இரவு 11.05க்கு வந்து 11.10க்கு புறப்படவேண்டிய
மங்களூர் - சென்னை ரயில் 10.55க்கே வந்துவிட்டது. பெட்டியில் கிட்டத்தட்ட எல்லாரும்
உறக்கத்தில் இருந்தனர். எனக்கு ஒதுக்கப்பட்ட படுக்கை எண் 37. மத்தியில் இருக்கும் படுக்கை.
ஈரோட்டில் ஏறிய மூன்று பேர் அதே இடத்தில் வந்து தேடிக்கொண்டிருந்தார்கள். 33,36,38ல்
ஆட்கள் இல்லை. அந்த மூன்று எவை எனக் கண்டுபிடிக்க இரண்டு பக்கமும் விளக்குகளைப் போட்டு
அலசித் தீர்த்தார்கள். எனக்கு என் படுக்கை எதுவெனத் தெரிந்தாலும், அவர்கள் அலசி முடிக்கட்டுமெனக்
காத்திருந்தேன். நான் அவர்களின் பின்னே காத்திருப்பதைப் பற்றியெதும் கவலையின்றி 36ம்
எண் படுக்கையில் மூவரும் அமர்ந்த அடுத்த கணம் செல்போனை எடுத்து அதில் இருக்கும் படங்களைப்
பார்க்க ஆரம்பித்தார்கள்.
நான் அவர்களை உற்றுக் கவனித்தது உறுத்தியிருக்க
வேண்டும். ஒருவர் “ஏங்க” என்றார். சைகையால் அவர்கள் அமர்ந்திருக்கும் படுக்கைக்கு மேலே
மத்தியில் இருக்கும் படுக்கையைக் காட்டினேன்.
மீண்டும் குழப்பமும் அலசலுமாகத் தொடர்ந்தார்கள். ஒரு வழியாகத் தெளிவடைந்தவர்களாய் அவர்களுக்கு
36 கீழே, 38 மேலே மற்றும் எதிர்புறம் இருக்கும் 33 கீழே என்பதாய் முடிவுக்கு வந்தனர்.
மத்தியில் இருக்கும் படுக்கையை உயர்த்தினா கீழே உட்கார முடியாது என்பதைப் புரிந்துகொண்டவர்கள்
எதிர்புறம் இருந்த 33ஐ காட்டி ”சார் நீங்க அதை எடுத்துக்குங்க!” என்றார்கள். அதனால்
என ஒப்புக்கொண்டிருக்கக் கூடாதென போகப்போகத்தான் புரிந்தது. 34ம் எண்ணில் ஒரு அழகிய
இளம்பெண் உறங்கிக் கொண்டிருந்தார். இதையெல்லாம் அவர் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
11.10-க்கு ரயில் கிளம்பியது. மூவரும்
சென்னையில் பணியாற்றுபவர்கள் போலத் தெரிந்தது. எதோ நண்பன் கல்யாணத்துக்கு வந்திருப்பார்கள்
என்பதும், சமீபத்தில் முதுமலை சுற்றுலா சென்றிருக்கிறார்கள் என்பதும் புரிந்தது. காவிரி
பாலம் தாண்டுவதற்குள் விளக்கை அணைத்துவிட்டு படுத்துவிடுவார்கள் என நினைத்தேன். நள்ளிரவு
நேரம், மங்களூரிலிருந்ஹ்டு வரும் ரயில் என்பதால் ஏற்கனவே ஏறியவர்கள் தூங்குவார்கள்
என்ற எண்ணம் சிறிதுமற்று விளக்கைப் போட்டுக்கொண்டதோடு, செல்போனில் இருக்கும் படங்களைப்
பார்ப்பதும், பேசுவதும், சத்தமாகச் சிரிப்பதும் என அதகளம் செய்து கொண்டிருந்தார்கள்.
முன்பெல்லாம் வகுப்பில் குறும்பு செய்யும்
பசங்களைப் பேர் எழுதிக்கொடுப்பதுபோல், அடங்கவில்லை, மிக மிக அடங்கவில்லை என அவர்களின்
பெயர்களை எழுதிக் கொடுக்க வேண்டும் எனத் தோன்றியது. யாரிடம் கொடுப்பது, மத்திய இரயில்வே
அமைச்சர் சதானந்தாவிடமா கொடுக்க முடியும்.கொடுக்க வேண்டுமெனத் தோன்றியது. சிலநாட்களுக்கு
முன்பு அவர் வாசித்த ரயில்வே பட்ஜெட் நினைவுக்கு வந்தது.
