ஒரு பிடி சோறு

பருவ மழை பொய்த்துப் போய் விடும், வறட்சி தாண்டவமாடும், எல்லோரும் செலவுகளைக் குறைப்போம் என விளம்பர யுக்தியோடு நாடு முழுதும் அரசியல் வாதிகள் அறைகூவல் விடுத்த போதும்...

கொஞ்சம் தாமதமாகவேனும் காவிரித்தாய் கடைக்கண் காட்ட... போனமுறை ஊருக்குச் சென்ற போது, நெல் நாற்று விடப்பட்டிருந்தது, இந்த முறை போன போது ஊர் முழுதும் வயல்கள் நடவு முடிக்கப்பட்டு நாற்று இளம்பச்சையிலிருந்து அடர் பச்சை மாறும் வண்ணம் வேர் பிடிக்கத் துவங்கிருந்தது.

எங்கு நோக்கினும் பச்சைப் பசேலென விரிந்து கிடந்தது விவசாய பூமி. இந்த வருடம் நம் பக்கத்து மக்கள் தப்பித்துக் கொள்வார்கள் என மனதிற்கு மிக ஆறுதலாக இருந்தது.

தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்த போது ‘பரவால்ல இந்தத் தடவை தண்ணி வந்திருச்சு, ஆனா ஆளு அம்புதான் கெடைக்கிறதேயில்லை” என்று வருத்தப்பட்டார்

அடுத்துச் கேட்டதுதான் அதிர்ச்சியின் உச்சம் ‘தண்ணி வந்து என்ன பண்றது, ஆளுதான் கிடைச்சு என்ன பண்றது, யாரு இனி விவசாயம் பண்ணப் போறாங்க, உங்கப்பாவோட சரி, நீ வந்து விவசாயமா பண்ணப்போற!?’

என் தந்தை இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் பணி புரிந்து விருப்ப ஓய்வில் வந்துவிட்டவர். பணி புரிந்த காலத்திலும், இப்போதும் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டுக் கொண்டேயிருப்பவர்.

என் தாத்தா கேட்டதற்கு சரியான பதிலைச் சொல்லத் தெரியவில்லை. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் வரை எனக்கு தோட்டத்து வேலைகள் மிக இயல்பான ஒன்று, அதன் பின் விடுதி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, வேலை, தொழில் என மாறியபோது, எங்கள் தோட்டத்தில் என்ன பயிர் செய்திருக்கிறார்கள் என்பது கூட தெரிவதில்லை. எப்போது விதைப்பு, எப்போது அறுவடை எல்லாம் தொடர்பற்றுப் போனது.

* இன்று எங்கள் கிராமத்தில் சுமார் 45-50 வயதுக்கு குறைவான யாரும் விவசாயத்தில் இல்லை.
* விவசாய நிலம் வைத்திருக்கும் குடும்பங்களிலிருந்து 35 வயதிற்குட்பட்ட எவர் ஒருவரும் இன்று விவசாயத்தில் இல்லவே இல்லை. ஒன்று படித்து வெளியூரில், வெளிநாட்டில் வேலையில் இருந்து நன்றாக பணம் சம்பாதிக்கிறார்கள் அல்லது பக்கத்து நகரங்களில் விவசாயம் தொடர்பில்லாத வியாபாரம், தொழிலில் இருக்கிறார்கள்.



* இன்று விவசாயம் நிலம் வைத்திருப்பவர் அல்லது விவசாய நிலத்தில் உழைப்போரின் ஒரே இலக்கு தன் பிள்ளைகளை எப்படியாவது நன்றாகப் படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும் அல்லது ஒரு தொழில் ஆரம்பித்திட வேண்டும்.



*விளைவித்த தக்காளி கிலோ நாலாணாவிற்கு விற்க வேதனைப்பட்டு, கூடை கூடையாய், வருடா வருடம் நடுச் சாலையில் கொட்டி அழிக்கப்படும் அவலம் இன்றும் இருக்கத்தானே செய்கிறது. எந்த அரசாங்கம் அக்கறையோடு தேவையறிந்து, விவசாயிக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது அல்லது உதவியிருக்கிறது?
*எப்போது தேவை அதிகமாகும், எப்படி ஏற்றுமதி செய்வது அல்லது எப்படி அதை பதப்படுத்திப் பாதுகாத்து சரியான நேரத்தில் விற்பது என்று?
(2009 ஆம் ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் சர்க்கரைத் தட்டுப்பாடு வருமென்று, நிறைய வெளிநாட்டு விவசாயிகள் முன்னரே அறிந்து, அதிக விளைச்சலை உருவாக்கி, நமக்கு ஏற்றுமதி செய்திருக்கின்றனர்)


*கடந்த பத்து ஆண்டுகளில் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மற்றும் வியாபார மேலாண்மை படிப்புகளின் எண்ணிக்கையில் ஒரே ஒரு சதவிகிதமாவது விவசாயக் கல்லூரிக்கோ அல்லது விவசாயம் குறித்த படிப்புகளுக்கோ கவனம் கொடுக்கப் பட்டிருக்கிறதா?






இப்போது நிலம் வைத்திருப்போர் அல்லது உழைப்போரின் உழைக்கும் திறன் இன்னும் அதிகபட்சம் 15-20 ஆண்டுகளில் மங்கித்தானே போய்விடும். அதன்பின் அந்த நிலங்களில் யார் விவசாயம் செய்வது?


எங்கள் ஊரில் கிட்டத்தட்ட 500 ஏக்கர் நிலத்தில், இந்த வருடம் நெல் பயிரிடப் பட்டுள்ளது. எப்படி கணக்குப் போட்டாலும் பெரிதாய் நோய் தாக்காமல் இருந்தால் இந்த பருவத்தில் கிடைக்கும் அரிசி 2,50,000 கிலோ. எதிர்காலத்தில் இது என்ன ஆகப்போகிறது.


சமீபத்தில் கண்டமேனிக்கு திறக்கப்பட்டது பொறியியல் கல்லூரிகளே. சிவில் படித்தார்கள், சாரம் போட்டு வருடக்கணக்கில் கட்டியதை, இன்று எங்கேயோ செய்து பத்திரமாக எடுத்து வந்து கிரேன் வைத்து தூணின் மேல் ஏற்றி அழகாகப் பொருத்தி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆச்சரியமான ஒன்றுதான், தவறேதுமில்லை. இது போல் ஒவ்வொரு துறை பிரிவிலும் படித்தவர்கள் பிரமிக்கக்கூடிய அதிசயத்தை விநாடி நேரத்தில் நடத்திக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

என்ன என்னவோ படிப்பென்று சொல்லி, எத்தனை எத்தனையோ கல்லூரிகளைத் திறக்கப்பட்டதே... வளர்ச்சி என்ற அடிப்படையில், விவசாய பூமியை விலகிச் சென்ற மனிதர்களால் தங்கள் விஞ்ஞானத்தால், அரசியலால் அல்லது ஏதோ ஒரு தொழிலால் ஒரே ஒரு நெல் மணியை உருவாக்க முடியுமா?

ஐக்கிய நாடுகள் சபை சொன்னதாக தலைப்புச் செய்தியில் படித்தேன் இன்னும் நாற்பது வருடங்களில் இந்தியாவிலும், சீனாவிலும் தங்கள் நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாவிடில் மிகப் பெரிய உணவுத் தட்டுப்பாடு வருமென்று. எனக்கென்னமோ அதற்கு நாற்பது வருடங்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

காடுகளை அழிப்பதில் சிறிதும் குற்ற உணர்வில்லாத நாம், பருவ மழை பொய்த்துப் போவதைப் பற்றி என்றாவது, ஒரு விநாடி மனம் கலங்கியிருகிறோமா?

காமராஜருக்குப் பின் தமிழ்நாட்டில், யாராவது அணை கட்டியிருக்கிறார்களா?

சாகடிப்பட்ட அணைகள் ஒன்றா, இரண்டா? சாமாதி கட்டப்பட்ட ஏரிகள், குளங்கள் எத்தனை ஆயிரம் இருக்கும்?



இது பற்றி எந்தச் சிந்தனையும் இல்லாதவர்களைத் தானே மாற்றி மாற்றி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கிறோம்

விவசாயத்தை, விவசாயிகளை வஞ்சித்த உலகம் அதன் பலன்களை அனுபவிக்கப் போவது மிக அருகாமையில் தான் இருக்கிறது.

அப்போது பசிக்கும் வயிற்றுக்கு யார் வந்து சோறு போடுவது.
-------------------------------------------------------------------------
தொடர்புடைய இரண்டு இடுகைகள்
1. தண்ணீரும் சோறும் தந்த மண்ண விட்டு...
2. நான் நிறுத்த வேண்டும்

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.





70 comments:

vasu balaji said...

கதிர்! சமுதாய நோக்குள்ள உங்க இடுகையில் சிறந்தது இது. அக்கறையா டாஸ்மாக் வைக்கிற அரசு, இந்த மாதிரி காய்கறி, தக்காளியெல்லாம் கெடாம, ஊறுகாய் செஞ்சி டாஸ்மாக்ல தொட்டுக்க வித்தாலுமே விவசாயிங்க பிழைச்சி போவாங்க.

நாகா said...

உக்காந்த எடத்துல சம்பாதிக்கறத விட்டுட்டு யாரு நாளு முழுக்க வெயில்ல காஞ்சு வேல செய்வாங்க? சரி, வெவசாய நெலம் கொறயுது வெலவாசி ஏறுதுங்கறீங்களே, அப்புறம் ஏன் தக்காளி நாலணாவுக்கு விக்குது?

சரி சமூகப் பிரச்சினைக்கு வருவோம், இன்னக்கி வெவசாய நெலம் வெச்சுருக்கறவங்கதான் பயங்கரப் பணக்காரங்க. ஆளு கெடக்கலன்னு சொல்றீங்களே, அந்த ஆளுங்களால கண்டிப்பா நிலம் வாங்கி சொந்தமா விவசாயம் பண்ண முடியாது. அன்னாடம் கூலிக்கு மாரடிக்கறத விட்டுட்டு நம்ம புள்ளைங்களாவது படிச்சு வேற வேலைக்குப் போலாம்னு நெனக்கறதுல என்ன தப்பு? எத்தன விவசாயிங்க/பண்ணையாருங்க கூலிக்கு வர்றவங்கள மனுசனா மதிக்கறாங்க?

அன்புடன் நான் said...

உணவு மாத்திரையாகத்தான் விற்கபோகிறது. தங்களின் பதிவு அக்கறையுள்ள‌ பதிவு பாராட்டுக்கள்.

RAMYA said...

உங்களின் இந்த இடுகை சரியான நேரத்தில்தான் வெளியிடப் பட்டுள்ளது என்று நினைக்கின்றேன்.

ஆனாலும் நாம் வெகு தூரம் கடந்து வந்துட்டோம்னு தோனுது கதிர்.

புள்ளி விவரம் அருமையா கொடுத்திருக்கீங்க.

ஒவ்வொருவரும் தனது பிள்ளைகளை படிக்க வைப்பது என்பது ஆரோக்கியமான விஷயம்தான்.

ஆனால் விவசாயம் கெட்டு போவதற்கு முதல் காரணம் விளை நிலம் வீட்டு நிலமாக மாறுவதும், நிலத்தில் பாடுபடுபவர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்காதலும் இருக்குமோ என்று எனக்குள் ஒரு ஐயப்பாடு இருந்து கொண்டே இருக்கும். அது உணமையா கதிர்?

அதே போல் விளைச்சல் அதிகமாகி காய்கள் வீணாகப் போவதை தடுப்பது நமது அரசாங்கத்திடம் உள்ளது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

இதை ஆராய்ச்சி செய்து எழுதிக் கொண்டே போனால் முடிவு என்பது வருமா வராது........

நல்ல ஆரோக்கியமான இடுகை.

RAMYA said...

சமுதாய நோக்குடன் கூடிய இடுகை
வாழ்த்துக்கள் கதிர்!

Radhakrishnan said...

நல்லதொரு இடுகை.

இதே நிலை தொடர்ந்து ஏற்படாதிருக்க விவசாயம் செய்பவர்களுக்கு என தனித் துறை ஒன்று தொடங்கி வேலைக்கு ஆள் அமர்த்தி அரசு சம்பளம் வழங்க வேண்டும்.

இப்படி ஆதங்கப்படும் நாம், நமது குழந்தைகளை விவசாயம் செய்ய வைப்போமா என்பது ஒரு கேள்விக்குறிதான், இதில் அரசு பற்றி குறை சொல்லி என்ன பிரயோசனம்?

ப்ரியமுடன் வசந்த் said...

நாகா சொன்னது உண்மைதான்

எத்தனையோ பண்ணைகளுக்கு கீழ் வேலை செய்யும் கூலித்தொழிலாளிகளுக்கு உழைப்புக்கேற்ற் ஊதியம் கொடுத்தாதானே அவர்களுக்கும் விவசாய வேலை செய்ய பிடிப்பு ஏற்படும் நான் சொல்வது விவசாயத்தில் நல்ல வருமானம் கிடைக்கிற பண்ணைகளே இப்படியிருக்கும் போது வருமானம் வராத பண்ணையின் கீழ் வேலை செய்யும் கூலித்தொழிலாளிகளின் நிலைமையை நினைத்துப்பாருங்கள் அதனால் தான் அவர்களும் விவசாயத்தொழிலை விட்டு வேறுதொழிலுக்கு போகமுயற்ச்சிக்கிறார்கள் தங்கள் பிள்ளைகளையும் வேறு தொழிலுடன் சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க வைக்கிறார்கள்,,,, திருந்த வேண்டியது கொள்ளை லாபம் சம்பாதிக்க நினைக்கும் பண்ணைகளே...

ப்ரியமுடன் வசந்த் said...

//சி. கருணாகரசு said...
உணவு மாத்திரையாகத்தான் விற்கபோகிறது.//

100% சத்தியமா சொல்றேன் இதுதான் நடக்கும்

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பின் கதிர்......வாழ்த்துக்கள்....மிக நீண்ட நல்ல பதிவு......

விவசாயம் செய்ய்ம் விதம் மாறி எங்கோ சென்றுவிட்டது. நாம் தான் இன்னும் முயலுக்கு மூணுகால் என்ற விதத்திலே இருக்கிறோம்.

இங்கு குறு விவசாயிகள் அதிகம். பாதிப்பேர் அறுவடைக் காச எடுத்துகிட்டுப்போய் பழைய கடன கட்டி, வூட்டுக்கு துணிமணி வாங்கி, இன்னும் புதிய பயிறுக்கு விதை வாங்குவதில் தீர்ந்துவிடுகிறது மொத்தப் பணமும்.

மருந்தடிக்க, உரம்போட கடன் வாங்க ஆரம்பிக்கறோம். நடுவுல கலியாணம், காச்சி, சீரு, இப்படி தேவைக்கெல்லாம் கடன் வாங்கறம். அறுவடைக்கப்பறம் மொத்த காசயும் வாங்குன கடனுக்கு அசலும் வட்டியுமா கட்டி திரும்பவும் கடன் வாங்கறம்.

ரசிய நாட்டைப்போல் கூட்டுப் பண்ணை முறை கொண்டுவர முயற்சி செய்தார்கள். நாமதான் காட்ட வித்து, கச்சேரிக்குப் போய் பொலி சண்டைய தீத்துக்கறார ஆட்களாச்சே......தோல்வியடைந்து விட்டது.


காலங்காலமா, ஒரே மாதர விவசாயம் பண்டி பழகுனுதால நம்மால மாற முடியல. சூழ்நிலை மாற வுடல...கரும்பு, அதவெட்டுனா, கடல, திரும்பவும் கரும்புன்னு காலங்காலமா மாத்தி மாத்தி விதைக்கறோம்.

விவசாயத்தின் பண்முகம் மிக விசாலமானது. ஹோசூர் தர்மபுரி பகுதிகள் மிக வறண்ட பூமி எனப்பட்டாலும் இன்று அவை ஏற்றுமதி மண்டலங்களாக பரிமளிக்கின்றன.

பஞ்சாபின் பல பகுதிகள் ஏற்றுமதி முக்கியத்துவம் பெற்றுவிட்டன...


குறை மட்டும் சொன்னால் போதாது நண்பா.....வளரும் போதும், மாற்றங்கள் வரும்போதும், விழிப்புடனிருக்கவேண்டும். வளர்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும்.


அன்புடன்
ஆரூரன்



மஞ்ச காடு விதைச்சவுடனே குடோன் காரங்கிட்ட வட்டிக் காசு வாங்கிக்கறோம். மஞ்சள் தவிர வேற எந்த பணப் பயிரையும் முயற்சி பண்ணலையே....

கலகலப்ரியா said...

ரொம்ப கேள்விக் குறியான விஷயம்...! திரும்பவும் தேவையான இடுகை..! பலன் கிடைக்குமா தெரியல.. !

அத்திரி said...

கதிர் அருமையான பதிவு.......நீங்கள் சொல்லியுள்ளது போல் பல கிராமங்களிலும் இதே நிலைமைதான்.................

அகல்விளக்கு said...

வயலில் தொழிற்சாலை
வட்டிலில் மண்

இதுவும் நடக்கக்கூடும்.

பின்னோக்கி said...

விவசாயம் செய்பவர்கள் ஏன் குறைந்தார்கள் என்பது ஒரு புறம் இருக்க, என் நம்பிக்கை, இன்னும் சில வருடங்களில், தனியார் துறையினர், உணவு தட்டுப்பாட்டை பயன்படுத்தி, அதில் ஈடுபட போகிறார்கள். உங்கள் கட்டுரையின் மூலம், அந்த காலம் வெகு தொலைவில் இல்லை என புரிகிறது.

