35 ரூபாய்க்கு என்ன செய்யலாம்?






நேற்று இரவு 7.30 மணி இருக்கும். அலுவலக அறையின் வாசலில் அவர் நின்றார். 

“உள்ளே வரலாமா”? என்றார்

”வாங்க” என்று சொல்லிவிட்டு…. பார்த்த உருவமா இருக்கே என நினைவுகளை மீட்டெடுத்தேன்.

”யார்னு தெரியுதுங்ளா?” என்றார்

”ம்ம்ம்.. அட தெரியுதுங்க, தெரியாம என்ன” என்றேன்

பெயர் நினைவில் இல்லை. ஒரு சிறிய தொழில் நிறுவனம் நடத்தி வந்தவர். ஈரோட்டின் ஒரு பிரதானச் சாலையில் அவரின் நிறுவனம் இருந்தது. ஓரிருமுறை வேலையாக சென்றிருக்கிறேன், அவரும் வந்து போயிருப்பதாக நினைவு. அவரை 1998, 1999களில் சந்தித்ததாக நினைவு. யோசித்தும் கூட பெயர் நினைவுக்கு வரவில்லை. பெயரைக் கேட்கலாமா வேணாம என மனது ஊசலாடியது.

மெலிதாக தடுமாற்றத்தோடு, மெதுவாக வந்தவர், மப்பில் இருக்கிறாரோ எனத் தோன்றியது. நான் பார்த்த காலத்தில் குடியை வெகுவாக சிலாகித்தவர் என்பதும், எப்போதும் பான்பராக் வாசத்தோடு இருப்பவர் என்பதும் நினைவிற்கு வந்தது.

“உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறேன்” என்றார்

என்ன உதவியாக இருக்கும் எனும் சிந்தனையோடு..

“ம்ம்ம். என்னங்க” என்றேன்

“ஒரு நூறு ரூபா பணம் குடுங்க, காலையில 9 மணிக்கு கொண்டு வந்து தந்துடுறேன்”

“ஆஹா… ஏங்க என்னாச்சு…. ஏன் நூறு ரூவாயிக்கு… இவ்ளோ தூரம்” என்றேன்

வெகு வெகு அரிதாக… மிகப் பழகிய நண்பர்கள் எப்போதாவது அவசரமாக வந்து 50 அல்லது 100 குடுங்க வண்டியில் பெட்ரோல் தீர்ந்துடுச்சு என்று கேட்டதுண்டு. அப்போதெல்லாம் ஒரு துளியும் சந்தேகம் வந்ததில்லை. ஆனால் நேற்று சந்தேகம் வலுத்தது.

“இன்னிக்கு எனக்கு பர்த்டேங்க, 100 ரூவா குடுங்க, காலையில சத்தியமா தந்துடுறேன்”

பிறந்தநாள் என்று சொல்லியும் ஏனோ வாழ்த்தத் தோன்றவில்லை எனக்கு, சிந்தனை அவரையும் மதுவையும் குறித்தே உழன்று கொண்டிருந்தது.

“எங்கிருந்து வர்றீங்க, இப்ப?”

“அக்கா வீட்ல இருந்து வர்றேங்க” என ஒரு பகுதியைச் சொன்னார்.

அக்கா வீடு இருப்பதாகச் சொல்லும் பகுதியிலிருந்து, அவர்கள் நிறுவனம் இருந்த பகுதியைவிட என்னைச் சந்திக்க வந்திருப்பது கூடுதல் தொலைவும் கூட.

”சரிங்க…. உங்க கடை அங்கிருந்து பக்கம்தானே, ஏன் இவ்ளோ தூரம்” என கொஞ்சம் ஆச்சரியத்துடன் கேட்டேன்

“இல்லீங்க…. சரிங்க…. 50 ரூபா குடுங்க போதும், காலையில் தந்துடுறேன்”

“பணம் இல்லைங்ளே… இப்பத்தானே ஒருத்தருக்கு கொடுத்து அனுப்பினேன்” என்று சமாளித்தேன்

“அய்யய்யோ.. உங்கள நம்பித்தான்… இவ்ள தூரம் வந்தேன், எப்படியாச்சும் குடுங்க” என்றார்

“நிஜமா இல்லீங்க, இப்பத்தான் ஒரு பில்லுக்கு சுத்தமா பொறுக்கிக் கொடுத்தேன்”

“இல்லீங்க, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது, எப்படியாச்சும் குடுங்க” என்றார்

“எப்படி வந்தீங்க… வண்டி இல்லைனா சொல்லுங்க… உங்க கடையில வேணா விடுறேன்” என்றேன்

“சரி… ஒரு 35 ரூபாயாச்சும் குடுங்க… ப்ளீஸ்….”

