ஈரோட்டில் மறந்துபோன மாமனிதர்கள்! - ஆனந்த விகடன் என்விகடன் கட்டுரை

ல்லோரும் தனி மனிதர்களாகத்தான் பிறக்கிறார்கள். சிலர் மட்டுமே சமூக அக்கறை கொண்ட மனிதனாகத் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அப்படிப்பட்ட சிலரின் தியாகங்களைக் காணும் போதுதான் இந்தப் பூமி அன்பினாலும் தியாகங்களினாலும் கட்டமைக்கப்பட்டது என்பது புரிகிறது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் 650 ஏக்கர் விளைநிலம், புகையிலை மண்டி, மஞ்சள் மண்டி, 100 ஆண்டுகளுக்கு முன்பே http://www.vikatan.com/images/rupee_symbol.png40 லட்சம் முதலீடு கொண்ட சொந்த வங்கி எனச் செழிப்பான ஒரு குடும்பம் இருந்தது. ஆனால், மக்களுக்காக அவர்கள் எல்லாவற்றையும் துறந்தார்கள். வெளியில் அதிகம் தெரியாத இந்தக் கதையை 'ஓயாமாரிஎன்ற பெயரில் ஆவணப்படம் ஆக்கி இருக்கிறார்  'சோளகர் தொட்டிநாவல் எழுதிய .பால முருகன்.


இந்த ஆவணப்படம் டி.சீனிவாச அய்யர் மற்றும் அவருடைய மகன் ஜி.எஸ்.லட்சுமண அய்யர் ஆகியோரின் தியாகம் குறித்துப் பேசுகிறது. கடந்த 2011-ம் ஆண்டு துவக்கத்தில் லட்சுண அய்யர் காலமானார். அவர் மறைவுக்குச் சில மாதங்கள் முன்பாக அவரைச் சந்தித்து ஆவணப்படத்தைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் பாலமுருகன். காந்தியக் கொள்கைகளைப் பின்பற்றிய சீனிவாச அய்யர் தலித் மக்களுக்கு அக்ரஹாரத்தில் உள்ள தன் வீட்டில் சமபந்தி உணவு அளிக்கின்றார். இதனால், அக்ரஹாரம் அவரை ஒதுக்கி வைக்கிறது. சீனிவாச அய்யரின் மகளை வாழா வெட்டியாகப் பிறந்த வீட்டுக்குத் திருப்பி அனுப்புகிறது.

சீனிவாச அய்யர் கோபியில் இயங்கிவரும் கல்வி நிறுவனங்களுக்கு 40 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தைக் கொடுப்பதுடன், தலித் மாணவர்களுக்காக கல்வி நிறுவனங்களையும் இலவச விடுதியையும் துவக்குகிறார். தலித் மக்களும் எல்லாரையும்போல் சுகாதாரமாக, சுதந்திரமாக வாழத் தன் னுடைய சொந்த நிலத்தில் காற்றோட்டமான வீடுகள், அகலமான சாலைகள் என காலனி அமைத்துக் கொடுக்கிறார்.

ராஜாஜி சுதந்திராக் கட்சி துவங்கியபோது, காங்கிரஸ்காரர்களின் போக்குப் பிடிக்காத சீனிவாச அய்யர் சுதந்திரா கட்சியில் சேர்ந்து தேர்தலில் நிற்கிறார். உடனே எதிர் அணியினர் சீனிவாச அய்யரின் வங்கியில் முதலீடு செய்து இருந்த தங்களின் மொத்தப் பணத்தையும் ஒரே நேரத்தில் திருப்பிக் கேட்கிறார்கள். அசராமல் தன்னுடைய மொத்த சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்து வங்கிக் கணக்கினைத் தீர்க்கிறார் சீனிவாச அய்யர். இதனால், அவருக்கு எதுவுமே மிஞ்சாமல் போகிறது.

தொடர்ந்து அவருடைய மகன் லட்சுமண அய்யருக்கு, ஊர்க்காரர்கள் பெண் தர மறுக்கிறார்கள். பழநியில் இருந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவர் இவரைப் பற்றி கேள்விப்பட்டு, தன்னுடைய குடும்பத்துப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறார். சத்தியாக் கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்ட லட்சுமண அய்யர், அவருடைய மனைவி லட்சுமி அம்மாள் இருவரும் சிறை செல்கின்றனர்.  

பெல்லாரி சிறையில் இருந்த காலத்தில் லட்சுமண அய்யர் மனித மலத்தை அள்ளும் வேலையைச் செய்கிறார். பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வந்து, குஜராத் சென்று காந்தியைச் சந்திக்கிறார். அப்போது காந்தி, 'தலித் மக்களின் விடுதலைக்காக வாழ்நாள் முழுதும் உழைக்க வேண்டும்என்று லட்சுமண அய்யரிடம் உறுதிமொழி பெறுகிறார்.

1951, 1981- என இரண்டு முறை கோபி நகராட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற லட்சுமண அய்யர், பொதுக் கிணறுகளில் தலித் சமூகத்தினர் தண்ணீர் எடுக்கும் உரிமைக் காகப் பல வழிகளிலும் போராடுகிறார். தலித் கள் வாழும் பகுதியிலேயே கிணறு வெட்டிக் கொடுக்கிறார். நகராட்சி மூலம் அதிரடித் திட்டங்கள் தீட்டி வீடுகளில் இருந்த உலர் கழிப்பிடங்களை, நீர் வழிக் கழிப்பிடங்களாக மாற்றி இந்தியாவிலேயே மனித மலத்தை மனிதன் அள்ளாத முதல் நகராட்சியாக கோபியை மாற்றுகிறார். தேசத்தில் நிகழ வேண்டிய நல்ல மாற்றங்களைத் தன்னளவில் துவங்கி, தொடர்ந்து செயல்படுத்துகிறார் லட்சுமண அய்யர்.

இவற்றை எல்லாம் மிக அழகாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார் பாலமுருகன். குறிப்பாக, பள்ளிக் குழந்தைகள் மதிய உணவு சாப்பிட்டது குறித்து விசாரிக்கும் காட்சியில், சிறுவர்களை அழைத்து வயிற்றைக் காட்டச் சொல்லி, வயிறு புடைப்பாக இருக்கிறதா எனச் சோதிப்பதன் மூலம் ஒரு தாத்தாவின் கவிதைத்தனமான அன்பை வெளிப்படுத்துகிறார்.


ஈரோடு மாவட்டத்தின் அடையாள மனிதர்கள் என்பதில் தீரன் சின்னமலை, தந்தை பெரியார் என்பவர்களுடன் லட்சுமண அய்யரின் பெயரும் இடம்பெற வேண்டியது காலத்தின் அவசியம். அதற்கு இந்த ஆவணப் படம் ஓர் அவசியமான ஆரம்பம்.
***
26.07.2012 ஆனந்த விகடன் - கோவை என்விகடனில் வெளியான விமர்சனக் கட்டுரை.

நன்றி : ஆனந்தவிகடன், ச.பாலமுருகன்.

தொடர்புக்கு : ச.பாலமுருகன் (94432-13501)

-

7 comments:

நம்பள்கி said...

இவரைப் பற்றி நான் கேள்விப் பட்டிருக்கேன்; ஆனால், அவர் மகனைப் பற்றி இப்பொழுது தான் அறிகிறேன்; பெரியார் மாதிரி இவரும் ஒரு பெரியவரே!

ரஹீம் கஸாலி said...

நல்ல மனிதரை அடையாளம் காட்டியதற்கு நன்றி

arul said...

i had read this in ananda vikatan thanks for sharing this anna

வானம்பாடிகள் said...

அற்புதமான மனிதர்களை தொடர்ந்து அடையாளம் காட்டுகிறீர்கள். நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு மனிதரைப் பற்றி பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி. ஆனந்தவிகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

Amudha Murugesan said...
This comment has been removed by the author.
Amudha Murugesan said...

Good to know