Dec 23, 2013

நாராயணா.... இந்த கொசு தொல்ல தாங்க முடியலடா!



சமீபத்தில் ஃபேஸ்புக்கில் இணைந்த உள்ளூர் தம்பி ஒருவர் நான் போடும் எல்லா வரிகளுக்கும் லைக் போட்டுவிடுவார். எங்காவது கமெண்டில் நான் ஸ்மைலி போட்டிருந்தாலும் கூட உடனே அதற்கும் லைக் போட்டுவிடுவார். இங்கே போடும் ஸ்டேட்டஸ்களுக்கு இன்பாக்ஸில் கமெண்ட் போடுவார். புதிதாக வந்தவர் இன்பாக்ஸ் வரை டெவலப் ஆகிட்டாரே என்று ஆச்சரியமாகக்கூட இருந்தது.

இரண்டு மூன்று நாட்கள் முன்பு அலைபேசி எண் கேட்டார். பின்னர் அழைத்துப் பேசினார். பேசினார் என்பதைவிட புகழ்ந்து தள்ளிவிட்டார். எனக்கு வெட்கத்தில் அழுகை வருவதுபோல் ஆகிவிட்டது. தம் நண்பர்களிடமெல்லாம் என்னைப் பற்றி தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பதாகவும், தமக்குத் தெரிந்த ஒரு அரசியல் பிரபலத்திடம் என்னைப் பற்றிச் சொல்லியிருப்பதாகவும், அவர் உடனடியாக நேரில் சந்திக்க வேண்டுமெனத் தவிப்பதாகவும் கூறினார். என்னதான் அவரின் புகழ் மகுடிக்கு கொஞ்சம் மயங்கித் தொலைத்திருந்தாலும், எப்போதாவது விழிக்கும் ஆறாம் அறிவு கொஞ்சம் கண்ணைத் திறந்தது. அந்த பிராபளம்சாரி.. பிரபலம் எந்தக் கட்சியாக இருப்பாரோ என்பதுதான் கொஞ்சம் யோசனையாக இருந்தது. அவ்வப்போது லைக், கமெண்ட்க்கு ஆசைப்பட்டோ, அறச்சீற்றம் என்ற பேரிலோ சில கட்சிகளுக்கு பல்லில் தார் பூசியது நினைவுக்கு வந்துபோனது.

நேரில் வரலாமா என்று இடம் கேட்டபோது, என்னதான் மேட்டர் என்றும், எதுவாக இருந்தாலும் போனில் பேசிக்கலாமே என்றேன்.

மாவட்ட அளவில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அந்த அரசியல்வாதிக்கு என்னால் மிகப்பெரிய காரியம் ஆக வேண்டுமென்று சொன்னார்.

மதிய உணவு நேரத்தில் வந்தார்கள். சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

வாங்க…. வாங்கபரவாயில்ல உட்காருங்கஎன நான் தான் சொல்லியிருக்கனும், ஆனால்சாப்பிட்டு வர்றேங்ககொஞ்சம் அங்கே உட்காருங்க!” என முன் அறையைக் காட்டினேன்

அதனால என்ன…. பரவாயில்லநீங்க சாப்பிடுங்க!” என எதிரில் இருந்த நாற்காலியை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். பிரியாணி வாசம் அடித்ததுபோல் இருந்தது. சாப்பிட்டுவிட்டு தெம்பாக இருக்கிறார்கள் எனத் தோன்றியது.

மரியாதை நிமித்தமாகசாப்பிட்டீங்ளா!?” என்றேன்

ஜூனியர் குப்பண்ணால சாப்பிட்டுதான் வர்ரோம்ங்ண்ணா!” என்றதோடுஅண்ணா போட்டோல இருக்கிற மாதிரியே, அப்படியே இருக்கீங்ண்ணாஎன தம்பி புகழ ஆரம்பித்தார்

அவரோடு வந்தவர் நடுத்தர வயதைத் தாண்டியவராகத் தெரிந்தார். எதோ ஒரு கரை வேட்டி அணிந்திருந்தார். இது எந்தக் கட்சியாக இருக்குமென்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

கிசுகிசுப்பாக ஐயாயிரம், ஆறாயிரம், பத்தாயிரம் எனப் பேசிக்கொண்டார்கள். என் பார்வை சந்தித்தபொழுது அந்தத் தம்பி உற்சாகமாகப் புன்னகைத்தார். நாற்காலியின் நுனியில் இருப்பது போலவே அமர்ந்திருந்தார்.

சாப்பிட்டு முடிக்கும் வரைக்கெல்லாம் காத்திருக்கவில்லை. கரை வேட்டிஎனக்கு அவ்வளவாக படிப்பெல்லாம் கெடயாதுங்கஎனத் துவங்கினார். ஒரு கட்சிப் பெயர் சொல்லி, தான் அதன் ஈரோடு மாவட்ட அமைப்பாளர் என்றார். கட்சிப் பெயர் கேள்விப்பட்டது போலவும் கேள்விப்படாதது போலவும் இருந்தது

மாவட்ட செயலாளர்ங்ளா!?” எனக் கேட்டேன்.

இல்லீங்நான் மாவட்ட அமைப்பாளர், அதவிடப் பெரிய போஸ்ட்ங்கஎன்றார்
நல்லதுங்க….” என்றேன்

வரும் பாரளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்காக காங்கிரஸ், பாஜக, அதிமுக, திமுக (என்னே ஒரு கொள்கை) ஆகிய கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடப்பதாகவும். தனியாக பாஜக அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கு போனால் ஐந்து சீட் கிடைக்கும் அதில் மூன்று அல்லது நான்கு வெற்றி பெறுவோம் என்றார்.

கட்சியின் பெயர் புதிதாக இருப்பதுபோல் இருக்கே என்றேன். சமீபத்தில் ஆரம்பித்தது என்று அதன் தலைவர் பெயரைச் சொல்லி உங்களுக்குத் தெரியும்தானே என்றார். கொஞ்சம் முழித்தேன். டிவில நீங்க பார்த்திருப்பீங்க என்று நம்பிக்கையாகச் சிரித்தார். மையமாகத் தலையை அசைத்தேன்.

எதற்கு வந்திருப்பார்களென மனது யோசித்தது. கட்சிக்காக எதும் அச்சிட வந்திருப்பார்களோ என்றும் தோன்றியது. கால்குலேட்டர், கொட்டேசன் எவ்ளோ என கணக்கிட காகிதம் ஆகியவற்றை கண்கள் அநிச்சையாகத் தேடிக்கொண்டிருந்தன. ஐயாயிரம், ஆறாயிரம், பத்தாயிரம் என அவர்கள் சற்று முன்பு அவர்கள் கிசுகிசுத்தது பின்னணி இசையாய் ஓடியது. ஆனால் நான் அச்சுத் தொழிலில் இருப்பதைச் சொல்லவில்லையே. ஆனாலும் தம்பி எல்லாவற்றையும் தெரிந்துகொண்டிருப்பாரோ என நினைத்தேன்.

அரசியல் பிரபலம் என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார். சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தேன்.

வாட் கேன் டூ?” என அசரிரீயாக மேஜர் சுந்தர்ராஜன்  குரல் கேட்டது.

சொல்லுங்க சார்நான் என்ன செய்யனும்என்றேன் பணிவாக(!)

ஆனாலும் சினிமாவில் கெத்தாக கேட்குமளவிற்கு இன்னும் அது கைவசப்படவில்லை.

 “தம்பி சொல்லுச்சுங்க. நீங்க என்னவோ பண்ணிட்டிருக்கீங்ளாமே. அதில பத்தாயிரம் பேருக்கு மேல உங்ககூட இருக்காங்களாமேஎன்றார்

லேசாகப் புரிந்த மாதிரி இருந்தது. ஒருவேளை ஜேஸிஸ், லயன்ஸ் சங்கங்களை சொல்கிறாரோ. அப்படியே இருந்தாலும் ஜேஸிசில் ஒரு ஐம்பது பேர், லயன்ஸில் ஒரு ஐநூரு பேர் வரைத் தெரியலாம். ஆனாலும் எந்த முடிவுக்கும் வந்துவிட வேண்டாமென அவர்களிடமே தெளிவாகக் கேட்பது என முடிவெடுத்தேன்

என்ன சொல்றீங்கன்னு புரியல

தம்பிநீங்க சொல்லுங்கஎன்றார்

அண்ணாநீங்க ஃபேஸ்புக், ட்விட்டர்ல இருக்கிறததான் சார் சொல்றார்

”அடப்பாவி நீ ட்விட்டர்லயும் ஃபாலோ பண்றியா” மனக்குரல்

நமக்கு பெருசா படிப்பில்லீங்கஅதனால தம்பி சொல்ற அந்த பொஸ்தகமெல்லாம் படிச்சதில்லீங்க. நீங்க பெரிய ஆள்னு தம்பி சொல்லுச்சு, அதனால உங்க ஆதரவைக் கேட்டு நம்ம கட்சில உங்க ஆளுங்கள சேரச் சொல்லலாம்னு வந்தேங்க. அதுக்கு ஒரு மீட்டிங்கூடப் போட்டுக்கலாம். தலைவரையும் வர வெச்சுடுவோம்!”




தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு, பல்லைக் கடித்துக் கொண்டுஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்எனக் கத்த வேண்டும் போலிருந்தது.

நெஜமாத்தான் சொல்றாங்களா இல்ல நம்மள ஓட்டுறாங்ளா என சந்தேகம் வந்தது. கூட்டணி, ஐந்து சீட்டில் மூன்று அல்லது நான்குல வெற்றினு சொன்னதெல்லாம் இதவெச்சுத்தானாய்யா….

உணர்வுகளை அடக்கிக் கொண்டு, அமைதியாக தம்பியைப் பார்த்தேன். சற்றும் உற்சாகம் குறையாமல்

அண்ணாஉங்குளுக்கு ஃபேஸ்புக்ல ஐயாயிரம் பேர், ட்விட்டர்ல ஆயிரத்து எரநூறு பேர்னு இருக்கீங்கன்னு சொன்னேன். நாம பேசி அவங்கள கட்சிக்கு கொண்டாந்துட்டா என்னனு நாங்க பேசினோம். நீங்களும் கூட்டத்துல நல்லா பேசுவீங்னு கேள்விப்பட்டேன்

நிஜமாகவே கண்ணெதிரே கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பட்டாம்பூச்சிகள் பறந்தன. இரத்தம் தாறுமாறாக ஓடியது. நல்லவேளை பயபுள்ள ப்ளாக், கூகுள்+ பக்கம் வரவில்லை போல.

பயபுள்ளை இன்னும் ஃபேஸ்புக்கில் லட்சக்கணக்கில் லைக் இருக்கும் ”பலான” பக்கங்களைப் பார்க்கவில்லையென்பதால் பிரபலத்தின் பர்ஸ் தப்பித்தது என நினைத்துக் கொண்டேன்.

ப்ளாக்கில் அனானிமஸ் ஐடி, ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடிகளில் இருந்து கமெண்ட் போடுபவர்கள், திட்டுபவர்களைக் கண்டு கூட அவ்வளவு பயமில்லை. புதிதாய் ஃபேஸ்புக்கில் கணக்குத் துவங்கி, நட்பு பாராட்டும் அல்லது நமது கிறுக்கல்களை ஆஹோ ஓஹோ எனப் புகழும் புதிய நண்பர்களைக் கண்டால்தான் கிலி தட்டுகிறது. இப்போது புலி தட்டியதுபோலவே இருந்தது.

