மெரினாவுக்குப் போயிருந்தேன்


நீண்ட நாட்களுக்குப் பிறகு மெரினாவுக்குச் செல்கின்றேன். முப்பது நாட்களுக்குள் நான்காவது முறை வந்திருக்கும் சென்னைப் பயணம். சுமக்கத் திணறும் ஒரு பெரிய பாரத்தை கொஞ்சம் முட்டுக்கொடுத்துவிட்டு, சற்றே தளர்த்திக்கொண்ட லேசான மனோநிலையில் இருக்கின்றேன். அடுத்தடுத்த பயணம், உறக்கம் குறைந்த இரவுகள் என கூடிக்கிடந்த அலுப்பு துளியும் குறைந்தபாடில்லை. கார் நிறுத்துவதற்கு இடம் தேடிக் களைத்து, முறையற்ற முறையில் நிறுத்தியிருந்த ஒரு வேனை ஒட்டி நிறுத்தவேண்டியதாகிப் போனது. நிறுத்திய இடம் முறையற்றது, அதேசமயம் யாருக்கும் தொந்தரவாக இருக்க வாய்ப்பில்லை.

5 மணி நேர மாலை வெயில் கூடுதலாய் சுடுகின்றது. மணலில் கால் புதைந்தது. காரிலேயே காலணியை விட்டிருக்கலாமோ எனத் தோன்றியது. உள்ளங்கால்களில் மணலின் வெதுவெதுப்பை வாங்கவேண்டும் போல் இருந்தது. மணலில் உறங்கும் வெயிலை எத்தனையெத்தனை கால்கள் இந்த தினத்தில் மட்டும் களவாடிப் போயிருந்திருக்கும்.

என்னோடு மனைவியும், நண்பரின் மகளும். நண்பரின் மகள் சிகிச்சையின் பொருட்டு உணவுக் கட்டுப்பாட்டியில் இருப்பவள். வீட்டிலிருந்து புறப்படுகையில்என்ன சொல்லிக் கேட்டாலும் பஜ்ஜி மட்டும் கூடாதுஎன எச்சரிக்கையோடுதான் அனுப்பப்பட்டிருந்தாள்.

அங்கிள் எனக்கு காலிஃப்ளவர், உங்களுக்கு வேணா பஜ்ஜி வாங்கிக்குங்கஎன நயமாய் என்னையும் மனைவியையும் பஜ்ஜிக் கடைக்கு நகர்த்திச் செல்கிறாள். கடைக்காரப் பெண்மணியிடம் தனக்கு காலிஃப்ளவர் ஒரு தட்டு, எங்களுக்கு மிளகாய் பஜ்ஜி ஆளுக்கொரு தட்டு தரச்சொல்கிறாள்.

வீட்ல சொன்னதுக்காக பஜ்ஜி வாங்கிக்காம நல்ல பொண்ணா இருக்காளே….” என நினைக்கும் கணத்தில் தன் தட்டை நீட்டி காலிஃப்ளவர் ஒரு துண்டு எடுத்துக்கொள்ளச் சொல்கிறாள். எடுத்த கணத்தில்மொளகா பஜ்ஜி நல்லாருக்கா அங்கிள்?” எனப் பதிலுக்கு காத்திராமல் ஒன்றை எடுத்துக்கொள்கிறாள்.

யெம்மா கண்ணு இதெல்லாம் ஓவரு. அம்மா எதும் வாங்கித் தரக்கூடாதுனு சொல்லியிருக்காங்க…. உங்கவீட்டு உப்பைத் தின்னுட்டு துரோகம் செய்யக்கூடாது

சும்மா கத விடாதீங்க அங்கிள், எங்கம்மா இன்னிக்கு கொழம்புக்கு உப்பே போடலை, அதுக்கு பழிவாங்கிட்டதா நினைச்சு விடுங்க

சற்றுத் தாமதித்து மனைவியின் தட்டிலும் அதே முறையை அமுல்படுத்துகிறாள்.

நடக்க நடக்க மணற் புழுதியில் கால் அமுங்குகிறது. அடர்த்தியாய் புழுக்கமாய் கடற்காற்று கடந்துபோகிறது. காலணியை விட்டுவிட்டு வந்திருக்கலாமோயென நினைத்த நொடியில் கையகல கண்ணாடித்துண்டு கண்ணில் மின்னுகிறது.

குடிப்பதில் தெளிவாக இருப்பதைவிட, குடித்த பாட்டிலை உடைப்பதில் தெளிவாக இருக்கின்றனர் மக்கள். மீறிய போதையில் பாட்டில்கள் உடைபடுவதைவிட, குடித்த நிமிடங்களில் உள்நாக்கிலிருந்து கசப்பு அகலும் தருணத்தில், தெளிவிலிருந்து போதைக்கு நகரும் முசுவில் ஏதோ ஒன்றைத் தகர்ப்பதுபோல் தூக்கி வீசியடித்து உடைக்கப்படும் பாட்டில்களே அதிகம்.



உடம்பும், மனசும் கசகசவென்றிருந்தது. துகள்துகளாய் வெதுவெதுப்பாய் காலணிக்குள் புகுந்து சீண்டிய மணல்களை நேசித்து, அலையடிக்கும் கரை எட்டுகிறேன்.

அலையாய் மக்கள் வெள்ளமும். விவரிக்க முடியாதொரு புழுக்கம் விரிந்து கிடந்தது. கடலுக்கு எப்போது வந்தாலும் ஓடிச்சென்று கால் நனைக்கும் எனக்கு, இந்த முறை நனைய விருப்பமற்றிருந்தது. உடன்வந்தோரை அனுப்பிவிட்டு அவர்களின் காலணிக்கு காவலிருக்கத் துவங்கினேன். என்னைப்போலவே இன்னும் சிலரும் காலணிக்கு காவலிருந்தனர். உதடுகளில் களைப்பானதொரு புன்னகை பூத்தது.

அலை சீற்றத்தோடு அடித்துக்கொண்டிருந்தது. வானத்தில் வட்ட நிலா மங்கலாகத் தெரிகிறது. இன்றோ நாளையோ பௌர்ணமியாக இருக்கலாம். அலை ஆற்றல் மிகுந்து குதிப்பதாகத் தோன்றியது. கடல் நீரில் கால் நனைக்கும் எல்லோரிடமும், ஒரு கத்தல் குரல் துவங்கிவிடுகிறது. அது மகிழ்ச்சியின் குரலா? பயத்தின் மொழியா? அடைந்துகிடக்கும் அழுத்தத்தின் பிரசவமா?

யாராக இருந்தாலும், அவர்களிடம் மிச்சமீதியிருக்கும் குழந்தைத் தனத்தை மீட்டுவிடுவதில் கடலலைகளுக்கு சிறப்பான பங்குண்டு. கால் நனைக்க வேண்டாம் என அலைகளிலிருந்து முடிந்தவரை தள்ளி நின்றவர்களையும், அலை எப்போதாவது வந்து வருடிவிட்டுப் போகிறது. அப்படி அலை வருட வரும்போது, நனைய விரும்பாதோர் பொய்யாய் ஒரு பயம் காட்டி பின்வாங்க முயல, அலை ஒரு வேட்டை நாய்போல் பாய்ந்து, பின்வாங்குகையில் வீட்டு நாய்போல் காலைச் சுற்றிவிட்டு எச்சில் படுத்திப்போகிறது. அந்த அலைத்தழுவல் சுகத்தின் பின்னே காய மறுக்கும் பிசுபிசுப்பு ஒட்டிக்கொள்வது தவிர்க்கவியலாத ஒன்று!

சுண்டல்என ஒரு சிறுவன் கடந்துபோகிறான். எதும் வாங்கும் மனநிலையில்லை. சுண்டல் குறித்து காலம் காலமாய் வாரப் பத்திரைக்கைகளில் படித்த மொக்கை ஜோக்குகள் நினைவுக்கு வருகின்றன. இப்போது யோசிக்கையில், அவை எத்தனை மொக்கையாய் இருந்தன எனத் தோன்றுகிறது.

கூட்டத்தினூடே புகுந்த குதிரைகள் சவாரிக்கான வாடிக்கையாளரைத் தேடிக்கொண்டிருக்கின்றன. ஒரு படத்தில் நகையைத் திருடிக்கொண்டு வடிவேல் குதிரையில் செல்கையில், என்னத்த கன்னையாவின் பாவனையும், குதிரை திரும்பிவரும் காட்சியும் நினைவில் வந்துபோகின்றது. யாருக்கும் எதுவும் நடக்கலாம் என்பதற்கு வடிவேலு எனும் மா கலைஞன் சரியான உதாரணம் எனும் எண்ணம் மனதில் ஓடுகின்றது.

அந்த கூட்டத்திலிலும் மணலில் அமர்ந்திருக்கும், முகத்தில் அடர்த்தியாய் மஞ்சள் பூசியிருந்த பெண்மணி அருகிலிருக்கும் மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். சுருட்டி வைக்கப்பட்ட சில உடைகளை கையில் ஏந்தியிருக்கிறார். குடும்பத்தினர் அலையில் குதூகலித்துக் கொண்டிருக்கலாம். அந்தப் பெண்மணியின் பிள்ளைகள் கடலில் விளையாடிக் கரையேறினால், அம்மாவிடம் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கும்.

ஒரு அழகிய கடற்கரையில் அமர்ந்திருக்கிறோம், மேலே நிலவு தெரிகிறது, மிகப் பக்கத்தில் அலைகள் கரையோடு கூடி உச்சத்தில் கலைகின்றன என்பதையெல்லாம் அமர்ந்தவாறு மும்முப் பேச்சிலிருப்போர் உணர்ந்திருப்பார்களா?. இப்படியெல்லாம் உணர்ந்தால்தான் வாழ்க்கையா? அவர்களுக்குள் இதையெல்லாம் கடந்த ஒரு பெருமகிழ்ச்சியோ, துக்கமோ ஊடாடிக் கொண்டிருக்கவும் கூடும்.

அடுக்கி கட்டப்பட்டிருக்கும் பலூன்களை ஒரு குடும்பம் ஆள்மாற்றி ஆள்மாற்றி சுட்டுத்தள்ளி மகிழ்ந்துகொண்டிருக்கின்றது. இடைவெளியின்றி அடுக்கப்பட்ட பலூனில் எங்கு சுட்டாலும் ஒரு பலூன் வெடிக்கும் எனும் உளவியலையும் தாண்டி, வெடித்த பலூனில், எதையோ வீழ்த்திய சற்றே செயற்கைச் சாயம் பூசப்பட்ட மகிழ்ச்சி சூழ்ந்து பொங்குகின்றது.

ஒரு நொடிப்பொழுது, இந்தக் கடற்கரையில் என்னைத் தவிர எல்லோரும் காணாமல் போய்விட்டால் எப்படியிருக்குமென யோசிக்கின்றேன். குதூகலமாய் வீசும் இந்தக் கடலலைகள் சூன்யம் மிகுந்ததாய், அச்சுறுத்தலாய் அந்த நொடியில் மாறிப்போகலாம். இருக்கும் வெளிச்சத்தையும் தாண்டி கூடுதலான இருள் சூழ்ந்ததாகத் தென்படலாம். தலையை உலுக்கி சிந்தனை நிலைப்படுத்துகிறேன். Cast away படம் நினைவுக்கு வருகிறது. எத்தனை அற்புதமான படம். பட நாயகன் நினைவில் வந்துபோகிறான். அப்படியொரு தனிமையில் தள்ளப்பட்டால், கடப்பது எளிதா என்ன?

நண்பரின் மகள் கொடுத்துச் சென்ற IPhone எங்கேயென கால்சட்டை பைகளில் கை அநிச்சையாய் தேட, மனைவியும் நண்பரின் மகளும் எங்கேயென கண்கள் தேட, வண்டி விட்ட இடத்தை மனது தேடத்துவங்குகிறது.

கடல் குறிப்பிட்ட தூரம் வரை கலங்கியும், அதற்கப்பால் ஒரு அழகிய வெளிர் அடர்பச்சை நிறத்திலும் தெரிகிறது. தொலைவில் இரண்டு கப்பல்கள் தெரிகின்றன. கப்பல் எத்தனை பெரிய பிரமாண்ட உலகம். கடந்தமுறை வந்த புயலில் தரைதட்டிய கப்பல் விபத்து நினைவு வருகிறது. அந்த விபத்தில் இறந்து போனவர்களின் குடும்பம் அதன்பின் கடற்கரைக்கு வந்திருக்குமா? மரணத்தைச் சந்திக்கும்வரை அந்தக் குடும்பத்திற்கு கடல் எத்தனை பிரியத்துக்குரியதாக இருந்திருக்கும். இப்போது எத்தனை மடங்கு கசப்பு மிகுந்ததாக மாறியிருக்கும். ஒரு கணம் கடல் மேல் பயம் குவிந்து விலகியது.

தவழ்ந்து  மிதந்து கரை நெருங்குகையில் அடர்த்தி கூடி, அழுத்தம் கூடி, விசை கூடி எழும்பி வரும் அலையைக் கண்டபோது சுறா படத்தில் கடலிலிருந்து விஜய் பறந்தெழும் காட்சி நினைவுக்குள் வந்தது. அப்படியொரு காட்சியை வைக்க அந்த இயக்குனரிடம் எவ்வளவு மொக்கைத் தனம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காட்சியைக் கேட்ட, விஜய்க்கு நடிக்க கொஞ்சம்கூட கூச்சமாக இருந்திருக்காதா? கைபேசியில் இருக்கும் ஃபேஸ்புக் வழியேகடலை வெறித்தவாறு காற்று வாங்கும் பொழுதெல்லாம் சுறா படத்தில் விஜய் பறந்து வந்த காட்சி மனதைக் கொத்துகிறதுஎனப் பதிவிடுகிறேன்.  

இதற்குமுன் கடற்கரைக்கு வந்துபோன நினைவுகளை மனது வரிசைப்படுத்துகிறது. பாண்டிச்சேரி, கோவளம், தலச்சேரி, கோழிக்கோடு, மெரினா, பெசண்ட் நகர் என நினைவில் அலையடிக்கிறது.  ஒரு பகற்பொழுதில் என்னுடன் எவருமற்று நின்றிருந்த திருச்செந்தூர் கடற்கரை மனதில் வருகிறது. அது ஒரு ஏகாந்த தனிமை. என்னைச் சுற்றிலும் எவரெவரோ, ஆனால் என்னோடு எவருமில்லை. காற்சட்டையை மடித்துவிட்டுக் கொண்டு மதியவெயிலில் மணிக்கணக்கில் நின்றிருந்தேன். அன்றைக்குபோல் என்றைக்கும் நான் கடலினை அனுபவித்ததில்லை. முதற்கூடல் போலவும், முதிர்ந்த கூடல் போலவும் விதவிதமான அனுபவங்களை அன்றைக்கு கடல் அள்ளித்தந்தது. அலைக்குள் குளிக்கவும், அலையில் கால் நனைக்கவும், அலையில் இருந்து ஒரு துளி கூட தொட்டிடாத தூரத்தில் நிற்கவும் என விதவிதமாய் மனிதர்கள் இருந்த அவ்விடத்தில் அலை என்னைத் தாக்கி, தடவி, முத்தமிட்டு, கிள்ளிவைத்து, உரசி, ஊதி, தழுவி என என்னென்னவோ செய்தது. அத்தனை கூட்ட நெரிசலிலும் தனிமையையும், அமைதியை உணர்ந்த அற்புதமான நாள் அது. உடன் வந்திருப்போர்க்கு அலை பிடிக்குமா? நனையப் பிடிக்குமா? நேரம் ஆகிவிடுமா? என எந்தப் பிடுங்களும் இல்லாத ஏகாந்தம் தனியே கடலலையில் நிற்பதில் உண்டு.

நடைந்த உடைகளோடு, உற்சாகமும், மகிழ்ச்சியும், களைப்பும் ஒன்றிய முகத்தோடு மனைவியும், நண்பர் மகளும் வருகிறார்கள். கையைத் துடைத்துக்கொண்டு IPhone வாங்கிய நண்பரின் மகள், போனை இயக்கி ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலைப் பார்த்து…. ”உங்களுக்கு என்ன தில் இருந்தா விஜயை கிண்டல் அடிப்பீங்க!?” எனப் பொய்க் கோபம் காட்டுகிறாள்.

கார் இருக்கும் திசையை உத்தேசமாகக் கவனித்து நடக்கிறோம். குறுக்கே கடக்கும் குதிரையின் வாலைப் பிடித்திழுக்க, கடல் பார்க்க வந்த ஒரு சிறுமி முயல்கிறாள். தலைக்கு கையை வைத்துப்படுத்தவாறு ஒருவர் வானம் பார்த்துக் கொண்டிருக்கிறார். குனிந்து செய்தித்தாளை பொறுப்பாக ஒருவர் வாசித்துக் கொண்டிருக்கிறார். ஹெட்போனில் இருக்கும் இரண்டு ஸ்பீக்கர்களை ஆளுக்கொன்றாய் மாட்டிக்கொண்டு ஒரு ஜோடி அமர்ந்திருக்கின்றது. சாலைக்கும், அலைக்கும் இடைப்பட்ட வெளியில் அமர்ந்திருப்பவர்களுக்கென தனி ஒரு உலகம் இருப்பது புரிகின்றது.

மணற்பரப்பு கடந்து சாலை ஏறுகையில், மீண்டும் எப்போது கடலினைக் காண்போமென மெல்லியதாய், மிக மெல்லியதாய் ஒரு சிறு துக்கம் மனதில் அடைக்கிறது. கடல் ஒரு மாபெரும் உலகம். கடற்கரையும் ஒரு உலகம். கடலும், கடற்கரையும் தாண்டி சாலைக்கு அப்பால் இருப்பதும் ஓர் உலகம். ஒவ்வொரு மனிதனும்கூட ஓர் உலகம்தான். உணர்வதும், நம்புவதும் மட்டும் அவ்வளவு எளிதல்ல!


-

நன்றி வல்லமை 

7 comments:

Anonymous said...

nice lines about the Marina Beach, this is the world's second longest...

Veera D said...

"கடல் ஒரு மாபெரும் உலகம். கடற்கரையும் ஒரு உலகம். கடலும், கடற்கரையும் தாண்டி சாலைக்கு அப்பால் இருப்பதும் ஓர் உலகம். ஒவ்வொரு மனிதனும்கூட ஓர் உலகம்தான். உணர்வதும், நம்புவதும் மட்டும் அவ்வளவு எளிதல்ல!".... நிதானமான மனநிலையில் நீங்கள் எழுதியுள்ளீர்கள். தத்துவம் திரண்ட வரிகளால் கட்டுரை நிறைவு பெற்றிருக்கிறது. அற்புதம்.

-வீரா

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - இயல்பாக மெரினாவிற்குச் சென்றதும் -இயல்பாகச் சுற்றி மகிழ்ந்ததும் நினைவில் வட்டமிடுகிறது. 7 ஆண்டுகள் ஆகிவிட்டது சென்னை விட்டு வந்து - 32 ஆண்டுகள் சென்னை வாழ்க்கைக்குப் பிறகு.....

மெரினாவில் சுற்றிய அக்கால நினைவுகள் மனதில் வட்டமடித்து விளையாடுகின்றன.......

தங்களீன் மெரினா சுற்றுலா கட்டுரை இயல்பாக, ஒவ்வொரு நிகழ்வினையும் நினைத்து மகிழ்ந்து அசை போட்டுக்கொண்டே எழுதியது நன்று.

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

Anonymous said...

Athu veru ulakam...kadarkarai....ellorudaiya enna ottathai padithu vitta kalippil alaigal....//
உங்களின் இந்த கட்டுரை கடற்கரை என்னும் அழகிய உலகில் இட்டுச் சென்று எண்ண அலைகளில் கால் நனைத்து எங்களை மகிழ்வித்தது என்றால் மிகையில்லை. பாராட்டுக்கள்.

Unknown said...

ஒவ்வொரு கணமும் சுகமாகவும் ,
சற்று சிந்திக்கவும் வைக்கிறது !
இப்படி ரசித்து எழுதுவது உங்களால் மட்டுமே !
,
// ”சும்மா கத விடாதீங்க அங்கிள், எங்கம்மா இன்னிக்கு கொழம்புக்கு உப்பே போடலை, அதுக்கு பழிவாங்கிட்டதா நினைச்சு விடுங்க”//
,
அருமை அண்ணா !

Albert Fernando said...

அன்பின் கதிர்,
மெரினாவுக்குப் போயிருந்தேன்.. . படித்து முடித்த‌தும்

"காற்று வாங்கப்போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்..."
என்ற பாடல் தன்னிச்சையா எனக்குள்
ஒலித்தது. காலாற கடற்கரை சென்று
"மெரினாவுக்குப் போயிருந்தேன்" என்ற‌
கட்டுரையை எங்களுக்காக கொண்டுவந்த
உங்களைப் பாராட்டுகிறேன்.
ஆல்பர்ட்,
அமெரிக்கா.

ராமலக்ஷ்மி said...

அருமை!