வயது கூடக்கூட உறவுகள் மலர்வதும், உதிர்வதும் நிதர்சனம் என்றாலும், சில உறவுகள் மனதில் காலம் முழுதும் அழுத்தமாய் சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு சில உறவுகளில் என்னுடைய பாட்டியும் ஒன்று.
பாட்டி என்பது எங்கள் பக்கத்தில் பழக்கமில்லாத வார்த்தை. எப்போதும் அழைப்பது ”ஆயா” என்றே, அறியாத பருவத்திலிருந்தே அதிகம் கோபித்துக் கொள்ளப் பழகியது ஆயாவிடம் தான். கோபம் வரும் நேரத்தில் மட்டும் கெழவி. ”கெழவ்வ்வ்வ்வி” என்ற வார்த்தையை பிரயோகிக்கும் போது, அத்தனை வன்மம் இருக்கும், அவமானத்தை அப்படியே அள்ளிக் கொட்டும் வெறியிருக்கும்.
அத்தனைக்கும் மேல் அனவிடமுடியாத ஒரு அன்பு நூல் இன்றுவரை ஆயாவை அந்த பழைய வாசத்தோடு மனதிற்குள் வாழவைத்துக் கொண்டேயிருக்கிறது. ஆயா கை பிடித்து இழுத்துச் சென்று காட்டிய உலகம் இன்றும் கூட அதே பசுமையோடு கொஞ்சம் சிதையாமல் மனதிற்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
எனக்கு விபரம் தெரியத் தொடங்கிய காலத்திற்கு முன்பே தாத்தா இறந்து போனார். அதனாலேயே வண்ணப் புடவையிலோ, நகை நட்டுப் போட்டோ ஒரு போதும் பார்த்ததில்லை. அன்று முதல் இன்று வரை ஆயாவை பார்ப்பது வெள்ளைப் புடவையில் தான்.
தன்னந்தனியாய் வெளியூர்களுக்கு பயணப் பட வீட்டில் அனுமதித்த வயது வரை, ஒவ்வொரு விடுமுறையும் கழிவது ஆயாவின் புண்ணியத்தில்தான்...
பள்ளி விடுமுறைக் காலங்கள் பெரிதும் ஆயாவின் சொந்தக்காரர்கள் வீடுகளில்தான் கழியும். ஒவ்வொரு விடுமுறைக்கும் அங்கு எங்களை அழைத்துச் செல்வது எழுதப்படாத ஒரு சட்டமும் கூட.
அப்படி ஊருக்கு அழைத்துச் செல்லும் போது, பஸ் ஸ்டேண்டில் பத்துப் பைசாவுக்கு பட்டாணி பொட்டலமும், அன்னாசிப் பழ கீற்றும், மாம்பழமும், பன்னும் வாங்கி பையில் வைத்துக் கொள்ளும். கடைக்காரர்களிடம் பேரம் நடத்தும் திறமையை இன்று நினைத்தாலும் பொறாமையாக இருக்கிறது.
அந்தப் பட்டாணியை பஸ்ஸில் செல்லும் வரை பத்திரப் படுத்தி, பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் சட்டைப் பையில் நிரப்பி, நடக்க ஆரம்பிக்கும். எங்கள் விடுமுறை சுற்றுலா தளத்திற்கு(!) பவானி-சேலம் மெயின் ரோட்டில் இருக்கும் செங்கமாமுனியப்பன் கோவில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி நாலு கி.மி. தூரம் வடக்கே நடக்க வேண்டும். அவ்வளது தூரம் நடப்பது ஒரு கொடுமையென்றால், அதைவிடக் கொடுமை வழி முழுதும், இருக்கும் வீடுகளிலிருந்து “என்ன ஊருக்கு போறாப்ள இருக்கு” என எட்டிப் பார்ப்பவர்களிடம் கதை பேசும் ஆயாவைக் கடத்துவதற்குள் படும் பாடுதான் அந்த காலத்தின் மிகப் பெரிய சோகம்.
இன்றும் கூட எங்காவது பட்டாணிக் கடலை வாசம் அடிக்கும் போது, ஆயா நிரப்பிய சட்டைப் பை நினைவுக்கு வந்து, இடது மார்பை என்னையறியாமலே கைவிரல்கள் நீவிப்பார்த்து விட்டு வருகிறது.
இன்று அதே ஊர்களுக்கு சரக்கென்று போய், சரக்கென்று வாகனத்தில் திரும்புவதில் இருக்கும் வசதியை விட, கால் கடுக்க நடையாய் நடந்து, எதிர்பட்டவர்களிடமெல்லாம் முட்டி முடங்க அன்று நின்ற வலியே கூடுதல் சுகமாய்த் தோன்றுகிறது.
அடுத்து....
டிவி, போன் எல்லாம் நெருங்க முடியாத தூரத்தில் இருந்த காலம் அது. உலகத்தோடு கூடிய தொடர்பு முழுக்க முழுக்க வானொலியோடு மட்டும்தான்.
அதுவும், எங்கள் ரெடியோ மின்சாரத்தில் இயங்காதது. அப்பாவுக்கு சிமெண்ட் பேக்டரியில மாதாமாதம் கொடுக்கும் ரெண்டு பேட்டரி செல்களை வைத்து மட்டுமே கேட்கும் காலம்.
சினிமாவுக்கென்று பக்கத்து ஊரில் இருக்கும் ”கீற்றுக் கொட்டாய்” தியேட்டர்க்கு செல்வது என்பது வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே நடக்கும் மிகப் பெரிய காரியம்.
அதையெல்லாம் நிவர்த்தி செய்ய வைப்பது, பக்கத்து கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களும், அதையொட்டி திரை கட்டிப் போடப்பவும் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சத்தியராஜ் படங்கள், கொடுமுடி சீன்செட்டிங் கம்பெனிக்காரர்கள் மேடை போட்டு அந்த ஊர் இளவட்டங்கள்(!) நடிக்க நடத்தப்படும் நாடகங்கள், இரவு முழுதும் நடக்கும் தெருக்கூத்துகள், காலப்போக்கில் டிவி டெக்கோடு கொண்டாடப்பட்ட திருவிழாக்கள்..
பக்கத்து ஊரில் சினிமா, ட்ராமா அல்லது கூத்து என்ற செய்தி வந்த தினத்திலிருந்து, அதைப் பார்க்க போவதற்கான, ஆயத்தத் திட்டங்கள் தீட்டப்படும். அழைத்துச் செல்ல ஆயாவை விட்டால் நாதியில்லை என்பதால் கூடுதலாய் சில கனஅடிகள் அன்பு வெள்ளம் கரைபுரளும்.
முடிவாய் நிகழ்ச்சியைப் பார்க்க போகும் தினத்தன்று உட்கார சாக்கு, போர்வை, பேட்டரி லைட், குச்சி என பயணம் துவங்கும், முக்கியமான காமடி, சினிமாவோ, ட்ராமாவோ, கூத்தோ ஆரம்பிக்கும் போது ஜாலியாக இருக்கும், ஆனால் எப்போது முடிந்தது, எப்படி வீடு திரும்பினேன் என்று இன்று வரை நினைவில்லை, (தூக்கத்தில் அம்புட்டு ஸ்ட்ராங்க்).
இன்றும் கூட ஏதாவது பயணத்தின் போது வழியில் நடக்கும் திருவிழாக்களில் நாடகமோ, வெகு அரிதாக கூத்தோ நடப்பதைக் காணுகையில் கை பிடித்து அழைத்துப் போன ஆயாவின் கைகளின் ஸ்பரிசத்தை உணர முடிகிறது.
