தி எட்ஜ் ஆப் ஹெவன் (The Edge Of Heaven) – விமர்சனம்


ஓய்வூதியம் பெறும் அலி, பேராசிரியரான அவர் மகன் நெஜத் இருவரும், ஜெர்மனியில் வாழும் துருக்கியர்கள். அம்மா இல்லாத நெஜத்தை தாயும் தந்தையுமாக வளர்த்து ஆளாக்குகிறார் அலி. அன்பான வாழ்வு வாழும் அப்பாவும் மகனும், ஒன்றாய் குதிரை பந்தயத்தில் வென்று, அதை கொண்டாடுகின்றனர்.

வயதானலும்(!!!) காமம் அலியை விபசார விடுதிக்கு அழைத்துச் செல்கிறது. யெட்டர் என்ற துருக்கிய விபசாரியைச் சந்திக்கிறார், அடுத்த முறையும் அவளையே நாடுகிறார். ஓய்வூதியம், சொந்த வீடு, சேர்த்துவைத்த சொத்து என்ற பட்டியலின் அடிப்படையில் அவளை தன்னோடு மட்டும் படுக்க விலை பேசுகிறார்.

துருக்கிய பெண்ணான யெட்டர் விபச்சாரியாக இருப்பதைப் பார்த்த இரண்டு துருக்கியர்கள், ஒரு துருக்கியப் பெண், அதுவும் முஸ்லீம், விபசாரம் செய்யலாமா என்று மிரட்ட, சூழ்நிலை யெட்டரை அலியை நாடவைக்கிறது. யெட்டரை அலி வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அதை நெஜத் மிக இயல்பாக எடுத்துக்கொள்கிறார். இரவு நல்ல போதையில் இருக்கும் அலிக்கு மாரடைப்பு வருகிறது. மருத்துவமனையில் சேர்த்துவிட்டு திரும்பும் வழியில் நெஜத்துக்கு யெட்டரின் வாழ்க்கை பற்றி அறிய நேர்கிறது, தனக்கு ஒரு மகள் அயிட்டன் துருக்கியில் இருப்பதாகவும், தான் இங்கு காலணி கடையில் வேலை செய்வதாக பொய் சொல்லியிருப்பதாகவும் கூறுகிறார்.

இருவருக்கும் இடையில் ஒரு இனம் புரியாத அன்பும், பரிவும் இழையோடும் வேளையில், அலி வீடு திரும்புகிறார். யெட்டர் நெஜத்துக்கும் இடையே உறவு ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் வர, நெஜத்தைக் கேட்க, நெஜத்  கோபத்தோடு வீட்டை விட்டுக் வெளியேற, யெட்டர் மறுத்துத் திட்ட, அதேநிலையில் தன்னுடன் உறவு கொள்ள அழைக்கிறார் மிஞ்சிய குடிபோதையில் இருக்கும் அந்த கிழட்டு மனிதன். யெட்டர் மறுக்க, அலிக்கு கோபம் பொங்குகிறது, யெட்டரை அடிக்க,  கீழே விழுந்து யெட்டர் இறந்து போகிறார். அலி சிறைக்குச் செல்ல, நெஜத் ஒரு கொலைகாரன் தந்தையாக இருக்க முடியாது என்று யெட்டரின் மகள் அயிட்டனைத் தேடி துருக்கி செல்கிறார்.

அதேசமயம் துருக்கியில் படிக்கும் கம்யூனிஸ்ட் கொள்கைவாதியான அயிட்டன், ஒரு போராட்டத்தில் மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு போலிஸ்காரரை அடிக்க, அந்த போலிஸ்காரரின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அயிட்டன் தப்பியோடும் போது, தன்னுடைய மொபைல் போனை தவறவிட, அதிலிருக்கு எண்களை வைத்து, அவளுடைய போராட்ட கால நண்பர்களை போலிஸ் கைது செய்கிறது. துப்பாக்கியை ஒரு கட்டிடத்தின் மாடியில் ஒளித்துவைத்துவிட்டு ஒரு வழியாக மாற்றுப் பெயரில் அயிட்டன் தன் தாய் இருக்கும் ஜெர்மனிக்கு தப்பி வந்து, இருக்கும் கொஞ்சம் பணத்தை வைத்து, அங்கிருக்கும் எல்லாக் காலணிக் கடைகளிலும் தன் தாயைத் தேடி,  அதில் தோல்வியடைந்து, இருக்கும் கொஞ்சம் பணத்தை வைத்துச் சமாளிக்க, குறைந்த விலையில் உணவு கிடைக்கும் பல்கழைக் கழக உணவு விடுதியில் உணவு உண்டு, அங்கிருக்கும் ஒரு வகுப்பறையில் தூங்குகிறார். அந்த வகுப்பறையில் தான் நெஜத் பேராசிரியராக வகுப்பெடுக்கிறார். இதெல்லாம் யெட்டர் அலி வீட்டில் வசிக்கும் நேரத்தில் நடக்கிறது. 

இந்நிலையில் ஜெர்மன் மாணவி லோட்டோ, அயிட்டனைச் சந்திக்கிறார். அயிட்டனின் நிலையறிந்து அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். லோட்டோவின் தாயாருக்கு ஜெர்மனி அல்லாத பெண்ணை தன் வீட்டில் வைத்திருக்க விருப்பமில்லை. லோட்டோவும், அயிட்டனும் ஒரு நடனத்திற்குச் செல்ல, போதையில் இருவரும் நெருங்கி ஆட, இருவருக்குள்ளும் ஒரு பால் ஈர்ப்பு காதல் மொட்டாக உடைகிறது.

அடுத்த நாள் ஒருங்கிணைந்த ஐரோப்பியம், துருக்கி பற்றி விவாதிக்கும் போது அயிட்டனுக்கும், லோட்டோவின் தாயாருக்கு விவாதம் முற்ற, அயிட்டன் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் வருகிறது. லோட்டோவும், அயிட்டனும் காரில் கிளம்பிச் செல்லும் போது, பக்க வாட்டில் கடந்து செல்லும் பேருந்தில் மருத்துவமனையில் அலியை விட்டுவிட்டு திரும்பும் நெஜத்தும், யெட்டரும் பயணிக்கின்றனர்.


காரில் செல்லும் லோட்டோ, அயிட்டனை எதேச்சையாக போலிஸ் நிறுத்தி விசாரிக்க, அனுமதியில்லாமல் ஜெர்மனியில தங்கிய அயிட்டன் மாட்டிக்கொள்ள, அவர் துருக்கிக்கு நாடு கடத்தப் பட்டு, சிறையில் அடைக்கப்படுகிறார். அயிட்டனைக் காப்பாற்ற தன் தாயிடம் சண்டையிட்டு லோட்டோ துருக்கிக்கு பயணமாகிறார்.

அயிட்டனைத் தேடி துருக்கி வந்த நெஜத், அயிட்டனின் புகைப்படம் இல்லாததால், யெட்டரின் படத்தை போஸ்டராக ஒட்டி விளம்பரப்படுத்துகிறார். பலன் ஏதும் இல்லாமல் சோர்ந்து போய், துருக்கியிலேயே தங்க முடிவு செய்கிறார். அங்கு இருக்கும் ஒரு புத்தகக் கடையை விலைக்கு வாங்கி நடத்தியும் வருகிறார்.
 
எதேச்சையாக நெஜத் நடத்தும் புத்தகக் கடைக்கு வரும் லோட்டோ, அங்கு அயிட்டனைக் காப்பாற்ற துருக்கியின் சட்டப் புத்தகத்தை மாலை கடை மூடும் வரை படிக்கிறார். கடை மூடும் போது தங்க இடம் இல்லாத, லோட்டோவுக்கு உதவ நெஜத் முன்வருகிறார். தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியில் குறைந்த வாடகைக்கு தங்க அனுமதிக்கிறார்.

துருக்கிப் போலிஸ் அயிட்டனிடம் அந்த துப்பாக்கி குறித்து விசாரித்து வருகிறது. பல சிரமங்களுக்கு இடையில் அயிட்டனை லோட்டோ சிறையில் சந்திக்க, அயிட்டன் தான் துப்பாக்கியை ஒளித்து வைத்த இடம் பற்றிய குறிப்பை, வரைபடத்தைக் கொடுக்கிறார். லோட்டோ தன் தாயாரிடம் அயிட்டனைக் காப்பாற்ற பணம் தேவையென்று கேட்டு போனில் சண்டையிடுகிறார்.

ஒரு வழியாக லோட்டோ அயிட்டன் ஒளித்து வைத்த துப்பாக்கியை எடுத்து கைப் பையில் வைத்துக் கொண்டு வரும்வழியில், சிறுவர்களின் கும்பல் அந்தப் பையை திருடிக்கொண்டு ஓட, இவர் துரத்த ஒரு கட்டத்தில் அந்த துப்பாக்கியை வைத்து சுடுவதுபோல் ஒரு சிறுவன் மிரட்ட, அது வெடிக்க லோட்டோ இறந்து போகிறார்.

லோட்டோ இறந்தைக் கேட்டு அதிர்ச்சியடையும் லோட்டோவின் தாய், தன் மகளின் கனவை நிறைவேற்ற துருக்கிக்கு வந்து அயிட்டனைக் காப்பாற்ற முயல்கிறார். லோட்டோ வசிக்க வீடு தந்த நெஜத்தைச் சந்திக்க அழைக்கிறார். சிற்றுண்டி சாலையில் சந்திக்கும் லோட்டோவின் அம்மாவை நெஜத் அடையாளம் காணும் போது, லோட்டோவின் அம்மா என்னை எப்படி எளிதாக அடையாளம் கண்டாய் எனக் கேட்க, நெஜத் சொல்கிறார் “இங்கு இருப்பவரில் நீங்கள்தான் அதிக கவலையோடு இருந்தீர்கள்என்று.

அயிட்டனைச் சந்தித்து, பல போராட்டங்களுக்குப் பிறகு அயிட்டனை சிறையிலிருந்து மீட்கிறார். வெளியில் வந்த அயிட்டன் நெஜத்தின் புத்தகக் கடைக்கு வருகிறார், அதற்குச் சற்று முன்தான், அயிட்டனைக் கண்டுபிடிக்க முடியாத அயற்சியில் அயிட்டனின் அம்மா யெட்டர் குறித்த விளம்பரப் போஸ்டரை நெஜத் எடுத்து விடுகிறார்.

இதே நிலையில் நெஜத்துக்கு தன் தந்தை அலி விடுதலையாகி கிராமத்தில் இருப்பதாக தகவல் வருகிறது, கடையை லோட்டோவின் அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு, தன் தந்தையை பார்க்க ஜெர்மனிக்கு கிளம்புகிறார். கிராமத்தை நோக்கிய பயணத்தில் நெஜத்தின் காரில், வழியும் மனதை உருக்கும் இசை, நம்மையும் இம்சிக்கிறது. கிராமத்தில் அலி மீன் பிடித்துக் கொண்டிருக்கும் இடத்தை நெஜத் அடைந்து ஆற்றோர மணலில் உட்கார படம் நிறைவடைகிறது.


யெட்டரை ஆள நினைத்த அலி, அயிட்டனை வாழவைக்க நினைத்த யெட்டர், யெட்டரைத் தேடி வந்த அயிட்டன், அயிட்டனைத் தேடிச் சென்ற நெஜத், அயிட்டனை மீட்கச் சென்ற லோட்டோ என ஒவ்வொரு நிலையிலும் எதன் பொருட்டோ மனிதர்கள் சூழ்நிலையின் முன் தோற்றுக் கொண்டே இருக்கின்றனர்.

உலகம் சுருங்கி உள்ளங்கையில் இருக்கிறதென்றாலும், தேடிய மனிதர்கள் சில அடி தொலைவில் இருந்தாலும் வாழ்க்கை அவர்களைப் பிரித்துப்போடுகிறது.

மனிதர்களுக்கிடையே சில முடிச்சு அவிழாமலே இருக்கின்றன. மனிதன் நினைப்பது, ஆசை, கனவு நிறைவடையாமலே போகின்றன என்பதை போகிற போக்கில் இந்தப் படம் எளிமையாக பதித்து விட்டுப்போகின்றது

2007ல் வெளிவந்து சிறந்த திரைக்கதைக்கான கேன்ஸ் விருது பெற்ற, இந்தப் படத்தை பாதிக் அகின் (Fatih Akin) என்ற ஜெர்மன் துருக்கிய இயக்கியிருக்கிறார். அயிட்டனாக நடித்திருக்கும் Nurgul Yesilcay-ன் நடிப்பு மிக நேர்த்தியான ஒன்று. 

___________________________________________________________

20 comments:

dheva said...

//மனிதர்களுக்கிடையே சில முடிச்சு அவிழாமலே இருக்கின்றன. மனிதன் நினைப்பது, ஆசை, கனவு நிறைவடையாமலே போகின்றன என்பதை போகிற போக்கில் இந்தப் படம் எளிமையாக பதித்து விட்டுப்போகின்றது//

நிஜம் தான்...கதிர்...!

ரோகிணிசிவா said...

//உலகம் சுருங்கி உள்ளங்கையில் இருக்கிறதென்றாலும், தேடிய மனிதர்கள் சில அடி தொலைவில் இருந்தாலும் வாழ்க்கை அவர்களைப் பிரித்துப்போடுகிறது.//-unmai than kathir !!,
a clear review , thanks for sharing

பனித்துளி சங்கர் said...

