ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? - விமர்சனம்

கிளையிலிருந்து வேர் வரை வெளியாகி மூன்று ஆண்டுகளைக் கடக்கவுள்ள நிலையில், பூங்கொடி பாலமுருகன் அவர்களின் விமர்சனம்

ஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்? நெஞ்சைப் பிளந்து, உணர்ச்சிகளைக் கிளறி கண்கள் பனிக்கச் செய்யலாம்; கதறியழவும் வைக்கலாம்; கடல் பார்த்த சிறு பிள்ளை போல் கைதட்டி மகிழ வைக்கலாம்; செய்யும் பிழைகளை விரல் நீட்டிச் சுட்டலாம்; நாம் காணாத உலகங்களை கண்ணெதிரே நிறுத்தலாம்; கண்ட காட்சிகளை கவிதைப்படுத்தவும் செய்யலாம்; இன்னும் எத்துணையோ செய்யலாம். அத்துணையும் திறம்பட செய்கிறது ஈரோடு கதிர் அவர்களின் கிளையிலிருந்து வேர்வரை நூல்.

இலக்கியவாதிகள் மட்டும் புரிந்து கொள்ளும் ரகம் இல்லை. பாமரனும் புரிந்து கொள்ளும் வரம் இந்நூல். இதில் எங்கும் மிகைப்படுத்துதல் தென்படவில்லை. கதிர் அவர்கள் கண்ணோரம் கண்டவற்றை , காதோரம் கேட்டவற்றை, தன் நெஞ்ச குமுறல்களை சொல்லாக்கி இந்நூலை தந்திருக்கிறார். ஒவ்வொரு தலைப்பையும் இயல்பாய் கடக்க இயலாமல் நம் வாழ்வின் ஏதாவது தருணத்தைத் தொடர்புபடுத்தி நினைவுகளில் மூழ்கி பின் சற்று ஆசுவாசப்படுத்திய பிறகுதான் அடுத்த தலைப்பில் பயணிக்க இயலுகிறது.

* தந்தையிடம் கொஞ்சம் கூடுதலாய் தாய்மையை பிள்ளைகள் எதிர்பார்க்கிறார்கள் என்ற நிதர்சனத்தை நமக்கு உணர்த்திதான் நூலையே ஆரம்பிக்கிறார்.

* இயந்திரங்கள் வாழ்வை எளிமைப்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்திய பின்னரும் ஏன் இவ்வளவு பிசியாக இருக்கின்றோம் ? என்ற கேள்விக்கு நம்மை பதில் தேட வைக்கிறார்.

* அளவிடமுடியாத அன்புநூல் பிணைக்கப்பட்ட ஆயாவின் நினைவுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தமுடியாத வெறுமையை நம்மிடம் கடத்துகிறார்.

* சாவதற்கு தேவைப்படும் காரணங்களை விட வாழ கூடுதலாய் ஒரோரு காரணமாவது இருக்ககூடும் என்று கூறி வாழ்தலின் தேவையை வலியுறுத்திச் சொல்கிறார்.

* வாழ்தல் வேறு பிழைத்தல் வேறு என நயம்பட உரைத்து சிறகை விரித்து வானம் ஏகி வானத்தை வசப்படுத்த நம்மை விளிக்கிறார்.

* கனத்த இதயத்துடன் பக்கங்கள் கடக்கையில் தீடீரென்று கைப்பிடித்து தேர்நோம்பிக்குக்கு கூட்டிச்சென்று கண்கண்ணாடியும் , ஊதலும் வாங்கி குடுத்து ராட்டினத்தில் ஏற்றி விட்டுவிடுகிறார்.

* புத்தகம் நெடுகிலும் வாழ்வின் அழகியல் தென்படுகிறது. இன்பமும் துன்பமும் எப்படி இயற்கையி்ன் நியதியோ அதுபோல கனத்தமனதுடன் புத்தகத்தில் பயணிக்கும் போது ஒரு இலகுவான கட்டுரையால் மனதை லேசாக்குகிறார். உதாரணத்திற்கு ஆயாவின் இழைப்பை உள்வாங்கி மனம் கனமுற்று இருக்கையில் அட பழுத்த இலைதானே உதிர்ந்து இருக்கிறது, கவலைப்படாதே பயணம் செய்வோம் என லீ குவான் யூவின் தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

* தட்டில் விழும் சோற்று பருக்கையின் வரலாறு இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லையே என வருத்தப்பட்டு, தவறாய் இந்த தலைமுறையை வளர்கிறோமோ என சுய கழிவிரக்கத்தில் இருக்கும் போது ஓரம்போ ஓரம்போ என்று நுங்கு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து நம் கையில் திணித்து மனதை இலகுவாக்குகிறார்.

இப்படி புத்தகம் முழுவதும் இருளும் ஔியும் இயைந்ததுதான் வாழ்க்கை என்று இயல்பாய் சுட்டிக்காட்டிக்கொண்டே வருகிறார்.
மனம் கனத்த வேளையில் கண்ணீரை மறைக்க தனியறை சென்று விடுவேன். பிள்ளைகள் முன் உற்சாகமான அன்னையாய் மட்டுமே வலம் வருவேன். ஆனால் கதிர் அவர்கள் அப்பத்தா சிறுகதை தொகுப்பில் கோடி என்ற சிறுகதை படிக்கும்போது அவரின் உணர்வுகளை சொல்லில் வடித்திருப்பதை படிக்க படிக்க என்னையறியாமல் கேவி கண்ணீர் கொட்டியது. அதைக்கண்ட மூன்று வயதே ஆன என் மகள் தாவி என்னை அவள் நெஞ்சில் சாய்த்து அழாதீங்க அம்மா என்ற தாயாய் தேற்றிய கணம் நெஞ்சில் ஓவியமாய் தங்கிவிட்டது.

புத்தகத்தில் அவரின் தார்மீக கோபங்களையும் தெளிவுறுத்திக்கொண்டே தான் வருகிறார். முத்தாய்ப்பாய் தண்ணீரையும் , உணவையும் வீணடிக்காத சமூகத்தை உருவாக்க வேண்டுகோள் வைக்கிறார்.

மொத்தத்தில் இந்த புத்தகத்தை வாசித்தேன் என்பதைவிட நேசித்தேன் என்றே சொல்லலாம். வாழ்த்துகளும் , நன்றிகளும் பேரன்பும் ப்ரியங்களும் கதிர் ஸார்.

-

No comments: