சுயபுராணத்துக்கு எதுக்கு தலைப்பு!?


வியாழன் காலை நாலு மணிக்கு எழுந்து வெளியில் சென்றது, வெள்ளி அதிகாலை 2 மணிக்கு அப்பாவை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு வந்தது இரண்டும்தான் காரணமாய் இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை காலையில் கண் விழிக்கும்போதே தகித்தது. நல்ல காய்ச்சல். 104 டிகிரி

இரவு சென்னை போகவேண்டும். மீண்டும் திங்கள் இரவும் சென்னை போயாகவேண்டும். இரண்டு பயணங்களையும் நினைக்கையில் இன்னும் ஓரிரு டிகிரி காய்ச்சல் கூடுவதுபோல் உணர்ந்தேன். மலைப்பாக இருந்தது. அடுத்தநாள் ஒப்புக்கொண்டிருந்த பணி கூடுதல் மிரட்சியைத் தந்தது.

சென்னையிலிருந்து நண்பர் செவ்வாய்க்கிழமையன்று அழைத்தார். தாங்கள் செய்து வரும் ஒரு திட்டத்தில் நானும் மிகச்சிறிய அளவில் பங்கெடுக்க வேண்டுமென்றார். அது எனக்கு முழுமுற்றிலும் புதியது. கேட்ட மாத்திரத்தில் சிரிப்பு கொப்பளித்துக் கொண்டு வந்தது.

அய்யா, சாமி அதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராதுங்க. ஆர்வமும் இல்லை. என்னால் செய்ய முடியாதேஎன மறுத்தேன். இதற்கு முன்னரும் சிலர் கேட்டபோது ஒற்றை வரியில் மறுத்து ஒதுங்கியிருக்கிறேன். இவர் கேட்டபோது மறுக்கமுடியவில்லை. மிகுந்த நம்பிக்கையூட்டினார். ”ஒரு ட்ரை பண்ணுவோம், வந்துபாருங்கஎன்றார்.

என்ன வெச்சு ரிஸ்க் எடுக்றீங்க! அதுக்கு மேல உங்க பாடு, நீங்க சொல்றதுக்காக வர்றேன்என்றேன் இறுதியாக.

அவர்கள் நிறுவனத்திலிருந்து அழைத்து ரயில் டிக்கெட் போட விபரங்கள் கேட்டனர். வெள்ளிக்கிழமை பின் இரவில் டிக்கெட் போடச்சொன்னேன். தட்கால் டிக்கெட் ஏற்காடு எக்ஸ்பிரஸில்தான் கிடைத்திருக்க வேண்டும். வெள்ளி இரவு சென்னைக்கும், சனி இரவு ஈரோட்டுக்கும் ஏற்காடு எக்ஸ்பிரஸில் டிக்கெட் போட்ட குறுந்தகவல்கள் வந்தடைந்தன. 9 மணி ரயிலுக்குச் செல்வதென்பது உலகமகா சிரமமான ஒன்று. டிக்கெட் குறுந்தகவலாக வந்தபின் என்ன சொல்ல!?



அந்த வெள்ளிக்கிழமையும் கூடவே காய்ச்சலும் வந்தது. அலுவலகம் கிளம்ப முடியவில்லை. சுடு தண்ணீரில் குளித்து தாமதமாகக் கிளம்பினேன். மாத்திரை போட்டதில் ஒரு மணி நேரம் காய்ச்சல் விட்டிருந்தது. மீண்டும் அதன் வீரியத்தைக் காட்டியது. மதியம் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்துப் பார்த்தேன். இரவுக்குள் முடித்தேயாக வேண்டிய வேலையொன்று இருந்தது. மதியத்திற்குப் பின் அலுவலகம் திரும்ப மனதிற்கு உடல் உடன்பட மறுத்தது. முடியாவிட்டாலும் முடிந்தேயாகவேண்டுமென ஐந்து மணிக்கு மேல் வந்து ஆறரை மணிக்கு குளிரில் நடுங்கிக் கொண்டே வீடடைந்தேன். எட்டுமணி வரை போர்த்திக்கொண்டு படுத்திருந்தும் காய்ச்சல் குறைந்தபாடில்லை. மாத்திரையைப் போட்டுக்கொண்டு அலுவலகம் வந்து அங்கிருந்து நண்பர் கார்த்தியை ரயில் நிலையத்தில் விடச்சொல்லும்போதுதான்  பர்ஸை மறந்துவிட்டு வந்தது புரிந்தது.

