மயிரும், வயிறும் வேணா வளரும்

நான் முப்பது வருடங்களுக்கும் மேலாக பார்த்து வந்த வளமான வயல்காடு அது. பவானியிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் அந்தியூர் செல்லும் வழியில், என் கிராமத்துக்கு திரும்பும் பிரிவில் இருக்கிறது அந்த நிலம். எப்போதும் செழிப்பாக இருக்கும் பூமி. காலம்காலமாய் நெல்லும், மஞ்சளும், கரும்பும் என தொடர்ந்து செழிப்பான பயிர்களோடு வாழ்க்கை நடத்திய நிலம். மழைக்காலங்களில் அருகில் இருக்கும் பள்ளம் நிரம்பி வழியும், வயல் முழுதும் நீர் அலை அடித்துக் கொண்டிருக்கும். முக்கிய சாலையிலிருந்து கிராமத்துக்கு திரும்பும் போது முதன் முதலில் பார்ப்பது அந்த பூமியைத்தான்.
இன்று காலை கிராமத்துக்குச் செல்ல, வண்டியை திருப்பினேன். காலம் காலமாய் பூத்துக் குலுங்கிய நிலம் செத்துக்கிடந்தது. மொத்த நிலமும் வரப்புகள் அழிக்கப்பட்டு சமமாக விரிந்து கிடந்தது. நடுவில் பெரிதாகவும், குறுக்கே சிறிதாகவும் சாலைகள் வகுக்கப்பட்டு, கட்டம் கட்டமாக பிரிந்து, ”ஏதோ ஒரு நகர்” என பெயர் தாங்கிய பிளக்ஸ் போர்டு பளபளத்தது, நட்ட நடுவே ஒரு கீற்றுக்கொட்டகை தெரிந்தது.
நாசமாப்போன நகர்புறத்து பேராசை, பத்து மைல்தாண்டி தன் ருத்ர தாண்டவத்தை, எல்லாப் போகமும் நன்றாக விளைந்து கொண்டிருந்த நிலத்தில் ஆடத் தொடங்கிவிட்டது. இனி, இது அடுத்தடுத்த மைல்களுக்கு நெருப்பாய் பரவும்.
அதிர்ச்சியோடு அருகில் இருந்த அப்பாவைப் பார்த்தேன்.
”ஏக்கரா 25 லட்சத்துக்கு வித்தாங்க, சைட் போட்டு, இப்போ சென்ட் முன்னால 80, பின்னால 60 ஆயிரத்துக்கு போகுது. பாதிக்குமேல வெலை முடிஞ்சிருச்சாம்.”
உள்ளடங்கிய கிராம நிலங்கள் கூட ஏக்கர் பத்து முதல் முப்பது லட்சத்திற்கு விலை போகிறது. புறநகர் பகுதி விளை நிலங்கள், நெடுஞ்சாலையோரம் இருக்கும் பொட்டல் காடுகள் அறுபது லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது. இத்தனை காசு போட்டு வாங்கி யாரால் விவசாயம் செய்ய முடியும். சரி எங்கேயிருந்து வருகிறது இத்தனை பணம்.
வண்டியை நிறுத்திவிட்டு விரக்தியோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.
நிலத்தில் ஆங்காங்கே சிறிய சிறிய செங்கல் கூண்டுகள் கட்டப்பட்டிருந்தது.
”அது என்ன செங்கல் வச்சு கட்டியிருக்காங்க”
”பிளாட் போட்டா மரம் நடனுமாமே அதுக்குத்தான் செங்கல்லுல கூண்டு கட்டியிருக்காங்க” என்றார் அப்பா.
என் மனதில் ஓடியதை, பக்கத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெரிசு முனகியது
”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு போட்டு, மரம் வளர்த்து கிழிக்கப் போறாங்களாம்… விக்கிறவங்க மயிரும், வயிறும் வேணா வளரும்”


______________________________________________________________

48 comments:

vasu balaji said...

அங்கயுமா:((..ஆண்டவா. ஊட்டக்கட்டி என்ன பண்ண. தின்றதுக்காவது மண்ணு வேணாமா. பெருசு போட்ட போடு சரியான போடு:((

பத்மா said...

உண்மை சுடும் .

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நீங்க சொல்ற இடத்த வாங்கற ஆட்கள் எல்லாருக்குமே.. குறைஞ்சது நாலஞ்சு பிளாட் இருக்கும் கதிர்.

இது தப்பு நம்ம மேல தான் :((

இப்போ இது முதலீடு செஞ்சா.. நாளைக்கி மூன்று மடங்காகும்னு பேராசை.. யாரைச் சொல்லி நோக??

பேராசையின் அடுத்த நிலை.. ஒவ்வொரு பிளாட்டும் 4 செண்டா பிரிக்கறது.. 4 செண்ட வாங்கி எந்த பணக்கார மவராசன் ஊட்டக் கட்டுவான்? செண்டு ஒரு லட்சத்துக்கு எந்த எளியவன் இடத்த வாங்குவான்??

போதும் என்ற மனசு இல்லீன்னா... இப்படி வகுறு தான் வளரும்.

பிரபாகர் said...

எங்கள் ஊரில் கூட இவ்வாறு விலையேறி எல்லாம் பிளாட் ஆக மாறி வருவது கண்டு துணுக்குற்றேன்...

நல்லதற்கில்லை கதிர்!

பிரபாகர்...

பழமைபேசி said...

ப்ச்...இதேதான் மனசுல ஓடி... பேசி...வாங்கியும் கட்டிக் கொண்டேன்....

ரோகிணிசிவா said...

///Blogger ச.செந்தில்வேலன் said...
இது தப்பு நம்ம மேல தான் :((
இப்போ இது முதலீடு செஞ்சா.. நாளைக்கி மூன்று மடங்காகும்னு பேராசை..///-i agree with you!!
fault is ours !!!

Thamira said...

சமூக நோக்குள்ள அடுத்த பதிவு.

(நானெல்லாம் கமர்ஷியல் சினிமாக்காரர்கள் போல எழுதிக்கொண்டிருக்க எழுதி என்ன பிரயோஜனம் என்றெண்ணாமல் தொடர்ந்து சமூக சிந்தனையுள்ள பதிவுகள் மட்டுமே எழுதி வருகிற உங்கள் நோக்கம் சிறப்பானது. சோர்வடையாது தொடரட்டும் உங்கள் பணி)

சீமான்கனி said...

வளரும்...வளரும்...நம்மை தின்னு வளரும்...

Kumky said...

அங்கயுமா....

வெளங்கிடும்.

கிராமங்கள் தோறும் ப்ளாட்கள் பெருகினால்
இவ்வளவு ப்ளாட்களிலும் வீடு கட்ட ஆட்கள் எங்கிருந்து வருவார்கள்...?

Thenammai Lakshmanan said...

காலம் காலமாய் பூத்துக் குலுங்கிய நிலம் செத்துக்கிடந்தது.//

இந்த வார்த்தை என்னை அதிர வைத்தது கதிர் ...உண்மை ... என்ன செய்ய...?

கலகலப்ரியா said...

superb kathir... nallaa sollichu persu...

நாடோடி இலக்கியன் said...

விளை நிலங்கள் விலை நிலங்களாவது குறித்து முன்பே கவிதைகள் மூலமாகவும் சில இடுகை மூலமாகவும் மேலோட்டமாய் சொல்லியிருந்தீங்க. இப்போ ரொம்பவே யோசிக்க வைக்குது இந்த பதிவு.

உங்கள் சமூக சிந்தனை பதிவுகள் தொடரட்டும்.

தக்குடு said...

varuththamaana vishyamthaan nanpareey! athiithamaana peeraasai!!!...:(

இராகவன் நைஜிரியா said...

எந்த இடத்தையும் விட்டு வைக்க மாட்டாங்கன்னு நினைக்கின்றேன் இந்த ரியல் எஸ்டேட் காரர்கள்.

ராஜ நடராஜன் said...

அதிர்ச்சி தகவலுங்ண்ணா!அந்தியூர் நிலமெல்லாம் வெள்ளாம பூமி.போற போக்கு நல்லதுக்கில்ல.

இன்னும் கிராம வளர்ச்சியின்மைகள் காரணமா இவைகளுக்கு அல்லது காற்றோட்ட பூமியென்று மக்கள் இடம் பெயர்கிறார்களா?