இதையெல்லாம் எப்போதாவது நினைவு கூர்ந்து பேசுவதை, வாய்கொள்ளாச் சிரிப்போடு ரசித்து ரசித்து ”அப்புறம் சொல்லுங்கப்பா” ”அப்புறம் என்னனு சொல்லுங்காயா” என என்னிடமும், ஆயாவிடமும் கேட்கும் என் மகளிடம் நினைவில் கெட்டித்துக் கிடக்கும் பசுமையான நினைவுகளை அதன் சுவை மாறாமல் பகிர முடியாததொரு தலைமுறை(!) இடைவெளியில் வாழ்வதை நினைக்கும் போது மனது வெறுமையாவதைத் தவிர்க்க முடிவதில்லை....
_______________________________________________
52 comments:
சுவையாக இருந்தது படிக்க... படித்த எனக்கும் என் பாட்டியின் நினைவுகள்... KBJana
சுமைதாங்க.
//செங்கமாமுனியப்பன் கோவில் /
இந்த வார்த்தைய படிக்கும்போது பளீர்னு மனசுல மின்னல் அடிச்சது போல இருந்துச்சுங்க. ஏன்னு சொல்லவும் வேணுமா? அது எங்க ஊர் ஆச்சே :)
நெகிழ்ச்சியான பகிர்வு அண்ணே...வெள்ளை சீலையை பார்த்ததும் எனக்கு என் நண்பனின் அப்பத்தா நியாபகத்துக்கு வர்றாங்க...
very good
நினைவுகள் நெகிழ்ச்சி.
//அதைவிடக் கொடுமை வழி முழுதும், இருக்கும் வீடுகளிலிருந்து “என்ன ஊருக்கு போறாப்ள இருக்கு” என எட்டிப் பார்ப்பவர்களிடம் கதை பேசும் ஆயாவைக் கடத்துவதற்குள் படும் பாடுதான் அந்த காலத்தின் மிகப் பெரிய சோகம்.//
அலமேலுகிட்டயும் இதே ராவடிதான்:). அம்மா ஊருக்கு போவையிலயும் இதே கூத்துத்தான். ங்கொய்யால இப்புடி பட்டாணிதின்னுட்டு கூத்து பார்த்த ஆளு இன்னைக்கு கான்ஃபரன்ஸ்கால்ல கோத்து விட்டு டுபாக்கூர் வேலை பார்க்குதுன்னா ஆயா நம்புவாங்களா:))
ஆயா பட்டாணி குடுத்துச்சு, மாங்காத்துண்டு குடுத்துச்சு, முடியை காப்பாத்த சொல்லிக் குடுக்காம உட்ருச்சு. இஃகி இஃகி.
ம்ம்.. அம்மம்மா ஞாபகத்தைக் கிளறி விட்டுட்டீங்க...
அந்தப் படம் ரொம்ப அழகு..
//இன்று அதே ஊர்களுக்கு சரக்கென்று போய், சரக்கென்று வாகனத்தில் திரும்புவதில் இருக்கும் வசதியை விட//
”சரக்கென்று” ஏன் ஊருக்கு போகனும், உங்க ஆபிஸ்க்கு எதிரிலேயே சமத்துவபுரம் இருக்கே!
நமக்கு இப்படி ஒரு பாட்டி இருந்தாங்களே என்று இப்பதாங்க ஞாபகத்திற்கு வருகிறது
வெறுமைதான்
என்ன செய்வது
காலம் கடந்துவிட்டோம்....
நினைவுகள் மட்டுமே மிச்சமாய்
இவன்
செந்தில்குமார்.அ.வெ
http://naanentralenna.blogspot.com
கொசு வத்தி சுத்த வச்சீட்டிங்க்ளே கதிர் - என்க ஆயாவ நெனச்சா - அப்படியே ....... என்ன சொல்றது - எங்க ஐயா பேரு எனக்கு வச்சதால நான் ஆயாவுக்குச் செல்லப் பேரன் . கேக்கணுமா கூத்த
சும்மா அப்பிடியே யோசிச்சிக் கிட்டே இருக்கேன்
நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா
மனம் அழுதது கண் கலங்காமல்.
தலைமுறை இடைவெளி மனதை இவ்வளவு அழுத்துமா !
