தனிமை குறித்து பேசாத மொழிகள் ஏதேனும் உண்டா? பேசாத ஆட்கள் எவரேனும் உண்டா? ஆனாலும் தனிமை வரமா சாபமா என்பது புரியாத புதிர்தான். தனிமையை அற்புதமான வரமென்றும், கொடிய சாபமென்றும் கொண்டாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். எதிர்பாராத தருணத்தில் திணிக்கப்படும் தனிமையை சாறு பிழிந்து தரும் படம் Cast Away.
ஆள் அரவமற்ற ஒரு நெடும் பாதையில் நான்கு சாலைப் பிரிவில் தொடங்கும் படம், அங்கேயே நிறைவடைகிறது.
ஒரு கொரியர் நிறுவனத்தைச் சார்ந்த சக் நோலன் (Tom Hanks) அலுவல்
காரணமாய் காதல் மனைவியைப் பிரிந்து தொழில்முறை விமானப் பயணம் ஒன்று
மேற்கொள்கிறார். விமானம் ஏறும்முன் அன்பு மனைவியோடு பிரியா விடை பெறுகிறார்
வித்தியாசமான பரிசுகளோடு. மனைவி அளிக்கும் பரிசில் ஒரு கடிகாரமும்,
மனைவியின் நிழற்படமும் இருக்கின்றது. பயணத்தில் விமானம்
விபத்துக்குள்ளாகிறது. கலங்கடிக்கும் ஒரு விபத்து. கடலில் விழுந்தவர்
கரையொதுங்குகிறார். ஒதுங்கும் இடம் மனிதர்களற்ற ஒரு சிறு தீவு.
அடுத்தடுத்த நாட்களில் அலைகளில் கரையொதுங்கும் கொரியர் பெட்டிகளை
எடுத்துவைக்கிறார். தான் பெற்ற ஒரு பெட்டியை மட்டும் பாதுகாத்து
வைக்கிறார். திரும்பிய பிறகு அளிக்கவேண்டும் என்று.
அதுவரை மனிதர்களோடு புழங்கிவந்த மனிதனுக்கு தனிமை வலியத்
திணிக்கப்படுகிறது. எவ்வளவு மறுத்தாலும் அந்தத் தனிமைய அவன் தின்று
சீரணித்தே ஆகவேண்டிய நிர்பந்தம். முதல் நாள் இரவில் சிறு சிறு
சப்தங்களுக்கு திடுக்கிடுபவனுக்கு அடுத்த நாளில் இருந்து குடிக்க
தண்ணீர்கூட இல்லாத நிலையேற்படுகிறது. ஒன்று இல்லாத இடத்தில் தனக்கு
வேண்டியதை உருவாக்க ஒவ்வொருவருமே விரும்புவதும், முயல்வதும் வாழ்க்கையில்
விதி.
தேடும் முயற்சியில் அங்கிருக்கும் தென்னை மர இளநீர் ஒருவழியாக
தீர்வாகிறது. பசிக்கு பச்சை மீன் உணவாகிறது. ஒரு கட்டத்தில் நெருப்பின்
அவசியம் உணர்ந்து, உலர்ந்த குச்சிகளை உராய்ந்து தீ மூட்ட முயற்சித்து,
தோற்று, மேலும் உழைத்து ஒரு கட்டத்தில் நெருப்பையேற்றுகிறார்
எடுத்துவைக்கப்பட்ட பார்சல்களில் வில்சன் என்ற பெயர் பொறித்த வாலிபாலில்
அவர் இரத்தம் படிந்த கை படும்போது அதில் ஒரு மனித முகத்தை
சிருஷ்டிக்கிறார். தனிமை அதன் பசிக்கு தன் பேச்சையும் தின்றுவிடுமோயென்று
வெறித்தனமான அந்த பந்தோடு பேசத் துவங்குகிறார். யாருமற்ற தீவில் உற்ற மௌனத்
தோழனாக பந்து மட்டுமே உடனிருக்கின்றது.
நாட்கள் நகர நகர தனிமை அடர்த்தியாகின்றது. தனிமை தீர்க்க வந்த தோழனாக
அந்த பந்தோடு பேசுகிறார், சிரிக்கிறார், அழுகிறார், கோபத்தில் திட்டி
வீசுகிறார், அழுது தேடுகிறார், தேம்புகிறார். மனிதனுக்கு சகமனிதனின்
அருகாமை எவ்வளவு அவசியம் என்பதை மிகச் சிரத்தையாக புரியவைக்கிறது அந்தக்
காட்சிகள்.
நான்கு வருடங்கள் கரைந்துபோல, வில்சனின் துணையோடு அவரை தனிமையைக் கடந்து
காத்திருக்கிறார் தன் மீட்புக்காக. தனிமை அவரை உருக்குலைத்து
உருவேற்றுகிறது.
கடலில் மிதந்து ஒதுங்கும் ஒரு உடைந்த படகின் ப்ளாஸ்டிக் பலகையை வைத்து
கட்டுமரப் படகு தயாரிக்க முடிவுசெய்து, காய்ந்த மரங்கள், மரக்குச்சி
நார்கள் என உழைத்து உழைத்து ஒரு படகை உருவாக்கி, காற்றடிக்கும் ஒரு
தினத்தில் கரை தேடி நண்பன் வில்சனோடும், பாதுகாத்து வைத்த பார்சலோடும்
பயணம் மேற்கொள்கிறார். நான்காண்டுகள் தன்னை அடைகாத்த தீவை விட்டு
நகர்கையில் பிரியும் வலியை அந்த இசை மூலமும், பார்வைக்கோணம் மூலமும்
யதார்த்தமாக உணர்த்துகின்றனர்.
பயணத்தினிடையே ஒரு புயலில் சிக்கி, சுறாவிடம் தப்பித்து, படகு சிதைந்து,
வெறும் மரத்துண்டுகள் மூலம் பயணிக்கிறார். ஒரு சூழலில் நண்பன் வில்சனை
பறிகொடுத்து, அவனைத்தேடி போராடித் தோற்று கதறுகிறார். இறுதியாய் அருகில்
செல்லும் கப்பல் உதவியோடு கரை சேர்கிறார்.
இறந்துபோனதாகக் கருதப்பட்டவர் திரும்பி வந்ததில் அவர் நிறுவனம்
பெருமகிழ்வு கொண்டு அவரை வரவேற்று விருந்தளிக்கிறது. காதோடும் நேசிப்போடும்
சந்திக்க நினைத்த மனைவி, இவர் இறந்துவிட்டதாகக் கருதி இன்னொரு திருமணம்
செய்திருப்பது கண்டு அதிர்கிறார். மனைவியின் கணவனே நிதர்சனங்களைச் சொல்லி
மன்னிப்புக் கேட்கிறார்.
மழைபெய்யும் இரவில் மனைவியைச் சந்திக்க அவர் வீட்டுக்கு செல்கிறார்.
மனைவியின் கணவனும் மகளும் மேலே உறங்க, இவர்களுக்குள் நடக்கும் உரையாடல் ஒரு
கவிதையாய்ப் பொழிகிறது. உன் மகள் அழகு என ’சக் நோலன்’ சொல்வதும், நான்கு
ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வைத்திருந்த காரை அவரை எடுத்துக்கச் சொல்லி
அவர் மனைவி சொல்வதும், பிரியும் நிமிடங்களில் பெருமழையாய் பொழியும்
அன்பும், ஆற்றெடுக்கும் காதலும் விடைபெறல் எவ்வளவு வலி மிகுந்ததென்று
ஊட்டப்படுகிறது.
அந்த இரவு மனைவியின் நினைவாய் தான் தனிமையில் காத்திருந்து திரும்பியதை
நண்பரோடு பகிரும் போது, தீவில் கட்டுமரம் கட்ட கயிறு ஏதுமில்லாமல்,
கடைசியாக மீட்டெடுத்த ஒரு தூக்குக் கயிறு குறித்த முடிச்சவிழ்கிறது.
தான் பாதுகாத்து வைத்த கொரியர் பெட்டியை அதன் முகவரியில் சேர்க்கிறார்.
அதைப் பெற அங்கு யாருமில்லாததால், தன்னைக் காப்பாற்றியது அந்தப் பெட்டியைச்
சேர்க்க வேண்டிய கடமையும் என்பது போல் குறிப்பொன்று எழுதிவிட்டுப்
புறப்படுகிறார். படம் துவங்கிய அதே நான்கு சாலைச் சந்திப்பில் அந்தப்
பெட்டிக்குரிய பெண் சில வார்த்தைகள் பேசிவிட்டுச் செல்கிறார்.
நான்கு சாலைச் சந்திப்பில் அவரை நிற்க வைத்து, இப்போது எங்கு
செல்லவேண்டும் என்பதற்கான தெளிவும், அவசியமும் அற்றிருப்பதை உணர்த்தியவாறு
நிறைவடைகிறது படம்.
***
நன்றி அதீதம்
*
*
7 comments:
superb movie
நன்றாக எழுதி இருக்கின்றீர்கள் கதிர்... நான் ரசித்து எழுத வேண்டும் என்று நினைத்து நேரமின்மைகாரணமாக தள்ளி தள்ளிப்போட்டுக்கொண்டே வருகின்றேன்... நிச்சயம் எழுதுவேன்..
Vimarsanam nallaa irukku kathir.
வெகு சிரத்தையோடு எழுதப்பட்டிருக்கும் பதிவு.
இது போன்ற எழுத்துக்களை உங்களிடம் மேலும் எதிர்பார்த்து..
நட்புடன்,
பாரி
இந்த திரைபடத்தை பலமுறை பார்த்தும் அலுப்பதே இல்லை.அதிலும் வில்சன் என்ற அந்த கால்பந்துக்கு தன ரத்தத்தால்ஒரு உருவம் கொடுத்து அதனிடம் கதாநாயகன் உரையாடுவது உருவ வழிபாடு இப்படி தோன்றியிருக்க கூடுமோ என எண்ணவைக்க தோன்றுகிறது
இந்த திரைபடத்தை பலமுறை பார்த்தும் அலுப்பதே இல்லை.அதிலும் வில்சன் என்ற அந்த கால்பந்துக்கு தன ரத்தத்தால்ஒரு உருவம் கொடுத்து அதனிடம் கதாநாயகன் உரையாடுவது உருவ வழிபாடு இப்படி தோன்றியிருக்க கூடுமோ என எண்ணவைக்க தோன்றுகிறது
Nice to read sir
Post a Comment