அற்றவன்


வழிந்தோடும் இருளில்
பதட்டமின்றிப் பயணிக்கிறான்
பார்வையற்றவன்

~~

தோல்விப் பட்டியலில்
முதலிடம் பிடிக்கிறான்
நம்பிக்கையற்றவன்

~~

வயிற்றுக்குப் பசியை
தின்னக் கொடுக்கிறான்
காசற்றவன்

~~

மரணத்தில் இடுகாட்டில்
இடம் பிடிக்கிறான்
நிலமற்றவன்

~~

தேடலில்
புதைந்து போகிறான்
தேவையற்றவன்

~~
நேசிப்பை நேசிக்க
மறந்து போகிறான்
காதலற்றவன்

~~
பூக்களின் அழகை
வாசத்தால் ரசிக்கிறான்
பார்வையற்றவன்

~~

20 comments:

ராமலக்ஷ்மி said...

அற்றவர்கள் அத்தனைப் பேரைப் பற்றிச் சொல்லியிருப்பதும் உண்மை. அருமை.

விஜி said...

எளிமையாக, எதார்த்தமா இருக்கு.. உண்மையாவும்.

பழமைபேசி said...

உற்றவர்கள் வர்ணனை எப்பங்க பாலாண்ணே??

ரவி உதயன் said...

அற்றது நல்ல கவிதையைப் பெற்றது வாழ்த்துக்கள்

ஹேமா said...

அற்றவர்களின் மனங்களும் அற்றதாகவே இருக்குமோ !

Sethu said...

அழகு.

---------
????
உறாதல்
மற்றவள்
அற்றவன்

நெக்ஸ்ட் உற்றவன் !!
அழகு . ரசிப்போம்

மைந்தன் சிவா said...

அற்றவன்...உண்மையின் உளறல்கள்!!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமை....அருமைங்க கதிர். யதார்த்தம்.......மரணத்தில் இடுகாட்டில்
இடம் பிடிக்கிறான் நிலமற்றவன்.......ஆம், வேதனையின் உச்சக் கட்ட வெளிப்பாடு......பார்வையற்றவனுக்கு கடவுள் தந்த வரப்பிரசாதம் - பூவின் வாசம்....அழகு கவிதைங்க.....வாழ்த்துக்கள்.

VELU.G said...

அற்றவைகள் அருமை

வானம்பாடிகள் said...

அடங்கொன்னியா! இப்புடி வேறயா. லாஸ்ட் டாப்பு

நிகழ்காலத்தில்... said...

உற்றவனுக்காக நானும் காத்திருக்கிறேன்.

தெய்வசுகந்தி said...

அழகு!! அருமை!!

sakthi said...

அற்றவன் அற்புதம்!!!
வரிகள் அனைத்தும்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எதார்த்தங்களை அழகாக அடுக்கியுள்ளீர்கள்.

Sethu said...

மழலையின் சிரிப்பை
காணப் பெறாதவன்
வருத்தமுற்றவன்.

செடிகளின் அசைவில்
இன்பம் பெறாதவன்
மரமற்றவன்.

கனவிலும்
கெட்டவை நினைப்பவன்
தூய்மையற்றவன்.

கதிர். உங்க கவிதையின் ரொம்ப
ஓவர் பாதிப்பு இது. மன்னிக்கவும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

முதலும் கடைசியும் வேறு தளம். (இதிலேயே தொடர்ந்து எதிர்பார்த்து ஏமாந்தேன்) பிற வேறு தளம். ஆகவே ஒரு நல்ல கவிதை அனுபவத்தை இழக்கிறேன்.

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

அற்றவன் அனைதுமே அருமை

மரணத்தில் இடுகாட்டில் இடம் பிடிக்கிறான் நிலமற்றவன். ஏன் எல்லொர்ருமே அங்குதானே செல்ல வேண்டும். நிலமற்றவன் மட்டும் விதி விலக்கா என்ன ?

தேடலில் புந்தைந்து போகிறான் தேவையற்றவன் - இது திருப்தியற்றவன் என இருக்கலாமா

தேவையற்றவன் தேடவே மாட்டான்

மற்ற அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

விக்னேஷ்வரி said...

உண்மை.

lakshmi prabha said...

யதார்த்தத்தின் உச்சம் .. நிதர்சனத்தின் வெளிப்பாடு ..

lakshmi indiran said...

சபாஷ்.....