அனுசரனையாக ஆட்சி செய்தல் எப்படி!?

மனிதர்கள் வாழ்வதற்கு சவால் மிகுந்த நாடுகளில் மாலத்தீவுகள் மிக முக்கியமானது என்பதில் சந்தேகமேயில்லை. மிகுந்த தட்டையான நிலப்பரப்பு கொண்ட மாலத்தீவு, அங்கு பயணிப்போருக்கு ஆச்சரியம் தரும் நிலம். விமானம் நெருங்கும்போதே... “அடேய்...எங்கடா கடலுக்கு நடுவே இறக்கப்போறீங்ளா!!?” என அதிர வைக்கும். விமான நிலையத்திற்கு ஒரு தனித் தீவு, தலை நகருக்கு ஒரு தனித் தீவு, சரக்கு விற்கும் ஹோட்டலுக்கு தனித் (செயற்கை) தீவு என அங்கு எல்லாமே தீவுக்கூட்டம் தான். 

ஆயிரக்கணக்கில் தீவுகள் கூடிக் கிடந்தாலும், மனிதர்கள் வசிப்பதென்னவோ கொஞ்சம் தீவுகளில்தான். அதுவும் தலைநகரிலிருந்து சில தீவுகளுக்குச் செல்ல நாள் கணக்கில் பயணிக்க வேண்டும். 

நன்றாக வாக்கிங் செல்லும் ஒருவருக்கு ஒரு மணி நேரம் இருந்தால் போதும் ‘மாலே’ எனப்படும் தலைநகரை ஒட்டுமொத்தமாய் அனைத்து வீதிகளின் வாயிலாக அளந்து பார்க்க... 

சுற்றுலா, மீன்பிடித் தொழில் என மக்கள் செழிப்பாகவே இருக்கிறார்கள். 2014ல் நான் பயணித்த போது குடிதண்ணீர் விலை இலங்கையை விடக் குறைவுதான். அதென்ன இலங்கையோடு ஒப்பீடு எனக் கேட்கிறீர்களா, அந்தக் குடி தண்ணீர் இலங்கையில் இருந்துதான் இறக்குமதியாகியிருந்தது. சமீபத்தில்கூட குடிநீர் பிரச்சனை எழுந்தபோது இந்திய போர் விமானங்கள்தானே தண்ணீர் கொண்டு சென்றன. மேலும் சில பொருட்கள் இந்தியாவைவிட விலைக் குறைவே.

இப்படியாக பல்வேறு புகழ் வாய்ந்த மாலத்தீவில் மீண்டும் அரசியல் விளையாட்டு ஆரம்பித்திருக்கிறது. ‘எப்ப முடிஞ்சது.. புதுசா ஆரம்பிக்கிறதுக்கு’ என அந்த அரசியல் அறிந்தவர்கள் கேட்கலாம். அதிபரை நீக்குவது, கைது செய்து சிறையில் போட்டு மிதிப்பது, நீதிமன்றத்தைக் கைப்பற்றுவது, படகில் குண்டு வைப்பது என மொத்த மக்கள் தொகையே ஐந்து லட்சத்திற்கு குறைவாகக் கொண்டிருக்கும் அவர்களின் சேட்டைகள் கொஞ்சநஞ்மல்ல.

மாலத்தீவின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் ‘பிடித்து’ வந்து நம் தமிழக அரசியல்வாதிகளிடம் ஒரு மாதத்திற்கு பயிற்சியெடுக்க வைத்து, எல்லாரும் “அனுசரனையாக” எப்படி ஆட்சி செய்ய வேண்டும் எனச் சொல்லித்தந்தால் என்ன!?


No comments: