இரு கலவரங்களும் தற்காலிக கொள்ளையர்களும்!


இது பெருநகரங்களுக்கு ஆகாத காலம் போன்று தோன்றுகிறது. கடந்த ஓர் ஆண்டுக்குள் தென் மாநிலங்களின் தலைநகரங்களை வெள்ளம் அடுத்தடுத்து ஆட்டிப் படைத்திருக்கின்றது. முதலில் சென்னை பின்னர் பெங்களூரு இப்போது ஹைதராபாத். இயற்கைப் பேரிடரைச் சமாளிக்க முற்படலாம், ஆனால் தடுக்கவோ தவிர்க்கவோ முடியாது.

ஆனால் தடுக்கவும், தவிர்க்கவும் கூடிய கலவரங்களைச் சமாளிக்க முடியாமல் நாம் திணறுவதை என்னவென எடுத்துக்கொள்வது. 1991ற்குப் பிறகு காவிரியை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட கோரமான கலவரத்தை பெங்களூருவும், 1998ற்குப் பிறகு மக்களை மிரள வைத்த கலவரத்தை கோவையும் ஒரே மாதத்தில் சந்தித்திருக்கின்றன.  இரு நகரங்களிலும் வசிக்கும் பரவலான மக்கள் பயமாய் இருக்கு எனச் சொல்லும் வகையில் கலவரக்காரர்கள் தங்கள் நோக்கத்தில் வென்றிருக்கின்றனர்.

பெங்களூர் கலவரத்தின் உண்மையான நோக்கம், காவிரி நீர் தங்களுக்குக் கிட்டாமல் போய்விடுமே என்பதையும் தாண்டி தமிழர்களின் சொத்துகளுக்கு இழப்பு ஏற்படுத்த வேண்டும் எனும் வெறி மட்டுமே இருந்தது. அன்றைய தினத்தில் கர்நாடகாவிற்குள் நுழைந்த தமிழக வாகனங்களையும், பிரபலமாயிருந்த தமிழர்களின் நிறுவனங்களையும் குறிவைத்து தாக்கியுள்ளனர். ஓட்டாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துகளை தேடிச்சென்று திட்டமிட்டு ஒட்டுமொத்தமாய் கொளுத்தும் அளவிற்கு, சொத்துகளை அழிக்க வேண்டும் என்ற அநியாய வன்மம் அதனுள் இருந்தது. அந்த எரிப்பும், அதன் மூலமாய் தரும் அழிவும், விடுக்கும் எச்சரிக்கையும் காவிரித் தண்ணீரோடு எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருப்பவை அல்ல என்றாலும், சொத்துக்களை அழிப்பதன் மூலம் ஒரு கொண்டாட்டம் எய்துவதை வன்ம மனம் விரும்பியிருக்கலாம்.

பெங்களூரு கலவரத்தின் இழப்புகள் யாவை என்பதை உணர்ந்தும் உணராமலும் மீள்வதற்குள் கோவையில் கலவரம். மதச்செயற்பாட்டாளார் ஒருவர் கொலையுண்டதற்காக தமிழகத்தின் மிக முக்கிய நகரமான கோவை நகரமே ஸ்தம்பிக்க வைக்கப்படுகிறது. ஊர்வலம் என்ற பெயரில் கலவரம் கட்டவிழ்த்துவிடப் படுகிறது.

பொதுவாகக் கலவரங்களின் காரணங்களாய், பாதிக்கப்பட்ட மனிதர்களின் கொந்தளிப்பான மனநிலை அமைந்திருக்கும்பாதிக்கப்பட்ட வலி அதில் கசியும். ஆனால் இந்த இரு கலரவங்களையும் பார்க்கும்போது பாதிக்கப்பட்ட உணர்வுகளைவிட, அரசியல் மற்றும் மதத்தின் சார்பில் போதிக்கப்பட்ட உணர்வுகளின் கொந்தளிப்பே கனன்று கொண்டிருந்ததை அறிய முடியும். 

இப்படியான பெருநகரங்களைக் குறி வைக்கும் கலவரங்கள் வெறும் உணர்ச்சி வயமானது என்பதையும் தாண்டி எங்கோ, எவ்விதமோ விரும்பி, வடிவமைக்கப்பட்டு வளர்ந்து நின்று அறிவியல் தொடர்புகளின் வழி விதைக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இந்தக் கலவரங்கள், மனதிற்குள் அந்த நகரங்களின் மீது, அவைகளின் வளர்ச்சி மீது அங்கேயே வசிப்பவர்களுக்கு முரணாய் எழுந்து உள்ளுக்குள் தேங்கியிருக்கும் நீண்ட கால வன்மம் மற்றும் பொறாமையின் வெளிப்பாடா என்பதை ஆராய வேண்டும்.

