குரங்குப் பேனா சூத்திரம்



ரெயான் பிலிப் நம் வீட்டிலோ அல்லது நெருங்கிய உறவிலோ அதி அழகாய் இருக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு செல்லக் குழந்தையின் பிம்பம்தான். அந்த முகமும், கண்களும், அவன் விளையாட்டும், குறும்பும் அவனைப் பார்க்கும் எவருக்கும் அவனைப் பிடிக்கும்.

தொலைக்காட்சி சமையல் குறிப்பு படப்பிடிப்பு ஒன்றில் அவன் அம்மா பங்கெடுத்துக் கொண்டிருக்கும்போது இடையில் புகுந்து மொத்த உப்பையும் உணவுப் பண்டமொன்றில் கொட்டி நிலைகுலையச் செய்கிறான். நண்பர்களை ஒன்றாக கூட்டுச் சேர்த்துக்கொண்டு வகுப்பிற்கு தாமதமாகச் செல்கிறான். மறந்தும் கூட வீட்டுப் பாடம் செய்துவிடுவதில்லை. கணக்கு வீட்டுப் பாடம் செய்யாததற்காக தண்டிக்கும் வகுப்பாசிரியரிடமிருந்து தப்பிக்க நன்றாகப் படிக்கும் வகுப்புத் தோழியை காதலித்து திருமணம் செய்து கொண்டால் போதுமென நினைத்து காதல் கடிதம் கொடுக்கிறான்.

நன்றாகப் படிக்கும் சக மாணவன் டெசிமலை சண்டை ஒன்றில் கூர்மையான பென்சில் கொண்டு அவன் பின் பக்கம் குத்துகிறான். டெசிமலி அப்பா வீட்டுக்கு வந்து சண்டை போடும்போது ”கடவுளின் சுவை அன்பு” என சற்று முன் அப்பா ராய் பிலிப் சொன்னதையே நினைவூட்டி தப்பித்துக் கொள்கிறான். அடுத்த நாள் அது குறித்து பள்ளி முதல்வரிடம் புகார் வருகிறது. ஒரு  டாக்டரிடம் போய் ’மாறுவேடப்போட்டி’ எனச் சொல்லி தலையிலும், கையிலும் கட்டுப் போட்டுக்கொண்டு வந்து டெசிமல் தன்னை அடித்து கையை ஒடித்துவிட்டதாகப் பொய் சொல்லி தப்பித்துக்கொள்கிறான்.

”நாளை கணக்கில் வீட்டுப் பாடம் செய்யவில்லையென்றால் பள்ளி அசெம்பளியில் வைத்து ’ஆகச்சிறந்த முட்டாள் ரெயான்’ என அறிவிப்பேன்” என கணக்கு ஆசிரியர் பப்பன் மிரட்ட அவன் அதிர்ந்து போகிறான். கணக்குப் பாடம் கசக்கிறது. கணக்கை நினைத்தால் உறக்கத்திலும் வகுப்பிலும் அப்படியே சிறுநீர் கழித்துவிடுபனாக இருக்கிறான். கணக்கை நினைத்து கலங்குபவனை கனவில் கடவுள் தோன்றி வருடிக்கொடுத்து சமாதானப்படுத்தி ஆற்றுப்படுத்துகிறார்.

காலையில் பதட்டத்தோடு பள்ளி செல்லும்போது எதிரில் வரும் காரைக் கண்டு மிரண்டு, காரில் இருக்கும் முதியவரோடு சண்டை பிடிக்கிறான். “போடா கெழவா” எனத் திட்டிவிட்டுக் கடக்கிறான். பள்ளியில் பப்பன் தவறவிடும் கைபேசியை எடுத்து, முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்து அவரை போலீஸில் சிக்க வைக்கிறான்.

முன்பு ஒருமுறை சாலையில் திட்டிவிட்டுச் சென்ற தாத்தாவை, திருமண நிகழ்வொன்றில் சந்திக்கிறான். அங்கும் சண்டை துளிர்க்கிறது. தாங்கள் தாத்தா பேரன் என்பது தாத்தாவுக்கும் பேரனுக்கும் புரிகிறது. விடுமுறைக்கு கப்பல் கேப்டனாக இருந்த தாத்தா வீட்டிற்கு அப்பாவால் வலிந்து அனுப்பப்படுகிறான். தாத்தா அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. விரட்டிவிடுகிறார். சுற்றுச்சுவர் தாண்டிக் குதித்து உள்ளே செல்கிறான். நாயை விட்டு விரட்டுகிறார். நாயை வசியப்படுத்தி வருடிக்கொடுக்கிறான். தன் குறும்புகளால், செயல்பாடுகளால் அவரை ஏற்றுக்கொள்ள வைக்கிறான் ரெயான்.

விடுப்பு முடிந்து தாத்தா வீட்டிலிருந்து திரும்பும்போது அதிசய சக்தி வாய்ந்த ஒரு குரங்குப் பேனாவை எடுத்து வருகிறான். அந்தப் பேனாவின் கதை நம்பமுடியாத அதிசயம் கொண்டது. அதை வைத்திருப்பவர்களுக்குச் சிக்கல் வரும்போது, இரவில் குரங்கு பேனா சிக்கலுக்கான தீர்வுகளை எழுதி வைத்துவிடுகிறது. வழக்கம்போல் அன்றைய நாளும் வீட்டுப்பாடம் செய்யாமலேயே உறங்குகிறான். அடுத்த நாள் வகுப்பில் வீட்டுப்பாடங்கள் பரிசோதிக்கப்படும்போது, வகுப்பிலேயே ரெயான் மட்டுமே கணக்கில் வீட்டுப்பாடம் செய்தவனாக இருக்கிறான். நண்பர்கள் அதிர்ச்சியில் கேட்க அது ”குரங்குப் பேனா” செய்த மகிமையாக இருக்கலாம் என்கிறான். குரங்குப் பேனாவும் தான் சொல்லும் மாற்றங்களைச் செயல்படுத்தினால், வீட்டுப்பாடத்தில் உதவுதாகச் சொல்கிறது. ஒப்புக்கொள்கிறான்.

பள்ளியில் ”ஆசிரியர்களைச் சந்திக்கும்போது பணிந்து நின்று வணக்கம்” சொல்லச் சொல்கிறது. ரெயான் அவ்வாறே செய்கிறான். அத்தோடு அதை பள்ளியில் இருக்கும் வானொலி மூலம் அனைவருக்கும் பரிந்துரைக்கிறான். மாற்றங்களை பள்ளி ஏற்றுக்கொள்கிறது. அதை ரசிக்கிறது. அனுபவிக்கப் பழகுகிறது.

இரண்டாம் நாள் ”புன்னகையோடு அன்றைய நாளைத் துவங்கு” என்கிறது. அவனும், அவன் பள்ளியும் அதைப் பின்பற்றுகிறார்கள்

மூன்றாம் நாள் ”மதிய உணவு பாத்திரத்தை சுத்தம் செய்ய” அறிவுறுத்துகிறது. எல்லோரும் அந்த மாற்றத்தை செயல்படுத்துகிறார்கள்.

நான்காம் நாள் ”வகுப்பறையையும், சுற்றத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள” சொல்கிறது. அனைவரும் அவரவர் வகுப்பறையை சுத்தம் செய்கின்றனர்.

ஐந்தாம் நாள் பள்ளி முதல்வரை வம்பிழுத்து, சவால் விடுத்து அவரை ஒரு வகுப்பறைக்குள் நுழையச் செய்கிறான் ரெயான் அங்கே அவருடைய பிறந்தநாளை அனைவரும் கொண்டாடுகிறார்கள். கலங்கிப்போகிறார் முதல்வர். ”பிறந்தநாளில் வாழ்த்துச் சொல்லி ஆசிரியர்களை ஆச்சரியப்படுத்துங்கள்” என்பதுதான் குரங்குப்பேனாவின் அறிவுரை.

ஆறாம் நாள் “தான் உண்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்” எனச் சொல்கிறது. எப்போதும் ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கும் முதல்வர் தன்னிடம் இருக்கும் மற்றொரு ஆப்பிளை அலுவலக உதவியாளரோடு பகிர்ந்து கொள்கிறார்.

மாற்றங்கள் வெகுவேகமாக நிகழ்ந்தேறி நல்ல பழக்கங்களாகி விடுகின்றன. குரங்குப் பேனா வீட்டுப்பாடங்களை நேர்த்தியாக செய்து தர, பள்ளியிலும் அற்புதமான செயல்களை தினந்தோறும் அறிவித்து நல்ல மாற்றங்களுக்கு
வழிவகுத்த ரெயான் அந்த ஆண்டின் சிறந்த மாணவனாக தேர்ந்தெடுக்கப்படுகிறான். வீட்டுப்பாடத்திற்காக அவன் காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்பிய அந்த மாணவி அவனையும் பிடித்திருக்கிறது எனச் சொல்கிறாள். அடுத்த நாள் பள்ளி வாகன விபத்தில் மடிந்து போகிறாள்.

ரெயான் கலங்கிப் போகிறான். அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு ”நான் கெட்ட பையனா அம்மா?” என அழுகிறான். ”நீ செய்தது தப்புனு உணர்ந்ததால நீ கெட்ட பையன்னு தோணுது. அப்படித் தோணுதினாலேயே நீ நல்ல பையன்” எனச் சமாதானப் படுத்துகிறாள் அம்மா. தோழியின் நினைவாக பள்ளிப் போக்குவரத்து குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வுக்கு வழிசெய்கிறான்.