காசு இல்லாதது பிரச்சனையில்லை. ரயிலில் ஐடி கார்டாக காட்டவேண்டிய லைசென்ஸ் இல்லை. நேரம் 8.34. நேராக ரயில் நிலையம் செல்வதென்றால் வெறும் மூன்று நிமிடம்தான். ஆனால் 3 கிமீ தூரம் வீட்டுக்கு போய்விட்டு வந்துவிடமுடியுமா? பதட்டம் கூடியது ஆனாலும் பர்ஸ் கட்டாயம். மனைவியை அழைத்துபர்ஸ் எடுத்துட்டு பாதி தூரம் வா, நானும் வர்றேன்எனச்சொல்ல அழைத்தேன், அழைத்தேன், அழைத்துக்கொண்டேயிருந்தேன். விதி வலியது. போன் எடுக்கப்படவில்லை. கார்த்தியிடம் பையைக் கொடுத்துவிட்டு. அவர் பைக்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு விரைந்தேன். ஸ்டேசனுக்கு நடந்துபோறேன், போய்ட்டு வந்துடுங்க என்றார் கார்த்தி. ஆர்ச் அருகில் நிற்கச் சொன்னேன்.

வண்டியை நிறுத்தி மாடியிலிருக்கும் வீட்டுக்கு ஓடி, கதவை படபடப்பாகத் தட்டி, யார்னு கேட்ட கேள்விக்குக் கத்தலாய் பதில் சொல்லி, ஹாலில் தேடி இல்லையென, படுக்கையில் கிடந்ததை எடுத்துக்கொண்டு பைக் எடுக்கும்போது நேரம் 8.47. மாத்திரையாலோ, பதட்டத்தாலோ உடம்பு வியர்த்திருந்தது. சுடாதது கொஞ்சம் தெம்பைத் தந்தது

கம்பர் வீதியின் இறக்கத்தில் வலதுபக்கத் திருப்பத்தில் வேகமாகத் திரும்பிய நொடிகளில் கவனித்தேன், இடது பக்கம் இரண்டு பேர் பைக் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர், அவர்கள் காலருகிலிருந்து பூனை ஒன்று ரோட்டைக் கடந்தது. வீல்ல சிக்கினா பூனை நசுங்கிடுமே எனும் பதட்டத்தில் நல்ல வேகத்தில் பிரேக் அடித்ததில் முன்பக்க பிரேக்கை கூடுதலாய் பிடித்துவிட்டேன். அது விபரீதமென உணரும் நொடியிலேயே முன் சக்கரம் திரும்பி சாய்ந்து விழுந்து பல அடிதூரம் என்னை முன்னே இழுத்து சறுக்கித் தள்ளியது.

நானாகவே எழுந்துகொண்டதாய் நினைவு. ஆட்கள் கூடிவிட்டார்கள். யாரோ வண்டியைத் தூக்கினார்கள். என்னாச்சு எனக்கேட்டார்கள். எங்கேங்கோ எரிந்தது, வலித்தது. பதில் சொல்லும் திராணியில்லை. செருப்பு மட்டும் விலகிப்போயிருந்தது. கண்ணாடி முகத்திலேயே, செல்போன் சட்டைப் பையிலேயே, பர்ஸ் பேண்ட் பாக்கெட்டிலேயே.

வீட்டுக்கா, ரயிலுக்கா எனும் சந்தேக நொடியில் ரயிலுக்கென்றே முடிவெடுத்தேன். நிமிர்ந்துவிட்ட பைக்கில் உடனே ஸ்டார்ட் செய்ய முயல, கொஞ்சம் பொறுங்க எனத் தடுத்தவர்களிடம் ஏற்காடுக்கு போகனுங்க எனச்சொன்னதாய் நினைவு. நேரம் பார்த்தேன் 8.50. வண்டி ஸ்டார்ட் ஆனது. கொஞ்சம் தூரம் போனபிறகு தெரிந்தது லைட் எரியவில்லை. உடைந்திருக்குமோ என பட்டனைத் தள்ள லைட் எரிந்தது. தூக்கியபோது யாரோ அணைத்திருக்க வேண்டும். இடது கை கட்டை விரல் அவ்வளவாக ஒத்துழைக்க மறுத்தது. வழியில் நின்ற கார்த்தியை ஏற்றிக்கொண்டு ஸ்டேசனை அடையும் போது 8.57.

வடக்குப்பட்டி ராமசாமி காட்சி நினைவுக்கு வந்தது.

 ”என்ன கார்த்தி இது 12 மணிக்கு டிக்கெட் போனச்சொன்னா 9 மணிக்கு போட்டாங்க. காய்ச்சலு,  மொதோ தடவையா பர்சை மறந்திருக்கேன். வைஃப் போன் எடுக்கல. பூனை குறுக்கால(!) வந்துச்சு. இரத்தக் காயம் வேறஎனச்சொல்ல

பாஸ் நாம யாரு…. நாமெல்லாம் மூட நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவங்க. நீங்க போங்க, உங்க கட்ட வெரல் நகத்துக்கு நான் கட்அவுட் வைக்கிறேன்என்றார்.  

சிரிக்காமல் கார்த்தி செய்யும் காமடிக்கு என்றுமே நான் ரசிகன்.

ஒரு நிமிடத்திற்குள் உள்ளே சென்றுவிடலாம். படிக்கு அருகிலேயே பெட்டி இருந்தது. பி1, பி2 என்பதில் குழப்பம். எஸ்எம்எஸ் தேடி பி2 எனத்தெளிந்து, பையை வைத்துவிட்டு கழிவறைக்கு வந்து பார்த்தால் வலது பக்கம் மட்டுமே டோட்டல் டேமேஜ் எனப் புரிந்தது. முழங்கையிலிருந்து மணிக்கட்டுவரை ஒரு கோட்டில் இரத்தம் பயணித்திருந்தது. உள்ளங்கையில் தோல் உறிந்திருந்தது. முழங்கால், பாதத்தில் இரத்தம் பூத்திருந்தது. ஜீன்ஸ் என்பதால் முழங்காலில் மூன்று காயங்கள் மட்டுமே. அகலமான செருப்பு மேல்பக்கம் உறிந்திருந்தது. அது காப்பாற்றியது போக பாதத்தில் ஐந்து காயம். காயங்களைக் கழுவி, கைக்குட்டையால் ஒத்தியெடுத்தேன். 9.07க்குத்தான் வண்டி குலுங்கிக் கிளம்பியது. குளிரத் துவங்கியது. உடம்பு தகித்தது. மேல் பர்த். கம்பளியாலும் நடுக்கத்தைத் தடுக்கமுடியவில்லை.

3.55
க்கு பெரம்பூரை அடையும். 3.45க்கே அலாரம் வைத்து தடுமாறி கதவோரம் வந்துவிட்டேன். குளிர், வலி என அவஸ்தையாய் நின்றாலும், 4.30 வரை பெரம்பூர் வந்தபாடில்லை.  பாலா அண்ணன் காத்திருந்தார். அவரிடம் கதை சொல்லிக்கொண்டே வீடடைந்தபோது காயம் சிவப்பாக மாறியிருந்தது.

