அடைகாத்த கூடு

பள்ளிக்கூடம் கூடும் காலை நேரங்களிலும், ஒன்னுக்குத்தண்ணிக்கு விடும் இண்டெர்வல் நேரங்களிலும், மத்தியான சோத்துக்கு எனும் மதிய இடைவெளியிலும், மாலை பள்ளி முடிந்து ஊர்ந்து ஊர்ந்து ஊர் எல்லையைத் தாண்டும் வரைக்கும் கிடைக்கும் நேரங்களில் தான் அத்தனை விளையாட்டுகளையும் ஆடித்தீர்க்க வேண்டும். ஊருக்குள் வீடு இல்லாமல், தனித்த தோட்டத்தில் வளர்ந்ததால் எந்நேரமும் சகவயதுப் பையன்களோடு விளையாடும் வாய்ப்பு அமைந்திருந்ததில்லை. ஊர் எல்லையைத் தாண்டி தோட்டத்துக்கும் போகும் வண்டித்தடத்தில் நுழையும் போது விளையாட்டுகளுக்கான வாய்ப்புகள் தீர்ந்துபோய்விடும்.

வீட்டைச் சுற்றிச்சுற்றி விளையாடும் வாய்ப்புகள் மட்டுமே இருந்த, அந்தச் சிறுவயது காலகட்டத்தில் நான் அதிகம் அடைகாக்கப்பட்டது தோட்டத்தில் கிணற்றுக்கு கிழக்கோரம் இருந்த படர்ந்த ஒற்றைக் கொய்யா மரத்தில் தான். வீட்டையும், கிணற்றையும் சுற்றி இருந்த நொச்சிமரம், வேப்பமரம், பாலமரம், கொய்யாமரங்களில் வழுவழுத் தன்மையோடு, கிளைகள் பரப்பி வசதியாய் இருந்தது கொய்யா மரம் மட்டுமே. கூடுதல் ஈர்ப்பு பருவங்களில் கொத்தும் குழையுமாய் காய்த்துத் தொங்கும் கொய்யாக் காய்கள். பிஞ்சிலிருந்து கனிந்த கொய்யாவரை எதையும் உண்ண முடியும், ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு தனிச்சுவை உண்டு.


விவரம் புரிந்தும் புரியாத வயதில் கொய்யா மரத்தோடு கொண்ட பந்தத்தில், ஏதோ ஒரு கிளை மேல் சாகசம் செய்ய முயன்று, தவறி விழுந்ததில் பேச்சு மூச்சில்லாமல் கிடந்த புண்ணியத்தில் முனியப்பசாமிக்கு கிடா வெட்டுவதாக நேர்ந்து விட்டு பல வருடங்கள் ஆடி மாதத்தில் கெடா வெட்டி விருந்து நடந்ததுண்டு.

வயதுகள் கடக்க, கல்வியைக் கைக்கொள்ள எல்லைகளை நீட்டிக்க வேண்டியதானது. நினைவுகளும் மூப்படைந்து எல்லாம் மறந்தும் போனது, மரமும் விழுந்தது. வருடம் தோறும் இருந்த கெடா வெட்டு, காலப்போக்கில் இரண்டு வருடத்துக்கு ஒன்றாகி, அப்புறம் மூன்று வருடத்துக்கு ஒன்றாகி, இப்போது  கடைசியாய் எப்போது நடந்ததென மறந்தும் விட்டது.

சில வருடங்களுக்கு முன்பு, தோட்டத்துக் கிணற்றுக்கு மேற்குப் புற வாய்க்கால் ஓரம், தப்பிப் பிறந்த செடியாக ஒரு கொய்யா முளைத்து வளர ஆரம்பித்தது. வாய்க்கால் செதுக்கும் போது ”சரி இருந்துட்டு போகட்டுமே” என்று ஒதுக்கி விட்டதில் நெடுநெடுவென வளர்ந்த செடி, கிளைகள் விரித்தது மரமாக நிமிர்ந்து நின்றது. படர்ந்த உறுதியாக கிளைகளோடு, ஒவ்வொரு பருவத்திலும் மரம் கொள்ளா அளவு காய்களால் கனத்து நிற்கிறது. கைக்கு எட்டியதை எளிதில் பறித்து, எட்டாததை கொக்கி கட்டி இழுத்துப் பறித்து என எப்படிப் பறித்தாலும், இயற்கையின் மாயமாய் இலைகளுக்குள் மறைந்திருந்து, பழுத்துச் சிவந்து, வாசம் வீசி பறவைகளையும், அணில்களையும் விருந்துக்கு அழைத்து தன்னை திண்ணக் கொடுத்து, எஞ்சியவையாய் அவ்வப்போது பழத்தின் மிச்சம் விழுவதுமுண்டு.



ஒவ்வொரு முறை தோட்டம் போகும் போதும், கிணற்றைச் சுற்றி வருகையில், தவறாமல் கொய்யா மரத்தினடியில் சென்று கீழாக எட்டும் தூரத்திலிருக்கும் கிளையில் ஒரு முறை தொங்கி விட்டுப்போவது வழக்கம். 

இம்முறை பருவம் முடிந்து கிட்டத்தட்ட காய்கள் தீர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில், கொய்யா மரத்தினடிக்குப் போக, ஆங்காங்கெ தென்பட்ட திரண்ட பச்சைக் கொய்யாவிலிருக்கும் கொஞ்சம் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு கலந்த சுவை நாவில் எச்சிலை ஊற வைக்க, பல வருடங்கள் கழித்து தட்டுத் தடுமாறி மரத்தில் தாவி(!) ஏறினேன். ஏறிய பிறகு மரம் இறங்கவிடவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், இலைகளுனூடாக மிதந்து வந்து தழுவிப்போன குளுகுளு காற்று, பாரத்திற்கேற்ப தொட்டிலாட்டிய கிளை, காதோரம் அவ்வப்போது கிசுகிசுக்கும் இலைகள் என நேரம் போனதே தெரியவில்லை.


”என்னப்பா இது, மரத்து மேலேயே உட்காந்திருக்கீங்க” என்ற பாப்பாவின் குரலும், “இதென்னது, கொழந்தையாட்ட மரத்துமேல ஏறிட்டு, எறங்கி வா” என்ற ஆயாவின் குரலும், மனதிற்குள் வெட்கத்தை வரவழைத்தாலும், ஆசை வெட்கத்தை மறந்து மேலேயே தங்க வைத்தது.

அவ்வப்போது அழைத்த கைபேசி அழைப்புகளுக்கும் அங்கிருந்தே ஆடியபடி பதில் சொல்லிக்கொண்டும். வேண்டும் போதெல்லாம் எட்டியெட்டி விதவிதமாய் கிடைத்த காய்களை, பழங்களை பறித்துத் தின்று தீர்த்ததில் கிட்டத்தட்ட 25-30 வருடங்களுக்கு முன்பான காலத்தை கொஞ்ச நேரம் மீட்டெடுத்த மகிழ்ச்சி மனது முழுதும் திரண்டு கிடக்கிறது இன்னும்.

விஞ்ஞானத்திற்கு ஆப்பிள் மரம் போல், ஞானத்துக்கு போதி மரம் போல், மகிழ்ச்சிக்கு(!) ஒரு கொய்யா மரம். 

அடைகாத்த கூடுகளின் இதம், மெதுமெதுப்பு, வெதுவெதுப்பு காசு பணத்திலோ, கண்ணுக்கு முன் விரிந்து கிடக்கும் அறிவியல் தொழில் நுட்பங்களிலோ ஒரு போதும் கிடைத்து விடுவதில்லை.

-0-

35 comments:

vasu balaji said...

ங்கொய்யால நேத்து ஃபோன்ல இன்னைக்கு படத்துலைய. நடத்துங்கடி:))))

Unknown said...

ஆச்சர்யமான விசயம் எனக்கும் ஒரு கொய்யா மர பந்தம் இருக்கிறது ... நான் எப்போது அதைத் தேடித் போனாலும் எனக்காக ஒரு பழத்தை அது ஒளித்து வைத்திருக்கும் ...

ராமலக்ஷ்மி said...

கொய்யா ஊஞ்சலில் ஊஞ்சலாடும் நினைவுகள்:)))!

கலகலப்ரியா said...

