தாத்தா


இதை எழுதத் துவங்கும் போதுமரணம் ஒரு விருந்தாளிஎன்ற சொற்கள் மட்டுமே தளும்புகின்றன. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு குரல் மெல்ல முனகுகிறது. அப்படியொன்றும் அது விருந்தாளியில்லையென்று. விருந்தாளி என்பது பிடித்தமானதாகாவே, உகந்ததாகவே இருக்க வேண்டுமென்பதில்லையே. சில விருந்தாளிகள் மனதிற்கு மிகப் பிடித்தவர்களாகவும் சில விருந்தாளிகள் வதைப்பவர்களாகவும் அமைந்துவிடுவதுமுண்டு.

பதினைந்து ஆண்டுகளில் மிகமிக நெருக்கத்தில் நான்கு மரணங்களைக் கண்டுவிட்டேன். பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இரண்டாண்டு கால இடைவெளியில் சற்றும் எதிர்பார்க்காமல், புறந்தள்ள முடியாமல், மறுக்கவே முடியாமல் இரண்டு அகால மரணங்களைச் சந்திக்க நிர்பந்திக்கப்பட்டோம். அதில் ஒன்றின் கொடூரத்தன்மையை இன்றளவும் கடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பது உண்மை. அது குறித்து எத்தனையோ முறை எழுத நினைத்தும், எழுதத் திராணியற்று, எழுதினால் கரைந்துவிடுமோயெனும் பயத்திலும் அடர்த்தியாய் உள்ளுக்குள் மட்டுமே சேமித்து வைத்துக் கொண்டிருக்கின்றேன். அதன்பின் நீண்ட ஆசுவாசத்திற்குப் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் இரு மரணங்கள். இவை ஓரளவு யூகித்தவை, மனசுக்கு ஒப்பவில்லையெனினும் புத்தி எதிர்பார்த்தவைகளே.

மரணத்தைக் கேள்விப்படுவதற்கும், அதை கண்ணெதிரே காண்பதற்கும் நிறைய வேறுபாடுகளுண்டு. சமீபத்தில் தாத்தா இறந்தபோது மரணத்தின் சூட்டை, அது அரவணைத்த சில நிமிடங்களுக்குள் உணர்ந்தேன். (அம்மாவின் அப்பா என்பதால் முறையாக அவரை அப்பிச்சியென்றுதான் அழைத்திருக்க வேண்டும். சிறுவயதிலிருந்தே தாத்தா என்றழைத்துப் பழகிவிட்டது) அவ்வளவு நெருக்கத்தில் ஒருவரின் மரணத்தை உணர்தல் என்பது ஏதோ ஒரு சாபம் என்றே நினைக்கின்றேன். மரணம் குறித்து ஏராளமாய் சிந்திப்பதுண்டு, பேசியதுண்டு எழுதியதுமுண்டு. எனினும் அதை நேரிடையாகக் காணும் பொழுதிலோ, அடுத்த சில நிமிடங்களில் அதன் வெம்மையை உணரும் தருணத்திலோ மரணம் என்பது எதிர்கொள்ள முடியவே முடியாத ஒன்றாகிவிடுகிறது.உண்மையில் அவரின் மரணம் கடந்த சில நாட்களில் என்னால் மனதார எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். முதற்காரணம் வயது. அடுத்து மருத்துவரீதியாக கிடைத்த பதில்கள் எதுவும் சாதகமாக இல்லை. வைத்தியம் என்ற பெயரில் நாங்கள் காட்டிய அன்பை மறுக்க முடியாமல் சொல்வதையெல்லாம் செய்த நம்பிக்கைத்தனமும், ஒத்துழைப்பும்.

எண்பது வயதுகளில் இருந்த அவரை இதுநாள் வரையில் சுகவீனமாய் நான் கண்டதேயில்லை. எதற்கும் எப்போதும் எவரையும் சார்ந்திராத தெளிவும், ஆரோக்கியமும், பயணமும் என்றிருந்த அவரை முதுமையின் நோய் ஒரு நாற்பது நாட்களுக்குள் முழுதாய் முடக்கும் என்பதை அதுவரை எதிர்பார்க்கவில்லை. 40 நாட்களுக்கு முன் ஒரு விடியலில்மூச்சுட சிரமமாக இருக்குஎன்றவரின் நிமிடங்கள் அங்கிருந்து தீரத் தொடங்கியிருப்பதையும் அப்போது அறியவில்லை. இத்தனை மருத்துவ வசதிகள் இருக்கையில் எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அடுத்தடுத்த நாட்களில் மெல்ல இருண்மை படரத் தொடங்கியது. முதலில் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலம் என்று வீடு திரும்பியவருக்கு, அவரைவிட மிகவும் வயது குறைவாக இருந்த நாற்பதாண்டு கால நண்பரின் எதிர்பாரா மாரடைப்பு மரணம், இவருக்கும் அடுத்த நாள் விடியல் நெஞ்சு வலிப்பதைப் போன்ற பயத்தைக் கொண்டுவந்துவிட்டது.