“நிஜமா இல்லீங்க”

”என் பர்த்டேங்க இன்னிக்கு, உங்களை நம்பித்தான் வந்திருக்கேன் எப்படியாச்சும் குடுங்க:” என அடம்பிடிக்க ஆரம்பித்தார்.

“சரிங்க… 35 ரூபாய வெச்சு, பர்த்டே-க்கு என்ன பண்ணப்போறீங்க” என்றேன்

”அப்பப்ப ஹான்ஸ் போடுவங்க …. ஹான்ஸ் வாங்கக் கூட காசில்ல… நீங்க 35 ரூபா எப்படியாச்சும் குடுங்க” எனத் தொடர்ந்தார்.

அந்த அடம் கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கியது. இல்லையெனும் மறுப்பைத் தீவிரமாக்கியது.

ஒருவழியாக எழுந்து சென்றார்.

”கொடுத்திருக்கலாமோ?” ”ஏன் கொடுக்க வேண்டும்?” என மனது உழன்று கொண்டேயிருந்தது. பின்னர் மறந்து போனேன்.

காலை அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன், நேற்று அவர் அமர்ந்திருந்த நாற்காலியைப் பார்த்தவுடன் ”அந்த 35 ரூபாய்” நினைவுக்கு வந்தது.

அந்த நிறுவனத்தோடு தொடர்பிலிருந்த நண்பரை அழைத்து

“இந்த மாதிரி…. ******* ல இருந்து அவர் வந்தார்” என்றவுடன்

“வந்து காசு எதும் கேட்டாரா? பயங்கரமான ட்ரிங்ஸ்ங்க அவரு” என்றார் நண்பர்.

நடந்த கதையைச் சொன்னேன். குடியால் அந்த நிறுவனத்தில் அவர் இல்லையென்றும், வேறு பக்கம் வேலைக்குச் செல்வதாகவும், வேலைக்கும் ஒழுங்காகச் செல்வதில்லையென்றும் நண்பர் தொடர்ந்தார்.

மீறிய குடியின் பொருட்டு வேலை, தொழில் சிதைந்து, குடிப்பதற்காக சிறிய தொகை கேட்டு வரும் ஆட்கள் குறித்துப் பட்டியலிட்டார் நண்பர். இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றும் நபர், அம்மாவின் மருத்துவச்செலவுக்கு 300 ரூபாய் வேண்டுமெனக் கேட்டு வர, அந்த நிறுனத்தின் உரிமையாளரை இவர் போனில் அழைக்க... அவர் அந்த பணியாளார் ஊர் முழுக்க காசு வாங்கிய கதையைச் சொல்லி எச்சரித்ததையும் கூறினார்.

நான் தெளிந்தேன்.

கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு என்னைச் சந்தித்து அவர் பணம் கேட்ட தீவிரம், திடம் குறித்து யோசிக்கையில்…. இது போன்ற தீவிரங்கள், பணத்திற்காக ஒரு குற்றத்தை வெகு எளிதாகச் செய்யக்கூட தயங்காதோ எனவும் தோன்றியது. நேற்று அந்த 35 ரூபாயைப் பெற்றிட வேறு என்ன செய்திருப்பாராக இருக்கும் எனவும் யோசிக்க முயன்றது மனம்.

மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.

-0-


6 comments:

arul said...

ippadiyum sila manthargal irukkirargal sometimes they will come as friends

மாதேவி said...

நல்ல முடிவு எடுத்து பணம் கொடுக்காமல் விட்டது நன்று.

குடிப்பதற்காக எப்படி எல்லாம் பொய்சொல்கிறார்கள்.

jc.chinnadurai said...

கேட்க ஆரம்பித்தால் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள் என்பது கேட்ட பிறகுதான் தெரிகிறது!- நீங்கள் சொன்னது தானே?

துளசி கோபால் said...

அங்கே குடின்னா.... இந்தப் பக்கங்களில் ட்ரக்ஸ்:(

அந்த விநாடிக்கு அது கிடைக்கலைன்னா..... எப்படியும் அதை அடைவதற்கு என்னெல்லாம் உபாயம் உண்டோ அத்தனையும் செய்யறாங்க:(

இப்படிப்பட்ட நிலைமைகளை எப்படி சமாளிப்பது?

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல முடிவு ...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

ஆம் கதிர் - இப்படித்தான் இளகிய மனம் படைத்தவர்கள் பலர் வேண்டா வெறுப்பாக உதவி செய்கிறார்கள். இல்லை என்று கூற இயலவில்லை என்கிறார்கள். ம்ம்ம்ம்ம்ம்ம் நட்புடன் சீனா