அழைத்துச் செல்ல கம்பெனி வண்டி ஆறு மணிக்கே வந்துவிட்டது. மழை பெய்து கொண்டிருந்தது. குளித்து, வீட்டிலிருந்த காயத்திற்கான பவுடரைப் போட்டுக்கொண்டு கிளம்பினேன். சென்றது ஒரு மருத்துவக் கல்லூரி வளாகம். மூன்றாம் தளத்தில் பணிகள் நடந்து கொண்டிருந்தன. சுறுசுறுப்பாய் என்னை எதிர்பார்த்த நண்பருக்கு, சுணங்கியிருந்தது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். சிறிது நேரத்திற்குப் பிறகு நடந்ததைச் சொல்லி ஒரு டிடி இன்ஜெக்சன் போடவேண்டும் என்றேன். தரை தள மருத்துவமனையில் 9 மணிக்கு பார்க்கலாம் என்றார்கள்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுழைவு அட்டை மட்டும் ஐந்து ரூபாய் டாக்டர், ட்ரெஸ்சிங், ஊசியென எதற்கும் பணமில்லை. 5 நாட்கள் மாத்திரை சாப்பிடச்சொன்னார். ட்ரெஸிங் செய்தவர், மருந்து, கட்டெல்லாம் வேணாம் சார், தேங்கெண்ணை வைங்க சரியாயிடும் என்றார்.

அந்த சனிக்கிழமை சென்னையில் இருப்பேன் என முன்னதாகச் ஓரிருவரிடம் கூறியிருந்தேன். நட்புகளில் சிலர் யதேச்சையாகவும் திட்டமிட்டும் அன்று சென்னையில் சந்தித்துக் கொண்டார்கள். என்னை எங்கே சந்திக்கலாம் என அடுத்தடுத்து அழைத்துக் கொண்டிருந்தார்கள். உடல்நிலை குறித்து விளக்கும் மனநிலையில்லை. வேலையாய் இருக்கிறேன் முடிந்தால் மட்டும் சந்திக்கிறேன், நானே அழைப்பேன் எனச்சமாளித்தேன். ஒரு கட்டத்திற்குமேல் போனையே தவிர்த்தேன். ஓரிருவருக்கு வருத்தமும் வந்திருக்கலாம்.

நண்பர் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. அவர்கள் எதிர்பார்த்தது போலவே வேலை நல்லபடியாக அமைந்தது. 5 மணியளவில் கிளம்பி சென்னை ட்ராபிக்கில் நீந்தி 7 மணிக்கு பெரம்பூரை அடைந்தேன். 10.50க்கு ரயில். இந்த முறை லோயர் பர்த். மாத்திரையை மதிக்காமல் இரவு முழுக்க காய்ச்சல் வாட்டியெடுத்தது. போர்வை கம்பெளி எதுவும் குளிரைச் சமன்செய்ய முடியவில்லை. ஞாயிறு காலை ஈரோடையெட்டி ரயில் நிலையத்திலிருந்து பேருந்து பிடித்து, அலுவலகத்தில் பைக் எடுத்துக்கொண்டு ஏதோவொரு தைரியத்தில் வீடடைந்தேன்.

லேசாக காயத்துவங்கியிருந்த காயங்களைக்கண்டு வீட்டில் மிரண்டு போனார்கள். ஏன் சொல்லவில்லையென்ற கோபத்திற்கு சரியான சமாதானம் சொன்னேன். யாரிடமும் சொல்லவேண்டாம் என்றேன். நாள் முழுக்க மாத்திரைக்கு காய்ச்சல்  ’மிகமிக அடங்கவில்லை’.