எவ்வளவு அழ்கன நாட்கள் கதிர். உங்க மகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிமோ தெரியல. ஏன்னா மறும் உல்கில் 'ஆயா' என்னும் கதாபத்திரத்தின் வெளிப்பாடு மாறுகிறது இல்லைய்யா?அதர்க்காஅ இனறிக்கு எல்லாரும் அந்த காலம் மாதிரி இருக்க வேண்டும் என்றெல்லம் சொல்லவில்லை.
நல்ல பதிவு...நிறைவான பதிவும் கூட...
நெகிழ்ச்சி பதிவு...
Nalla Pagirvu Anna...
Unmayagave avarkalin anbil nanaiyatha thalaimurai ondru ippothu uruvaagikkondirukkirathu...
நெகிழ்வான நினைவலைகள்.
அருமையான நினைவுகள்
நெகிழ்ச்சியான பதிவு.
கடத்தமுடியாத நினைவுகள் தான்.
அருமை! :)
பால்யநினைவுகளின் பாதையில் பயணித்துக் கொண்டே....ஒரு பூங்கொத்து!
இதையெல்லாம் எப்போதாவது நினைவு கூர்ந்து பேசுவதை, வாய்கொள்ளாச் சிரிப்போடு ரசித்து ரசித்து ”அப்புறம் சொல்லுங்கப்பா” ”அப்புறம் என்னனு சொல்லுங்காயா” என என்னிடமும், ஆயாவிடமும் கேட்கும் என் மகளிடம் நினைவில் கெட்டித்துக் கிடக்கும் பசுமையான நினைவுகளை அதன் சுவை மாறாமல் பகிர முடியாததொரு தலைமுறை(!) இடைவெளியில் வாழ்வதை நினைக்கும் போது மனது வெறுமையாவதைத் தவிர்க்க முடிவதில்லை....
...... உண்மைதாங்க......
அருமையாக நினைவுகளையும் ஆதங்கத்தையும் பகிர்ந்து இருக்கீங்க....
எனக்கு என் ஆயாவின் நினைவு வந்து விட்டது கதிர்.. உடனே ஊருக்குப் போகணும் போல இருக்கு..:(((
மிகவும் தவிர்க்கமுடியாத வெறுமைதான்... ஆயாவப்பத்தி சொன்னதவிட மற்றவிசயங்கள்தான் நிறைய இருக்கு... இருந்தாலும் அதுக்குக்காரணமும் ஆயாத்தான....
இன்றும் கூட எங்காவது பட்டாணிக் கடலை வாசம் அடிக்கும் போது, ஆயா நிரப்பிய சட்டைப் பை நினைவுக்கு வந்து, இடது மார்பை என்னையறியாமலே கைவிரல்கள் நீவிப்பார்த்து விட்டு வருகிறது.///
என்னையும் எழுத்த தூண்டுது உங்கள் பதிவு!
நெகிழ்ச்சியான நினைவுகளை கண் முன் நிறுத்தும் பதிவு கதிர்
//நினைவில் கெட்டித்துக் கிடக்கும் பசுமையான நினைவுகளை அதன் சுவை மாறாமல் பகிர முடியாததொரு தலைமுறை(!) இடைவெளியில் வாழ்வதை நினைக்கும் போது மனது வெறுமையாவதைத் தவிர்க்க முடிவதில்லை....//
உண்மைதான். நெகிழ்வானதொரு பகிர்வு.
அது ஒரு கனா காலம் :-) ;-) :-)
பசுமையான நினைவுகளில் நெஞ்சை நிறைத்திருக்கிறீர்கள்
எனக்கு ஒரு ஐந்து முதல் பதினான்கு வயது வரை பாட்டிதான் அம்மா அப்பா.அந்தக்கருப்பு உருவமும் பல்லும் நிழற்படமில்லா எங்க பாட்டியை வரிக்கிறது.குழந்தைகளும் முதியோர்களும் பொதுச்சாயலில் இருப்பார்கள்.
