விடுபட மறுக்கும் விரல்கள்

அதிகாலைக் கனவொன்றில்
அடர்ந்து பூத்திருக்கும்
தாமரைக் குளத்தில்
தவறி விழுகின்றேன்

உடலெங்கும் பிணையும்
தாமரைத் தண்டுகளில்
தண்ணீர்ப் பாம்பொன்றின்
தழுவல் இருந்ததை
தாமதமாகவே உணர்கின்றேன்

கூடிய பதட்டத்தில்
நீந்திக் கரையேற
நினைக்குமென் கைகளை
தாமரை மேலிருக்கும்
தேவதையொருத்தி பற்றுகிறாள்

அவள் எடையோடு
என் எடையும் தாங்கும்
தாமரை மலர்த் தண்டின்
வலிமையை வியந்தபடி கரையேறி
கைகளை விடுவிக்க முனைகின்றேன்

கனவிலிருந்து விடுபட்டபின்னே
கைகள் விடுபடுமென
உறக்கத்தின் கதவுகளைத் திறந்து
விடியலை அனுமதிக்கின்றேன்
 
விடுபட மறுக்கின்றன
பிணைந்து கிடக்கும்
பிள்ளையின் பிஞ்சு விரல்கள்!

-

5 comments:

Rathnavel Natarajan said...

விடுபட மறுக்கின்றன
பிணைந்து கிடக்கும்
பிள்ளையின் பிஞ்சு விரல்கள்!
= அருமை சார்.

Muthusamy Venkatachalam said...

அவள் எடையோடு
என் எடையும் தாங்கும்
தாமரை மலர்த் தண்டின்
வலிமையை வியந்தபடி கரையேறி
கைகளை விடுவிக்க முனைகின்றேன்/////// மிகவும் ஆழமான காதலும்....தாம்பத்தியமும்.

அ. பாண்டியன் said...

வணக்கம் ஐயா
உயிரோட்டமான வரிகள். வரிகள் காட்சிகளாவே வைக்கப்பட்டது கண்டேன். இறுதி வரிகள் முத்தாய்ப்பு. சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு நன்றிகள்..

Srini Vasan said...

குழல் இனிது , யாழ் இனிது என்ற குறளுக்கேற்ப இனிமையான அனுபவம் !

lakshmi indiran said...

கனவுகளை விட வாழ்க்கை அழகானது.....