முதலில் மொத்த வியாபாரிகள் மேல் ஒரு கண்ணு இருக்கணும்.இவர்களே இந்த அழிவுகளுக்கு காரணம்.

அக்கினிச் சித்தன் said...

//நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்// ஏனுங்க, சொல்லுறேன்னு கோச்சுக்கக்கூடாதுங்க. அல்லாத்துக்கும் நாமதாங்க காரணம். நம்மளை மாதிரியாளுங்க படிச்சுப்போட்டு ஊட்டையும் ஊரையும் உட்டுப்போட்டு கெளம்புறதுதானுங்க இதுக்குக் காரணம். 3ஜி, 4ஜின்னு பீத்திக்கினு, மேனாட்டு மோகம் புடிச்சி அலையுறதுதானுங்க காரணம். ரியல் எஸ்டேட் என்னங்க செய்வான், அவுனும் வவுறு வளக்கனுங்களே. நமக்குத்தான் பீட்சா கெடக்கிதுங்களே, மெக்டொனால்Dசு வேற இருக்கு. வேற என்னங்க வேணும்? சமைச்சுத் திங்கிறதைவிட வாங்கித் திங்கிறது இன்னும் கொஞ்ச நாளில மலிவாயிடும் பாருங்க. அப்போ பாஸ்ட் புட் இண்டஸ்ரி வளரும் பாருங்க, ஆளுங்களும் யானை கணக்கா ஆவாங்க. இப்ப பாருங்க அமெரிக்கா ஆவலை? முக்கியமா அமெரிக்கா ஏழைபாழையெல்லாம் மெலிஞ்சு இருக்கமாட்டாங்கோ, குண்டு குண்டா இருப்பாங்கோ. ஏன்னா 1 டாலருக்குச் சாப்பாடு கிடைக்கிறது கொழுப்புப் பிடிச்ச மெக்டொனால்டுலதானுங்களே. அமெரிக்காவைக் காப்பியடிக்கிற அல்லாருக்கும் இதுதானுங்க கதி! இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க. 'காட்டை அழித்து மனைகள் கட்டுவீர்'னு பாரதியாரே பாடிருக்காருங்க. விட்டுப்போட்டு வேலையைப் பாருங்க. அல்லாட்டி, நெம்பக் கவலையா இருந்தா ஒன்னே ஒன்னு செய்யிங்க, தமிழைக் காப்பாத்துங்க, அது மித்த அல்லாத்தையும் பாத்துக்கும்!

அப்பாவி முரு said...

விக்கிறவங்களை நோக ஒன்னுமில்லை...

வருசமுழுக்க பாடுபட்டு விளைவிச்சு எடுக்கும் பணத்தை விட, நிலத்தை வித்து பேங்க்ல போட்டு வரும் வட்டியை விட குறைவு எனும் போது மனது அதுக்குத்தானே போகும்.

ஏன், படிச்சவங்க மட்டும் தான் வொயிட்காலர் ஜாப் செய்யணும், விவசாயி காலங்காலம் மண்ணுலையும், வெயிலையும் கசங்கி சாகணுமோ?

விவசாயி யாரைப் பார்த்து கத்துக்கிட்டார்?

தப்பு எங்க இருக்குன்னு யோசிக்கணும், நாம!

priyamudanprabu said...

enna solli enna payan

Anonymous said...

என்னத்த சொல்ல?

க.பாலாசி said...

//இத்தனை காசு போட்டு வாங்கி யாரால் விவசாயம் செய்ய முடியும்.//

உண்மை நான்கூட போனமாசம் கல்பாவி பக்கத்துல 50ஆயிரத்துக்கு எதாவது விவசாய நிலம் கிடைக்குமான்னு ஆபிஸ் நண்பர்ட கேட்டேன்... பண்ணயம் பண்ணலாம்னு... அவர் சொன்ன விலைய கேட்டொடன தலைசுற்றியதுதான் மிச்சம்... என்னபண்றது... எங்கூரு பக்கத்துலையாவது எதாவது நிலம் வாங்கமுடியுமான்னு பாத்துகிட்டிருக்கேன்...

ஆதங்கமும் தலைப்பும் பொருந்தியிருக்கிறது....

T.V.ராதாகிருஷ்ணன் said...