விமர்சனம் அருமை . படத்தை பார்த்துவிடுகிறேன் .

vasu balaji said...

கதை அருமை. யூ ட்யூப்ல தேடலாம்.

பிரபாகர் said...

சொன்ன விதம் அருமை கதிர்!

பிரபாகர்.

butterfly Surya said...

அருமையான படம். எழுத வேண்டிய லிஸ்டில் இருந்தது.

சூப்பர்.

அகல்விளக்கு said...

சொல்லிய விதம் பார்க்கத் தூண்டுகிறது...

அருமையான விமர்சனம் அண்ணா...

KARTHIK said...

நல்ல விமர்சனம் தல :-))

க.பாலாசி said...

எப்பா... இந்தா பெரிய விமர்சனமா... இன்ச் பை இன்ச்சா எழுதியிருயிருக்கீங்க.... தமிழ்ல டப் பண்ணா சொல்லுங்க....

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான கதையாகத் தெரிகிறது. நன்றாக ரசித்து உள்வாங்கி எழுதியுள்ளீர்கள். சிறப்பு!!

கடைசியில் மனித உறவுகளைப் பற்றிக் கூறியது அழகு.

காமராஜ் said...

மிகச்சிறந்த கொடை வலைப்பதிவர்களுக்கு.கொடுத்தமைக்கு நன்று கதிர்.

நாடோடி இலக்கியன் said...

//மனிதர்களுக்கிடையே சில முடிச்சு அவிழாமலே இருக்கின்றன. மனிதன் நினைப்பது, ஆசை, கனவு நிறைவடையாமலே போகின்றன என்பதை போகிற போக்கில்//

அருமை கதிர்.

விமர்சனத்தை இன்னொருமுறை பொருமையா படிச்சாத்தான் விளங்கும்னு நினைக்கிறேன்.நான் அவசரமா படிச்சேனா இல்லை நீங்க சுத்தி சுத்தி சொல்லியிருக்கீங்களான்னு புரியல....

:)

க ரா said...

நல்ல விமர்சனம்.

Chitra said...

மனிதர்களுக்கிடையே சில முடிச்சு அவிழாமலே இருக்கின்றன. மனிதன் நினைப்பது, ஆசை, கனவு நிறைவடையாமலே போகின்றன என்பதை போகிற போக்கில் இந்தப் படம் எளிமையாக பதித்து விட்டுப்போகின்றது


........
நல்ல படத்துக்கு, அருமையான விமர்சனம்.

கலகலப்ரியா said...

பார்த்துட்டு சொல்றேன்.. பகிர்வுக்கு நன்றி கதிர்...

AkashSankar said...

//யெட்டரை ஆள நினைத்த அலி, அயிட்டனை வாழவைக்க நினைத்த யெட்டர், யெட்டரைத் தேடி வந்த அயிட்டன், அயிட்டனைத் தேடிச் சென்ற நெஜத், அயிட்டனை மீட்கச் சென்ற லோட்டோ என ஒவ்வொரு நிலையிலும் எதன் பொருட்டோ மனிதர்கள் சூழ்நிலையின் முன் தோற்றுக் கொண்டே இருக்கின்றனர்//

முழு கதையை சில வரிகளில் சுருக்கிவிட்டீர்கள்... ஒவ்வொரு இழப்பும் மனிதன் தன் வாழ்க்கையை தொடர்வதற்கு.. ஒரு காரணங்களாகி ஆகிவிடுகின்றன...

புலவன் புலிகேசி said...

கதை நல்லா இருக்கு டவுன்லோடு போட்டுற வேண்டியதுதான்...

சத்ரியன் said...

//மனிதர்களுக்கிடையே சில முடிச்சு அவிழாமலே இருக்கின்றன. மனிதன் நினைப்பது, ஆசை, கனவு நிறைவடையாமலே போகின்றன//

கதிர்,

படம் சொல்லும் செய்தி என்னவாக இருந்தாலும், பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் , சமூக வாழ்வியலை அருகிலிருந்து கண்காணித்து கருத்தை பதிவு செய்திருக்கின்றீர்கள்.

சுண்டெலி(காதல் கவி) said...

அப்பா எவ்வளவு டர்னிங்க் பாயிண்டு...நிஜ வாழ்க்கையில் நமக்கு வரும் வாய்ப்புகளும்,ஆபத்துக்களும் நம்மால் அறியப்படாமலேயே கடந்து போவதை போலவே எல்லாம் கண்முன் இருந்தாலும் அறியப்படாமலேயெ கடந்துவிடுகிறது.

Rathnavel Natarajan said...

அருமை சார்.