தனியார் துறையினர், விவசாயத்தை ஒரு passion உள்ள துறை போல மாற்றிய உடன், பலர் அதில் ஈடுபடப் போகிறார்கள்.

சீருடையணிந்து விவசாயம் பார்க்கும் பலரை நாம் இன்னம் 10 ஆண்டுகளில் பார்ப்போம் என்பது தான் என் நம்பிக்கை.

அந்த நிலை வரும் போது, கிராமத்திலிருந்து, நகரத்துக்கு இடம்பெயர்ந்த மக்கள், மறுபடியும் மெதுவாக மேம்படுத்தப்பட்ட கிராமங்களுக்கு செல்ல ஆரம்பிப்பார்கள்.

இயற்கை என்றும் மாறுவதில்லை. மனிதனை அது ஒரு வட்ட வடிவ பாதையில் விரைவில் திருப்பிவிடும்.

அடுத்த விவசாய புரட்சி அரசின் 5 ஆண்டு திட்டத்தினால் வரப்போவது இல்லை. தனியார் நிறுவனங்களால் தான் வரப்போகிறது.

அது நல்லதா ? கெட்டதா என்பது தனி விவாதம்.

நம்பிக்கையுடன் இருங்கள் இருப்போம் கதிர்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வானம்பாடிகள் said...
(தக்காளியை எப்போ விதைக்கனும், எப்போ அறுவடை செய்யனும் என்பது குறித்து எந்த அறிவையும் சொல்லித் தறாத அரசுக்கு... தக்காளி எப்படி போன என்னங்க)

நாடோடி இலக்கியன் said...

மிக அவசியமான இடுகை கதிர்.

கொஞ்ச வருடங்கள் கழித்து விவசாயம்தான் என்று முடிவில் முன்பிருந்தே இருக்கிறேன்.பார்க்கலாம.் விவசாயத்தின் அவசியம் விரைவில் அனைவரும் உணர்வர்.

பிரபாகர் said...

கதிர்,

உங்கள் இடுகைகளிலேயே இதனை மிகச்சிறந்தது என சொல்லுவேன்.

என்னமாய் எழுதி, அலசியிருக்கிறீர்கள். பிடியுங்கள் பாராட்டுக்களை முதலில்.

விவசாயத்தில் அரசு கவனம் செலுத்தாவிடின்... நினைக்கும்போதே பயமாய் இருக்கிறது.

வாழ்க்கையில் ஓரளவிற்கு சம்பாதித்து பின் விவசாயத்தில் இடுபடுவதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறேன்.

//கடந்த பத்து ஆண்டுகளில் துவக்கப்பட்ட பொறியியல் கல்லூரி மற்றும் வியாபார மேலாண்மை படிப்புகளின் எண்ணிக்கையில் ஒரே ஒரு சதவிகிதமாவது விவசாயக் கல்லூரிக்கோ அல்லது விவசாயம் குறித்த படிப்புகளுக்கோ கவனம் கொடுக்கப் பட்டிருக்கிறதா?//

மிக நல்ல கேள்வி. ஆள்வோர்கள் தான் விடை சொல்ல வேண்டும். ஒரு லட்சியமாய் எதிர்காலத்தில் விவசாயம் செய்யலாம் என படித்த நாமெல்லாம் முடிவு செய்தால் இழப்புக்களை சிறிது ஈடு செய்யலாம்...

உங்களை எண்ணி, உங்களின் சமுதாய நோக்கை எண்ணி பெருமைப்படுகிறேன் கதிர்...

பிரபாகர்.

நேசமித்ரன் said...

நல்லதொரு இடுகை.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நாகா
(முதற்கண் நீண்ட இடைவெளிக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி)

(தக்காளி உதாரணம் - விவசாயிகளின் பிரச்சனையின் ஒரு குறியீடு மட்டுமே)

(நீங்கள் சொல்லும் விஷயங்கள் ஏற்புடையதுதான், இதில் நான் குறிப்பிடுவது...பணக்காரன், ஏழை என்ற பாகுபாடோ, அதனால் விவசாயம் செத்ததாவோ இல்லை... எல்லோருமே ஒட்டு மொத்தமாக விவசாயத்தைப் புறக்கணிக்கிறார்கள் என்பதே... 50 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களின் பிள்ளைகள் விவசாயம் செய்யத் தயாராக இல்லை... அதன் பின் எங்கே உணவு கிடைக்கும்...)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கருணாகரசு
(நிஜமா உணவு மாத்திரையாக கிடைக்குமா?

ஈரோடு கதிர் said...

நன்றி @@ RAMYA
//அதே போல் விளைச்சல் அதிகமாகி காய்கள் வீணாகப் போவதை தடுப்பது நமது அரசாங்கத்திடம் உள்ளது //

(இது நடந்தால் நல்லது ரம்யா)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ Rads
//விவசாயம் செய்பவர்களுக்கு என தனித் துறை ஒன்று தொடங்கி வேலைக்கு ஆள் அமர்த்தி அரசு சம்பளம் வழங்க வேண்டும். //

(குறைந்த பட்சம் இதுவாவது நடக்க வேண்டும்)

(அரசு... முக்கியக் கவனம் விவசாயத்துக்கு கொடுக்கும் போது, நிச்சயம் நம் குழந்தைகள் இதுக்கு வரும்)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வசந்த்
(யார் தவறு / சரி என்பது இதில் இல்லை வசந்த்..
மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து படியுங்கள், பண்ணையார்களின் வாரிசுகளும் விவசாயத்தில் எஈடுபடத் தயாரில்லை, அப்போ விவசாயம்னு ஒன்னு நடக்காம போகும் என்பது தான் நான் சொல்ல வந்த கருத்து)

(விவசாயம் நவீனமாக்கப்பட வேண்டும், நிறைய ஆராய்ச்சிகள் உர்வாகி எளிமைப் படுத்தப் படவேண்டும்)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ப்ரியா
(எக்காரணம் கொண்டும் விவசாயம் எளிமைப் படுத்தப்பட வேண்டும், அப்போது பலன் கிடைக்க ஆரம்பிக்கும்)

நன்றி @@ அத்திரி
(வருத்தமானதுதானுங்க)

நன்றி @@ அகல் விளக்கு

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பின்னோக்கி
//தனியார் துறையினர், விவசாயத்தை ஒரு passion உள்ள துறை போல மாற்றிய உடன், பலர் அதில் ஈடுபடப் போகிறார்கள்.//

இப்படி நடந்தால்தான் சோறு கிடைக்கும்

//இயற்கை என்றும் மாறுவதில்லை. மனிதனை அது ஒரு வட்ட வடிவ பாதையில் விரைவில் திருப்பிவிடும்.//

(இது நம்பிக்கை தரும்)



நன்றி @@ நாடோடி இலக்கியன்
(எனக்கும்தான் பாரி,
ஆனால் அதற்குள் எனக்கும் உங்களுக்கும் விவசாயமே மறந்து விடுமே, அதுதான் வருத்தம்)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பிரபாகர்
//விவசாயத்தில் அரசு கவனம் செலுத்தாவிடின்... நினைக்கும்போதே பயமாய் இருக்கிறது.//

(ஏற்கனவே விவசாயம் பற்றி எந்தக் கவலையும் இல்லீங்க)

//வாழ்க்கையில் ஓரளவிற்கு சம்பாதித்து பின் விவசாயத்தில் இடுபடுவதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறேன்.//

(நல்லது... வாழ்க)


நன்றி @@ நேசமித்ரன்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஆரூரன்
//இங்கு குறு விவசாயிகள் அதிகம். பாதிப்பேர் அறுவடைக் காச எடுத்துகிட்டுப்போய் பழைய கடன கட்டி, வூட்டுக்கு துணிமணி வாங்கி, இன்னும் புதிய பயிறுக்கு விதை வாங்குவதில் தீர்ந்துவிடுகிறது மொத்தப் பணமும். //

(என் குடும்பமும் குரு விவசாயம் தானுங்க, நீங்கள் சொன்னதில் மாறுபடுகிறேன். இது வரை விவசாயம் செய்ய பணம் இல்லாமல் போனதில்லை)

//காலங்காலமா, ஒரே மாதர விவசாயம் பண்டி பழகுனுதால நம்மால மாற முடியல. சூழ்நிலை மாற வுடல...கரும்பு, அதவெட்டுனா, கடல, திரும்பவும் கரும்புன்னு காலங்காலமா மாத்தி மாத்தி விதைக்கறோம்.//

(சரி வேற என்ன மாதிரி விவசாயம் பண்ணறது, எது எளிமைனு சொல்லுங்க, இன்னிக்கு... கட்டிடத்துறை மாதிரி / கணிப்பொறித் துறை மாதிரி எனக்கு விவசாயத்தை எளிமைப் படுத்தி கத்துக் கொடுங்க, நாளைக்கே நான் தோட்டத்தில போய் உட்கார்ந்திடுறேன். பிரச்சனை, விவசாயத்தை விட நான் செய்யும் தொழில் எளிமையா இருக்கு, லாபம் அதிகம் வருது. விவசாயம் இதைவிட சிறப்பா மாறினாத்தான் நான் விவசாயத்துக்கு போக முடியும் என்பதுதான் இங்கு பிரச்சனையே)

//எந்த பணப் பயிரையும் முயற்சி பண்ணலையே....//

(பணப்பயிர், லாபம் என்பதையும் தாண்டி பசிக்கு சோறு போடும் விவசாயம் முக்கியம், யாரும் அக்கரை காட்டாவிடில்... வருங்காலத்தில் சோறு கிடைக்காது....)

நர்சிம் said...

மிகச்சிறந்த இடுகைகளில் இதுவும் ஒன்று.

அருமை கதிர்.இதழ்களில் வரவேண்டியது.

காமராஜ் said...

ஆஹா எவ்வளவு நாளாச்சு, இப்படிக்கோபங்களைக்கேட்டு.
நெல் விளைந்த நிலங்கள் காங்க்ரீட் வளர்ந்து கிடக்கிறது.
இங்கே தேவலை இந்தியாவின் நெற்களஞ்சியம் முழுக்க உருளை பயிரிடப்படுகிறது. எதுக்கு சிப்ஸ்போட. ஏற்கனவே தண்ணீர் பாக்கெட்டில் வந்துவிட்டது, இன்னும் சோறும் வரலாம்.

மாதவராஜ் said...

அருமையான பதிவு.
இந்த தேசத்தின் மிக முக்கிய பிரச்சினை குறித்து பேசி இருக்கிறீர்கள். இதுகுறித்து இன்னும் நிறைய சொல்ல வேண்டியதிருக்கு... பகிர்வுக்கு நன்றி.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நர்சிம்
(நம்பிக்கைக்கு கூடுதல் நன்றி)


நன்றி @@ காமராஜ்
(என்னோட இந்தச் சின்ன கோபம் என்ன தோழரே செய்து விடப் போகிறது. இன்னும் கனன்று கொண்டிருக்கிறது பெரு நெருப்பு நமக்குள்ளே.
ஒருவேளை... சிப்ஸ் தின்னே உயிர் வாழமுடியுமோ என்னவோ)

நன்றி @@ மாதவராஜ்
(கண்டிப்பாக நாம் நிறையப் பேச வேண்டும்)

கார்த்திகைப் பாண்டியன் said...

சமுதாய நோக்குடன் கூடிய இடுகை..
வாழ்த்துகள் நண்பா..!!!

Rekha raghavan said...

அருமையான பதிவு கதிர். படித்து முடித்ததும் எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்ற கவலை மனசில்.

ரேகா ராகவன்.

ஆரூரன் விசுவநாதன் said...

இல்லை நண்பா.....சிங்கப்பூரில் ஏதும் விளைவதில்லை. அமெரிக்கா, மற்றும் ஐரோப்பவின் உணவுத்தேவைகள் தன்னிறைவானவை அல்ல.


தன்னிறைவு வேறு, தானே உற்பத்தி செய்ய வேண்டும் என்பது வேறு.


பணப்பயிர்கள், இயற்கை வேளாண்பெருட்களையும், பூச்சிமருந்தில்லா, ரசயண உரங்கள் இல்லா பயிர்களுக்கு இன்னும் உலகளாவிய சந்தை இருக்கிறது.

நாமும் மாற முயற்சிக்க வேண்டும் என்பதே என் வாதம்

(ஏற்கனவே தொ(ல்)லைபேசியில் பேசி தொல்ல பண்ணது பத்தாதா? இங்கேயுமா? ன்னு கேக்கறது புரியுது...சரி....சரி....

குறைசொல்லி பயனில்லை....வரும் தலைமுறைக்கு குறைசொல்ல ஒரு வழி காட்டியாக நாம் மாறிவிடக்கூடாது என்ற ஆதங்கம் தான்.


அன்புடன்
ஆரூரன்

velji said...

ஒரு தேர்ந்த ப்ராஜக்ட் ரிப்போர்ட் போல் இருக்கிறது இந்த பதிவு.ஒவ்வொரு வார்த்தையிலும் அக்கறை விதைகப்பட்ட்ள்ளது.மார்க்கை எதிர்பார்த்தல்ல!

விஜய் said...

இன்னும் சில வருடங்களில் அரிசிக்காக உழவர்களின் வீடு வாசலில் கை கும்பிட்டு நிற்க போகிறோம்.

நல்ல பதிவு.

என்னுடைய மற்றுமொரு விவசாய தளம்
agasool.blogspot.com

வாருங்கள்.

விஜய்

நிலாமதி said...

உங்கள் சமூக நலனுக்கு பாராடுக்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான இடுகை கதிர். விவசாய நிலத்திற்கு பெரும்பாலானோர் திரும்பும் நாள் வந்தே தீரும். என்ன சேற்றில் கால் வைக்காமல் டிராக்டரில் இருந்து கொண்டு எல்லா வேலையும் செய்வார்கள்..

காமராஜரைப் பற்றிக் குறிப்பிட்டதை நானும் பல முறை யோசித்திருக்கிறேன். காமராஜர் இல்லையென்றால் உடுமலை, பொள்ளாச்சியில் இருக்கும் பசுமையைக் கண்டிருக்கமுடியாது.

நாகா கருத்தும் ஏற்புடையதே.

ஹேமா said...

கதிர்,சிந்திக்க வைக்கிற பதிவு.மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

Anonymous said...

விவசாயம் சிறக்காமல் நம் நாடு முன்னேறவே முடியாது. வெளிநாடுகளில் எல்லாம் எல்லா காய்கறிகளையும் பதப்படுத்தி சேமித்துக்கொள்கிறார்கள். வருடக்கணக்கில் வைத்திருந்து பயன்படுத்தலாம். அரசாங்கம் தான் இதற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கவேண்டும்.

சந்தனமுல்லை said...

மிகவும் அருமையான இடுகை. பின்னூட்டக் கருத்துகளும் இடுகைக்கு பலம் சேர்க்கின்றன!

ஆ.ஞானசேகரன் said...

//* இன்று எங்கள் கிராமத்தில் சுமார் 45-50 வயதுக்கு குறைவான யாரும் விவசாயத்தில் இல்லை. ..
உண்மைதான் நண்பா... சிந்திக்க வைக்கின்றது பதிவு

ஆ.ஞானசேகரன் said...

//*எப்போது தேவை அதிகமாகும், எப்படி ஏற்றுமதி செய்வது அல்லது எப்படி அதை பதப்படுத்திப் பாதுகாத்து சரியான நேரத்தில் விற்பது என்று?//

அப்படி சொல்லி கொடுப்பவர்களை நாம் ஏற்றுகொள்வதுமில்லை..

ஆ.ஞானசேகரன் said...

//காமராஜருக்குப் பின் தமிழ்நாட்டில், யாராவது அணை கட்டியிருக்கிறார்களா?//

சரியான கேள்வி

ஆ.ஞானசேகரன் said...

நல்ல இடுகை பாராட்டுகள் நண்பா

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி @@ KALYANARAMAN RAGHAVAN

நன்றி @@ ஆரூரன்

நன்றி @@ முகிலன்
விவசாயம் நிலத்தை தொழில்கள் வந்து பிடுங்கிக் கொள்ளும் முன்பு, நாமே மண்வெட்டியை கீழே போட்டுவிடுவோமோ என்ற அச்சம்தான்)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ velji

நன்றி @@ கவிதை(கள்) said...
(நீங்கள் சொன்னமாதிரி நடக்கட்டும் விஜய், உங்கள் தளத்தை வாசிக்கிறேன்)

நன்றி @@ நிலா

ஈரோடு கதிர் said...

நன்றி @@ செந்தில்
(நன்றாகச் சொன்னீர்கள் செந்தில், நவீனப்படுத்தலும், எளிமைப்படுத்தலும் விரைந்து நடந்தால் நல்லது,

ஆனாலும், காமராஜரையே தோற்கடித்தவர்கள் தானே இந்த மக்கள்.)


நன்றி @@ ஹேமா

நன்றி @@ சின்ன அம்மிணி
(கண்டிப்பாக)


நன்றி @@ சந்தனமுல்லை
(பல சமயம் பின்னூட்டமே இடுகைக்கு வலு சேர்க்கிறது)

நன்றி @@ ஆ.ஞானசேகரன்
//அப்படி சொல்லி கொடுப்பவர்களை நாம் ஏற்றுகொள்வதுமில்லை..//

(நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்)

அது சரி 2.0 said...

அது சரி பிரதர், நீங்க யாரு? என்ன பண்ணுறீங்க? இந்த சமூதாயத்துக்கு உங்க பங்களிப்பு என்ன? சமூக மாற்றத்துக்கு உங்க செயல்பாடு என்ன?

யாரோ ஒருவர் said...

சமூக நலப் பதிவு

ஈரோடு கதிர் said...

நன்றி @@ Thirumathi Jaya Seelan

நந்தன் S said...

நல்ல பதிவு
நண்பர்களுக்கு இதை உங்கள் பெயர் மற்றும் பதிவின் சுட்டியுடன் அனுப்பி உள்ளேன்
நன்றி

செ.சரவணக்குமார் said...

அன்புள்ள கதிர்...

அருமையான பதிவு. மாறிவரும் சமூகச்சூழலில் வேளாண்மை, விளைநிலங்கள் மற்றும் விவசாயிகள் பற்றிய சமூகநோக்குடன் கூடிய உங்களின் பார்வை போற்றத்தக்கது.

பகிர்வுக்கு நன்றி நண்பரே.

க.பாலாசி said...

//‘தண்ணி வந்து என்ன பண்றது, ஆளுதான் கிடைச்சு என்ன பண்றது, யாரு இனி விவசாயம் பண்ணப் போறாங்க, உங்கப்பாவோட சரி, நீ வந்து விவசாயமா பண்ணப்போற!?’//

சரியான கேள்வி....இந்த கேள்விக்கு உங்களால் மட்டுமல்ல பலராலும் பதில் சொல்ல இயலாது. நான் விவசாய குடும்பத்தில் பிறக்கவில்லை..எனினும் எனது வருங்கால திட்டமாக விவசாயம் செய்வதை எண்ணியுள்ளேன். நம்பிக்கையும் உள்ளது.

உங்களது இடுகையின் மூலம் கிடைத்த மற்றுமொரு சிந்தனை....

"உழவன்" "Uzhavan" said...

நல்ல விவாதத்திற்கேற்ற இடுகை

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

காவிரி டெல்டா பகுதியிலிருந்து வந்தவன் நான். ஒரு காலத்தில் விளைநிலங்களாக இருந்தவை கொஞ்சம் கொஞ்சமாக கான்கிரீட் தளங்களாக மாறிக்கொண்டு வருவதைக் கண்கூடாக பார்த்து வளர்ந்தவன். கொஞ்சம் ஞானம் பிறந்த வயதில், இதற்கு மாற்றாக எதாவது செய்தாக வேண்டும் என்று களமிறங்கும் போது, குடும்பத்திடமிருந்தே பல எதிர்ப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும், ஏதேனும் செய்தேயாக வேண்டும், எதிர்க்கும் குடும்பமும் நாளைக்கு உண்டுயிர்க்க வேண்டும் என்றால்...

-ப்ரியமுடன்
சேரல்

Yousufa said...

நல்ல கருத்துக்கள். எனக்கும் விவசாயத்தில் மிக விருப்பம். அதனாலோ என்னவோ வெளிநாட்டில் வாழ வேண்டிய சூழ்நிலை!! இங்கும் பால்கனியில் சிறு பூந்தொட்டிகளில் செடிகள் வைத்திருக்கிறேன்.

விவசாயம் அழியும் நிலைக்கு வந்ததற்குக் காரணங்கள் பல இருந்தாலும் விவசாயிகளிடையே ஒற்றுமை இல்லாததும் ஒரு காரணம். சொத்து பிரித்தல், பங்காளிச் சண்டை என்று பல கூறுகளாகப் பிரிந்து கிடக்கும் விவசாய நிலங்களை ஒன்று சேர்த்து ஒருங்கிணைந்த பண்ணைய (Integrated farming) முறையில் இயற்கை விவசாயம் செய்து வந்தால் நிச்சயம் லாபம் பார்க்கலாம். இயற்கைச் சீற்றங்கள் வந்தாலும் கையைக் கடிக்காது. இதற்கு அவர்களை வழிநடத்திச் செல்ல தன்னலமில்லாத தலைவர்கள் இல்லை. பல விவசாயச் சங்கங்க‌ளின் பெயர்களாலும் விவசாயிகள் பிரிந்து கிடக்கிறார்கள், அரசியல் கட்சிகளைப் போல‌.

எல்லாவற்றிற்கும் அரசைக் குறை சொல்வதை (சொல்வதால் பயனும் கிட்டவில்லையே) விட்டு விட்டு ஒருங்கிணைந்து செயலில் இறங்குவது நல்லது.

Kumky said...

நல்ல பதிவு கதிர்..

எழுதவே(டைப்பவே) சோம்பலாக இருந்த எனக்கு(விவசாயம் பற்றி) எழுதனும் என்ற ஆர்வத்தை தூண்டிவிட்டது உங்க பதிவு.
நன்றி.

இதற்கான காரண காரியங்களை விரிவாக அலசுவோம்..

Prabhu said...

திரு கதிர் அவர்களுக்கு...


// தண்ணி வந்து என்ன பண்றது, ஆளுதான் கிடைச்சு என்ன பண்றது, யாரு இனி விவசாயம் பண்ணப் போறாங்க, உங்கப்பாவோட சரி, நீ வந்து விவசாயமா பண்ணப்போற!?’//

இதை தயவு செய்து நீங்கள் ஓர் எதிர் இடுகையாகவோ, எதிர் பின்னூட்டமாகவோ நினைக்க வேண்டாம். உங்களது தந்தை உங்களை படிக்க வைத்து சமுதாயத்தில் சிறந்த மனிதராக்க வேண்டும் என்று நினைத்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் எத்தனை பெற்றோருக்கு " நம் குழந்தைகள் விவசாயத்தில் ஒரு சிறந்த மனிதனாக வரவேண்டும் என்று விரும்புவர்? " முதலில் நாம் மாற வேண்டும். நமது சந்ததிகளுக்கு விவசாயத்தின் மீது அக்கறை கொண்டு வருமேயானால் அதுவே பெரிய ஆலமரத்திட்கான விழுது.

// நன்றி @@ ப்ரியா
எக்காரணம் கொண்டும் விவசாயம் எளிமைப் படுத்தப்பட வேண்டும், அப்போது பலன் கிடைக்க ஆரம்பிக்கும் //

உலகிலேயே கடுமையான வேலை எதுவென்றால் விவசாயம் மட்டுமே. விவசாயம் எளிமை படுத்தபடுமேயானால் சாதிப்பதற்கு வானமே எல்லை.

Anonymous said...

vivasayathirku naam thevaiku aathikamaana manithavalathai payanpaduthukirom endru oru karuthu nibunarkalaal munvaikapadukirathe aathi pattri uggal karuthu ?

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நந்தன்

நன்றி @@ சரவணக்குமார்

நன்றி @@ பாலாஜி

நன்றி @@ உழவன்

நன்றி @@ சேரல்

நன்றி @@ ஹுஸைனம்மா

நன்றி @@ கும்க்கி

நன்றி @@ பிரபு
//இதை தயவு செய்து நீங்கள் ஓர் எதிர் இடுகையாகவோ, எதிர் பின்னூட்டமாகவோ நினைக்க வேண்டாம். உங்களது தந்தை உங்களை படிக்க வைத்து சமுதாயத்தில் சிறந்த மனிதராக்க வேண்டும் என்று நினைத்ததில் எந்த தவறும் இல்லை. //

(அப்படி இல்லீங்க பிரபு,, என் தந்தை ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிந்த போதும், விவசாயத்தை சிறிதும் கைவிடவில்லை, இன்றும் வருமானம் என்பதையும் தாண்டி ஒரு மனத்திருப்திக்காக தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறார். தங்கள் பிள்ளைகள் சுகமாக நகர்புறங்களில் இருந்தாலும் தங்கள் விவசாய நிலம் தரிசாக, மலடாக போய்விடக்கூடாது என்றே ஒவ்வ்வொரு விவசாயியும் நினைக்கிறார்கள்)

//Anonymous said...
vivasayathirku naam thevaiku aathikamaana manithavalathai payanpaduthukirom endru oru karuthu nibunarkalaal munvaikapadukirathe aathi pattri uggal karuthu ?//

(நிபுணர்களின் கருத்து சரியாகக்கூட இருக்கலாம். ஆனாலும் விவசாயம் எளிமைப்படுத்தப்பட்டு சீர் படுத்தப் படும் போது இது களையப்படலாம்)

selvanambi said...

nice n need of the hour

முரளிகண்ணன் said...

மிக நல்ல பதிவு

saran said...

விவசாயம் பற்றி எழுதியிருகர கருத்து 100 % உண்மை . எதிர்காலத்துல employment exchange மூலமா இத்தன ஆளு களை எடுக்க வேணும் என்று கூப்டுவாங்க. மனித தேவை எல்லாம் பூர்த்தியனவுடனே ., everyone will do only agri work to get their food.

Unknown said...

தம்பி சேரலின் பதிவுதான் உங்களிடம் வர வழிசெய்தது. விவசாயம் சம்மந்தமான அருமையான பதிவு.

நான் கல்கத்தா நெடுஞ்சாலையில் இருக்கிறேன். நான்கு வருடங்களுக்கு முன்பு சாலையை விரிவுபடுத்த மரத்தை வெட்டுகிறேன் பேர்வழி என்று சாலையை மூளியாக்கினார்கள். பிறகு செடி வைத்து, மரமாகி நிற்கிறது. மீண்டும் சாலையை விரிவுபடுத்துகிறேன் என்று மரங்களை வெட்டுகிறார்கள். 100 கிலோ மீட்டருக்கு தோராயமாக 1000 மரங்கள் அழிக்கப்படுவதாக கேள்விப்பட்டேன். எங்கிருந்து பெய்யும் மழை.

இயற்கையுடன் விளையாடுகிறோம். இயற்கை விளையாடினால் கூண்டோடு கைலாசம் தான்.

ஈ ரா said...

படித்து முடித்தும் பாரமாக உணர்ந்தேன்... எங்கள் கைவிட்டுப்போன நிலங்கள் நெஞ்சிலே நெருடின...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ முரளிகண்ண

நன்றி @@ saran
(சோபியா... நீங்க சொன்னது நடந்தா மகிழ்ச்சி...)

நன்றி @@ கிருஷ்ண பிரபு
(முதலில் சேரலுக்கு நன்றி.
இயற்கையோடு அளவுக்கு மீறி விளையாடியிருக்கிறோம்)

நன்றி @@ ஈ ரா
(கடினமானதுதான்)

Anonymous said...

நீங்கள் எழுதிய அத்தனையும் உண்மை.எனக்கும் விவசாயம் பற்றி ஒன்றும் தெரியாது.வர போகும் காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது.காமராஜருக்கு பிறகு யாரும் அணை கட்டவில்லை என்பதை நினைக்கும் பொழுது ஆச்சர்யமாக இருக்கிறது.திராவிட கட்சிகள் தங்களை வளர்த்து கொள்வதில் ( குடும்பத்தை) ஆர்வம் காட்டுகிறார்கள்.குளங்கள் எல்லாம் மனைகள் ஆகிவிட்டன
இதற்கு முடிவு தான் என்ன?

சம்சுதீன்

Durai said...

Yes it's true..When an agriculture define the prices for their commodity then only agriculture will alive...other wise as like you and me are had moved some where for earning....!!

இராஜராஜேஸ்வரி said...

எந்த அரசாங்கம் அக்கறையோடு தேவையறிந்து, விவசாயிக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது அல்லது உதவியிருக்கிறது?//
இனியாவது உதவ வேண்டியது அவ்சியம்.

Unknown said...

இந்த பதிவு 2009 எழுதியிருக்கீங்க,இப்போ 2014 ல் விவசாயத்தின் நிலைமை இன்னும் கீழ்நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது...40 வருடம் எல்லாம் தேவையே இல்லை என்று தான் தோணுது.
பெரியவர் நம்மாழ்வாரின் இழப்பு குறித்து இங்கு யாருக்கும் சலனம்கூட இல்லை.அதைவிட தலைபோகிற விஷயம் நம்க்கு இருக்கிறதே..இந்த இழப்பின் அருமை வெகு விரைவில் தெரியவரும்...அதன் பின் ஏதாவது மாற்றம் வருமா பார்க்கலாம்?
வேறு வழியில்லை வந்தாகவேண்டும்.வயிறு இருக்கிறதே..