மன்னிப்பு என்கிற இன்னொரு கதவு



சேலம் மாவட்டத்தையும் ஈரோடு மாவட்டத்தையும் வகுந்து கொண்டு ஓடுகிறது காவிரி. இடது கரையில்தான் மைதிலி பிறந்து வளர்ந்தது. வலது கரையில் இருக்கும் கிராமம் ஒன்றில்தான் மைதிலியின் அம்மாயி வீடு. இங்கிருந்து பார்த்தால் மறுகரையில் இருக்கும் கிராமத்தின் கோபுரம் தெரியும். நோம்பிக்கும், விடுமுறைக்கும் கால் நூற்றாண்டு காலம் காவிரியைக் கடந்து செல்வதே வாடிக்கையாகிப் போனது.

காவிரி பருவத்திற்கு தகுந்த மாதிரி வடிவம் கொள்ளும். அணை சுண்டிப்போகும் காலத்தில் மணலும் பாறையும், தேங்கிய குட்டை நீருமென நடந்தே காவிரியைக் கடந்துவிடலாம். ஓரளவு தண்ணீர் ஓடும்போது சுழன்று சுழன்று செல்லும் பரிசலில் போய்விடலாம். பெருக்கெடுத்து ஆர்ப்பரிக்கும் காலமெனில் தூரத்தில் இருக்கும் பாலத்தின் வழியேதான் கடக்க முடியும். இதனால் அறியப்படும் சேதி யாதெனில் காவிரிக் கரையிலிருந்த மைதிலிக்கு தண்ணீர் எப்போதும் தோழமையானது.

அவளைக் காவிரிக் கரையிலிருந்து உலகின் இரண்டாவது மிக அழகிய கடற்கரை நகரத்திற்கு கடத்திப்போனது காலம். அதன்பின் பெரும்பாலும் தண்ணீர் பஞ்சத்தையும், எப்போதாவது மழைச் சீற்றத்தையும் கடந்து வந்தவளுக்கு சென்னையில் சொந்த வீடு கட்ட வேண்டுமென்ற கனவு கனிந்தது. ”சென்னைக்கு மிக அருகில்…. நல்ல காற்றோட்டம்…. சுத்தமான குடிநீர்….” அப்படியான விளம்பரங்களில் காட்டப்படுவது மாதிரியான ஒரு நிலத்தில் வாழ்நாளின் சேமிப்புகளைக் கொண்டு இரண்டடுக்கு வீடு நிமிர்ந்து நின்றது. தரை தளம் வாடகைக்கு, முதல் தளம் தங்களுக்கென சமீபத்தில்தான் குடி பெயர்ந்திருந்தார்கள். வீட்டிற்கு இந்த தீபாவளிதான் தலை தீபாவளி… ஆனால் தீபாவளி தீராத வலியாகிப் போகுமென கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. கணவன் ஆன்சைட்டுக்கு வெளிநாடு பறந்திருக்க, பேத்தியும் பேத்தியின் பத்து வயது மகளும் தனியே இருப்பார்களே என ஊரில் இருந்து பாட்டி வந்து உடன் இருக்கிறார்.

ஏரிகளிலிருந்து ஐயாயிரம், பத்தாயிரம், இருபதாயிரம் என தண்ணீர் திறப்பு ஏலம் விடப்பட்டபோதெல்லாம் லட்சங்களில் கரைபுரண்ட காவிரியாற்றங் கரைக்காரிக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. விடியலொன்றில் எங்கிருந்து வந்தது எப்படி வந்தது எனத் தெரியவில்லை வாடகைக்கு வைத்திருந்த கீழ் வீட்டின் சன் சேடுகளுக்கு மேல் தண்ணீர் அலையடித்துக் கொண்டிருந்தது. கண்ணிற்கு எட்டிய தூரம் வரையில் சுழித்து நகரும் செந்நீர். காவிரியின் ஆர்பரிப்பைக் கண்டிருண்டிருந்தவளுக்கு வீட்டைச் சுற்றிலும் காவிரி கரை புரண்டோடுவதுபோல் பார்க்க உண்மையில் பயம் சூழ ஆரம்பித்தது. ஊருக்குப் போயிருந்த குடித்தனக்காரர்களுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. படகுகள் போவதை பத்து வயதுக் குழந்தை ஆச்சரியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. படகு வந்து பத்திரமாக அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் விட்டார்கள். காத்திருந்த தோழியின் குடும்பம் அழைத்துச் சென்றது.

நடந்ததை நம்ப முடியவில்லை. நீர் மட்டம் குறையத் துவங்கியது. வாட்சப்பில் வெள்ளக் காட்சிகள் காணொளிகளாய் வந்து குவிந்தன. பார்க்கப்பார்க்க பீதி கூடியது. சுவற்றில் வண்ணம் மாற்றி கோடு போட்டதோடு வெள்ளம் கரைந்து போயிருந்தது. ”என்னதான் இழப்பு” எனக் கணக்கிட்டுவிட முடியாத அளவிற்கு குடித்தனக்காரர் குமைந்து போயிருந்தார். இரு சக்கர வாகனத்திற்கு மூன்றாயிரம் செலவானதோடு வெள்ளத்தின் கதை மைதிலியைப் பொறுத்த வரை முடிந்து போயிருந்தது.

ஆனால் காலம் முடித்து வைக்கவில்லை. குலைந்திருந்த குடித்தனக்காரர் எல்லாம் சுத்தம் செய்து சற்றே நிமிர்ந்த நேரம்… மீண்டும் மழை. அவர்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியேறிவிட, கீழ் வீட்டிற்குள் மீண்டும் தண்ணீர் பிரவேசிக்கத் தொடங்கியது. வானம் கிழிந்ததுபோல் இடைவிடாது ஊற்றிக்கொண்டேயிருந்தது. இரவு எட்டு மணிக்கு கீழ் வீட்டின் சன் சேட் மூழ்கத் துவங்கியது. மின்சாரம் இல்லை. மைதிலியின் கை பேசியிலிருந்து பத்து வயதுக் குழந்தை குறுந்தகவல் அனுப்பியிருந்தாள் “பயமா இருக்கு, நீங்க ஹெல்ப் பண்ண முடியுமா?” கை பேசி அழைப்புகள் கிட்டத்தட்ட முடங்கிவிட்ட கொடும் இரவு. நானூரு கி.மீ தொலைவு செவ்வாய் கிரகத்துக்கான தொலைவு போல் உணரப்பட்டது. புதன் விடியலில் ’இன்னும் இரண்டு படி தான் மிச்சம்’ என்ற குறுந்தகவலோடு மைதிலியின் கை பேசி உயிரை விட்டது. எந்த அஸ்திரங்களைப் பிரயோகித்தும் அடுத்த 48 மணி நேரத்திற்கு எட்ட முடியவில்லை. வெள்ளி காலை உயிர்பெற்ற கைபேசி வழியே ”முகாமில் தங்கியிருக்கிறோம்” எனும் தகவல் மட்டும் வந்தது.

எல்லா வடிவங்களிலும் காவிரியைக் கண்டிருந்தவள் சென்னையின் ’வரலாறு காணாத’ வெள்ளத்தில் உருக்குலைந்து, கரைந்து, உறைந்து போயிருந்தாள். விரக்தி மேலிட்டிருந்தது. பாட்டியின் பதற்றத்திற்கு தான் உதிர்க்கும் சொற்களால் ஒருபோதும் அவளால் திருப்தி செய்திட முடியவில்லை. குழந்தை, அம்மா, கொள்ளுப்பாட்டி என மூவரும் மின்சாரம் தொலைந்த, சலசலக்கும் மழையில், ஓங்காரமாய் கொக்கரித்த வெள்ளத்தின் மத்தியில் இருந்த 48 மணி நேரத்திலிருந்து இன்னும் மீண்டதாகத் தெரியவில்லை.

ஊருக்கு வந்தவர்கள் சென்னைக்கு புறப்படாமல் உறைந்த மௌனத்தோடு இருக்கும் ஒரு நாளில் அந்த பத்து வயதுக் குழந்தை வெள்ளம் பற்றிய கதையை தன் போக்கில் சொல்ல ஆரம்பித்தாள். ”இப்படி பாப்பாவை படுத்துன அந்த மழையை எதாச்சும் பண்ணியே ஆவனும்” எனச் சொன்ன மைதிலியின் அம்மாவிடம் “அம்மாயி… நீ ஒன்னும் பண்ணாதே…. நான் அந்த மழையை மன்னிச்சிட்டேன்” என்றாள். 
அந்த மன்னிப்பில் மேகங்கள் உறைந்து போயிருக்கும் சாத்தியமுண்டு.




1986ல் நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்தின் வடுக்கள் கிழக்கு ஐரோப்பாவில் நீண்ட வருடங்களாக நீடித்தபடிதான் இருக்கின்றன. விபத்து நடந்து நான்கு ஆண்டுகள் கழித்து தான்யா @ டட்சியான க்விட்ஸ்கோ எனும் ஒரு பெண் குழந்தை பெலாரஸ் நாட்டில் பிறந்தாள். செர்னோபில் சாபம் அவளையும் சபித்தது. இடது காலில் பாதம் இல்லை. வலது காலில் மூட்டுக்கு கீழே எதுவுமே இல்லை., இடது கையில் மூன்று விரல்களும், வலது கையில் ஒரு விரலும் மட்டுமே. குழந்தையின் நிலை கண்டு மிரண்ட பெற்றோர்கள் மனதை கல்லாக்கிக்கொண்டு பாதிக்கப்பட்ட குழந்தைகள் வசிக்கும் ஒரு பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கின்றனர்.

நான்கு ஆண்டுகள் கழித்து ஒரு தம்பதியினர் தான்யாவை தத்தெடுக்கின்றனர். ஆறு வயதாக இருக்கும் போது அமெரிக்க அமைப்பு ஒன்றின் உதவி கிட்டுகிறது. காலம் அவள் கால்களுக்கு நடக்கும், ஓடும் வகையிலான பிளேடுகளை வழங்குகிறது. இப்போது அவளுக்கு 24 வயதாகிறது. உலகம் கொண்டாடப்படும் வகையிலான ஒரு பிளேடு ரன்னர் ஓட்டப் பந்தய வீராங்கனையாகவும், உடல் கட்டமைப்பாளராகவும் ஜொலிக்கிறார்.

தான்யாவின் சாதனைகளைக் கொண்டாடுவதும், அடைந்த பாதைகள் குறித்து விவரிப்பதும் அல்ல இதன் நோக்கம். தத்து பெற்றோர்கள் அரவணைப்பில் அன்பாக வளரும் தான்யா பதின் வயதில் பயணிக்கும் போது யதேச்சையாக அவளின் தத்து அம்மாவின் 13 வயது நிழற்படத்தைப் பார்க்கிறாள்.  படத்தில் இருக்கும் பதின்வயது அம்மா முகம், தினந்தோறும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கின்றது. இன்ப அதிர்ச்சியில் தவிக்கிறாள். அம்மாவிடம் இது எப்படி எனக் கேட்கும்போது உண்மை புரிகிறது தன்னை பாதுகாப்பு மையத்தில் தத்துக்கொடுத்த அவளின் உண்மையான பெற்றோர்களே நான்கு ஆண்டுகள் கழித்து தத்தெடுத்திருக்கிறார்கள்.

தான்யாவின் பிறப்பு அவள் விரும்பியதாக இருக்க முடியாது. அது பெற்றோர்களின் காதலினாலோ, காமத்தினாலோ மட்டுமே நிகழ்ந்திருக்க வேண்டும். தான்யாவிற்கு கால்கள் இல்லாது போனதும், கைகளில் ஆறு விரல்களும் அற்றுப்போனதும் பேராசையின் குற்றம்; அல்லது அறிவியலின் பிழை. அதன் பலனாக தான்யா உடலால் வஞ்சிக்கப்பட்டு, இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டு மனதளவிலும் தண்டிக்கப்பட்டாள்.

தான்யா வாழ்க்கை உலகம் கொண்டாடப்படும் ஒரு சரித்திரமாக மாறியிருக்கிறது. சரித்திரத்தில் எது முக்கியமான பக்கமாக இருக்கும்? அவள் தத்து கொடுக்கப்பட்ட தினமா? தத்து எடுக்கப்பட்ட தினமா? கால்களில் பிளேடு பொருத்தப்பட்ட கணமா? தன் திறனை உணர்ந்த கணமா? சாதனைகளை நிகழ்த்திடும் கணங்களா?

அதையெல்லாம் விட மிக முக்கியமான ஒரு கணம் இருக்கின்றது. தத்தெடுத்த அம்மாதான் தன்னை ஈன்றவளும், தத்துக்கொடுத்தவளும் என்பது தெரிந்து, அவளை மன்னித்து மாறா அன்பை நீட்டித்த அந்தக் கணம்தான் அவளின் சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் வடிக்கப்படும் பக்கமாக இருக்கும். 

அந்த மன்னிப்புதான் உலகின் மிக உயரிய ஒரு ’மன்னிப்பாக’ இருக்க முடியும்.

-

மிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு எனும் வசனம் இக்கணத்தில் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லைதான். உண்மையில் மன்னிப்பு என்பது முற்றிலும் மறுக்கக்கூடியதா? அல்லது முற்றிலும் தரக்கூடியதா என்பதை சூழல்களும், தருணங்களும் மட்டுமே முடிவு செய்ய வேண்டியவை.

பத்து வயது குழந்தையால் தங்களுக்கு அவ்வளவு பேரிடர் அளித்த மழையை மன்னிக்க முடிகின்ற போது, தன்னை வேண்டாமென ஒதுக்கி, பின் தத்தெடுத்த பெற்றோரை தான்யாவால் மன்னிக்க முடிகின்ற போது மன்னிப்பு என்பது ஒருபோதும் வழங்கிட முடியாத ஒன்று என நினைப்பவர்களுக்கு இன்னொரு கதவு இருக்கின்றது என அடையாளம் காட்ட முடியும் தானே!

மன்னிப்பு என்பது சில இடங்களில் இயலாமையாலும், கோழைத்தனத்தினாலும், கழிவிரக்கத்தினாலும் கொடுக்கப்பட்டதாக நினைத்தாலும் பல இடங்களில் அது பெருங்கருணையாகவும், மாவீரத்தின் வெளிப்பாடாகவும்தான் வழங்கப்படுகின்றன.

வெறென்ன…. 
இதுவரை மன்னிக்க இயலாத ஒருவருக்கு மன்னிப்பு வழங்குவது பற்றி ஒரு கணம் யோசித்தால்தான் என்ன?

-

நம்தோழி ஜனவரி’ 2016 இதழில் வெளியான கட்டுரை

-

2 comments:

chandrasekaran said...

கணமேணும் சிந்திக்க கூடிய தவறா இது.!

'பரிவை' சே.குமார் said...

அருமையான கட்டுரை அண்ணா...