய அளவிலான அந்த காபியில் வயிறும் நிறைந்திருந்தது.

கண்ணனும், கடலூரன் ஹாஜா மொய்தீனும் காத்திருந்தார்கள். அவர்களோடு இணைந்தோம். சாப்பிட வேண்டும் என வற்புறுத்தினார்கள். காரிலும், பைக்கிலும் தனித்தனியே புறப்படும் போது டாஸ்மாக் அருகே சந்திப்போம் என்றார்கள். ஏதோ ஒரு மதுக்கடையைக் குறிப்பிடுகிறார்கள் என நினைத்தவனுக்கு, தமிழகத்தின் சாட்சாத் டாஸ்மாக் கடை வடிவிலே டாஸ்மாக் என்ற பெயரோடு, வடிவத்தோடு அந்தக் கடை இருந்தது கண்டு அதிர்ச்சி ஏற்பட்டது. அது ஒரு சாதுர்யமான வியாபார யுக்தியாக இருந்தாலும், பிழைக்க வந்திருக்கும் தமிழர்களை அங்கும் இலக்கு வைத்து ஒரு மதுபானக் கடை அதே பெயரை யுக்தியாக வைத்திருப்பது நெருடலாகப் பட்டது. 



காயத்ரி உணவகத்தில் நண்பர் ஹாஜா தடாலடியாக உணவுகளை தேர்ந்தெடுத்தார். தொண்டைக்குழி வரை நிரம்பியிருந்த காபி என்னால் எதையும் சாப்பிட முடியாது என அறிவிக்கச் சொன்னது. சொல்லியும் பார்த்தேன். அவர் கேட்ட உணவுகள் ஒவ்வொன்றாய் வர, அதன் சுவையில், அவர்களின் அன்பான உபசரிப்பில், அநேகமாக அங்கிருந்த நால்வரில் நான்தான் அதிகம் சாப்பிட்டிருப்பேனாக இருக்கும். 



அந்த இரவுப் பொழுதில் உணவோடு ஒரு தோல்வியையும் ருசித்தேன் என்றே சொல்ல வேண்டும்.


Mar 17, 2015

சிங்கப்பூர் பயணம் - 1



”கனவுகள் நனவாகும் தருணம் வெகு அழகானது”

ஜனவரி மாதத்தின் பிற்பாதி மிகக் கடினமான நாட்களைக் கொண்டிருந்தது. வாழ்நாளின் மிகச் சோம்பலான நாட்களை நான் கடந்து கொண்டிருந்தேன். இந்த மாதத்தைக் எப்படியாவது கடந்துவிட்டால் போதும் என்ற சூழலில் இருந்தபோதுதான் அனிதாவிடமிருந்து அழைப்பொன்று வந்தது.

”ஷானவாஸ்க்கு புத்தகம் ஒன்னு அர்ஜெண்டா ப்ரிண்ட் பண்ணனுமாம்… முடியுமா கதிர்!?”

2013ல் சிங்கப்பூர் சென்றபோது பேச்சுவாக்கில் அச்சிடுதல் குறித்து பேசியிருந்தோம். அதன்பின் புத்தகம் அச்சிடுதல் குறித்து எப்போதாவது பேசுவதுண்டு ஆனால் அதைச் செயல்படுத்துவது குறித்து கவனமேதுவும் கொண்டிருக்கவில்லை.

“ஓ தாராளமா செய்யலாமே”

அது கேள்விக்கான பதிலாக இருந்தாலும், வரும்போது பார்த்துக்கொள்ளலாம் எனும் மனநிலைதான். ஜனவரி இறுதியில் ஆரம்பித்த என் தனிப்பட்ட பயணங்கள், அடுத்த பதினைந்து நாட்களை மிகக் கடினமாக்கியிருந்தது. பிப்ரவரி 10ம் தேதி மின்மடலொன்றில் ஒரு புத்தகத்திற்கானவை வேர்ட் ஃபைல் வடிவில் வந்தடைந்தன. கூடவே ஒரு தகவலும் வந்தது. மார்ச் 7ம் தேதி புத்தக வெளியீடு. 7ம் தேதி வெளியீடு என்றால் 4 அல்லது 5 தேதிக்குள் முடித்து அனுப்ப வேண்டும் என்பது புரிந்தது. பிப்ரவரி 28 நாட்கள் என்பதால் மொத்தம் இருப்பவை 23 நாட்கள் என்பதும், அதற்குள் முடித்துவிடலாம் என நினைக்கையில், வந்த ஃபைல் ஷானவாஸ் அவர்களுடையதல்ல, எழுத்தாளர் சித்ரா ராமேஷ் அவர்களுடைய ”பறவைப்பூங்கா”. இன்னும் இரண்டு புத்தகங்கள் வரும் மொத்தம் 3 அல்லது 4 புத்தகங்கள், அனைத்தும் 7ம் தேதி வெளியீடு என்று கூறப்பட்டது.

வேலை என்பது இப்போது ’சவாலாக’ மாறுவது தெரிந்தது. ஒன்றை ஒப்புக்கொண்ட பிறகு உடன் வரும் இன்னொன்றை எப்படி மறுதலிப்பதெனத் தெரியவில்லை. அனிதாவிடமிருந்து லேசான சந்தேகத்தோடு ஒரு கேள்வி ஒலி(ளி)த்துக்கொண்டே இருந்தது “எப்படியாச்சும் முடிச்சுடலாம்ல கதிர்!?”. நண்பனை நம்பி அங்கு வாக்குறுதி கொடுத்துவிட்ட சிரமம் தெரிந்தது. அதுவும் எனக்குப் புரிந்தது.

