இலக்கியத்தின் பெரும்பான்மையான வெளிப்பாடுகள் பெண் சார்ந்து, அவர்களுக்கு நிகழும் மனச்சிக்கல்கள் என்பதையொட்டி வரும் படைப்புகளில் தவிர்க்க முடியாத ஒன்று முதிர்கன்னிகள் குறித்த படைப்புகள். முதிர்கன்னிகளுக்கு நிகராக ”பேரிளம் ஆண்கள்” இருக்கிறார்கள் என்பதை இலக்கியம் பெரும்பாலும் மறந்து மௌனத்தோடு இருப்பது இயல்பான ஒன்று.
முதல் முறையாக திருமணம் என்ற பந்தத்துக்குள் ஆட்பட விரும்பும், ஆனால் அதற்கான வாய்ப்புகள் கைகூடி வராத ஒரு கிராமத்து இளைஞனுக்காக நானூத்தி சொச்ச பக்கங்களை ஒதுக்கிய பெருமாள் முருகன் அவர்களைப் பாராட்டியே தீரவேண்டும்.
கிராமங்களிலிருந்து நகரங்களுக்குப் புலம் பெயர்ந்து, நகரச் சக்கரத்தின் பற்களாக மாறிவிட்ட நமக்கு, கிராமத்தின் கீதங்கள் எட்டாமல் போய்விடுவதில் ஆச்சரியமேதுமில்லை. கிராமத்துக் கீதங்கள் கேட்க மறந்த காதுகளில் கிராமத்தை விட்டுப் பிரியத் தெரியாததாலே திருமணம் எட்டாக் கனியாக இருக்கும் தண்டுவன்களின் (திருமணமாகாத இளைஞர்கள்) மனம் எழுப்பும் குரல் கேட்கவா போகின்றது.
20 வயதில் பெண் பார்க்கத் துவங்கி 35 வயதாகியும் திருமணமாகாத, கதையின் நாயகன் மாரிமுத்து எனும் விவசாயி முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை நிறைந்து கிடக்கின்றான். அப்பா வழி பாட்டியும், அம்மா வழி அம்மாயியும் அச்சு அசலான மனிதர்களாக விரவிக்கிடக்கிறார்கள். கதைகளிலும் நாடகங்களிலும் வரும் பாசமான அப்பா அம்மாக்கள் இல்லை மாரிமுத்துவிற்கு. ஒரு கிராமத்தின் தவிர்க்க முடியாத அடையாளங்களாக மாரிமுத்துவின் அப்பாவும் அம்மாவும் உண்மையாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
திருமணத்திற்கு தயாரான காலத்திலிருந்து, பெண் பார்ப்பதும், பார்த்த பெண்கள் எப்படியிருந்தாலும் பிடித்துப் போவதும், அப்படிப் பிடித்த பெண்ணோடு சொத்தைக் காரணங்களால் திருமணம் நடக்காமல் போவதும் என மாரிமுத்துவின் வாழ்க்கையில் நிலவும் வறட்சி வாசிக்க வாசிக்க மனதை வாட்டுகிறது.
ஒவ்வொரு அத்தியாயங்களிலும் நெற்றிப்பொட்டில் அடிப்பது போன்ற வரிகள் நிறைந்து கிடக்கின்றன. அத்தியாயங்களைக் கடக்க கடக்க 35 வயதுகளைத் தாண்டியும் திருமணமாகாமல் நைந்து போன நம்பிக்கை நூலை பிடித்துக் கொண்டிருக்கும் கிராமத்து நண்பர்கள் மின்னலாய் ஒளிர்ந்து, சூடாய் விழிகளுக்குள் அமர்ந்து அடுத்த அத்தியாயத்தை வாசிக்க விடாமல் விட்டேத்தியாய் உட்கார வைத்து விடுகிறார்கள்.
காடே கதியென்று கிடக்கும் மாரிமுத்துவிற்கு காசு பணம் இல்லாமல் இல்லை. இருக்கும் பணத்திற்கு ரிக் வண்டி வாங்கி வடமாநிலங்களுக்கு போகமுடியாது என்றோ, இருக்கும் நிலத்தை ரியல் எஸ்டேட்டாக மாற்ற முடியாது என்றோ இல்லை, ஆனாலும் அங்கேயே வாழ்ந்து கிடக்க முக்கியக் காரணம் அந்த மனிதனை விவசாயம் நேசிக்கிறது என்பதே.
