சிங்கப்பூர் பயணம் - 5



வாசகர் வட்ட ஆண்டு விழா முடிந்து உணவு உண்டுவிட்டு கிளம்பும்போது இரவு 10 மணி இருக்கும். எங்கு செல்கிறோம் என எதுவும் சொல்லாமல் நண்பர்கள் அழைத்துச்சென்றனர். ஹாஜா கார் ஓட்டிக் கொண்டிருந்தார். கோபல் கண்ணன், கருணாகரசு உடன் இருந்தார்கள். 2013ல் நான் சிங்கப்பூர் வந்திருந்தபோது, எனக்கு இவ்வளவு நண்பர்கள் இல்லை. ஊரிலிருந்து என்னோடு வந்திருந்தவர்கள் இந்தோனேஷியா சென்றுவிட நான் மட்டும் தனித்திருந்த ஒரு முழுநாளை உடன் இருந்து, சுற்றித்திரிந்து பயனுள்ளதாக்கியவர் கருணாகரசு. அவரோடு அப்போது தேசிய நூலகமும், மெரினா பே பகுதிக்கும் சென்றது மறக்கமுடியாத ஒரு அனுபவம்.

அறச்சீற்றம் பொங்கும் ஒரு கவிஞனாய் மட்டுமே வலைப்பக்கத்தில் கருணாகரசுவை அறிவேன். உரையாடும்போது பேச்சுவாக்கில் நறுக்குகளாய் விழும் அவரின் நகைச்சுவை துணுக்குகள் அசரடிப்பவை. ஒரு கட்டத்தில் ”கருணாகரசு இனி கவிதை எழுதுறதை நிறுத்திட்டு உரைநடை எழுத ஆரம்பியுங்கள்” எனச் சொல்லுமளவுக்கு அவரின் நகைச்சுவைத் துணுக்குகள் வழியெங்கும் சிதறிக் கொண்டேயிருந்தன.

வண்டி நிற்கும்போதுதான் கடற்கரைக்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தேன். அலைகளற்ற தண்ணீரும், தூரத்தில் நிற்கும் பிரமாண்ட கப்பல்களில் மின்னும் விளக்குகளுமாய் கடல் எங்களுக்காக தம் கரையில் கொஞ்சம் இடம் வைத்திருந்தது. நண்பர்கள் குயில்தோப்பு என்ற குழுவாய் இருப்பவர்கள். ஹாஜா, ரமேஷ் ராஜு, தாம் சண்முகம், கண்ணன், கருணாகரசு, பனசை நடராஜன் ஆகியோரோடு நானுமாய் அந்த இரவின் நிமிடங்களைத் தின்ன ஆரம்பித்தேன்.

அவர்களில் கண்ணன், கருணாகரசு தவிர்த்து அனைவருக்கும் நான் மிக மிகப்புதியவன். ஆனாலும் காலம் காலமாய் பழகிய பால்ய நட்புகளின் உரையாடல் போலே, கிண்டலும் கேலியும், தீவிரமான பகிர்வுகளுமென பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டேயிருந்தோம்.



கடற்கரையெங்கும் திட்டுத்திட்டாய் விதவிதமான மனிதர்களின் கூட்டம். இருளும் ஒளியும் கலந்து காற்றாய் வீசும் அந்தக் கடற்கரையில் எவரும் எவரைப் பற்றியும் சிந்தனைகொள்ளாது, அவரவர் அவரவர் நிமிடங்களை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக எவரும் எவர் குறித்தும் அச்சமின்றி, அங்கு இருப்பதே அந்த தேசத்தின் அடையாளம் என்றால் அது மிகையாகாது.

அனுமதி பெற்று, கடற்கரையில் நண்பர்களாக, குடும்பமாக கூடாரம் அமைத்து இரவு முழுக்க தங்கி பேசி, தூங்கிவிட்டுச் செல்லலாம் என அறிகையில் பெருமையாகவும், பொறாமையாகவும் இருந்தது. காலணிகளில் மின்னும் விளக்கோடு இரவிலும் ஸ்கேட்டிங் செல்கிறார்கள் அல்லது ஓடுகிறார்கள். சக்கரங்களில் மின்னும் விளக்கோடு மிதி வண்டிகள் வளைந்து நெளிந்து செல்கின்றன. வாழ்தலின் மிக ரசனையான பக்கங்களை அப்போது அங்கிருக்கும் மனிதர்கள் எழுதியும், வாசித்தும் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது. இருக்கும் கொஞ்சம் கடற்கரையை மிக நேர்த்தியாகப் பயன்படுத்தும் அவர்களின் பழக்க வழக்கமும் நமக்கு ஒரு பாடம்தான்.


இலக்கியம், எழுத்தாளர்கள், இந்திய அரசியல், புத்தக வெளியீடுகள், கூட்டங்கள், விழாக்கள் என கலந்துகட்டி உரையாடியதில் நான் அறிந்து கொண்டவை சிங்கப்பூரின் எழுச்சி, சிங்கப்பூரின் தந்தை, சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைமுறை என வித்தியாசமானவை.

-
சிங்கப்பூர் பயணம் - 1

 
சிங்கப்பூர் பயணம் - 2
 

சிங்கப்பூர் பயணம் - 3

சிங்கப்பூர் பயணம் - 4

-

1 comment:

Rathnavel Natarajan said...

சிங்கப்பூர் பயணம் - 5 - இலக்கியம், எழுத்தாளர்கள், இந்திய அரசியல், புத்தக வெளியீடுகள், கூட்டங்கள், விழாக்கள் என கலந்துகட்டி உரையாடியதில் நான் அறிந்து கொண்டவை சிங்கப்பூரின் எழுச்சி, சிங்கப்பூரின் தந்தை, சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைமுறை என வித்தியாசமானவை.= அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு Erode Kathir சார்.