அய்யோ அய்யோ... அந்தக் கொய்யாக்கா பார்த்து வயிறு எரியுது.... உங்க வயிறு இன்னும் நூறு நாளைக்கு வலிக்கக் கடவ..

KARTHIK said...

// தேடித் போனாலும் எனக்காக ஒரு பழத்தை அது ஒளித்து வைத்திருக்கும் //

என்னங்க எஸ்ரா ஸ்டைலா :-))

நிலாமதி said...

ஊஞ்சலாடும் நினைவுப் பதிவு அருமை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்..

நீங்க உட்கார்ந்திருக்கற கிளை ரொம்ப சின்னதா இருக்கற மாதிரி தெரியறதப் பார்த்தா, ஏதோ செவுத்து மேல கால வச்சு உட்கார்ந்திருக்கற மாதிரி தோணுது.. ஹிஹிஹி.. ;)

ஆனா.. நல்ல நினைவு கூறல்.. நானும் கொஞ்சம்.. லாலாலா.. போட ஆரம்ப்பிச்சுட்டேன்.

நிகழ்காலத்தில்... said...

\\கிட்டத்தட்ட 25-30 வருடங்களுக்கு முன்பான காலத்தை கொஞ்ச நேரம் மீட்டெடுத்த மகிழ்ச்சி மனது முழுதும் திரண்டு கிடக்கிறது \\

இதுபோன்ற மகிழ்வான மனநிலை என்றும் வாய்க்கட்டும்..:)))

க.பாலாசி said...

எங்க வீட்ல எந்த மரமும் ஏறி பறிக்கிற அளவுக்கு வளரல.. எப்போதும் கொய்யா கனிகள் ஒன்றேனும் இருந்துகொண்டேயிருக்கும், எனக்காகவோ அல்லது வௌவாள்களுக்காகவோ...ஒரு கிராமத்து பாமரமனிதனுக்கு சாதாரண விசயம் நமக்கு எவ்வளவு எட்டமுடியாத கனியாக இனிக்கிறது... நினைவுச்சுருக்கங்களை எல்லாமரங்களுமே எடுத்துவிட வல்லவை. ஆனால் மரங்களைதான் நாம் விட்டுவைப்பதில்லை.

பழமைபேசி said...

//அடைகாத்த கூடுகளின் இதம், மெதுமெதுப்பு, வெதுவெதுப்பு காசு பணத்திலோ, கண்ணுக்கு முன் விரிந்து கிடக்கும் அறிவியல் தொழில் நுட்பங்களிலோ ஒரு போதும் கிடைத்து விடுவதில்லை//

இஃகிஃகி.... மாப்பு, நெம்ப உருகுறாரு... மக்கா, வாரக் கடைசில போயி என்ன, ஏதுன்னு கேட்டுட்டு வாங்க சித்த!

Unknown said...

சுத்தியிலிம் பாம்பேரி கட்டி நீச்சல் குளமாட்ட கெணறு, அதுக்குமேல கொய்யா மரம்,கொய்யா மரத்துல கொய்யாப் பழம், அது சரி கெடா வெட்டி நொம்ப நாளாச்சுன்னு சொன்னிங்கள்ள சீக்கிரம் கெடா வெட்டி எங்களைக் கூப்புட்டா நாங்களும் அந்த கொய்யா மரத்துல ஏறி கெணத்துல குதிப்பமுல்ல..ஏங்கதிரு நாஞ் சொல்றது சரிதானே..

அகல்விளக்கு said...

நல்நினைவுகள்...

அசைபோடக்கிடைத்த பொழுதுகளுக்கு வாழ்த்துக்கள்.... :-)

அமர பாரதி said...

நல்ல பதிவு கதிர். பொருள் தேடும் பொருளில்லா வாழ்க்கையில் தொலைந்து போன தருனங்கள்.

//நாங்களும் அந்த கொய்யா மரத்துல ஏறி கெணத்துல குதிப்பமுல்ல// அதானே?

G.Ganapathi said...