உயர் சாதிக்காரனான மாரிமுத்துவிற்கு தாழ்ந்த சாதிக்காரனான ராமனால் தான் திருமணத்திற்கு தீர்வு கிட்டுகிறது. பங்காளிச் சண்டையில் சும்மா கிடக்கும் நிலம் ஒரு கட்டத்தில் தீர்வுக்கு வருகிறது, திருமணத்திற்கு உதவும் ராமனுக்கு அந்த நிலத்தை விவசாயம் செய்து கொள்ளத் தருவதாக சொன்னாலும், ராமனைக் கழட்டி விடும் மனப்போக்கும் மாரிமுத்துவிற்கு இருக்கிறது. ஒரு கட்டத்தில் மாரிமுத்து கல் குவாரியில் டிராக்டர் ஓட்டும் போது கல் உடைக்கும் பெண் மேல் காதல் கொண்டு அலையும் போது பாராத சாதி, பகையான பங்காளி மகன்களில் நட்பாய் இருக்கும் தம்பி செல்வராசு, தாழ்ந்த சாதிப் பெண்ணை காதலிப்பதைக் கண்ட போது மனது சாதியுணர்வோடு பங்காளிப் பகையில் குரூரமாய் மகிழ்கிறது, இது போன்ற இடங்களில் ஒரு மனிதனுக்குள் ஒளிந்து கிடக்கும் குரூரத்தை மாரிமுத்துவின் வாயிலாகவும் மிக அழகாக கோடிடுகிறார் பெருமாள் முருகன்.
பெருமாள் முருகன் |
திருமணம் என்ற பந்தத்தின் மூலம் காமத்தை அனுபவிக்கத் துடிக்கும் இளைஞனின் காமம் குறித்த வெளிப்பாடுகளை சிறிதும் பூசி மெழுகாமல், அந்த வெப்பம் சிறிதும் கரையாத வண்ணம் அப்படியே எழுத்தில் அடைகாத்து தந்திருக்கிறார்.
விவசாய பின் புலங்களைக் கொண்டதாலேயே பெண் கிடைக்காமல் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் சாதிகளையும், வரதட்சனையையும் சுக்குநூறாக உடைத்து திருமணத்திற்கு பெண்களைத் தேடி படையெடுப்பதை ”கங்கணம்” மிக நேர்த்தியாக நியாயப்படுத்துகிறது.
நமக்குத் தெரிந்து பெண் கிடைக்காததால் திருமணமாகாமல் இருக்கும் ஒரு மனிதன் இருந்தால், அவனுடைய மனப்போராட்டத்தை அறிய வாசிக்க வேண்டிய சரியான புத்தகம் – கங்கணம்.
வாசிப்புக்குப் பின், இன்னும் திருமணமாகாத என் சமகாலத்து நண்பர்களின் மேல் இருந்த அலட்சியம் சிதைந்து, வாஞ்சை கூடியிருக்கிறது.
குறிப்புகள்:
- எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் திருச்செங்கோடுக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் கதை, நான் புழங்கும் மொழியிலேயே வடிக்கப்பட்டிருப்பது வாசிக்கும் போது கூடுதல் ஈர்ப்பை உண்டாக்குகிறது
- அரிமா சங்கத்தின் சுவடுகள் இதழுக்காக எழுதிய விமர்சனம்
- பெருமாள் முருகன், அடையாளம் பதிப்பகம். 422 பக்கங்கள் விலை ரூ.235
______________________________
25 comments:
படிக்கணும். விமரிசனம் நச்சென்று தூண்டிவிடுகிறது.
பகிர்வுக்கு நன்றி!
விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு. வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பா படிப்போம்.
நன்றி பகிர்ந்தமைக்கு.
நல்ல பகிர்வு கதிர்... நன்றி... சந்தர்ப்பம் கிடைத்தால் வாசிக்கலாம்..
அருமையான விமர்சனம். வாசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
422 பக்க கதையையே வெகு நேர்த்தியாகவும் அதே சமயம் நச்சென்று மிகச் சுருக்கமாகவும் சொல்லியிருக்கும் பாங்கு மிக அருமைங்க.......உணர்வுகளுக்குள் ஆண் பெண் என்று பெரிதாக பேதம் ஒன்றுமில்லையே, ஆண் பெண் யாராக இருந்தாலும், அந்தந்த பருவத்தில் நடக்க வேண்டியது நடந்தால் தானே பரவாயில்லை.....இதில் ஆணென்ன, பெண்னென்ன? நல்ல கதை. வாசிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றிங்க.
''வாசிப்புக்குப் பின், இன்னும் திருமணமாகாத என் சமகாலத்து நண்பர்களின் மேல் இருந்த அலட்சியம் சிதைந்து, வாஞ்சை கூடியிருக்கிறது. ''இது ரொம்பவே பிடிச்சுருக்கு. அருமையாக விமர்சித்துள்ளீர்கள் .முயற்சிக்கிறேன்
அருமையான வாசிக்க தூண்டும் விமர்சனம்.
பகிர்வுக்கு நன்றி!
அன்பின் கதிர்
அருமையான விமர்சனம் - அறிமுகம்
படிக்க வேண்டும் அதுவும் உடனே என்கிற ஆர்வம் மேலோங்குகிறது
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
பகிர்விற்கு நன்றி கதிர்.