கல்மிஷம் குறைந்துபோனால் எல்லோரின் அன்புக்கும் பாத்திரமாவார்கள்.ம்ம்ம்ம் கிளறிவிட்டுட்டீங்க கதிர்
அருமையான எழுத்து நடை சார் உங்களோடது.
அப்படியே எங்க ஊருக்குள்ள ஒரு ரவுண்டு போய் வந்த மாதிரி இருக்கு.
நீங்க எழுதி இருக்கிற பல விசயங்கள் எனக்கும் நடந்திருக்கு.
பிரமாதம் சார்.
இறந்து போன என் பாட்டியை நினைவு கூர்ந்து விட்டீர்கள். பாட்டிகள் எவ்வளவு பாசமானவர்க்ள்..........
வானம்பாடிகள் said...
ஆயா பட்டாணி குடுத்துச்சு, மாங்காத்துண்டு குடுத்துச்சு, முடியை காப்பாத்த சொல்லிக் குடுக்காம உட்ருச்சு. இஃகி இஃகி.
அண்ணா...ஆருக்குங்னோவ்...
சுவையான நெகிழ்வான நினைவலைகள்..
இதையே ஆயாக்களின் பார்வையில் எப்படி இருந்திருக்கும் தோழர்...
வரும் தலைமுறைகளுக்கு இதுபோன்ற அன்பிலான ஆயாக்கள் கிடைப்பார்களா..இல்லை சீரியல் ஆயாக்கள்தான் கதியா என்ற ஆதங்கமும் மனதில் எழாமலில்லை..
அருமை கதிர். நன்றி.
சிறுவயது முதல் அதிகம் பாட்டியிடம் தான் வளர்ந்தேன்.
அவள் ஒரு அற்புத கதை சொல்லி அவளுக்கு தெரிந்தது அன்பு மட்டுமே...
அவளுக்கு அதீத கோபம் வந்தோ யாரையாவது திட்டியோ வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை.
எந்த நாளும் எந்த நோயும் இல்லாமல் முதல் நாள் இரவு வரை பாலகுமாரன் புத்தகத்தை படித்து விட்டு பேரப்பிள்ளைகளுடன் வீட்டில் சந்தோஷமாக இருந்து விட்டு வைகுண்ட ஏகாதசியான மறுநாள் காலை திடீரென 6 மணிக்கு இறைவன் திருவடி அடைந்தார்..
I miss her a lot..
நெகிழ்ச்சியுடன் மீண்டும் நன்றி...
பார்ப்பவர்களிடம் கதை பேசும் ஆயாவைக் கடத்துவதற்குள் படும் பாடுதான் அந்த காலத்தின் மிகப் பெரிய சோகம். //
ஹாஹாஹா.. இந்த அனுபவம் பாட்டியிடன் பயணித்த அனைவருக்குமே இருந்திருக்கும்.
இன்றும் கூட எங்காவது பட்டாணிக் கடலை வாசம் அடிக்கும் போது, ஆயா நிரப்பிய சட்டைப் பை நினைவுக்கு வந்து, இடது மார்பை என்னையறியாமலே கைவிரல்கள் நீவிப்பார்த்து விட்டு வருகிறது. //
டச்!
பதிவு அழகாய் ஆரம்பித்து மிக அழகாய்ப் பயணித்து அதை விட அழகாய் முடிந்திருக்கிறது கதிர்.
நீங்கள் எழுதியிருப்பதை வரிக்கு வரி வாழ்ந்திருக்கிறேன்.. கண் கலங்குகிறது..
ஆயாக்களின் சொல்லாடல்களின் நுணுக்கங்கள் நேர்த்தியானவை.
அதை யாராவது பதிவு செய்தால் அருமையாயிருக்கும்.
உங்களின் இப்பதிவு நீங்கள் அதற்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நிறுவுகிறது.
படல்கள் திறந்த வேலிகள், வேம்பு நிழல் உறங்கும் வீதிகள் என ஐக்கியமான கொங்கு கிராமத்தை கண்முண் நிறுத்துகிறது எழுத்து.