மூடர் கூடத்திடம் மோதுவதில் பயனில்லை என நினைத்தேன். போன் அடித்தது.

“வணக்கம் சார், நாங்க டொகாமோல இருந்து பேசுறோம். நீங்க வெச்சிருக்கிறது போஸ்ட் பெய்டா, ப்ரீ பெய்டா சார்”

“அய்யய்யோ.. என்னது செத்துட்டாரா…. எங்கே… எப்போ” எப்படி அந்த நொடி அப்படி திடீரெனப் பேச வந்தது எனத் தெரியவில்லை.

“நீ கலைஞன் டா” என மனக்குரல் மெச்சியது.

“சார்… நாங்க டொகாமோ மொபைல்ல இருந்து பேசுறோம்”

“செரிங்க… இதா இப்ப… உடனே.. ரெண்டே நிமிசத்துல கிளம்பிடுறேன். வெச்சுடுறேன்”

போனை வைத்து விட்டு, அதீத அதிர்ச்சியொன்றை முகத்தில் கொண்டு வர முயற்சித்தேன். அந்த அதிர்ச்சி அவர்களுக்கு தெரிந்ததா எனத் தெரியவில்லை.

“சார்….  கட்டாயம் சொல்றேங்க. இப்ப ஒரு மூனு மாசம் என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்ட்ல இயங்க வேண்டாம்னு ஃபேஸ்புக்ல இருந்து மெயில் வந்திருக்கு. அதனால மார்ச் மாசத்துக்கு மேல ஞாபகப்படுத்துங்க. அதுவரைக்கும் அதுல இருக்க மாட்டேன். அப்புறம் பார்த்துக்கலாம்ங்க”

பிரபலத்தின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. தம்பியைப் பார்த்தார். தம்பிக்கு கிலி தட்டியதுபோல் இருந்தது.

“அண்ணா.. அப்ப ட்விட்டர்ல!?” தம்பி விபரமாகத்தான் இருந்தது. ஜூனியர் குப்பண்ணா பிரியாணி கடமையை செய்வது புரிந்தது

“ஃபேஸ்புக்ல இருந்தாத்தாங்க, ட்விட்டர்லயும் இருப்பேன். சோ…. மூனு மாசம் டீஆக்டிவேட் பண்றேன். அப்புறம் நீங்க ஒரு நா வாங்க. என்னால நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு செய்யமுடியுமானு தெரியல. நாம இது பத்திப் பேசுவோம். இப்ப ஒரு கண்டலன்ஸ் அவசரமா போறேன்” என்றவாரே

அந்த தம்பியின் பெயரை ஃபேஸ்புக்கில் தேடி ’ப்ளாக்’ கட்டளையைத் தேடி கருணையேயின்றி அழுத்தினேன். இனி அவரின் போன் அழைப்பை எப்படித் தவிர்ப்பது எனத் தெரியவில்லை. அந்தப் புண்ணியவான் எதாவது ஃபேக் ஐடியில், அதுவும் பெண் பெயரிலான ஃபேக் ஐடியிலிருந்து நட்பு அழைப்பு அனுப்பாமல் இருக்க வேண்டும்.

-

19 comments:

Vijay said...

ஈரோடு கதிர் எம்பி என்று அழைப்பதா இல்லை ஈரோடு எம்பி கதிர் என்று அழைப்பதா...

P.A.A.PRAGASAM said...

சீக்கிரம் சட்டு புட்டுன்னு வேலைய ஆரம்பிங்க சார்..நாங்க எப்போ ஓட்டு போடுறது ...நீங்க எப்போ அரசியல் வியாதியா மாறுறது ?

கவிதை வானம் said...

இப்படியுமா......?
சிரிக்க வைக்கும்
முகநூல் சங்கடங்கள்.....

ராஜி said...