அடுத்ததாக ஆமருவி தேவநாதன் அவர்களின் “பழைய கணக்கு” வந்தது. இரண்டையும் ஓரளவு முடித்து நிமிரும்போது, எம்.கே.குமார் தொகுத்த ”நதிமிசை நகரும் கூழாங்கற்கள்” கவிதைத் தொகுப்பு வந்தது. நாட்களை எண்ணிக்கொண்டே ஒவ்வொன்றையும் முடித்து, பிழை திருத்த அனுப்பி, அட்டைப் படம் அனுப்பி, மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தோம். பறவைப் பூங்கா, பழைய கணக்கு புத்தகங்களை இறுதி செய்து 22ம் தேதி அச்சுக்கு அனுப்பியாகிவிட்டது. முதன் முதலில் “ஷானவாஸ்க்கு புத்தகம் ஒன்னு அர்ஜெண்டா ப்ரிண்ட் பண்ணனுமாம்… முடியுமா” எனக் கேட்டு ஆரம்பித்த ஷானவாஸ் அவர்களின் புத்தகத்திற்கான படைப்புகள் மட்டும் வந்து சேரவில்லை.

”எத்தனை கட்டுரைகள்?”

”தெரியாது!”

”எத்தனை பக்கங்கள்?”

“தெரியாது!”

”எப்பதான் வேலையை ஆரம்பிக்க முடியும்?”

”தெரியாது. ஆனால் எப்படியாச்சும் அதுவும் 7ம் தேதி வெளியீட்டிற்கு வேண்டும்!”

”நதிமிசை நகரும் கூழாங்கற்கள்” புத்தக வேலைகளை இறுதி செய்து, 25ம் தேதி அச்சுக்கு அனுப்பும் போது, ஷானவாஸ் அவர்களின் ”நனவு தேசம்” கட்டுரைகள் பத்து பத்தாக வந்து சேர ஆரம்பித்தன. பக்கங்கள் நீண்டு கொண்டேயிருந்தன. இரவு பகல் பாராது வேலை செய்ய வேண்டி வந்தது.

காலம்காலமாய் இப்படி வேலை செய்வது எனக்கு பழக்கப்பட்டதெனினும், ஷானவாஸ் அவர்களுக்கு உதவியாய் இருந்து, ஒவ்வொன்றையும் வாங்கி, எடிட் செய்து சேர்த்து அனுப்பும் அனிதாவிற்கு மிகப் புதிதான, மிகக் கடினமான பணியாக இருப்பதை உணர்ந்தேன். ஆனாலும் குறித்த தேதிக்குள் முடிக்கவேண்டுமென்ற அழுத்தம் கூடுதல் கடுமையைக் கொடுத்தது எனக்கு. குறிப்பிட்ட அந்த சில நாட்களில், வாழ்நாளில் உணராத கடுமையை நான் என்னிடம் உணர்ந்தேன். அதை அப்படியே எதிர்ப்படுபவர்களிடமும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தேன். ’நனவு தேசம்’ புத்தகத்தின் வேலைகளை முடித்து, 28ம் தேதி அச்சுக்கு அனுப்பிவிட்டு அட்டை வேலைகளை இறுதி செய்யும்போது, நனவு தேசத்தில் கொஞ்சம் சேர்க்கை தேவையிருந்தது. முதல் 16 பக்கங்களின் அச்சுப் பணியை நிறுத்தி, மீதியைத் தொடரச் சொல்லி, மார்ச் 2ம் தேதி மதியம் மாற்றம் செய்த முதல் 16 பக்கங்களை அச்சுக்கு அனுப்பி, அட்டைகளையும் அன்று மாலையே அனுப்பிவிட்டு, சற்றே ஆசுவாசப்பட்ட மனநிலையில் எப்படியாவது தலா 50 புத்தகங்களேனும் தயாரித்துவிட வேண்டுமெனக் காத்திருந்தோம்.

உழைப்பும், நம்பிக்கையும் வீண் போகவில்லை. ஐந்தாம் தேதி மாலை, ஒவ்வொன்றிலும் தலா நூறு புத்தகங்கள் வந்தடைந்தன. 


அப்போது வந்த நண்பர் மேசைமேல் இருந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு, ”அண்ணா.. நீங்க ப்ரிண்ட் பண்ணினதா!?” என்றார். ஒவ்வொன்றாய் புரட்டிக்கொண்டே, நனவு தேசம் புத்தகத்தின் ஏதோ சில பக்கங்களில் நிலைகுத்திக் கடந்தார். “இது கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகமாட்ருங்ளே!?” என்றார். இதில் சிறப்பென்னவென்றால் நானறிந்த வரையில் அவர் அவ்வளவாக புத்தகம் வாசிக்காத ஒருவர்.

ஒரு சரியான புத்தகத்திற்குத்தான் கூடுதலாய் சில சொட்டுகள் வியர்வையும், கோபத்தில் சில சொற்களையும் உதிர்த்திருந்திருக்கிறேன் எனப் புரிந்தது.


...... தொடரும்

-

மேலும் வாசிக்க..


சிங்கப்பூர் பயணம் - 2
சிங்கப்பூர் பயணம் - 3


சிங்கப்பூர் பயணம் - 4

வாசிக்கப்படாத பக்கங்கள் - ஈரோடு கதிர்

பொதுவாகவே ” இந்தக் காலத்து பசங்க புள்ளைங்களப் பார்த்தீங்கனா... ’’ எனத் தொடங்கும் சொற்றொடர்கள் பெரும்பாலும் எதைச் சொல்ல வரும் என்பதை நாம் ஓரள...