நினைவுகளைக் கடப்பதைவிட அதனுடன் நடப்பதும் நல்லதே.
அன்பும் வாழ்த்துக்களும்!
// கண்முண் //
கண்முன் நிறுத்துகிறது.
பசுமையான நினைவுகள்.
மிக அழகிய நினைவோடை. பாட்டியை விடவும் வேறு பல முன்னின்றன.
ஏழு வயதிலேயே இழந்துவிட்ட என் பாட்டியின் நினைவலைகளை மீட்டெடுக்க உதவியது தங்களின் நினைவுகள் :-)
நாம் அனுபவித்த அதே சந்தோஷங்களை நாம் ஏன் நம் குழந்தைகளுக்குத் தராதிருக்கிரோம் என்று நாம் நினைத்துப் பர்க்கிறோமா.....
தந்திருக்கிறோம் என்றால் பாராட்டுகிறேன்
இல்லையென்றால்
யார் காரணம்?
மனதில் தோன்றிய எண்ணங்களை கதைகளை போல் சொல்லி இருப்பது அருமை.படிக்கும்போதே என் பாட்டியை பற்றியா பல நினைவுகள்.அற்புதமான முடிவு இனி வரும் தலைமுறைக்கு இந்த சுகமான நினைவுகள் கிடைக்குமா ?
You have just made my heart heavy......just travelling to my child hood days...thanks brother.
அழைப்பிதழ்:
உங்களது இவ்விடுகையை இன்றைய வலைச்சரத்தில் “ஞாழல் பூ - அனுபவச்சரம்” என்ற தலைப்பில் வலையுலக நண்பர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_08.html
நேரம் இருக்கும் போது வந்து பார்வையிட அழைக்கிறேன்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நெகிழ்ச்சியான படைப்பு, என் ஆயாவின் அருகில் பதுங்கி கொண்ட நினைவுகள் மீண்டும்! நன்றி!
வாசிக்கிற யாருக்குமே அவங்க பாட்டி ஞாபகம் வருவாங்க. வரணும். :)
எங்க பாட்டி, ஓவர் வாய். என்னோட ATM. ஆயுசுக்கும் வச்சுக் கிட்றதுக்குன்னு, அள்ளிக் கொடுத்திட்டு போயிருக்கு, இதே மாதிரி ஏகப்பட்ட நினைவுகளை!
நெகிழ்ச்சியான பகிர்வு..sir
இப்படி எல்லோருக்கும் நெகிழ்ச்சியான மலரும்நினைவுகள் கட்டாயமிருக்கும்....அழகான ரசிக்கும்படியான பதிவு...எனக்கும் இப்போது என் ஆச்சி கூட செலவழித்தகாலம் மனதில் ஓடுகிறது...
உங்களின் பல பதிவுகள் எப்போதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்....இதுவும் அது போல் 2 நாளாக மனதில் ஓடிக்கொண்டுருக்கிறது....
பெரும்பாலும் கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு பாட்டி,தாத்தா கூட வளர்வது இயல்பான ஒன்று....எனக்கும் அப்படிதான்.திருமணம் வரை அவர்களோடு இருந்தது,கற்றது,பார்த்துவியந்தது நிறைய...
பெரும்பாலும் மகள் வயிற்று வாரிசைவிட ,மகன் வயிற்று வாரிசின் மேல் தனி பிரியம் இருக்கும்...
ஆனால் இன்றும் என் மனதில் அடிக்கடி சிலிர்ப்பை ஏற்படுத்தும் ஒரு நாள் என்றால் அது என்னை சீமந்தம் முடித்து பிறந்தவீட்டுக்கு கூட்டி வந்ததும் என் ஆச்சி என்னை பார்த்து அழுகையும்,சிரிப்புமாக என்னை அணைத்துக்கொண்டது...அதை வார்த்தையால் விவரிக்கமுடியாத அனுபவம்...
இன்றும் அந்த உணர்வு அப்படியே என்னுள்...
Post a Comment