திங்கள் இரவு அம்மாவோடு சென்னை பயணிக்க வேண்டும். அது தவிர்க்கமுடியாத பயணம். ஞாயிறு திங்கள் முழுக்க ஓய்வெடுத்தும் தீரவில்லை காய்ச்சல். திங்கள் இரவு 11.50க்கு சேரன் எக்ஸ்பிரஸ். மருத்துவரிடம் சென்றேன். விபரங்கள் கேட்டார். ”விடாத காய்ச்சல்ங்கிறதால கவுண்ட்ஸ் குறைஞ்சிருக்கானு ப்ளட் டெஸ்ட் எடுத்துடலாம், கவுண்ட்ஸ் குறையலனா சென்னை போலாம், குறைஞ்சிருந்தா போகமுடியாது” என்றார். ஊசி மாத்திரைக்கு கொஞ்சம் காய்ச்சல் அடங்கியது. ப்ளட் டெஸ்ட்டில் சிக்கலில்லை.

11.50க்கு சேரன் பிடித்து செவ்வாய் காலை 5.30க்கு பெரம்பூரை எட்டினோம்.  அப்படி ஒரு பாடாவதி ரயில் பெட்டியை எப்போதும் பார்த்ததில்லை. பாலா அண்ணன் காத்திருந்தார். கொஞ்சம் ஓய்வெடுத்த பின், அவர் காரை எடுத்துக்கொண்டு சங்கரநேத்ராலயா சென்று இரண்டாம், நாலாம், ஏழாம் மாடியென மாலைவரை மேலும்கீழும் அலைந்து, எந்த அழைப்பையும் எடுக்கப் பலமற்று மாலை பெரம்பூர் அடைந்தபோதுதான், அந்த இரவும் பயணிக்க வேண்டியதை நினைத்து உடலும் மனதும் நடுங்கியது. 105 டிகிரி.

ஐந்து இரவுகளில் ஓரிரவு மட்டுமே வீட்டில் தூக்கம். ஏதாவது ஒரு மாய சக்தி அப்படியே தூக்கி ஈரோட்டில் இந்த உடலை வைத்துவிடாதா எனத்தோன்றியது. ஏற்காடு பிடித்து, புதன் காலை வீடடைந்தபோது காய்ச்சல் சற்றே குறைந்திருந்தது. களைப்பும் வலியும் நடக்கவோ நகரவோ அனுமதிக்கவில்லை. காய்ச்சல் குறைவதாகவும் கூடுவதுமாக கண்ணாமூச்சியாடியது. புதிதாய் இருமல் ஆரம்பித்தது.

பேசவும், வாசிக்கவும், பதிலளிக்கவும், சிரிக்கவும், யோசிக்கவும், எழுதவும் மனதற்ற ஒரு நிலைக்குப் போயிருந்தேன். படுத்துக்கொண்டே மொபைலில் ஃபேஸ்புக்கை உருட்டி பளிச்சென கண்ணில்படும் வரிகளுக்கு லைக் போட மட்டுமே திராணியிருந்தது. அதுவொரு பெரும் துணை அப்போது. குறுந்தகவலுக்கு பதில் அளிக்கவும், மெயில்களுக்கு பதில் எழுதவும், அழைப்புகளை எடுக்கவும் விருப்பமற்ற மனநிலை. போன், மெசேஜ், மெயில் என சரிவர பதில் தந்திராத நிலையில், மறுமுனையில் இருப்போரின் அழுத்தம், புரிந்துகொள்ளாமை, கோபம், அவசரத்தனம் கூடுதல் அழுத்தத்தை ஊட்டத்தொடங்கின.

பிடித்த…பிடித்த… பிடித்த என பிடித்தவகைகளைப் பட்டியலிட்டுவிட்டு….