ப்ச்...:(((

பின்னோக்கி said...

விவசாயம் மிகவும் லாபகரமான தொழிலாக மாறாவிட்டால் இந்த நிலையை தடுக்க முடியாது.

தனியார் நிறுவனங்கள் விவசாயத்தை முன்னேற்ற வழி செய்ய வேண்டும். அரசாங்கத்தை நம்பி பயனில்லை. மேலும், அந்த நிலங்களை வாங்குவது யார் என்பதும் தெரிந்த நிலையில், தனியாரை நம்பி இருக்க வேண்டிய நிலை.

பனித்துளி சங்கர் said...

//////////இன்று காலை கிராமத்துக்குச் செல்ல, வண்டியை திருப்பினேன். காலம் காலமாய் பூத்துக் குலுங்கிய நிலம் செத்துக்கிடந்தது. மொத்த நிலமும் வரப்புகள் அழிக்கப்பட்டு சமமாக விரிந்து கிடந்தது. நடுவில் பெரிதாகவும், குறுக்கே சிறிதாகவும் சாலைகள் வகுக்கப்பட்டு, கட்டம் கட்டமாக பிரிந்து, ”ஏதோ ஒரு நகர்” என பெயர் தாங்கிய பிளக்ஸ் போர்டு பளபளத்தது, நட்ட நடுவே ஒரு கீற்றுக்கொட்டகை தெரிந்தது.///////////


காலப்போக்கில் இயற்கை என்ற ஒன்றைப் பற்றி இனி வரும் காலங்களில் இதுபோன்ற பதிவுகளிலோ அல்லது புத்தகங்களிலோ மட்டுமே படித்து தெரிந்துகொள்ளும் காலம் விரைவில் வரும் .

butterfly Surya said...

பேராசையே காரணம்.

செந்தில் வேலன் கருத்துகள் சரியே. ஆனால் அதுமட்டுமல்ல.

சென்னையில் வசிக்கும் நபர்கள் விழுப்புரம், திண்டிவனம் போன்ற இடங்களில் ஞாயிறு தோறும் நிலங்களை பார்வையிட புரோக்கர்கள் மூலம் டாடா சுமோக்களில் பறப்பதை பார்க்கிறேன்.

பெரும்பாலும் சம்பளத்தை விட மேற்படி அதிக வருமானம் (தினசரி வருமானம் பார்க்கும்- அரசு ஊழியர்கள்) இதற்கு பேராவல் காட்டுவதாக இந்த தொழிலில் ஈடுபடும் நண்பன் ஒருவன் கூறினான்.


Sales Tax அலுவலகத்தின் கிளார்க் ஒருத்தர் 80 நிலங்களுக்கு மேல் வாங்கி போட்டிருக்கிறார் என்றான். தலை சுற்றியது.

விளை நிலங்களை பிளாட் போட்டு விற்பதுதான் ரியல் எஸ்டேட் என்பது தான் லேட்டஸ்ட் தொழில்.

சினிமாவை போன்றே இதிலும் பெரும்பாலும் கருப்பு பணமே முக்கிய இடம் வகிக்கிறது. அதனால் இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
தேவை கட்டு கட்டாய் பணம் மட்டுமே.

அவசிய்மான பதிவு...

பழமைபேசி said...

//க.பாலாசி said...
எங்கூரு பக்கத்துலையாவது எதாவது நிலம் வாங்கமுடியுமான்னு பாத்துகிட்டிருக்கேன்... //

உங்க ஊர் எதுங்ணா?

--பழமைபேசி (ஈரோடு)

Unknown said...

//.. அங்கயுமா.... ..//

அப்போ எல்லா ஊர்லயும் இதுதான் நடக்குதா..??

இருக்குற மக்கள் தொகைய விட இந்த பிளாட்டோட எண்ணிக்கை அதிகமா இருக்கும் போல..

எனக்கு ரொம்ப நாளா சந்தேகம்.
இதுல எத்தன பேரு வீடு கட்ட வாங்கி இருப்பாங்க?
உண்மையிலேயே வீடு கட்டணும்னு ஆசை இருக்குறவங்க இத்தன விலை போட்டு வாங்க முடியுமா.?? கடைசில இது எங்க போயி முடியும்..???

ராஜ நடராஜன் said...

