தேர்தல் ஆணையக் கெடுபிடிகள்:
நமக்கு(ம்) ஏற்படும் சில கெடுபிடிகளைச் சிரமத்தோடு கடந்து போக வேண்டியிருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் சுற்றுப்புறங்களில் மிகப் பெரிய அமைதியை விளைவித்திருக்கிறது. அதே சமயம் தேர்தலை நம்பி இருந்த பல தொழில்களுக்கு இந்தத் தேர்தல் மிகப் பெரிய ஏமாற்றம். குறிப்பாக சுவரொட்டி, பிளெக்ஸ் அச்சிடுபவர்களுக்கு. பல நிபந்தனைகளுக்கு அடிபணிய வைத்த வகையில் தேர்தல் ஆணையம் வெற்றி கண்டிருக்கிறது. உதாரணத்திற்கு வாக்கு கோரும் விளம்பரப்பிரதிகளை அச்சிட வேட்பாளர் தானே எழுத்துப்பூர்வமாக அச்சகத்திடம் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும், மேலும் அச்சகத்திற்கான பணத்தைக்கூட, அவர் தேர்தலுக்காக தொடங்கியிருக்கும் வங்கிக் கணக்கு மூலமாகவே அளிக்க வேண்டும் என்பது புதிய நிபந்தனை. எந்தச் சாலையிலும் கட்சிகளின் பகட்டு விளம்பரங்களைக் காண முடியவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு இத்தனை சக்தி இருக்கிறது என்பதையும், அதை அவர்கள் செயல்படுத்தும் விதமும், வருங்கால அரசியல் மேல் நம்பிக்கையைப் பரவச்செய்கின்றது.
கொண்டாட்டங்களால் புதுப்பிக்கப்படும் நகரம்:
ஈரோடு நகரத்தில் குறிப்பிடத்தகுந்த வகையில் கொண்டாடப்படும் பண்டிகை, பெரிய மாரியம்மன் திருவிழா. ஒருவாரகாலம் பிரப்சாலை அடைக்கப்பட்டு, பலவிதமான கடைகள், பல மணி நேரம் சாரைசாரையாய் காத்திருந்து கம்பத்திற்கு நீருற்றும் மகளிர்கள், தீர்த்தக்குடத்தோடு, உடலில் விதவிதமாய் அலகுகுத்தி தாரைதப்பட்டை முழங்க வேகநடையில் நகரும் கூட்டம், இரவுகளில் ஆங்காங்கே நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் என நகரத்தை வழக்கம்போல் புதுப்பித்துக்கொண்டிருக்கிறது பெரிய மாரியம்மன் பண்டிகை.
புதுகைபூபாளம் கலைக்குழு:
சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற கலைஇரவு நிகழ்ச்சியில் புதுகை பூபாளம் குழுவினரின் திறன் வாய்ந்த நிகழ்ச்சியைக் கண்டு, கடந்த ஞாயிறு அன்று எங்கள் அரிமா சங்கம் நடத்திய ஒரு மாநாட்டில் ஒரு மணி நேர கலை நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தோம்.
மேடையில் மூன்று பேர் மட்டும் நடத்திய நிகழ்ச்சியை அரங்கு நிறைந்திருந்த ஆயிரக்கணக்கானோர் இப்படி அப்படி நகராமல் கூர்மையாக கவனிக்க வைத்தமைக்காக பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு மனம்திறந்த பாராட்டுகளைத் தெரிவிக்கவேண்டும். மேலும் வரும் ஜூலை மாதம் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்க விழா- ஃபெட்னா நிகழ்ச்சியில் பங்கெடுக்க அமெரிக்கா செல்லவிருக்கிறார்கள் என்பதை அறியும் போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. தகுதியான நபர்களை அழைக்கும் ஃபெட்னா அமைப்பிற்கும் பாராட்டுகள்.
ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி - பாடல்
தவமாய் தவமிருந்து படம் வெளியாகும் முன்னே இந்தப் பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. முதன்முறையாக கேட்கும் போது புரியவில்லை, ஆனாலும் மிகவும் பிடித்துப்போனது. என் கைபேசியில் சில மாதங்கள் இந்த பாடலை அழைப்பவர்கள் கேட்கும் இசையாக வைத்திருந்தேன். ”அதென்ன பாட்டு, ஒன்னுமே புரியலையே” என்று எல்லோருமே கேட்டார்கள். படத்தில் அந்தப் பாடல் இல்லையென்பது மிகப்பெரிய ஏமாற்றம். காலப்போக்கில் அதுகுறித்த நினைப்புகள் நீர்த்துப்போயிருந்த வேளையில், சமீபத்தில் வேறு எதையோ தேடும்போது அந்தப்பாடலின் நடனக்காட்சி கிடைத்தது. படத்தில் இல்லாமல் போய்விட்டதே என்ற வருத்தம் இப்போது கூடுதலாகிவிட்டது.
தூள் கிளப்பும் தூரிகை:
மனதை இழுத்துப்பிடித்து நிறுத்தி, மீண்டும் மீண்டும் பார்வையை குவித்துப் பார்க்க வைக்கின்றன இளையராஜா அவர்களின் ஓவியங்கள். மிக நுணுக்கமாக உடையின் மடிப்புகள், ஆபரணங்கள், முடிக்கற்றைகள் என இது ஓவியம் தானா என ஆச்சரியப்படும் வகையில் எல்லா ஓவியங்களுமே இருக்கின்றன.
மனதைக்கவ்வும் நிழற்படங்கள்
படங்கள் மூலம் ஆவணப்படுத்துதலை மிகச் சிறப்பாக செய்து வரும் வினோத் அவர்களின் சமீபத்தைய படங்களின் தொகுப்பு. ஜவ்வாது மலைக் கிராமங்களில் குக்கூ குழந்தைகள் வெளி – சிறுவர் திருவிழாவில் எடுத்த சில படங்களில் ஒவ்வொரு படமும் ஒரு கவிதையை மனதுக்குள் பிரசவிக்கிறது.
தேர்தல் காமெடிகள்:
ஜெ பெயரை உச்சரிக்காத விஜயகாந்த், விஜயகாந்த் பெயரை உச்சரிக்காத ஜெ என ஒற்றுமையோடு களம்(!) இறங்கும் சேராமாறி அதிமுக கூட்டணி,
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து கொண்டு ”அய்யா, கிள்ளிவெச்சுட்டான்” என்ற பாணியில் தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்வதாக குறை சொல்லும் திமுக!
”கப்பல் ஓட்டினாத்தான் கேப்டன், நீ எப்டிய்யா கேப்டன்னு” கேள்வி கேட்கும், அதே நேரத்தில் முன்னெச்சரிக்கையாக ஜெ குறித்து வாய் திறக்க மறுக்கும் ’வைகைப்புயல்’ பட்டத்துக்கு விளக்கம் சொல்லாத வடிவேலுவும்ம்ம்ம்ம்….
மனப்பாடம் செய்ததை முக்கிமுக்கிப் பேசும் குஷ்பூ!,
அண்ணா கனவில் (!....அடங்கொன்னியா… அண்ணா இந்த கூட்டணி வேலையெல்லாம் பார்க்கிறாரா!!!?) வந்து சொன்னதால் கூட்டணி அமைத்ததாக உளறும்(!) விஜயகாந்த்!
தள்ளுபடியாகும் வகையில் வேட்புமனு தாக்கல் செய்த தலைவர் மனைவி, வேட்புமனு தாக்கல் செய்யாத அதிகாரப்பூர்வ வேட்பாளர் என பூச்சாண்டி காட்டும் தங்கபாலு தலைமை தாங்கும் காங்கிரஸ்!
ஏதோ தங்கள் சொத்தை தானம் செய்வது போல், இலவச அறிவிப்புகள் மூலம் ஆதாயம் தேடும் இருபெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கை…… என தமிழகத்தின் தேர்தல் களம் மிகப்பெரிய நகைச்சுவையாக இருப்பதே மிகப்பெரிய துரதிருஷ்டம்தான்!
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நி………(ல்)ற்காதடா!
-0-
20 comments:
i am first
தேர்தல் ஆணையம் rocks . இது மாதிரி எல்லா துறையும் மாறினா எப்பிடி இருக்கும். ஓகே.ஓகே. ரொம்ப கனவு வேண்டாம். சொல்லறது புரியுது.
என்ன! கள்ளப் பணம் வெளிய வர சமயத்தில ..... ம்ம்ம்ம்
நல்ல பகிர்வுகள் கதிர்.
ரொம்ப நாளாச்சு பகிர்ந்து. ஆனால் விருந்து:)
குருவிப் பாடல் மிக அருமை. அற்புதமான இசையும் நடிப்பும். படத்தில் சேர்க்காமல் விட்டது, பங்கேற்ற கலைஞர்களுக்கு எவ்வளவு வருத்தத்தைத் தந்திருக்கும்?
//குக்கூ குழந்தைகள் வெளி – சிறுவர் திருவிழாவில் எடுத்த சில படங்களில் ஒவ்வொரு படமும் ஒரு கவிதையை மனதுக்குள் பிரசவிக்கிறது.//
அதே:)!
தேர்தல் ஆணையத்தின் பிடியில் அரசு சக்கரம் சுழல்வதால் எல்லோரையும் ஒரு பிடி பிடித்திருப்பதாக தெரிகிறது...
எப்படியும் இரண்டில் ஒன்று நிச்சயம்...வரும் கழக ஆட்சியிலே..
தேர்தல் ஆணையம் போல எல்லா அரசுத்துறைகளுக்கும் கடமையும் பொறுப்புணர்வும் அதிகாரமும் உண்டு...ஆணையம் போல துறைகளும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்ச லாவண்யங்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் தமது சேவையை செய்தால்....ஹூம்...
அவ்வளவு பெரிய மாரியம்மன் பண்டிகை நடக்கிறது...உங்க அலகு குத்தின போட்டோவ காணோம்...
// மிக நுணுக்கமாக உடையின் மடிப்புகள், ஆபரணங்கள், முடிக்கற்றைகள் என இது ஓவியம் தானா என ஆச்சரியப்படும் வகையில் எல்லா ஓவியங்களுமே இருக்கின்றன.//
மனதை புண்படுத்தும் நோக்கம் இல்லாமல் ஒரு கேள்வி. புகைப்படம் காட்டக்கூடிய ஒன்றை காட்ட ஓவியம் எதற்கு?
அருமையான ஆக்காட்டி குருவிக்கு நன்றி. கலை இரவு நிகழ்ச்சியையும் பகிர்ந்து இருக்கலாம் .
சிறப்பான பகிர்தல்...
ரசிக்கும்படியான பாடல்.. மறந்துவிட்டோம்...நினைவூட்டியமைக்குநன்றி.
ஓவியர் இளையராஜாவின் படங்கள் பார்க்கப் பார்க்க பரவசமூட்டுபவை...
இளையராஜாவின் ஓவியங்கள் வசீகரிக்கின்றன அண்ணா.
தஞ்சை பிரகதீஸ்வரன் ஒரு அபாரமான ஆளுமை.
தேர்தல் காமெடிகள் அன்றாட அல்லல்களிலிருந்து ரிலாக்ஸ் செய்துகொள்ள உதவுகின்றன.
ஆக்காட்டி... ரியலி சூப்பர்.
பகிர்வுகள் மிக அருமை. நன்றி.
புதுகை பூபாளம் நிகழ்ச்சியை ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன். இன்னொரு வாய்ப்பிலே பார்ப்போம். இளையராஜா ஓவியங்களை கொஞ்சநாள் முன்புதான் கண்டு ரசித்தேன்,நல்ல பகிர்வுகள்.
பகிரவேண்டிய பகிர்வுகள்.
நல்ல பகிர்வு கதிர்
மறந்து போன ஒரு பாடலை, நினைவு படுத்தியமைக்கு எனது நன்றிகள்..
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.. ஏதோ ஒரு வலி பரவி, கடைசியில் 'வலை என்ன பெருங் கனமா?' என முடியும்போது.. அந்த மகிழ்வை சொல்லத் தெரியவில்லை..
நன்றிகள்
பாட்டு கேட்டேன்.. நல்லா இருந்தது.. அதுவும் தார தப்பட்ட முழங்க உணர்வுப்பூர்வமா இருந்தது..
சிவப்பு துண்டு அருவாளு பாத்தா கம்யூனிஸ்ட் பாட்டோ?
அது ஓவியம்ன்னு நீங்க சொன்னா தான் தெரியும்.. அவ்வளவு தத்ரூபமாக இருக்கு! ஆனந்த விகடன்ல இளையராஜா ஓவியம் பார்த்திருந்தாலும், இது ரொம்பவே அழகாக வந்திருக்கு!
இளையராஜாவின் ஓவியங்கள் அசத்தலானவை...
AFTER SEEING YOUR POST ICALLED ILAYARAJA AND INFORMED ABOUT THIS POST AND CONGRAJULATED HIM. HE IS REALY GREAT ,AND VERY SIMPLE,.HE WILL ROCK IN FUTURE, THANKS ERODE KADHIR SIR,,,
வலைச்சரத்தில் உங்களை அறிமுகப்படுத்தி இருந்தார்கள்.. நல்ல சிறந்த பதிவுகள் கவிதைகள் கட்டுரைகள் என சிறப்பாய் இருக்கிறது உங்கள் வலைப்பூ கதிர்.....(சரி சரி முறைக்காதீங்க..இந்த கசியும் மெளனத்தை தான் நான் இரண்டாண்டுகளா படிச்சிட்டு வரேனே,,,)
Post a Comment