//”பிடிக்காமலும் போகலாம்
பிணி பீடித்த
ஒரு கொடுங்கணத்தில்!”//

எனக் கவிதையெழுதியதும் அப்படியொரு மனநிலையில் தான்

அரிமா சங்கத்தில் தொடர்ச்சியாய் நடந்து கொண்டிருக்கும் பட்டிமன்றச் சங்கிலியின் ஒரு கண்ணியில் புதன் மாலை நானும் கலந்துகொண்டு பேசவேண்டிய நிலை. முன்பே ஒப்புக்கொண்டது. கடைசி நேரத்தில் மாற்றச் சொல்லமுடியாது. நிலமையைச் சொல்லி நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு 15 நிமிடங்கள் முன்பு அழையுங்கள், வந்துவிடுகிறேன் என்றேன். நிகழ்வு நடந்தேறியது.

வியாழன் விடியலில் காய்ச்சல் முற்றிலும் வடிந்திருந்தது. களைப்பு மட்டும் இறுக்கமாய் அணைத்துக்கொண்டேயிருந்தது. வாழ்நாளில் உணர்ந்திடா அயர்வும் களைப்பும். வயது கூடிக்கொண்டிருப்பது புரிந்தது. இது ஒரு சாதாக்காய்ச்சல்தான். அலைந்ததின் விளைவுதான் இத்தனை துன்பப்படுத்துகிறது எனத் தெளிவாகப் புரிந்தது . மீண்டு வர ஆரம்பித்தேன்.

அலுவலகம் திரும்பிய அடுத்த நாள் நொண்டுவதைப் பார்த்துவிட்டு
இத்தனை வயசான பொறவு போய் வண்டில வுழுவுறதா? என்ன ஆளுப்பா நீ!?” என்றார் ஒரு அண்ணன். இத்தனை கதையும் அவரிடம் சொல்லத் தெம்பில்லை.

முடிந்தவரை யாரிடமும் எதுவும் சொல்லாமலே தவிர்த்தேன். அப்படியும் மீறி செய்தி அறிந்து எப்படியாச்சு?” எனக் கேட்டுவிட்டு அறிவுரையை ஆரம்பிப்பவர்களிடம் நடந்ததைச் சொல்வது அலுப்பானதாக இருந்தது. ஓரிரு வார்த்தைப் பதில் அவர்களுக்கு திருப்தியாய் இருக்கவில்லை. இதுபோல் எவருக்கும் நடந்தால், இனி அவர்களாக விரும்பியதைச் சொல்லாமல் விளக்கக் கதை கேட்டல் கூடாது என்ற புத்திவந்தது. நிலையறிந்து எப்படி நிகழ்ந்ததென்று விசாரிக்காமல், சீக்கிரம் நல்லாயிடட்டும் எனச் சொன்னவர்களைக் கூடுதலாய் பிடித்தது. மௌனமே விசாரிப்பாக இருந்தால் போதுமெனத்தோன்றியது.

ஆறேழு நாட்கள் மிகக்கொடியதாக உணர்ந்த அத்தனையும் மெல்லக் கரைந்தது. உடலில் புதிதாய் ஒரு உற்சாகம் கூடியது. சற்றே எடை குறைந்திருந்தது நல்லதாகப்பட்டது. அடுத்த வாரம் மீண்டும் சென்னை பயணிக்கவேண்டிய நிலை. பயணம் எனும் நினைப்பே நடுக்கத்தைக் கொடுத்தது. கண்ணை மூடிக்கொண்டு இரு வாரங்கள் தள்ளிப்போட்டேன்.

நலமடைந்து சில நாட்கள் கழித்து, நட்பாய் பழகும் மருத்துவர் நடந்ததையெல்லாம் போனில் கேட்டுவிட்டு, ”ஒன்னேயொன்னு முக்கியமான விசயம். புண் காஞ்சுட்டிருக்கும் ஆனா, கை கம்னு இருக்காது, அதையே நோண்டிட்டிருக்கும், எப்படியும் காஞ்சுபோன தோல பிச்சு எடுப்பீங்க. ஓரமா பிச்சு எடுங்க. உணர்ச்சி வசப்பட்டு நடுவில பிச்சீங்ண்ணா ரத்தம் வந்துடும்என்றார்.

