பள்ளி மாணவர்களின் உலகத்திற்கு கலந்து மூழ்கி நீந்தி வருவது சுகமானதொரு அனுபவம். சீருடைகளில் ஏறக்குறைய ஒரே உயரத்தில் இருக்கும் மாணவர்களிடம் உரையாடி மகிழ்வது நமக்கு நாமே புத்துணர்வு ஊட்டிக்கொள்ளும் இனியதொரு தருணம்.
பத்திரிக்கை, தொலைக்காட்சி என ஊடக உலகத்தில் அழுத்தமாக அசத்திவரும் புதிய தலைமுறை குழுமத்தின் ”புதிய தலைமுறை அறக்கட்டளை” அப்படிப்பட்ட இனியதொரு வாய்ப்பினை வழங்கியது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் ”இது எப்படிப்பட்ட சுதந்திரம்” என நிழற்படக் கண்காட்சியையும், மாணவர்களுக்கான சிறப்பு உரை வீச்சுகளையும் ஏற்பாடுசெய்து வருகிறது.
புதிய தலைமுறை அறக்கட்டளையின் ஈரோடு மாவட்ட கௌரவ அமைப்பாளர் திரு.வெங்கட்ராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு. முத்து ஆகியோரின் அழைப்பின் பேரில் ஈரோடு இந்து கல்வி நிலைய மாணவ மாணவியர்களிடையே “தியாக மனப்பான்மை” எனும் தலைப்பில் பேசும் வாய்ப்பு இன்று (05.11.2011) கிடைத்தது.
புதிய தலைமுறை அறக்கட்டளையின் ஈரோடு மாவட்ட கௌரவ அமைப்பாளர் திரு.வெங்கட்ராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் திரு. முத்து ஆகியோரின் அழைப்பின் பேரில் ஈரோடு இந்து கல்வி நிலைய மாணவ மாணவியர்களிடையே “தியாக மனப்பான்மை” எனும் தலைப்பில் பேசும் வாய்ப்பு இன்று (05.11.2011) கிடைத்தது.
மாணவ மாணவியர்கள் |
அரங்கிற்குச் செல்லும் வரை, நான் பேசவேண்டியது எந்த வயது, வகுப்பு மாணவர்கள் என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. மேடையில் அமரும் போதுதான் தெரிந்தது, அரங்கில் இருப்பது எட்டாம் வகுப்பு மாணவ மாணவியர்கள் என்று. அருமையானதொரு அரங்கம். சுமார் 150 மாணவ மாணவியர்கள் இருந்திருக்கலாம். எனக்கு முன்பாக ஒருவர் உரை நிகழ்த்தி முடித்திருந்தார். நான் செல்லும் சமயத்தில் பெருந்துறை காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. பொன்.கணபதி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.
எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டபோது பொன்.கணபதியின் பெயரைப் பார்த்தவுடன் எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. காரணம் 1994-95 ஆண்டுகளில் என நினைக்கின்றேன். கல்லூரி முடிந்த அந்த நேரத்தில் கவிதைப் பித்துப் பிடித்து அலைந்து கொண்டிருந்தேன். நண்பர்கள் வாயிலாக மகுடஞ்சாவடியைச் சார்ந்த வடிவேலு என்பவர் ஒரு கையெழுத்துப் பிரதி நடத்திக்கொண்டிருந்தார். (கையெழுத்துப்பிரதி என்பது புத்தகவடிவில் கையால் எழுதி, அதை ஜெராக்ஸ் எடுத்து விநியோகிப்பது) அப்போது அந்தக் கையெழுத்துப்பிரதிக்கு கவிதைகள் அனுப்புவதும், அதில் வெளிவந்துவிட்டால் உலகமே வசப்பட்டதுபோல் கொண்டாடி மகிழ்வதும் எனத்திரிந்த காலம்.
அப்போது பள்ளிபாளயத்தில் நடந்த ஒரு கவியரங்கிற்கு சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிக் கொண்டிருந்த கவிஞர் பொன்.கணபதி அவர்கள் தலைமைதாங்க நான் கவிதை வாசித்தேன். அதன்பின் ஓரிரு வருடங்கள் அவரோடு கடிதத் தொடர்பு இருந்தது. கால வேகத்தில், சூழல்களின் வெள்ளத்தில் கடிதப் பழக்கம் அடித்துச் செல்லப்பட்டது. நட்பு வட்டங்கள், ரசனைகள் மாறியது. பல வருடங்கள் எழுத்து முற்றிலும் அற்றுப்போனது. மீண்டும் வலைப்பக்கம் வந்தபிறகுதான் எழுத்து மறுபிறப்பெடுத்தது. பொன்.கணபதி என்பவர் நினைவிடுக்கிலும்கூட இல்லாமல் போயிருந்தார்.
அப்போது பள்ளிபாளயத்தில் நடந்த ஒரு கவியரங்கிற்கு சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றிக் கொண்டிருந்த கவிஞர் பொன்.கணபதி அவர்கள் தலைமைதாங்க நான் கவிதை வாசித்தேன். அதன்பின் ஓரிரு வருடங்கள் அவரோடு கடிதத் தொடர்பு இருந்தது. கால வேகத்தில், சூழல்களின் வெள்ளத்தில் கடிதப் பழக்கம் அடித்துச் செல்லப்பட்டது. நட்பு வட்டங்கள், ரசனைகள் மாறியது. பல வருடங்கள் எழுத்து முற்றிலும் அற்றுப்போனது. மீண்டும் வலைப்பக்கம் வந்தபிறகுதான் எழுத்து மறுபிறப்பெடுத்தது. பொன்.கணபதி என்பவர் நினைவிடுக்கிலும்கூட இல்லாமல் போயிருந்தார்.
அழைப்பிதழ் கிடைத்த நாளிலிருந்து, நான் பேசுவதை விட அவரைச் சந்திப்பதில் மிகுந்த ஆர்வமாய் இருந்தேன். நான் உள்ளே நுழைந்த போது, அவர் பேசிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட 16 வருட இடைவெளி அவர் உடலை, முகத்தை, குரலை நிறையவே மாற்றியிருந்தது.
அடுத்ததாகப் பேசுவதற்கு என்னை அழைக்குமுன் ஐந்து நிமிட இடைவெளி கொடுக்க, அப்போது மற்றொரு பேச்சாளர், அந்த நேரத்தில் மாணவர்களிடம் ஒரு கலந்துரையாடலுக்காக “நீங்கள் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். கேட்க வேண்டிய கேள்வி, கேட்கக் கூடாதே கேள்வி என எதை வேண்டுமானாலும் கேட்கலாம்?” என அறிவித்தார். யாரும் எதுவும் கேட்க முன்வரவில்லை. மீண்டும் மீண்டும் உற்சாகப்படுத்தினார். கூட்டத்திலிருந்து ஒரு மாணவன் எழுந்தான்
“நாம ஓட்டுப்போட்டு எம்எல்ஏ, அமைச்சர்னு தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் லஞ்சம் வாங்கினால் அதை எப்படி திருப்பி வாங்குறது?, அவர்களை பதவியிலிருந்து இறக்குவது எப்படி?” என்று கேட்டான்.
மேடையில் அமர்ந்திருந்த நான் ஒருகணம் ஆடிப்போனேன். என்னவோ எட்டாம் வகுப்பு பசங்க, விளையாட்டுத்தனமா இருப்பாங்க என்று நினைத்துக்கொண்டிருந்த என் முட்டாள்தனத்தின் மேல் பளீரென்று அறைந்தது போல் இருந்தது அந்தக் கேள்வி.
இவர் சமாளிப்பதாக நினைத்துக்கொண்டு “அவங்களே லஞ்சமா வாங்கிட்டாங்க, அதை நாம ஏன் வாங்கனும்” என நகைச்சுவை ஏற்படுத்துவதாக நினைத்துக்கொண்டு பேச….
சட்டென இடைமறித்த மாணவன் “இல்லங்க சார், இப்போ 2ஜி ஊழல்ல இத்தனை பணம் அடிச்சுட்டாங்க, கேஸ்தான் நடக்குது, அது வேறங்க சார், ஆனா அவங்களை நாமளே பதவியில இருந்து எப்படி நீக்குறது” என்று கேட்க
இவர் அரசியல் கேள்வியெல்லாம் வேண்டாம், போதுவா கேளுங்க எனச் சொல்ல அந்த மாணவன் அமர்ந்துகொண்டான்.
”ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்” என்பது போல், எனக்கென்னவோ அந்த மாணவன், அங்கிருந்த ஒட்டுமொத்த மாணவர்களின் பிரதிநிதியாகவே தோன்றினான்.
வெங்கட்ராமன், வெங்கடேஷ்வரன், பொன்.கணபதி, முத்து |
இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்கும்போது, மூன்றாம் வகுப்பு படிக்கும் என் மகள் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்
“ஏம்பா கனிமொழிய ஜெயில்ல வச்சிருக்காங்க?” ”2ஜி-னா என்ன, அதுல எப்படி காசு போச்சு” ”அப்புறம் ஜெயலலிதாவுக்கு என்னப்பா பிரச்சனை” “ஏற்கனவே பணக்காரங்களா இருந்துட்டு ஏன் இப்படி பண்றாங்க” என ஏதேதோ புரிந்தும் புரியாமலும் கேட்டுக்கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது.
அடுத்த சில நிமிடங்களில் பேசவேண்டிய நான், மனதில் ஓடிக்கொண்டிருந்த குறிப்புகளை வேகவேகமாய் இடம் மாற்றிக் கொண்டிருந்தேன். அவரைக் கேள்வி கேட்ட அந்த மாணவன் என் புத்தி முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு நம்பிக்கைக்கோடு போல் தெரிந்தான்.
ஏற்கனவே பேசியவர்கள் எனக்கான நேரத்தையும் கொஞ்சம் கூடுதலாய் எடுத்திருந்ததால் முதலில் 45 நிமிடம் பேசவேண்டும் என கேட்டிருந்த அமைப்பாளர்களை நானே கேட்டேன், ”நேரத்தைக் குறைத்துக் கொள்ளலாமா” என்று. சங்கடத்தோடு ”20 நிமிடங்கள் பேசுங்க”. ஒலிவாங்கி அருகே இருந்த கைபேசி பதிவு நேரத்தில் 19.45 நிமிடங்கள் எனக் காட்டிக்கொண்டிருக்கும் போது நன்றியை உதிர்த்துக் கொண்டிருந்தேன்.
கதவுகள் திறக்க விடுபட்ட கூண்டுப் பறவைகளாய் மதிய உணவை நோக்கி சிட்டாகப் பறந்தன பிள்ளைகள். அந்தக் கேள்வி நாயகன் மட்டும் என் மனதிற்குள் தேங்கிக்கொண்டான்.
புதிய தலைமுறை அறக்கட்டளை அங்கு வைத்திருந்த சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த நிழற்படங்கள் கண்காட்சியை வலம் வந்தோம். இனியும் சுதந்திரப் போராட்டங்கள் குறித்த நினைவுகளை, ஆவணங்களை வைப்பதை விடுத்து, இன்று அடிமைப்பட்டுக்கிடக்கும், சிக்கல்களிலிருந்து, மாயைகளிலிருந்து வெளிவரும் யுக்திகளை காட்சிப்படுத்துவதே அவசரமான அவசியம் என மனதிற்குப் பட்டது.
பள்ளியில் மாணவர்கள் உணவு உண்ணும் அரங்கில், எங்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி போன்றே, ருசியான நிறைவானதொரு உணவு. வயிறும் மனதும் நிரம்பியது…. இன்றும் ஒரு இனிய நாள்.
~
13 comments:
அந்த பையன் கேட்ட கேள்விக்கு பதில் அல்லது வழி நமக்கு தெரிந்தால் இவங்க(மந்திரிகள்) எல்லாம் இப்படி இருக்க மாட்டாங்க....
பதில் சொல்ல வேண்டியவங்க, அதற்கான வழிமுறையை கொண்டு வரவங்க நேர்மையானவங்களா இருக்கனும்.. நேர்மையானவங்க தைரியமானவங்களாக இருக்கனும்.... யோசிக்க யோசிக்க பயமாக இருக்கு...அந்த பையனுக்காவது நல்ல அரசாங்கம் அமையுமா?......
நல்ல பகிர்வு.
/அரசியல் கேள்வியெல்லாம் வேண்டாம், போதுவா கேளுங்க/
நாட்டின் இன்றைய நிலைக்கு இதுதான் காரணமோ:(?
பையனின் கேள்வி எங்களுக்கும் மறக்காது.
ரொம்ப சந்தோஷம்.. வாழ்த்துக்கள்..
அந்த பையனுக்கு கடைசிவரைக்கும் அந்த கேள்விக்கு பதில் கிடைக்கப்போறதில்லை...
பசங்க வெவரமாத்தான் இருக்காய்ங்க. நாமதான் நம்மள மாதிரி ஆக்கிப்புடுறோம்:(.
வாழ்த்துக்கள் அண்ணா...
அப்புறம் 'அந்தப் பையன்!'
யார் கண்டார்கள்...
அவன் கேட்ட அந்த கேள்விக்கான பதிலைத்தருபவனும் வருங்காலத்தில் அவனாகவே இருக்கலாம்...
:))
பசங்க இந்த அளவு யோசிகறாங்கங்கறதே ஒரு நம்பிக்கயைத் தருது இல்லையா?
Excellent
குழந்தைகளை உள்வாங்கி உருப்போடும் நிலையில் இனியும் வைக்காது, ஊடகங்களின் சென்றடையும் ஆற்றலை புரிந்துகொண்டவர்களாய் நாமிருக்க வேண்டும். கேள்விகளாய் மாறிவிட்ட வளரும் தலைமுறை கொண்ட சமூக அமைப்பில் நாம் தான் பதில் என பெரும்பாலானவரும் உணர வேண்டிய தருணம்.
Classic. Hope that boy finds a real practical solution for his question.
Nice.
என் குழந்தைகளும் தொலைக்காட்சி பார்த்து, செய்தித்தாள் வாசித்து கேள்விகள் கேட்கிறார்கள். பலவற்றிற்கு என்னிடம் தயாராக பதில் இருப்பதில்லை என்பதே உண்மை.
அருமையான பதிவு.
இப்போது மாணவர்கள், இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள். நன்கு யோசிக்கிறார்கள்.
நன்றி கதிர் சார்.
நல்ல விஷயம். புதிய தலைமுறை கொஞ்ச காலத்திலேயே நல்ல பாதையில் செல்வதை உணர முடிகிறது
இது போன்ற பதில் சொல்ல முடியாத கேள்விகள் நூற்றுக்கணக்கில் நம் மனதைக்குடைந்து கொண்டுதான் இருக்கின்றன !
Post a Comment