மலையாளக் கரையோரம் - 2



அவ்வப்போது பார்த்த சில மலையாள மொழிப்படங்கள் குறித்த சில வரிப் பதிவுகள். முழுமையான ஒரு பார்வையை, விமர்சனத்தை தவிர்த்து, அது குறித்து மேலெழும்பும் உச்சபட்ச உணர்வுகளை மட்டும் பதியனிடும் முயற்சி.
 




ரெட் வைன் (Red Wine) - மலையாளம்

ஒரு அமெச்சூர் நாடக நடிகனும், கம்யூனிஸ்ட் சகாவுமான (தோழர்) ஃபஹத் ஃபாசில் ஒரு லாட்ஜில் மர்மமாய் கொலை செய்யப்படுகிறார். பிரபலமான உள்ளூர் கம்யூனிஸ்ட் பிரமுகர் என்பதால் கொலையாளியைக் கண்டறிய போலீஸ் வேகமாக முடுக்கி விடப்படுகிறது.

காதல் திருமணம், சிக்கலில் வேலை, கழுத்தை நெருக்கும் வீட்டுக் கடன் தவணைகள் என ஆசிப் அலியை வாழ்க்கை ஓட ஓட விரட்டி நெருக்கிறது.

கொலையைக் கண்டுபிடிக்க வரும் மோகன்லால் கொலையாளியையும், கொலைக்கான காரணம், கொலைக்கு பின்னணியிலிருக்கும் இரண்டு மாஃபியா உலகத்தைச் சூழ்ந்திருக்கும் முடிச்சுகளை அவிழ்க்கிறார்.

விடியலில் ஒட்டும் அஞ்சலி போஸ்டரில் தெரியும் ஃபஹத் ஃபாசில் முகமும், 34 என்ற வயதை கை நடுங்க டி.ஜி.ரவி மாற்றும் காட்சியும் மனதை என்னவோ செய்கின்றன.

உள்ளூர் கம்யூனிஸ்ட்சகாவாய் வரும் ஃபஹத் ஃபாசில் மனதின் மையத்தில் நின்று ஆட்சி செய்கிறார். எப்படி இந்த மனுசன் எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடுகிறார் என ஆச்சரியமாக இருக்கின்றது.

ஒருவனின் நெருக்கடி மிகுந்த சூழலை ஆதிக்கம் செய்யும் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எப்படி பயன்படுத்திக் கொள்ளும், எதன் வரைக்கும் அவனைத் தள்ளிக்கொண்டு போய் நிறுத்தலாம் என்பதைக் காண்பது பல எச்சரிக்கைகளைத் தருகிறது.

கொலைக்கான முடிச்சுகள் அவிழ்ந்தாலும் தீர்வும் விடையும், கிட்டுகிறதா என்பதுவும் முக்கியம். கடைசிக் காட்சியில், உறைந்த விழிகளில் உறையும் கேமரா என்னவோ இம்சை செய்யும்.

-



நத்தொலி ஒரு சிறிய மீனல்ல - மலையாளம்
(Natholi Oru Cheriya Meenalla)


வசதி படைத்த பல தரப்பட்ட மக்கள் வாழும் ஒரு குடியிருப்பின் கேர் டேக்கரா வரும் பிரேமனை (ஃபஹத் ஃபாசில்) ஒரு கிள்ளுக்கீரையாகப் பாவித்து நடத்துகின்றனர். ஒரு சூழலில் அவர்களிடம் அடி உதை படவேண்டியும் வருகிறது.

வெறுத்து மனம் வெதும்பும் பிரேமன் ஒரு கதை எழுத ஆரம்பிக்கிறார். பிரேமனே வேறு ஒரு பெயரில் கதையின் நாயகனாக, அபார்ட்மெண்டிற்குள் காலடி எடுத்துவைக்கிறார்.
அபார்மெண்ட்வாசிகளை பாத்திரமாக்கி தான் நினைத்தபடி ஆட்டுவிக்கிறார்.

பிரேமன் அபார்மெண்ட் வாசிகள் மேல் தான் கொண்டிருக்கும் உணர்வுக்கு ஏற்றார்போல் எப்படியெல்லாம் அவர்களை நடத்த விரும்புகிறான், அவர்களுக்கு என்னவெல்லாம் நிகழவேண்டும் என விரும்புகிறான் என்பதை மிக நுணுக்கமாக, அழகாக காணமுடிகிறது.

