ஆண்டுக்கு இரண்டுமுறைதான்
அதிசயமாய் பூக்கின்றன விடுப்புகள்
ஆண்டுக்காண்டு அதிகரித்தவண்ணம்
கடைசி நேரப்பயண கசங்கல்கள்
போக்குவரத்துச் செலவுக்குப் பயந்து
போகாமலே சிலகுடும்பம்
வேர்விட்ட பூர்வீகத்திலிருந்து
சூழலின் பொருட்டோ
சுயநலத்தின் பொருட்டோ
நகரத்துக்குள் வேர்களை
முடக்கிக்கொண்ட தலைமுறையின்
தற்காலிக இளைப்பாறல் இது!
பூத்துச் சிரிக்கும் பனித்துளியும்
புழுதிக்காற்றில் வீசும் பூ வாசமும்
தென்னைமரக் கீற்றின் சிலுசிலுப்பும்
வாழையிலையின் கிழிசல்களும்
வைக்கோல் போரின் வாசமும்
மீட்டுகின்றன தொலைந்த நாட்களை
விடுமுறைக்கு மட்டும் எட்டிப்பார்க்கும்
இளைய தலைமுறையை
கரைந்து பரவும் அன்போடும்
கொஞ்சம் கரையாத பொறாமையோடும்
ஏக்கமாய் எட்டியெட்டிப் பார்க்கின்றது
கடந்தகாலத் தலைமுறை!
வீறிடும் தொலைக்காட்சியில்
விளம்பரங்களுக்கிடையே
எப்போதாவது வரும்
திரைப்படக் காட்சியில்
கரைந்து தீர்கிறது
பண்டிகைப் பொழுதுகள்!
அடுத்த பண்டிகை வரை
அவர்களைச் சுமக்கவேண்டும்
அவர்களும் சுமப்பார்களென்று
தான் சுமந்த மனிதர்களை
தற்காலிகமாய் இறக்கிவிட்டு
இளைப்பாறுகிறது நகரம்!
-0
3 comments:
நல்லாருக்கு கதிர்.
பழைய ஞாபகங்கள் அப்படியே மன கண்ணில்
உண்மை கதிர்
Post a Comment