:)

அண்ணா கொய்யா குச்சில அடிவாங்கின நினைப்பு எல்லாம் வருது . பழம் காய்க்காத போது கொய்யாவின் ருசிக்காக கொய்யா இலையில் நடுவில் புளியம் பழத்தில் இருந்தது புளியை எடுத்து சுவைப்போம் நாங்கள் எல்லாம் ஹ்ம்ம் இனி அந்த காலம் எல்லாம் எப்போதும் வரது . காதலித்த காதலி வேறு ஒருவனின் மனைவி ஆனது போல் நினைவில் மட்டுமே நிலைத்திருக்கும் .

அமர பாரதி said...

மஞ்சளும் கரும்பும் சேனைக் கிழங்கும் பாக்கவே கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.

Unknown said...

What a coincidence Kathir!

நேற்று கடையில் கொய்யப்பழத்தைப் பார்த்து என் பையன் Quava fruit என்னதுப்பா, taste எப்பிடி இருக்கும் என்று கேட்டவுடன் வாங்கி வந்தேன்.

இன்னிக்கு ஒரு லுங்கிப் பாண்டி மரத்து மேலேயே உட்கர்ந்திருக்கார். அதையும் காமிச்சிருவோம்.

அம்பிகா said...

\\கிட்டத்தட்ட 25-30 வருடங்களுக்கு முன்பான காலத்தை கொஞ்ச நேரம் மீட்டெடுத்த மகிழ்ச்சி மனது முழுதும் திரண்டு கிடக்கிறது \\
நினைவுகளை மீட்டெடுக்கும் தருணங்கள் அருமையானவை, இனிமையானவை. ரசனையாய் பகிர்ந்திருக்கிறிர்கள். அதே ரசனையோடு படிக்கவும் முடிகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நினைவுப் பதிவு அருமை

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சுகமா இருக்கு படிக்க..

//ஆசை வெட்கத்தை மறந்து மேலேயே தங்க வைத்தது.//

அதான.. அந்த ஜீன்ஸ் எல்லாம் இன்னமும் நம்ம உடம்புக்குள்ளாற தான் இருக்குதாமா.. :))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//Quava// Guava :))

Unknown said...

You caught me. Typo.

Thanks for correcting it.

Pazhmai will be happy to see this.

ஹேமா said...

உங்களுக்கு முடியுது ...
கொய்யாமரத்தில பழைய நினைவுகளோட ஏறி இருக்க !

இளங்கோ said...

உங்க தோட்டத்து அட்ரஸ் குடுங்க :)

Thamira said...

உங்கள் பகிர்வு ஒரு அழகிய நாஸ்டால்ஜியா எனில் கேஆர்பி. செந்திலின் பின்னூட்டம் ஒரு சுவாரசியம்.

கோகுல் said...

கிணறு நிறஞ்சு இருக்கறது பார்த்து ரொம்ப நாள் ஆச்சுங்க

இராஜராஜேஸ்வரி said...

மலரும் நினைவுகள்
மலர்ந்து மணம் பரப்பும்
மகரந்த அரும்புகள் அருமை.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

கிளிக்கு பிடித்த காய் கொய்யா தான்

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

ஆச்சர்யமான விசயம் எனக்கும் ஒரு கொய்யா மர பந்தம் இருக்கிறது ... நான் எப்போது அதைத் தேடித் போனாலும் எனக்காக ஒரு பழத்தை அது ஒளித்து வைத்திருக்கும் .//

எங்க வீட்டுலயும் ஒரு கொய்யமரம் இருந்துச்சு.(அஞ்சாறு வருசதுக்கு முன்னால் பட்டுப்போச்சு) வருஷத்துல முக்காவாசி நாள் காய் இருக்கும். காய் இருக்கோ இல்லையோ, பள்ளிகூடம் விட்டுவந்து பைய தூக்கி போட்டுட்டு யூனிஃபாம்கூட மாத்தாம மரத்துல ஏறி அப்படியே எல்லா கிளைக்கும் போய்ட்டு வந்துட்டுதான் வேற வேலையே. இதுல இன்னோரு விஷயம் என்னன்னா,
வீட்டுக்கும் கெணத்துக்கும் கொஞ்ச தூரம்தான், அங்க மாடு மேய்ச்சுகிட்டு இருப்பாங்க‌. ஒரு அஞ்சு மணி ஆனா சொல்லு பால் கறக்க மாட்ட ஓட்டிகிட்டு வரனும்சொல்லுவாங்க.
கீழ இருந்து கூப்பிட்டாலே காது கேக்குமுன்னாலும் மரத்துல ஏறிதான் அப்படியே அம்மோவ்வ்வ்....மணி அஞ்சு ஆச்சு பால் பீச்ச நேரம் ஆச்சு....ன்னு ஊருக்கே கேக்கறமாதிரி கத்திகிட்டு இருப்பொம்..
அப்பறம், எங்களுக்குள்ள இந்த காய் நான் பாத்து வச்சிருக்கேன்னு அக்ரிமென்ட் வேற போட்டுக்குவோம்.