இன்று வரை ஒவ்வொரு துளி, தோல் உதிரும் போதும், பிய்த்து எடுக்கும் போது அவர் நினைவு ஒரு புன்னகையோடு வந்துபோகிறது.

மூன்று பகுதிகளில் இருந்த காயத்தில் முழங்கைக் காயம் வேண்டாத தோலை முற்றிலும் உதிர்த்துவிட்டது. அதுவே ஒரு கொண்டாட்டமாக இருந்தது. முழங்கால் பாதம் அடுத்தடுத்த நாட்களில் முற்றிலும் உதிர்த்துவிடலாம். அடுத்த சில நாட்களில் அதன் சுவடுகளும், தழும்புகளும் மறைந்து போகலாம்.

’நான், என் உடல்’ என்பது குறித்து அனைத்து கெத்துகளும் வறண்டு போயிருந்த நிலை மாறி மீண்டும்நான், என் உடல்’ என்ற நினைப்பு அணையில் சேரும் நீராய் சேர்ந்துகொண்டிருக்கிறது, என்ன கருமாந்திரம் புடிச்ச மனசோ தெரியவில்லை. வாழ்நாள் முழுதும் கற்கும் பல பாடங்கள், கனவாய் பொய்த்துவிடுகின்றன.

ஒரு மாதிரியாவே போகுதுல்ல….. இந்த இடத்தில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருந்தா நல்லாருக்கும்ல….”

அத்தன ரண(கள)த்திலேயும் அந்த வெள்ளிக்கெழம ராத்திரி ஏன் சென்னைக்கு ஓடினேங்கிறதுக்கான காரணத்தை சொல்லவேயில்லைல…… அது என்னன்னு நீங்களேசில மாதங்களில் வெள்ளித் திரையில் காணலாம்!”

-

9 comments:

vasu balaji said...

2034ல ஆட்சிய புடிக்கறம்ணே. :))

தீபா நாகராணி said...

Take care sir!

Anonymous said...

பட்ட காலில் பாடும், சோதனைகள் சில நேரம் ரயில் பெட்டி போல ரயில் ஏறும் போது வந்துவிடும். ஆனாலும் காய்ச்சலோடு விழுந்தடிச்சு ரொம்ப கஷ்டம் தான். இருந்தாலும் மெய்வருத்தக் கூலி நிச்சயம் மகிழ்ச்சி தரும். :) சின்னத்திரை விவரம் சொன்னீங்க என்னால் பார்க்க முடியும்.

--- விவரணம்.

நிகழ்காலத்தில்... said...

அயர்வும் களைப்பும். வயது கூடிக்கொண்டிருப்பது புரிந்தது.//

இதெல்லாம் தெரிஞ்சாலும் வெளியே சொல்லாம கெத்தா ஓட்டிக்கிட்டே இருப்பமே.....வெளிய சொல்லி கவுத்திட்டீங்களே மாப்பு :)

Prapavi said...

வாழ்நாள் முழுதும் கற்கும் பல பாடங்கள், கனவாய் பொய்த்துவிடுகின்றன! Very True!

Vijayashankar said...

105!!!!

Health is wealth.... others can wait.

பழமைபேசி said...

வாழ்த்துகள் மாப்பு

ILA (a) இளா said...

செம் செம.. :) நல்ல அனுபவப் பகிர்வு..

கடைசியில வெச்ச ட்விஸ்டு இன்னும் நச்

Durga Karthik. said...

மறதி வராமல் இருக்க ஒரு டிப்ஸ்.வெளியே கிளம்பும் போது எடுத்து செல்ல வேண்டியவை ஐந்து என்ற கணக்கை தட்ட வேண்டும்.பர்ஸ்,கைதொலைபேசி,இங்கே டிக்கெட் மற்றும் அவரவருக்கு உகந்தது என்ற checklist செய்யலாம்.