பெண் பார்த்து, பிடித்துப் போய்.. அற்பக் காரணங்களால் திருமணம் நடக்காமல் போவது வேதனையானது. ஊரிற்கு வரும் பொழுது வாங்கிச் செல்கிறேன்.
நல்ல பகிர்வு அண்ணா.. கனமான கதையாயிருக்கும் போல..
//விவசாய பின் புலங்களைக் கொண்டதாலேயே பெண் கிடைக்காமல் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் சாதிகளையும், வரதட்சனையையும் சுக்குநூறாக உடைத்து//
உண்மை தான்.. ஒருமுறை ஜூனியர் விகடனில் போட்டிருந்தார்கள் - இவர்கள் கேரளாவில் வேறு சாதியில் பெண் பார்த்து திருமணம் செய்து கொள்வதாக..
//மிக நேர்த்தியாக நியாயப்படுத்துகிறது//
இந்த வார்த்தை கொஞ்சம் உறுத்துது.. அவர்களுக்கான வாழ்க்கை முடிவுகளை அவர்களுக்கு எடுக்கும் உரிமை இருக்கையில் இதில் நியாயப்படுத்த என்ன இருக்கிறது? இதைத் தவறு என்றோ அநியாயம் என்றோ எப்படிச் சொல்ல முடியும்? அப்படிச் சொல்பவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களை இவர்களுக்குத் தருவார்களா?
விமரிசனமே இவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தால் புத்தகம் எவ்வளவு இனிமையாக இருக்கும்? உங்க எழுத்து அபாரமாக இருக்கிளது, கதிர்.
அழகான அறிமுகம். படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. இதுபோன்ற புத்தக அறிமுகங்களை தொடர்ந்து செய்யுங்க கதிர்
வாழ்த்துக்கள்
இலக்கியத்தின் பெரும்பான்மையான வெளிப்பாடுகள் பெண் சார்ந்து,
அப்படியா..?
ஒரு கிராமத்து இளைஞனுக்காக நானூத்தி சொச்ச பக்கங்களை ஒதுக்கிய..
:))))
ஏதோ நிதி உதவி மாதிரி சொல்றீங்க..
மற்றபடி முதல் பாரா தவிர்த்த விமர்சனம் நன்றாகவே இருக்கு.
அப்படியே கேரளா பக்கம் போய் தகிடுதத்தம் செய்து கல்யாணம் செய்துட்டு வரவங்களை பத்தியும் ஒரு பதிவை எதிர்பார்க்கலாமா..?
மிக நேர்த்தியான விமர்சனம்.
படிக்கத்தூன்ண்டுகிற அறிமுகம்.
எல்லாம் நல்ல மனசினால் சாத்தியம்.உடனே படிக்க ஆவலாக இருக்கிறது.
அவசியம் வாங்கிப் படிக்கிறேன் ...
கங்கணம் ஒரு நல்ல நாவல்.
//அப்படியே கேரளா பக்கம் போய் தகிடுதத்தம் செய்து கல்யாணம் செய்துட்டு வரவங்களை பத்தியும் ஒரு பதிவை எதிர்பார்க்கலாமா..?//
அறியாத செய்தி. மேலும் தகவல் கொடுக்க முடியுமா?
விமர்சனம் ரொம்ப நல்லா இருக்கு.
பகிர்வுக்கு நன்றி!
பதிவு வாசிக்க தூண்டுகிறது
திரு. பெருமாள் முருகன் அவர்களின் முந்தைய படைப்புகளில் ஒன்றான ‘கூள மாதாரி’ படித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். இல்லையெனில் படித்துப் பாருங்கள். நண்பர் திரு. ஆரூரன் அவர்களுக்கும் இதை தெரிவியுங்கள்.
விமர்சனம் நன்றாக இருக்கிறது... படிக்கவேண்டும்...
//ஜெயா தொலைக்காட்சி காலை மலர் நிகழ்ச்சிக்கான நேர்காணல் ஒளிப்பதிவில் கடந்த திங்கட்கிழமை கலந்து கொண்டேன். (நிகழ்ச்சி ஒளிபரப்பும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என அறிகிறேன்.) //
வாழ்த்துகள்.எதிர்பார்க்கிறேன்
குறிஞ்சிநெட்டில் என் புத்தக அறிமுகக் கட்டுரை. பெருமாள்முருகனின் கங்கணம் நாவல்.
/மறந்து போவது வயதாவதன் சாதாரண அறிகுறியாக இருப்பினும் அதன் உச்சத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் கலந்துவிடுகின்றன. நிறைவேறாத ஆசைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஆழ்மனது, மூளை பலவீனப்படும் இந்த இறுதிக்காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு மேலே வந்து தன் ஆட்டத்தை ஆரம்பிக்கிறது. உச்சமான போதையின் பிடியிலும் இது நிகழ்வதைக் காணலாம்/
http://kurinjinet.blogspot.sg/2015/05/10.html?m=1
Post a Comment