எனது முந்தைய பின்னூட்டத்துக்கு சார்பாக உங்களுக்கு ஒரு பதிவு போட்டிருக்கேன்.

பழமைபேசி said...

//அக்கினிச் சித்தன் said...

ஒன்னே ஒன்னு செய்யிங்க, தமிழைக் காப்பாத்துங்க, அது மித்த அல்லாத்தையும் பாத்துக்கும்!//

ஆகா, நூத்துல ஒரு வார்த்தை!

துளசி கோபால் said...

சூர்யா சொன்னதுக்கு ரிப்பீட்டிக்கறேன்.

விளைநிலம் வித்த காசெல்லாம் தங்கமாளிகையிலும், சென்னைசில்க்கிலும் ஜெகஜ்ஜோதியா செலவாகிக்கிட்டு இருக்கு:(

க.பாலாசி said...

//பழமைபேசி said...
உங்க ஊர் எதுங்ணா?//

செம்பொன்னார் கோவில்தாங்... அங்கயும் வாங்க முடியாது. இன்னும் கொஞ்சம் உள்கிராமமா போனாக்க வாங்கலாம்... அதான் விசாரிச்சிகிட்டிருக்கேன்....

நாமக்கல் சிபி said...

/”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு போட்டு, மரம் வளர்த்து கிழிக்கப் போறாங்களாம்… விக்கிறவங்க மயிரும், வயிறும் வேணா வளரும்”//

இங்கு மட்டுமில்லை கதிர் சார்! எல்லா ஊர்களிலும் விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகிக் கொண்டிருக்கின்றன! இப்படியே போனால் சாப்பிட அரிசியோ, கோதுமையோ கிடைக்காது! உலோக நாணயங்களைத்தான் சாப்பிட முடியும்!

(கரன்ஸி அடிக்கவும் காகிதம் வேணுமே! காகிதம் வேணும்னா மரங்கள் வேணும்)
:((

*இயற்கை ராஜி* said...

செய்வதென்ன என்பதுதான் தெரியவில்லை.. யாராவது ஏதாச்சும் செய்யுங்களேன்

*இயற்கை ராஜி* said...

இதைப் போல நிறைய இடங்களைப் பார்த்து தினமும் பதறிக் கொண்டிருக்கிறேன்.:-(

Unknown said...

இதில சில என்.ஆர்.ஐக்களையெல்லாம் செருப்பாலயே அடிக்கணும்.

நல்லா விளையிற நிலத்தை வாங்கி, மட்டப்படுத்தி, வேலி போட்டு சும்மா போட்டு வைக்கிறாங்க.

4 வருசத்துக்கு முன்னால கோவைல விளை நிலம் (விவசாயம் செய்யறதுக்குதாங்க) வாங்கப் போய் புரோக்கர் எல்லாம் ஒரு மாதிரியாப் பாத்தாங்க. (கடைசி வரைக்கும் கிடைக்கலங்கிறது வேற விசயம்)

துபாய் ராஜா said...

:((

Unknown said...

நாம் எல்லோரும் கிராமத்தை விட்டு பட்டணத்துக்கு வந்து லட்சகணக்கில் சம்பாதிப்போம். கோடைவிடுமுறையில் ஊருக்கு போனால் மலரும் நினைவுகளுக்கு இடைஞ்சல் இல்லாதவகையில் அங்கே இருக்கும் விவசாயி விவசாயியாகவே இருக்க வேண்டும். கிராமம் கிராமமாகவே இருக்கவேண்டும்.நகரமாக மாறகூடாது:-))

நல்ல விலை கிடைத்தால் யார்தான் நிலத்தை விற்காமல் இருப்பார்கள்?இதுக்கு இத்தனை வருத்தப்பட்டு பதிவு போடுவதால் என்ன பயன்? விவசாயி தன் வயிற்று பிழைப்பை பார்க்க வேண்டாமா? லாபம் வராத தொழிலை எத்தனைநாள் கட்டிகொண்டு அழுவது?:-)

கே.பழனிசாமி, அன்னூர் said...