ம்...மனதில் நிற்கும் தருணங்கள்.. நினைத்து பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி..

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

ஆச்சர்யமான விசயம் எனக்கும் ஒரு கொய்யா மர பந்தம் இருக்கிறது ... நான் எப்போது அதைத் தேடித் போனாலும் எனக்காக ஒரு பழத்தை அது ஒளித்து வைத்திருக்கும் .//

எங்க வீட்டுலயும் ஒரு கொய்யமரம் இருந்துச்சு.(அஞ்சாறு வருசதுக்கு முன்னால் பட்டுப்போச்சு) வருஷத்துல முக்காவாசி நாள் காய் இருக்கும். காய் இருக்கோ இல்லையோ, பள்ளிகூடம் விட்டுவந்து பைய தூக்கி போட்டுட்டு யூனிஃபாம்கூட மாத்தாம மரத்துல ஏறி அப்படியே எல்லா கிளைக்கும் போய்ட்டு வந்துட்டுதான் வேற வேலையே. இதுல இன்னோரு விஷயம் என்னன்னா,
வீட்டுக்கும் கெணத்துக்கும் கொஞ்ச தூரம்தான், அங்க மாடு மேய்ச்சுகிட்டு இருப்பாங்க‌. ஒரு அஞ்சு மணி ஆனா சொல்லு பால் கறக்க மாட்ட ஓட்டிகிட்டு வரனும்சொல்லுவாங்க.
கீழ இருந்து கூப்பிட்டாலே காது கேக்குமுன்னாலும் மரத்துல ஏறிதான் அப்படியே அம்மோவ்வ்வ்....மணி அஞ்சு ஆச்சு பால் பீச்ச நேரம் ஆச்சு....ன்னு ஊருக்கே கேக்கறமாதிரி கத்திகிட்டு இருப்பொம்..
அப்பறம், எங்களுக்குள்ள இந்த காய் நான் பாத்து வச்சிருக்கேன்னு அக்ரிமென்ட் வேற போட்டுக்குவோம்.

ம்...மனதில் நிற்கும் தருணங்கள்.. நினைத்து பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி..

கவியாழி said...

எனக்கும் இதுபோல கதை உள்ளது .மீண்டும் மலரும் நினைவுகள்

தீபா நாகராணி said...



பள்ளிப் பருவத்தில் கடந்தவை, கடந்ததால் மட்டுமே இனிப்பாக இருக்கிறதோ என்னவோ என்று எனக்குள்ளே கேள்வி எழும். ஆனால், இது போன்று மீட்டு எடுக்கக் கூடிய தருணங்கள், கடந்த காலத்தில் உணர தவறியவளாக இருந்திருக்கிறேன் என்பதையே காட்டுகிறது!

Sujatha Selvaraj said...

அருமையான பதிவு..என் பால்யத்தை தொட்டு உரசுகிறது இந்த கொய்யா மர கிளை..நன்றி.

Prapavi said...

Nice!

Unknown said...

கண் முன்னே காட்சிகளாக விரிகிறது ஆடை காத்த கூடு.

வரப்ப கூட்டி போகணும் ஆமா சொல்லிட்டேன் ..!

Unknown said...

எப்பவோ நடந்ததை அப்படியே மனதில் தேக்கி வைத்து எழுத்தில் கொண்டுவரும் திறமைக்கு சபாஷ் போடலாம்....இயற்கையோடு கூடிய வாழ்வு வரம் உங்களுக்கு....அதை சரியாக பயன்படுத்தவும் செய்து இருப்பது பலே.....அழகான பதிவும்,புகைப்படமும்...