நகரத்தின் வளர்ச்சியில் நகரத்தில் இருக்கும் எல்லோருக்கும் பங்கு கிடைத்து விடுவதில்லை. சிலர் வளர்கிறார்கள். சிலர் அந்தந்த நிலைகளில் அப்படியே சமாளிக்கிறார்கள். சிலர் தேய்கிறார்கள். தேய்கிற நிலையில் உள்ள சிலருக்கு வளர்கிறவர்கள் மீதும், சமாளிக்கிறவர்கள் மீதும் ஆச்சரியம் இருப்பதைவிடப் பொறாமை மேலோங்கியிருக்கலாம். அப்படிப்பட்ட மனநிலை கொண்டோருக்கு, இம்மாதிரியான தருணங்கள் மிகப்பெரிய வடிகாலாக அமைகின்றன. தனித்து இருக்கும்போது உள்ளபடியே இருக்கும் அமைதியும், அச்சமும் மற்றவர்களோடு ஒன்று கூடும்போது பொங்கியெழுகிறது.

பெரிய தலைவர்களின் மரணங்களின்போது உணர்ந்த அதீதப் பதட்டம் நினைவுக்கு வருகின்றது. அந்த மாதிரியான பதட்ட காலத்தின் பாதிப்புகளில் ஒன்று, கடைகளை உடைத்து பொருட்கள் திருடப்படுவது. திருடப்படுவது என்பதைவிடக் கொள்ளையடிக்கப்படுவது என்பதுதான் சரியான சொல்லாக இருக்கும். எம்.ஜி.ஆர் இறந்தபோது ஏற்பட்ட பதட்டத்தைப் பயன்படுத்தி சென்னையில் பெரிய பெரிய கடைகளில் புகுந்து அதிலிருந்த டிவி உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கொள்ளையடித்து குறைந்த விலையில் விற்கப்பட்டதை ஒரு கதைபோல் வெகு சுவாரஸ்யமாக சென்னையைச் சார்ந்த நண்பர் ஒருமுறை விவரித்தார். சென்னை அளவிற்குப் பதட்டம் மற்றும் பாதிப்புகளை மற்ற நகரங்கள் அப்போது உணர்ந்ததாய் நினைவில்லை.
கோவைக் கலவரத்தில் கடையில் புகுந்து கிடைத்ததையெல்லாம் சுருட்டிக்கொண்டு ஓடும் கூட்டம் அதை நினைவுபடுத்துகிறது. காணொளியில் காட்டப்படும் அந்த செல்போன் கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த அனைவருமே தயக்கமின்றிக் கொள்ளையடிக்கின்றனர். கூட்டத்தோடு உணர்ச்சிப் பெருக்கில் உள்ளே நுழைகையில் அவர்கள் அனைவருக்கும் திருட்டு எண்ணம் இருந்திருக்குமா எனத்தெரியவில்லை. ஆனால் உள்ளே புகுந்தவுடன் சிறிதும் மனக்கூச்சமும், தயக்கமுமின்றி வெறியோடு கொள்ளையை நிகழ்த்துகிறார்கள். எதுவும் கிடைக்காத ஒருவன் மேசைக் கண்ணாடியை தள்ளிவிட்டு நொறுக்குகிறான். கண்ணில் பட்டதை எடுக்கும் கணப்பொழுதில் தாம் திருடனாய் மாறிவிட்ட ஆபத்தை, அவர்களே அந்தக் காணொளியைக் காணும் போதாவது உணர்வார்களா?

அந்தக் கூட்டத்தினரின் சராசரி வயது இருபதிலிருந்து முப்பதுக்குள் இருக்கலாம். அவர்களின் பெரும்பாலானோர் திருமணம் செய்து வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் நுழையாதவர்களாக இருக்கலாம். ஒரு கலவரத்தைப் பயன்படுத்தி அல்லது கலவரத்தை உருவாக்கிக் கொள்ளையடிக்கலாம் என்ற மனோபாவம் அவர்களுக்கு எங்கிருந்து அறிமுகமாகியிருக்கும் என்பதே ஆச்சரியமாக இருக்கின்றது. இம்மாதிரியான தருணங்களில்தாம் திருடியது எவ்விதத்திலேனும் கதாநாயக மனோபாவத்தைக் கொடுத்தால் அதுவே கொடும் சாபம்.

அந்தக் காணொலியின் பிறிதொரு ஆபத்தாக நான் உணர்வது, இனி கலவரத்திற்கான வாய்ப்புக் கிடைத்தால், அதன் மூலம் கொள்ளையை ஏகபோகமா நிகழ்த்தலாம் அல்லது கொள்ளையடிப்பதற்காகவே கலவரத்தில் பங்கெடுக்கலாம் என்பதும் தான்.

வாழ்க்கையைத் தொடங்கும் முன்பே தான் ஒரு கொள்ளைக்காரனாக மாறிப்போகும் அளவிற்குதான் அங்கு திருடிய ஒவ்வொருவரும் தம் மீது சுய மதிப்பு கொண்டிருந்திருக்கிறார்கள் எனக் கருத வேண்டியும் வருகிறது. கலவரத்தில் கொள்கையும் நோக்கமுன்றி அழிவு மட்டுமே நோக்கமென வேட்டையாடும் அவர்களை காலம் தன் பங்கிற்கு குற்றவாளியாக்கி வேட்டையாடுகிறது என்பது அவர்களுக்கு புரிய, அவர்களுக்கு வாழ்க்கை என்பது எதுவெனப் புரிதல் அவசியம்.

-

நன்றி :  தி இந்து