நிறைந்திருக்கும் போதாமைஏதோ ஒரு போதாமையிலிருந்துதான் அவர்கள் புலம் பெயர்ந்து வந்திருக்கிறார்கள். புலம் பெயர்தல் என்பது அவ்வளவு எளிதானதல்ல. அதே சமயம் சூழல் நெருக்கும்போது அதுவொன்றும் அவ்வளவு கடினமானதுமல்ல. நகரின் வெளிப்புறங்களிலெல்லாம் அவர்கள் அதிகமாகத் தென்படுகிறார்கள். என்னதான் இந்தியன் என்று சொல்லிக்கொண்டாலும் அவர்களின் முகவெட்டு சற்றேனும் வேறுபட்டிருக்கின்றதை மறுக்க முடியாது. முகவெட்டிலிருந்து தலைமுடி, உடல் வாகு, அவர்கள் உடுத்தும் உடை, அணியும் செருப்பு, கையில் கட்டியிருக்கும் கயிறு என எல்லாமே சற்று அந்நியத் தன்மையைக் காட்டுகிறது.

உடல் உழைப்பைக் கோரும் எல்லாம் நிறுவனங்களிலும் அவர்கள் மெல்ல மெல்லக் கலந்துவிட்டார்கள். ஆங்காங்கே பணியாற்றும் அவர்களுக்குள் ஒரு வலைப்பின்னல் ஏற்பட்டுவிடுகிறது. வந்திறங்கிய மூன்று நான்கு மாதங்களுக்கு பிரமிப்பாக இருக்கும் இந்த மண்ணும் மனிதர்களும் அட இவ்வளவுதானா என பழகிப்போகுமொரு தினத்திலிருந்து அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்குமென இடமாறிக் கொண்டேயிருக்கிறார்கள்.

நகரத்தின் மிக முக்கியமான இரண்டு குடியிருப்புப் பகுதிகளின் நடுவே தினம்தோறும் நான் வரும் வழியில் வரிசையாக ஐந்து வீடுகள் இருக்கின்றன. ஐந்தும் வீடுகள் என்றெல்லாம் சொல்ல முடியாது. நீளமான ஒரு கட்டிடத்தில் நான்கு சுவர்களை தடுப்பாக வைத்து ஒவ்வொன்றிற்கும் கதவு போட்டிருக்கிறார்கள். ஒரு குடும்பம் தங்கும் இடம் சுமாராக 150 முதல் 200 சதுர அடிக்குள்தான் இருக்கும். அந்த வீடு இருக்கும் வீதியில் மட்டும் இளங்காலைப் பொழுதுகளில் அவ்வப்போது ஒரு ஆண் ஒரு பெண் ஓரிரு குழந்தைகள் என தங்களுக்குள் சில அடிகள் தூரம் இடைவெளி விட்டு நடந்து வந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் தலையில் மூட்டை முடிச்சுகள் இருக்கும்.

அநேகமாக ரப்திசாகர் ரயில் வந்து சென்றிருக்கலாம். அந்த ஐந்து வீடுகளிலும் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே தென்பட ஓரிரு வீடுகளில் மட்டுமே பெண்களும் குழந்தைகளும் தென்படுவர். தினந்தோறும் வரும் வழியென்பதால் அந்த வீட்டின் முன்னே இருக்கும் முகங்களை அவ்வப்போது பார்க்கத் தவறுவதில்லை. சமகால இடைவெளியில் அங்கு நான் பார்த்து பழக்கத்தில் கொண்டு வந்திருக்கும் முகங்கள் சட்டென மாறிப்போவது கண்டு ஆச்சரியப்படத்தான் வேண்டியிருக்கிறது.

தம் மண்ணை விட்டுப்போவது என்பதொன்றும் அவ்வளவு எளிதான காரியமன்று. இங்கே மண் என்பது அந்த நிலத்தை, மண் வகையை மட்டுமே குறிப்பதன்று. தன் வேரை அல்லது தன் கிளையை இடம் மாற்றுவது. இந்த இடமாற்றம் மிகப்பெரிய விளைவுகளை மௌனமாக நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது. இங்கிருக்கும் ஒரு கிராமத்திலிருந்து பெரு நகரத்தின் தகவல் தொழில்நுட்ப பள்ளத்தாக்கில் இறங்குபவனுக்கும், பீகார் மற்றும் ஒரிசாவின் சபிக்கப்பட்ட பகுதியிலிருந்து தமிழகத்தின் செழிப்பான ஒரு பகுதிக்குள் நுழைகின்றவனுக்கும் இருக்கும் மிகப் பெரிய ஒற்றுமைகள், அவரவர் திறன், தகுதிக்கு ஏற்ப பெரிய அளவில் பொருளீட்டுகிறார்கள் என்பதுதான். அதோடு அதற்கு நிகராய் தன் நிறத்தை இழக்கத் தொடங்குகிறார்கள் என்பதுவும்தான். தன் மண்ணில் தான் மகிழ்ந்திருந்த ஒவ்வொன்றோடும் புலம்பெயர்ந்த இடத்தில் இருப்பதை ஒப்பிட்டு உழலத் தொடங்குகிறார்கள் என்பதையும் கூட இணைத்துக்கொள்ளலாம். 

எது வசதியானதாகத் தோன்றுகிறதோ அதுவே ஒரு கட்டத்தில் அலுப்பூட்டுகிறது. எதை இலக்கென்று நினைத்தார்களோ, அதை எட்டியபின் அந்த உச்சியிலிருந்து இறங்க முடியாத அவஸ்தையும் ஏற்படுகிறது. மாற்றங்கள் கூடாதென்றில்லை. இந்த உலகில் மாறாமல் என்ன இருக்கின்றது. ஆனால் இந்த மாற்றங்களுக்குக் கொடுக்கும் விலை சமன் செய்யப்பட்டதா, சமன் செய்யப்படாததா, புரிந்துகொள்ளப்பட்டதா, ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதுதான் முக்கியமாகப் படுகின்றது.

 சத்தியமங்கலம் வனத்தின் ஒரு சரிவிலிருக்கும் கிராமம் அது. அங்கிருந்த மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் வேறானது. இன்றும்கூட அவர்களின் வாழ்க்கை முறை ஆச்சரியமானதுதான். அங்கு சென்று குடியேறிய மக்களின் வாழ்க்கை முறை வேறானது. சுமார் நாற்பது ஐம்பது ஆண்டு காலக் கலப்பு பல முரண்களைக் கொண்டது. காலம் காலமாய் அவர்கள் செய்து வந்த பயிர்கள் அங்கு சென்று குடியேறிய கொங்கு நில மக்களால் மாற்றப்பட்டிருப்பதைக் காண நேர்கிறது. அவர்களின் நிலத்திற்குள்ளும் செல்போன் கோபுரம் சிவந்து நிற்கிறது.

அந்தக் கிராமத்தின் சாலையோரம் நின்று கொண்டிருந்தேன். கூப்பிடு தொலைவில் வனம். ஒரு நபர் மட்டும் சுமார் 300 மாடுகளை அந்த சாலை வழியே ஓட்டிச் செல்கிறார். அவையாவும் நாட்டு மாடுகள். அவைகளுக்குள் பெரிதாகக் கலப்பு ஏற்படவில்லை. கிராமத்தின் வீட்டுப் பட்டிகளில் இருக்கும் மாடுகள் காலை வேளைகளில் ஒன்றாக அருகிலிருந்து வனத்தை நோக்கி விரட்டப்படுகின்றன. அவைகளுக்குத் தேவையான தீவனத்தை வனம் வைத்திருக்கிறது. அவைகளைத் தீனியாக எடுத்துக்கொள்ளவும் அந்த வனம் தனக்குள் சிறுத்தைகளையும் வைத்திருக்கிறது. கும்பலாகச் செல்லும் மாடுகள் தேடித் தேடி உண்கின்றன. சுதந்திரமாய்த் தங்களுக்குள் புணர்ந்து கொள்கின்றன. பசியாறியவுடன் அருகிலிருக்கும் நீர் நிலைகளில் நீரைப் பருகிவிட்டு தத்தமது பட்டியை தானாகவே மாலைப் பொழுதுகளில் வந்தடைந்து விடுகின்றன. அவை இடும் சாணம் சேகரிக்கப்படுகிறது.

சமவெளிப் புத்தி, ஒவ்வொரு மாட்டையும் வியாபாரக்கண்ணோடு பார்க்கிறது. ஒரு மாட்டின் விலை இவ்வளவு போகுமா, அவ்வளவு போகுமா என்று. அடுத்து இந்த மாட்டின் மூலமாக என்ன லாபம் கிடைக்கும் என்பதையும் கணக்கிடுகிறது. ஈரோடு பகுதியிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்பு அங்கு சென்று நிலம் வாங்கி(!) மஞ்சள் கரும்பு என விவசாயம் செய்பவரிடம் அவர்களின் பெருந்தொகையான மாடு வளர்ப்பு குறித்துக் கேட்டால் “இத வளர்த்துறதே சாணிக்கும் கறிக்கும்தான். சாணி வாங்குறதுக்கு ஆளு வருது. மாட்ட கேரளாவுக்கு கறிக்கு வித்துருவாங்க. எவன் பால் பீச்சி ஊத்துறான்”. மாடு என்பதை பாலுடன் மட்டும் பொருத்திப் பார்க்கும் சமவெளிப் புத்தி அந்த மாடுகளை கறவைக்கு அதிகம் பயன்படுத்துவதில்லை என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. 

ஆனால் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கை செம்மையானது, போற்றுதலுக்குரியவைதான். ஆனால் இங்கிருந்து புலம்பெயர்ந்தவர்கள் புதிது புதிதாய் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். காலம் காலமாய் கடைபிடித்து வந்த வாழ்க்கை முறையின் சங்கிலிக் கண்ணியின் துண்டிப்பைச் சகிக்கவும் முடியாமல். புதிதாய் வந்து மோதும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் ஒரு குழப்பமான நிலையிலேயே அவர்கள் நாட்களைக் கடந்து போகிறார்கள்.

ஒடியன் லட்சுமணன் தமிழில் எழுதியிருக்கும், எழுத்து வடிமற்ற இருளர்களின் மொழிக் கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது.

அஞ்சு இட்டிலிக்கூ
ஆறு
ஏக்கரே கொடாத்து

காலேவாயிலே
 

கல்லூ சொமக்கே நா  
மண்ணுபாசோ விடுகாதில்லே  
ம்க்கூம்  
எல்லா சூளேயும்  
இச்சாதாஞ் செவக்கு

(ஐந்து ட்டிலிக்கு விலை ஆறுஏக்கர். இருளனிடம் கைப்பற்றிய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கிறார்கள் கீழ்நாடுக்காரர்கள். மண்ணை பிரிய மனம் இல்லாத இருளன் அதே சூளையில் ரத்தம் சுண்ட ண் சுமக்கிறான்.)

ஏதேதோ காரணங்களின் அடிப்படையில் புலம்பெயர்தல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது அல்லது தவிர்க்க முடியாததென நாமே நம்பத் தொடங்கி விட்டோம். எல்லாப் புலம்பெயர்தலுக்குப் பின்னும் ஒரு போதாமை இருக்கத்தான் செய்கின்றது. புலம்பெயர்ந்தபின் பெயர்ந்தவருக்கோ அல்லது வந்திறங்கிய நிலத்திலிருப்பவருக்கோ ஒரு போதாமை மௌனமாய் வளர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. போதாமை வென்று கொண்டேயிருக்கிறது.-
”தமிழன் அமுதம்” திருவனந்தபுரம் பூஜப்புரைத் தமிழ்ச்சங்க இதழில் வெளியான கட்டுரை

3 comments:

Sivapprakasam Tharshikan said...

வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.

மணிகண்டவேல் said...

இப்ப எல்லாம் ஏன் பாஸ் மலையாளக்கரையோரம் எழுத மாட்டேங்குறீங்க??

NAGARJOON said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Home study spoken english
English speaking self learning
Home study english speaking
English Home study
Home learning english speaking
English speaking home learning
Speaking English training books
Spoken English learning books
Spoken English learning skills
Spoken english books