எச்சம் - குங்குமம் கவிதைநெடுந்தொலைவு பயணித்த
பறவையொன்று
வறண்டுபோன நதி மடியில்
குட்டையாய்த் தேங்கிக்கிடக்கும்
நிறங்களடர்ந்த சாயக்கழிவில்
தாகம் தணித்திட அமர்கிறது

கசப்பேறிய நீரினைப் பருகி
வானமேகும் பறவையின்
நனைந்த இறகுகளிலிருந்து
கடக்கும் வெளியெங்கும்
நிரம்பிக் கொண்டேயிருக்கிறது
துரோகத்தின் வாசம்

அந்தப் பறவை
பறந்தாகவேண்டும்
துரோகம் கரைந்தொழியும்
வரையேனும்

மலையுச்சியில்
பாறையிடுக்கில்
கசியும் சுனை நீரில்
கால் நனைக்கையில்
இறக்கை நுனியில்
துரோகத்தின்
எச்சமிருத்தலாகுமோ!

-

குறிப்பு : குங்குமம் (02.03.2015) இதழில் வெளியான கவிதை


3 comments:

KANNAA NALAMAA said...

நிறங்களடர்ந்த சாயக்கழிவின் நீரினை
பருகியதனலன்றோ
அப்பறவைக்கு துரோகத்தின் வாசம்
துரோகித்தது சாயக்கழிவா ?
சாயக்கழிவித்தவனா ?
அந்தப்பறவை பறந்தாகவேண்டும் துரோகம் கரைந்தொழியும் வரையேனும் !!ஏன் ?
அன்னப்பறவையாக பிறந்திருந்தால்
சாயக்கழிவினை பிரித்திருக்குமோ !

ராமலக்ஷ்மி said...

அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே