அந்நியப்பட்டிருக்கும் அருகாமை மலைக்கிராமங்கள்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத காடு சுத்தமான காற்றை, மிகமிக சுத்தமான காற்றை மீண்டும் மீண்டும் தந்துகொண்டுதான் இருக்கின்றது. அதை அனுபவித்து, நுரையீரல்களில் நிரப்பிட அடர்த்தியான வனங்களுக்குள் புகுந்து வந்தால்தான் முடியும். மேலோட்டமாகப் பார்க்கையில் காடு என்பது வெறும் காடாகத்தான் தெரியும். நெருங்கிப் பார்க்கையில்தான் அது ஒரு நாட்டின் இதயம் என்பது, அதுதான் நிஜமான சொர்க்கம் என்பதும் புரிகிறது.



அரிமா சங்கம் ஆற்றும் மக்கள் சார்ந்த கடமைகளில் சில மருத்துவ முகாம்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஈரோட்டில் நான் சார்ந்திருக்கும் சுப்ரீம் அரிமா சங்கம் இந்தமுறை உளப்பூர்வமாக ’கரளயம்’ எனும் கிராமத்தில் நடத்திய மருத்துவமுகாமில் கலந்துகொள்ளும் ஒரு தனித்துவமான வாய்ப்பு கிட்டியது. இந்த முறை புற்றுநோய், மூட்டுமாற்று சிகிச்சைக்கான கண்டறிதல் முகாம் ஈரோடு கேன்சர் செண்டர் மற்றும் மாருதி மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



கரளயம் ஈரோட்டிலிருந்து சரியாக 101 கி.மீ தொலைவில் உள்ளது. கோபியிலிருந்து பங்களாப்புதூர் சென்று சத்தி சாலையில் தாசப்பகவுண்டன் புதூர் எனும் இடத்தில் வலது பக்கம் பிரிந்து சென்றால், சத்தி வனச்சரகம் நம்மை வரவேற்கிறது. அங்கிருந்து துவங்கும் பாதையில் இருமருங்கிலும் அடர்த்தியான மரங்கள் தலையாட்டியாட்டி நம்மை வரவேற்கின்றன. மிகப்பெரிய வளைவுகள், மிகப்பெரிய ஏற்றம் என எந்தத் தொந்தரவும் இல்லாமல் மலைப்பாதை அழகாய் வளைந்து நெளிந்து நம்மைக் கைபிடித்து அழைத்துச் செல்கிறது. எதிரில் வரும் வாகனங்களுக்கோ, ஒதுங்கும் வாகனங்களுக்கோ இடம் அளிக்க சிரமப்படும் அளவிற்கு சிறிதாகவே அமைந்துள்ளது சாலை. 

சுமார் 20 கி.மீ பயணத்திற்குப் பிறகு கடம்பூர் வருகிறது. அதுவரை அடர்த்தியான காடுகளினூடே மலையேறிய நமக்கு ஆச்சரியமாக இருப்பது அங்கிருக்கும் விவசாய நிலங்களான சமதளப்பரப்பு. ஓரளவுக்கு தட்பவெட்பம் மிதமாக இருக்கும் மலைப்பகுதி அது. அங்கிருந்து 12 கிமீ தொலைவில் கொஞ்சம் கொஞ்சாமாக இறங்கினால் இருப்பது கரளயம்.
சத்தியிலிருந்து 2 மணி நேரத்துக்கு ஒரு பேருந்து கடம்பூர், கரளயம், காடகனல்லி வரை சென்று திரும்புகிறது.


ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முகாமுக்கு முதல் நாளே ஏற்பாடுகளைக் கவனிக்க என மருத்துவர்கள், சிப்பந்திகள், எங்கள் அரிமா சங்க பொறுப்பாளர்கள் என சனிக்கிழமை இரவே சென்றடைந்தோம். இருளில் சென்றடைந்ததால். ஊர் குறித்து ஒன்றும் அறிந்துகொள்ள இயலவில்லை. 

இரவு அங்கிருக்கும் ஒரு நடுநிலைப் பள்ளியிலேயே ஜமுக்காளத்தை விரித்து, நண்பர்களோடு அரட்டை, சிரிப்பு என நடுநிசிவரைக் கடத்தி உறக்கம் கைக்கொண்டு, காலையில் மலையின் சிலுசிலுக்கும் குளிர்ச்சியில் விழித்தோம். அருகாமையில் இருக்கும் தோட்டத்து கிணற்று பம்புசெட்டில் குளியல் என எங்களைத் தயார்படுத்திக் கொண்டோம்.





முகாமுக்கான ஏற்பாடுகள், பயனாளிகளை அழைத்து வருதல் என எல்லா வகையிலும், அந்தப்பகுதி மலைக் கிராமங்களில் இயங்கிவரும் ’ஏகல்’ என்ற கல்வியமைப்பு கவனித்துக்கொண்டது. கரளயத்தில் இருக்கும் ஸ்ரீராம் நடுநிலைப்பள்ளியில் 18 ஆண்டுகளாக பணியாற்றும் தலைமையாசிரியர் துரைராஜ் தலைமையிலான அணியினர் அருகிலிருந்து மலைக் கிராமங்களிலிருந்து மக்களை அழைத்துவர ஆவண செய்திருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலிருக்கும் ஆச்சார்யா எனப்படும் ஆசிரியர்கள் மூலம் அங்கிருக்கும் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அழைத்து வந்திருந்தனர். கிட்டத்தட்ட அப்படி 40 கிராமங்களிலிருந்து மக்களை திரட்டி வந்திருந்தது பாராட்டுதலுக்குரியது. லாரி, வேன், சிறிய வேன், ஜீப் என இடங்களுக்கு தகுந்தவாறு வாகங்களை அனுப்பி அவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒன்பது மணியளவில் பயனாளிகள் குவியத் துவங்கினார். மருத்துவக் குழுவுக்கு உதவியாக வரும் பயனாளிகள் விபரங்களைப் பதிவு செய்து, அவர்களுடைய விபரங்களைக்குறித்து, அதற்கான அட்டை வழங்கி ஒழுங்குபடுத்தும் பணியை எடுத்துக்கொண்டேன். நேரம் கடக்கக் கடக்க பயனாளிகளின் எண்ணிக்கை நூறு, இருநூறு என தொடர ஆரம்பித்தது. அவர்கள் அனைவருமே கரளயம் சுற்றுப்புறத்தில் காடுகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் சின்னச்சின்ன கிராமங்களைச் சார்ந்தவர்கள்.

முகாமில் பரிசோதித்துக்கொள்ள வந்தவர்களில் 90% படிப்பறிவு இல்லாதவர்களாகவே தெரிந்தனர். அவர்கள் குறித்த விபரங்களைக் கேட்கையில் மலைப் பகுதியினர் பேசும் மொழியிலே, அவர்கள் வேகமாகப் பேசுவதால் நமக்கு புரிவது மிகச் சிரமமாக இருந்தது. ஒவ்வொருவரையும் பெயர், வயது, ஊர் எனக் கேட்டு பதிவு செய்வதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொரு பகுதிக்கும் விதவிதமான வட்டார வழக்குகள் இருப்பது வாடிக்கை. ஆனால் மலைக்கிராமம், அதுவும் கர்நாடக மாநில எல்லை எனும்போது அவர்களின் மொழி முழுக்க முழுக்க நம்மைவிட்டு அந்நியப்பட்டே இருக்கின்றது. பழங்குடியினர், இருளர், சோளகர், கவுடர்கள் என அப்பகுதி மக்களின் மொழி கன்னடம் கலந்த சிதைந்த தமிழாகவே இருக்கின்றது.

ஆணின் பெயர் சிக் மாதன் என்றிருந்தால், அவரின் தந்தை பெயர் தொட்ட மாதன் என்பது போன்றே பெரும்பாலான பெயர்கள் இருக்கின்றன. பெரும்பாலானோரின் பெயர் ஜடையப்பன், மாதன், மாதி என்றேயிருந்தது. தந்தை பெயர் தொட்ட மாதப்பன், மகன் பெயர் சிக் மாதப்பன் என்பதுபோலும் இருந்தது.

எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், தங்களைப் பதிவு செய்து கொள்ள நகர்புறத்து நாகரீக(!) மனிதர்கள் போல் விழுந்தடித்து, வரிசையைக் குலைத்து முன்னேற முற்படவில்லை. வரிசையில் எவ்வளவு நேரமாக இருந்தாலும், அலுப்பின்றி, சலிப்பின்றி பொறுமைகாத்து தங்கள் முறைக்காக காத்து நிற்கின்ற பண்பு அவர்களிடம் இருக்கின்றது. நம்மூரில் கோவில்களிலும் கூட மனிதர்கள் நெருக்கிடியடித்து, முண்டியடிப்பது நினைவில் வந்துபோனது.

10 சதவிகிதம் பயனாளிகள் மட்டுமே தங்கள் வயதை மிக உறுதியாக, சரியாக 42, 55, 61, 67 என்பதுபோல் சொல்கின்றனர். பெரும்பாலானோர் தோராயமாகச் சொல்லி, நீங்களே போட்டுக்குங்க என்றே சொல்கின்றனர்.

ஒரு அப்பாவும் மகளும் வந்தனர். முதலில் மகளின் விபரங்களைச் சொன்னார். அதில் மகளின் வயது 18 வயது என்றிருந்தது. அடுத்து அவர் குறித்து விபரங்களைச் சொல்லும்போது, அவருடைய வயது 28 என்றார். தூக்கிவாரிப்போட்டது. அப்பாவுக்கும் மகளுக்கும் 10 வயதுதான் வித்தியாசம் எனும் ஆச்சரியத்தில் திரும்பக் கேட்டபோது மகளுக்கு 18, தனக்கு 28 என்றே சாதித்தார்.


45 வயதுதான் எனப் போராடியவர்

குனிந்துகொண்டே எழுதியவாறு, ஒரு பெண்மணியின் விபரங்களைக் கேட்டபோது தனக்கு 45 வயதென்றார். குரல் கேட்டு சந்தேகத்தோடு நிமிர்ந்து பார்த்தபோது, அதிர்ச்சியில் உறைந்து போனேன். குறைந்த பட்சம் அந்தப் பாட்டியின் வயது 80-90 இருக்கும். ”என்னது 45 வயசா? எப்போ 40 வருசத்துக்கு முன்னாடியா!?” என்றபோது….

”அய்யோ இல்லைங்க சாமி எனக்கு 45தான் ஆகுது என்றார். பின்னால் இருந்த பெண், ’அவனப்புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்’ பாணியில் ”அந்தக் கெழவிக்கு 80, 90 போடுங்க சார்” என்றார். 45 வயதுதான் என அடித்துச் சொன்ன அந்தப் பாட்டியை வரலாற்றில் இடம்பிடித்து வைக்க படமொன்று எடுத்துக்கொண்டேன்.

அரிமா சங்கம் சார்பில், அன்று முகாமில் கலந்துகொண்ட அனைவருக்குமே மதிய சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மளிகைப் பொருட்களை இங்கிருந்து எடுத்துச் சென்று அப்பகுதி சமையல்காரர்கள் மூலம் உணவு சமைக்கப்பட்டது. 

மாலை 3 மணியளவில் கூட்டம் கிட்டத்தட்ட குறைந்தபோது முகாமில் பரிசோதித்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை 584 எனக் காட்டியது. அதில் சுமார் 40 பேருக்கும் மேல் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. சுற்றுச்சூழல் பாழ்படாத மலைக்கிராமத்தில் எப்படி புற்றுநோய்க்கான வாய்ப்புகள் எனக் கேள்வியெழுப்பிய போதுதான் தெரிந்தது. சாராயம், புகையிலை, கஞ்சா என அங்கிருக்கும் இருபால் மக்களின் போதைப் பொருட்கள் பழக்கமும் முக்கியக் காரணம் என்பது.



அடிப்படை நோய்களுக்கான மருந்துகள் பெரும்பாலான பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.



திட்டம் செம்மையாக நிறைவேற முதன்மைக் காரணம் சுப்ரீம் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா. மகேஸ்வரனும், திட்டத்தலைவர் அரிமா. செங்கோட்டையன் ஆகியோரின் நீண்டகாலத் திட்டமிடலே. மருத்துவமனைகளின் உதவியும் மருத்துவக் குழுவின் அர்பணிப்பும் போற்றுதலுக்குரியது. களப்பணியில் பெரிதும் உதவிய ஏகல் வித்யாலயா அமைப்பினர், விவேகானந்தா இரத்ததான சங்க உறுப்பினர்கள் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்.


எல்லாம் முடித்து கிளம்பும்போது, வானம் கறுக்கத்தொடங்கியது. ஆள் அரவமற்ற ஒற்றைச் சாலையில் வாகனத்தை ஊர்ந்து நகர்ந்து, கடம்பூரை அடைந்தபோது அருகிலிருந்து மலையொன்றினை மேகம் தின்று தனது பசியாறுவதுபோல் கவ்விக்கொண்டிருந்தது. அந்த மலைக்குள்ளும் மரங்களுக்கிடையே ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு தொட்டி (மலைக்கிராமம்) இருந்தாலும் இருக்கலாம் எனத் தோன்றியது.



மேகம் மழைத்துளியாய் முத்தமிட்டு விட்டுப் போயிருந்த காட்டுக்குள்ளிலிருந்து, விசுவிசுக்கும் காற்றும், ஆங்காங்கே கசியும் சிற்றோடைகளும் எங்களைவிட்டு பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது. ஒரு கனவுபோல் கடந்து போயிருக்கிறது அற்புதமான அந்த வார இறுதி!

-0-



10 comments:

Anonymous said...

வாழ்த்துக்கள் கதிர்...

Bala said...

Arugiliruntha malai onrinai megam thinru than pasiyaaruvathu pola - amazing

அகல்விளக்கு said...

படங்களும் பதிவும் அருமை...

கடம்பூரிலிருந்து இன்னும் மேலே சென்றால் வரும் குன்றியெனும் சிற்றூரின் மாகாளித் தொட்டி என்ற பகுதிதான் எனது பூர்வீகமாக சொல்லியிருக்கிறார்கள்...

சென்ற மாதம்தான் முதன்முறையாக சென்றிருந்தேன்...

vasu balaji said...

அண்ணே அந்தப்பாட்டிக்கு 48தாண்ணே. எனக்கு பதினெட்டு உங்களுக்கு பதினாறு. சரியா. பாலாசி, ராசால்லாம் பொறக்கவே இல்ல.

manjoorraja said...

உங்களுடன் ஒருமுறையாவது இதுப்போன்ற பயணம் மேற்கொள்ள விருப்பம். மிகவும் அருமையான இடங்கள் அவை. உங்கள் சேவைக்கு பாராட்டுகள்

நிகழ்காலத்தில்... said...

திட்டம் செம்மையாக நிறைவேற முதன்மைக் காரணம் சுப்ரீம் அரிமா சங்கத்தின் தலைவர் அரிமா. மகேஸ்வரனும், திட்டத்தலைவர் அரிமா. செங்கோட்டையன் ஆகியோரின் நீண்டகாலத் திட்டமிடலே. மருத்துவமனைகளின் உதவியும் மருத்துவக் குழுவின் அர்பணிப்பும் போற்றுதலுக்குரியது. களப்பணியில் பெரிதும் உதவிய ஏகல் வித்யாலயா அமைப்பினர், விவேகானந்தா இரத்ததான சங்க உறுப்பினர்கள் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்.//


மிகவும் மனநிறைவோடு இவர்களைப் பாராட்டுகிறேன். வாழ்த்தினையும் தெரிவியுங்கள் மாப்பு :))

'பரிவை' சே.குமார் said...

அருமையான பகிர்வு...
நல்ல செயல்... நடத்திக்காட்டி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

பாவம் பாட்டி வயசைத்தானே குறைச்சு சொன்னுச்சு... நம்ம அரசியல்வாதிக கோடி கோடியா வச்சிக்கிட்டு தேர்தலப்போ கார் கூட இல்லையின்னு சொல்றாங்களே...

க.பாலாசி said...

தேர்ந்தெடுத்த கிராமமும், தங்களின் சேவையும் பாராட்டுக்குரியது.

ராமலக்ஷ்மி said...

நல்ல சேவை. நல்ல பகிர்வு.

45 வயதுப் பாட்டியை ஆவணப்படுத்தியிருப்பது அழகு. வெள்ளந்தி மனிதர்கள்:)!

Jaikumar said...

Myself and Dad visited Anaikarai village (near Kadambur) last month.

My dad has worked in Anaikarai for 4 years as single teacher in that school. Few people in the age group of 35-45 shown big respect to my dad since they have been taught by him. My dad was also happy to be there after 30 years.

Really the people are amazing. We were overwhelmed with their love and affection. We have been offered lot of things (Honey, Banana, Jack fruit, etc etc) to take home.