இப்போது ரெயான் அனைவருக்கும் பிடித்த குழந்தையாகிப் போகிறான். அழகிய கடற்கரையில் அமர்ந்திருக்கும் அந்த இறுதிக் காட்சியில் அப்பா ராய் பிலிப் வருகிறார். அவனோடு மென்மையாகப் பேசிக்கொண்டிருக்கிறார். அவனுக்கு நிறைய உணர்த்துகிறார். அவர் திரும்பிச் செல்லும்போது ”அப்பா” என அழைக்கிறான். அவர் திரும்பிப் பார்க்க “ஹோம் வொர்க் செய்தது நீங்களா!?” எனக் கேட்கிறான். “எந்த ஹோம்வொர்க்!?” எனச் கேட்டுவிட்டு திரையில் நம்மை நோக்கி மெலிதாய் ஆனால் அழுத்தமாகவும் அழகாகவும் புன்னகைக்கிறார்.

அது வெற்றியின் புன்னகை. திடத்தின் புன்னகை. பொறுமையின் புன்னகை. அதையெல்லாம் விட நல்லதொரு தந்தைமையின் புன்னகை. அசாத்திய சக்தி கொண்டிருந்த அந்த குரங்குப் பேனா என்பது அந்த தந்தைதான் என்பதை அந்தப் புன்னகை நொடிப்பொழுதில் உணரவைத்து அந்த தந்தைமைக்காக எழுந்து நின்று கை தட்டி வணக்கம் செலுத்த வைக்கிறது
 


”பிலிப்ஸ் அன்ட் த மங்கிப் பென்” 2013ல் வெளியான ஒரு மலையாளப் படம். தமிழில் சொல்ல வேண்டுமென்றால் ”பிலிப்ஸ் குடும்பமும் ஒரு குரங்குப் பேனாவும்” சமீப ஆண்டுகளில் மிக அதிக முறை நான் பார்த்த படம். இன்னும் பார்க்க விரும்பும் படமும் கூட.

எல்லா வீடுகளிலும் இவ்வாறாகத்தான் ஒரு குழந்தையோ, ஒரு உறவோ ஒன்றுக்கும் ஆகாதவர்களாக, முரட்டுத்தனமானவர்களாக, தகாத செயல் செய்பவர்களாக, செயல்படாதவர்களாக அமைந்துவிடுகின்றனர். நமக்கும் அவர்கள்தான் நம் வாழ்க்கையின் மிகப் பெரிய குறைபாடாக, புலம்பலின் முதல் எழுத்தாக அமைந்துவிடுகின்றனர். இனி எவ்விதமும் அவர்களை மாற்றவோ, திருத்தவோ முடியாதென ஆழமாக மற்றும் திடமாக நம்புகிறோம். வாழ்தலில் பிழைத்துப்போகும்போது, அந்த அவநம்பிக்கையை மிகப் பெரிய காரணமாகச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயல்கிறோம்.

ரெயான் பிலிப்ஸுக்கு கிடைத்தது போல், அசாத்திய மாய சக்தி கொண்ட குரங்குப் பேனா, சிறியவர்களோ பெரியவர்களோ ரெயான் போன்று சிக்கல் கொண்டிருப்பவர்களுக்கு கிடைத்துவிட்டால் போதும்…. அவர்களும் தங்களுக்குள்ளும், தங்களைச் சுற்றியும் மாற்றங்களை உருவாக்கிக்கொண்டு, அதைப் பழக்கப்படுத்தி நல்லவர்கள் என்றதொரு அடையாளத்திற்குள் வந்துவிட முடியும்.

அழுத்தமாகச் சொல்ல விரும்புவது அப்படியானதொரு குரங்குப் பேனா கிடைப்பது ரெயான்களின் கையில் இல்லை. அது அவர்களைச் சுற்றியும் ’நீ சரியில்லாதவன்’, ’மக்கு’, ’முட்டாள்’, ’ஒன்றுக்கும் உதவாதவன்’ என முழக்கம் எழுப்பும் நம் கையில்தான் இருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த குரங்குப் பேனாவாக மாற வேண்டியதே நம்முடைய மிக முக்கியக் கடமையாகும். குரங்கிலிருந்து வந்தோம் என அறிவியல் சொல்லும் போது உடனிருப்பவரை நல்வழிப்படுத்த, செம்மைப் படுத்த, மீட்டெடுக்க குரங்குப் பேனாவாக மாறுதல் ஒன்றும் இழுக்கல்ல. அதைவிட அது மிகச் சிரமமானதும் அல்ல.


-

“நம் தோழி” அக்டோபர் இதழில் வெளியான கட்டுரை

1 comment:

Ahila said...

அருமையான திரைப்படமும் அதை அலசிய உங்களின் எழுத்தும் பாராட்டுக்குரியவை கதிர். குழந்தைகளின் உலகுக்குள் நம்மில் யாரோ ஒருவர் துணையாய் இருக்கவேண்டும் என்ற உண்மையை கதையின் சுருக்கத்தைத் தொடர்ந்த உங்கள் எழுத்தில் புரிய வைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள் நண்பா.