பிரேமன் விருப்பத்திற்கேற்ப பாத்திரங்கள் நகர்ந்து கொண்டிருக்கையில், ஏதாவது சூழல்களில் எழுத்து தடைபடும்போது, அந்தப் பாத்திரங்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதும், குழம்பித் திரிவதும் ரசிப்புக்குரியவை. குறிப்பாக கமலினிமுகர்ஜிக்கு காரில் லிப்ட் தருகிறேன் என ஃபஹத்ஃபாசில் கட்டாயப்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டு வேகமாகச் செல்லும் காட்சியில், பிரேமன் பேனாவை வைத்துவிட்டு வெளியே போக, எங்கு போகிறோம், ஏன் போகிறோம் எனத்தெரியாமல் காரைத் திருப்பித் தவிப்பது.

சகமனிதர்கள் மேல் நாம் கொண்டிருக்கும் வெளிப்படுத்தவியலாத நொடிப்பொழுது உணர்வுகளை பிரேமன் எழுத்து வழியே நிறைவேற்றும்போது பல இடங்களில் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளத் தோன்றுகிறது.

படம் பார்த்து முடிக்கும்போது, ஒரு பிடித்த நாவலைப் படித்த உணர்வும், ஒரு மௌனமும் நம்மைச் சூழும் என்பதை மறுக்க முடியாது!

-



வீட்டிலுக்குள்ள வழி (Veettilekkulla Vazhi) - மலையாளம்

இறக்கும் தறுவாயில் மருத்துவமனையில் இருக்கும் இளம் பெண்ணொருத்தி, அங்கிருக்கும் மருத்துவரிடம் (பிருத்விராஜ் - படத்தில் டாக்டருக்கு பெயரே கிடையாது) தன் இறுதி ஆசையாக கேரளாவில் இருக்கும் தன் 5 வயது மகனை தன் கணவன் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான இந்தியன் ஜிகாதி அமைப்பின் பொறுப்பில் இருக்கும் அப்துல் சுபான் தாரிக்கிடம் ஒப்படைக்கவேண்டும் எனும் வேண்டுகோளோடு இறந்துபோகிறார்.

அந்தஅப்துல் சுபான் தாரிக்தான் டெல்லியில் குண்டுவைத்து தனது மனைவி, மகனுடன் 7 பேரைக் கொன்றவன் என்பதைத் தெரிந்தும் கேரளாவில் ஒரு மலைக் கிராமத்து பள்ளியில் இருக்கும் அந்தச் சிறுவனை அழைத்துக் கொண்டு தாரிக்கிடம் ஒப்படைக்கப் புறப்படுகிறார்.

அங்கிருந்த ஆசிரியை சொன்னதற்கேற்ப அந்த அமைப்பில் உள்ளரசாக்கை தேடி இராஸ்தான் போகிறார். அங்கிருந்து அவர்கள் சொல்வது போலவே புஷ்கர், ஆஜ்மீர், ஜெய்சல்மார் என பயணப்படுகிறார். ஆஜ்மீரில் அந்த அமைப்பினர் மேல் நடந்த என்கவுண்டரில் தப்பி ஓடுகையில் தனது செல்போனை தவறவிட்டுவிட்ட டாக்டர், போலீசாரால் தேடப்படுபவராகவும் இருக்கிறார்.

கடைசியாக லடாக் சென்று, காத்திருந்து ஒரு வழியாக எதிர்பாராத சூழ்நிலையொன்றில் தாரிக்கை சந்திக்க முடிகிறது.

ஒரு பெண் கேட்டுக்கொண்டதற்காக, ஒரு மருத்துவர் இத்தனை சிரமப்படுவார என்ற கேள்விக்கு கடைசியாக டாக்டர் சொல்லும்
பந்தங்களின் வில அறியன், ரெண்டு மார்க்கமே, ஒன்னு நஷ்டப்படனும் அல்லெங்கிள் திரிச்சுக்கிட்டனும்என்பது போதுமானதாகவே இருக்கின்றது.

90
நிமிடங்களுக்கு குறைவாக ஓடும் இந்தப் படம் மிக எளிதாக ஒரு ஈரானியப் படம் பார்த்த உணர்வை தந்தது மறுக்கமுடியாத ஒன்று.

-

1 comment:

மகிழ்நிறை said...

வித்யாசமான கருத்தில் அமைந்த இரண்டு மலையாளப்படங்கள். பார்க்கும் ஆவலை தூண்டிய விமர்சனம் !