ஐயாயிரம், பத்தாயிரம் பேர் உங்களை ஃபாலோ பண்ணுறதால் உங்களை தலைவராக்கி நான் கொள்கைப் பரப்பு செய்லாளராகி ஒரு கட்சி ஆரம்பிச்சுடலாம் சகோ! மத்தப் பொறுப்புகளுக்கும் இங்கனயே நம்மாளுங்களை எடுத்துக்கிடலாம். வர்ற சி ல பங்கு எல்லோரும் போட்டுக்கலாம்.

vimala said...

உங்களையும் அரசியல் ல தள்ளாம விட மாட்டாங்க போல இருக்கே ..என்னை ஏகப்பட்ட கட்சி குரூப் ல கோர்த்து விட்டுட்டாங்க ..இப்போ தான் ஓடி வந்தேன்

Unknown said...

அந்தப் புண்ணியவான் எதாவது ஃபேக் ஐடியில், அதுவும் பெண் பெயரிலான ஃபேக் ஐடியிலிருந்து நட்பு அழைப்பு அனுப்பாமல் இருக்க வேண்டும்.

mohamed salim said...

:-))))))))))))

svb barathwaj said...

முடியல சார். சிரிப்ப அடக்க முடியல :-)

svb barathwaj said...

முடியல சார். சிரிப்ப அடக்க முடியல :-)

பொன் மாலை பொழுது said...

சிரிக்கவும் தலையில் அடித்துக்கொள்ளவும் ஒரே நேரத்தில் தோன்றுகிறது. :):(

Sakthivel Erode said...

ஈரோடு கதிர் எம்பி!!!!!
வாழ்க வளமுடன்!!

Anonymous said...

Nice Post Wish you all the best by http://wintvindia.com/

Kannan.S said...

இடையில, அந்த டோகோமோ காரன் பாவம்.. எவ்ளோ நேரம் குழம்பி இருந்தானோ..?

Kannan.S said...

இடையில, அந்த டோகோமோ காரன் பாவம்.. எவ்ளோ நேரம் குழம்பி இருந்தானோ..?

ILA (a) இளா said...

வருங்கால அமெரிக்க பிரதமர் ஈரோடு கதிர் வாழ்க! (எதுக்கும் துண்டு போட்டு வெச்சிக்குவோம்.. தம்பி அறிவா பேசறாப்ல இல்லையா?)

Unknown said...

அண்ணா நல்லா சிரிக்கவச்சீங்க ஹ ஹா ஹாஆஆஆஆ , இருந்தாலும் உங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது !

மதுரை சரவணன் said...

அட பாவிகளா. அரவிந்த் கெஜிரிவால் அளவுக்கு அவர முதல்வராக்கலாம்ன்னு பார்த்தா...ஈரோடு எம்பி ஆக்கி குறுகிய வட்டத்தில நிறுத்த நினைச்சிட்டீங்களே... நல்லவேளை யெஸ் சொல்லலை... அண்ணே நீங்க பிளாக்கில் இருக்கிறது தெரியுமா அந்த தம்பிக்கு...!

கிராமத்து காக்கை said...

அண்ணே பிரிண்டிங் பிரஸ் ஓணரா நீங்க.................... அதே பொழைப்பு தான் இங்கேயும்

Rajasekar Mani said...

//ஃபேஸ்புக்கில் ஃபேக் ஐடிகளில் இருந்து கமெண்ட் போடுபவர்கள், திட்டுபவர்களைக் கண்டு கூட அவ்வளவு பயமில்லை. புதிதாய் ஃபேஸ்புக்கில் கணக்குத் துவங்கி, நட்பு பாராட்டும் அல்லது நமது கிறுக்கல்களை ஆஹோ ஓஹோ எனப் புகழும் புதிய நண்பர்களைக் கண்டால்தான் கிலி தட்டுகிறது.//
அருமையா, அனுபவிச்சு சொல்லியிருக்கீங்க சார். :)

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...