அடுத்தடுத்து மீண்டும் இருமுறை மருத்துவமனையில் அனுமதி என இந்த வருடம் தை பிறப்பும் பொங்கலும் மாட்டுப்பொங்கலும் கரிநாளும் எங்களுக்கு சுத்தமாய் இல்லை. பொங்கல் வாரத்தின் ஆறு பகல் ஐந்து இரவு மருத்துவமனை அறைக்குள் முடக்கப்பட்டதாய் இருந்தது. ஒரு நாளைக்கு 19 மாத்திரைகள் ஆனால் தண்ணீர் 1 லிட்டருக்கு மேல் பருகக்கூடாது என்ற சித்திரவதை ஏவி விடப்பட்ட போது அவர் இதையெல்லாம் அனுபவிக்கக்கூடாது நல்லபடியாக போய்விட வேண்டுமென்று வேண்ட ஆரம்பித்தேன்.

சுமார் 39 வருடங்கள் உடனிருந்த  அவரை நேசிக்க என்னிடம் கோடானுகோடிக் காரணங்கள் நிறைந்து கிடந்தன. அந்த நேசிப்பின் உச்சமாய், அவரோடு மருத்துவமனையில் துணைக்கு இருந்த ஐந்து இரவுகளிலும், அவருக்கான வழியனுப்புதல் பழுத்த இலையின் உதிரலாய் மிக எளிதாக நடந்துவிட வேண்டுமென மிகவும் விரும்பினேன். ஒரு இலையின் உதிர்வு நமக்கு சாதாரணமாக, மிக இயல்பானதாக, எளிதானதாகவே தோன்றினாலும், அப்படியில்லை போலும். அந்த இலையின் விடுதலைக்குக்கூட காற்றின் விசையோ, அமர்ந்து எழுந்துபோன பறவையின் அதிர்வோ தேவைப்படலாம் என்பது புரிகிறது.

நாம் நினைக்கும் காரியம் ஏதாவது ஒருவகையில் நடந்துவிட்டால் மட்டும் போதாது. அது எப்படி நடக்க வேண்டும் என நினைக்கிறோமோ அப்படியே நிகழவும் வேண்டும், அதைவிட அது எப்படி நடக்கக்கூடாது என நினைக்கிறோமோ, அதுபோல் நடந்துவிடாமல் இருப்பதும் முக்கியம்!

அவரின் மரணச்சூடு ஒட்டியிருந்த கைகள் குளிரும் முன்னே தகவல் சொல்வதற்காய் சிலரை போனில் அழைத்தபோதும், ”பேரனாய் நான் கொள்ளிவைப்பதா? மகன் முறையில் அவரின் அண்ணன் மகன் கொள்ளிவைப்பதா?” என அம்மாவிடம் கேட்கச் சொன்னபோதும் ஏதோ ஒன்று தொண்டையில் அடைத்துக் கொண்டது. குரல் கம்மியது. உருவமில்லாத துக்கம் உருண்டோடி வந்து தொண்டையை அடைப்பதை உணர்பவர்களால் மட்டுமே நம்பமுடியும்.

சில வலிகள் தவிர்க்க முடியாதது
சட்டென ஒதுங்க முடியாதது
பங்கு கொடுக்க முடியாதது
பகிர்ந்து இறக்க முடியாதது

வலிகளைக் கடந்துதான் ஆக வேண்டியிருக்கிறது,
அதுவும் அதன் கூர்முனைகளை அப்படியே சதையில் பதித்து அனுபவித்துக்கொண்டு மட்டுமே!

மரணம் என்ற விருந்தாளிக்கு தன்னையே மகிழ்வாய் படைத்து உபசரிப்பதில் அவருக்கு மிகுந்த விருப்பு ஏற்பட்டிருந்திருப்பதை ஏனோ எங்களிடம் மட்டும் பகிரவில்லை. அவருக்கும் மரணம் தெரிந்திருக்கின்றது. எங்களுக்கும் அவரின் மரணம் தெரிந்திருந்தது. ஆனாலும் அதைப் பகிர்வதில் மட்டும் இருதரப்பும் மௌனமாகவே இருந்தோம்.

எழவுக்கு வர்றவிளுக்கு செரமமில்லாத மாதர, நாயித்துக்கெழம காத்தால செத்து, ரவைக்குள்ள எல்லா முடிஞ்சரணும்என்பதாகவே அவரின் விருப்பம் இருந்திருக்கிறது. அந்த விருப்பம் ஏறத்தாழ நிறைவேறியதில் அவருக்கு அமைதியும் கிட்டியிருக்கலாம்.


-

6 comments:

ராஜி said...

அவருக்கான வழியனுப்புதல் பழுத்த இலையின் உதிரலாய் மிக எளிதாக நடந்துவிட வேண்டுமென...,
>>>
என் அப்பா, அம்மாவின் மரணம் கூட இப்படிதான் அமையனும்ன்னு நான் கடவுள்கிட்ட வேண்டிப்பேன். ஆனா,என் பிள்ளைங்க பாசத்துல தாத்தா, பாட்டி சாகனும்ன்னு வேண்டிக்குறியான்னு கேப்பாங்க. அப்படி இல்ல நல்லபடியா வலியில்லாம அவதிப்படாம போய்டனும்ன்னு சொல்வேன்

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

Chandrasekaran C said...

மரணம் என்பதை அழையா விருந்தாளி எனலாம் கதிர்...ஆனால் சில நேரங்களில் அதன் பாதிப்பு மீட்க இயலாதது, மரணித்தவர் நமக்கு மிக நெருக்கமானவர் எனும்போது.

கிருத்திகாதரன் said...

:'(

ராமலக்ஷ்மி said...

அஞ்சலிகள்!

நெகிழ்வான பகிர்வு.

Mythily kasthuri rengan said...

மரணத்தால் எழும் வலிக்கு மாற்றே இல்லை. காலம் காயங்களை ஆற்றும்.RIP