இங்க என் ஆர் ஐ எல்லாம் ஒரு சதவீதத்துக்கும் கம்மி.... இந்த கவர்மெண்ட்டு வேலையில் இருப்பவர்கள் தான் இந்த அபிரிமித விலைக்கு காரணம்.... சராசரி தனிநபர் வருமானத்திலிருந்து 20 சதவீதம் மட்டுமே குறைந்தபட்ச சம்பளமாக நிர்ணயம் செய்தால் ஒரே வருஷத்தில் பழைய நிலைமை வந்து விடும்... இவங்க சம்பளமே கொள்ளையாக கிடைக்கிறது.... அதுபோக லஞ்சமாக கொள்ளை வேறு... அதை இப்படி முதலீடு செய்யாமல் வேறு என்ன செய்யப்போகிறார்கள்....

சரண் said...

வேளாளன் குடும்பத்துல பொறந்துட்டு இப்ப எவனுக்கோ பொட்டிதட்டி வயித்த நெறப்பீட்டுருக்கிற நம்மில் பல பேருக்கு விளை நிலங்கள் மனை நிலங்களாகுதுன்னு புலம்பறத்துக்கு அருகதை இல்லைங்க.. இந்த் நெளமைக்கு நாமும்தான் காரணம்..
நம்மில் எத்தனொயோ பேர் பட்டணத்துல இருந்து பதுவுசாப் போய், ஊர்ல படிக்க வழியில்லாம வெவசாயம் பாத்துக்கிட்டு இருந்த சொந்தக்காரப் பசங்ககிட்ட பந்தாக் காட்டித் திருஞ்சப்ப இதேலாம் தெரியலை.. நம்மில் எத்தனை பேர் வெவசாயிகளுக்கு 'உண்மையா' மரியாத கொடுக்கறோம் சொல்லுங்க..
எத்தன திரைப்படங்கள்ள மஞ்சப்பைய வெச்சுக்கிட்டு வேட்டியக் கட்டிட்டு வர்றவங்கள வெச்சு கிண்டலடிச்சதப் பாத்து சிரிச்சிருக்கிறோம்..
உழைக்கிறவங்கள ஏமாளியாப் பாத்ததால பாதிப்புகள்தான் இது..
உழைப்புக்குக் கிடைக்க வேண்டிய மரியாதை எப்ப பணத்துக்கும் பகட்டுக்கும் கிடைக்க ஆரம்பிச்சுதோ அப்பவே விவசாயம் அழிஞ்சு போச்சுங்க..

'பரிவை' சே.குமார் said...

//”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு போட்டு, மரம் வளர்த்து கிழிக்கப் போறாங்களாம்… விக்கிறவங்க மயிரும், வயிறும் வேணா வளரும்”//


உண்மை சுடும் .

வரதராஜலு .பூ said...

எல்லா ஊர்களிலும் இப்படிதான். இங்கே பாண்டிச்சேரியில் பாகூர் என்னும் இடம். இங்கே ஒரு பெரிய ஏரியே (முதலாவதோ இரண்டாவது பெரிய ஏரியோ பாண்டிச்சேரியில்) இருக்கிறது. அவ்வளவு வளமான பூமி இது. நீங்கள் சொன்னதுபோல இப்போது இங்குள்ள முக்கிய சாலைகள் வழியில் உள்ள அனைத்து நிலங்களும் மனை போடப்பட்டு விற்கப்பட்டுவிட்டன்.

//பக்கத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெரிசு முனகியது”க்க்கும், சோறு போட்ட பூமிய, கூறு போட்டு கொன்னு போட்டு, மரம் வளர்த்து கிழிக்கப் போறாங்களாம்… விக்கிறவங்க மயிரும், வயிறும் வேணா வளரும்”//

அந்த பெரியவரைப் போலவே எனக்கும் வயிறு எரிகிறது.

இன்னும் சில ஆண்டுகள் சென்றால் உணவுப் பொருட்களுக்கு பெரும் பஞ்சம் நிச்சயம் வரப்போகிறது. ஒரு கிலோ அரிசி ரூ.500 கொடுத்தால்கூட கிடைக்காது போன்றதொரு சூழல் வரதான்போகிறது.

வருங்காலம் மிகவும் சூன்யமானதொன்றாகவே அமையப்போகிறது.

மதார் said...

திருச்செந்தூர் போகும் போது பஸ் ல இருந்து பார்த்தாலே எங்க வயல் எல்லாம் தெரியும் . ஊருக்கு போகும்போதெல்லாம் இறைவா இந்த மண்ணுக்கு ஏதும் பங்கம் வரக்கூடாதுன்னுதான் வேண்டிப்பேன் . அம்மன்புரம் தாண்டி விவசாயம் பொய்த்து போச்சு . எங்க பகுதியும் எங்க இந்த மாதிரி ஆயிருமோ என்று அதைப் பார்க்கும்போதெல்லாம் மனசு அடிச்சுக்கும் . உங்க பார்வையில் நான் இருந்து ஒரு நிமிடம் உள்ளுக்குள் ஆடிப்போயிட்டேன் . கண்ணுல எங்க பகுதி வயல்தான் தெரிஞ்சது .

YUVARAJ S said...

பேசுறதுக்கு ஒரு மைக்கும் மேடையும் கெடச்சா போதும். ஒன்ன உபதேசம் பண்ணுவாங்க. இல்லாட்டி, திட்டு / போலம்புவாங்க.

"நீ உன் சுட்டு விரல அதுத்தவன நீக்கி நீட்டும் பொது, மூணு விரல் (கட்டை விரல் தவிர) உன்னை நோக்கி இருக்கும் என்பதை மறந்துவிடாதே"

இங்க கமெண்ட் எழுதி இருக்கறவங்க எத்தினி பேரு விவசாயிங்க?. இல்ல, நிலம் குடுத்த, விவசாயம் பண்ண முன் வருவீங்க?? என்ன, அது உங்களுக்கு லாபகரமான தொழில் இல்ல. அப்ப விவசாயி மட்டும் கேணயனா? அதான் ரியல் எஸ்டேட் பண்ணுறான்.

போய்யா, எல்லாரும் போயி புள்ள குட்டிங்கள ஒழுங்கா படிக்க வெய்யுங்க.

சத்ரியன் said...

கதிர்,

எல்லாம் பணம் ...!

வேறென்ன சொல்ல...? வயிறெரிவதுதான் மிச்சம்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சிறுவர் கதை ஒண்னு இருக்கே தொட்டதெல்லாம் பொன்னாகும்னு. அது போல நாளைக்கு மக்கள் தொகை கூடினதும் பசிக்கு பணத்தைத் தின்னுவாங்க! ஆனா ஏழை,பாழைகள் இருக்காங்க பாருங்க. அவுங்க குறைஞ்சது முருங்கைக்கீரையப் பயிர் பண்ணியாவது வயித்த நிரப்பிருவாங்க!உச்சத்துல இருக்கறவங்க கீழ இறங்கவும் முடியாம, உச்சியில இருக்கவும் முடியாமத் தவிக்கயில அடுக்குமாடி தண்ணி குடுக்குமா?

அன்பரசன் said...

அந்த நிலத்துக்கு சொந்தக்காரங்க கொஞ்சம் யோசிச்சு இருக்கலாம்.

Mugilan said...

நெஞ்சம் கனக்கின்றது!

YUVARAJ S said...

//நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்//

ஏனுங்க, வெள்ளாம பூமி எல்லாம் பிளாட் போட்டு விக்கராங்க, வகுறு எரியுதுன்னு சொன்னிங்க.

நீங்க நகரத்துல என்னு பன்னுரிங்க. சப்பான்காரன் கடல் மேல வெவசாயம் பண்ணுற மாதிரி நீங்க மொட்டை மாடில வெவசாயம் பண்ணுறீங்களா??

அடுத்தவன குத்தம் சொல்லுறதுக்கு முன்னால, அதுக்கான தகுதிய வளத்துக்காங்க. அப்புறம் நொள்ளை சொல்லுங்க.

விவசாயிய குத்தம் சொல்லுற தகுதி எனக்கு இல்லைங்க. ஏன்னா, நான் வெளிநாட்டுல ஆணி புடுங்கரங்க.

எதுக்கு பாத்து எழுதுங்க...

வரங்கனோ....

Rekha raghavan said...

பயிர் விளையும் நிலங்களை இப்படி பிளாட் போட்டு வித்துட்டா பயிர் செய்ய நாம் எங்கே போவோம்? எதிர்காலத்தை நினைத்தால் கவலையாக இருக்கு.


ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)