என்றைக்குமே இல்லாத அளவு அன்று அந்த
மங்களூர் சென்னை வண்டியில் இருந்த S9 பெட்டி அநியாயத்திற்கு புதிதாக பளபளப்புடன் இருந்தது.
கேரளாவிலும் தமிழகத்திலும் பா.ஜ.க ஜொளிக்காத போதும் எப்படி பெட்டி தகதகத்து ஜொளிக்கிறது
என ஐந்தேமுக்காலாம் அறிவு கேட்டது. அட இது மங்களூர் வண்டியல்லவா, மங்களூர் கர்நாடகாவில்
உள்ளதாச்சே என ஒரு வியாக்கியானமும் தோன்றியது.
வண்டி சங்ககிரியைக் கடப்பது தெரிந்தது.
முன்னரே டிடிஆர் வந்து போயிருந்தார். காவலர்கள் இருவர் கடந்து போயினர். பக்கவாட்டில்
மேல் படுக்கையில் படுத்திருந்தவர் அவர்களை அழைத்து அவர் தலைக்கு மேல் போட்டிருந்த விளக்கை
அணைக்கச்சொன்னார் கண்ணை இறுக்கி மூடி தூங்கப்பார்த்தேன். ம்ஹூம், அவர்களின் சிரிப்பும்
கொண்டாட்டமும் என் தூக்கத்தை பிடித்து உதை உதையென்று உதைத்து கொண்டேயிருந்தது. அமர்ந்திருந்தவரில்
ஒருவர் எதிர்ப்பக்கம் மத்தியில் இருக்கும் படுக்கையை வேறு அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தார்.
விழித்துக் கொண்டிருந்த இளம் பெண் நினைவுக்கு வந்தார். காற்றைக்கிழித்து ரயில் ஓடிக்
கொண்டேயிருந்தது. புதிதாக ஒரு இளைஞர் அவர்களோடு வந்து சேர்ந்துகொண்டார்.
லைட் ஆப் பண்ணிட்டு சத்தம் போடாம இருங்களேன்
எனச் சொல்லத் தோன்றியது. எவ்ளோ நேரம் தான் ஆட்டம் போடுவார்களாய் எனப் பார்க்கலாம் என்றும்
தோன்றியது. அப்போதுதான் 37ம் எண் படுக்கையேதான் வேண்டுமென எடுத்திருந்தால் இப்படி இவர்கள்
உட்கார்ந்து ஆட்டம் காட்ட முடியாது என்றும் தோன்றியது.
வண்டி சேலத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
நீண்ட நேரமாய் தூங்கிக் கொண்டிருந்தவர்களை அவர்களின் கொட்டம் ஒன்னும் செய்யவில்லை போலும்.
அவர்களோடு நானும் ஈரோட்டில் ஏறியிருந்ததால் அவர்களின் குரலுக்கிடையில் என் தூக்கம்
க்கிய்யா...க்கிய்யா...எனக் கதறிக்கொண்டிருந்தது.
கடைசியாக பொறுமை இழந்து அவர்களிடம்
”ஏம்ப்பா தூங்கமாட்டீங்களானு!?” கண்டிக்கும் முன் ஆழ் மனதிலிருந்து “ங்கொய்யாலே....
இவங்களுக்கு கல்யாணம்னு ஒன்னு ஆச்சுன்னா... அன்னிக்கு ராத்திரி இவங்களை அக்கட்ட இக்கட்ட
நகராம புடிச்சு ஒரு இடத்துல உட்காரவெச்சு, நாலு பேரு சுத்தி உட்காந்து, கல்யாணத்தன்னிக்கு
செல்போன்ல எடுத்த படத்தையெல்லாம் பார்த்துப்பார்த்து கெக்கபிக்கனு சிரிச்சு, கத்திப்பேசி
சாவடிக்கனும்” என அவர்களைச் சபித்தேன். அந்த சாபத்தின் அபத்தம் எனக்கே பிடிக்கவில்லை.
ஏதோ ஒரு டெலிபதி அவர்களில் ஒருவரைத் தாக்கியிருக்க வேண்டும்.
விருக்கென என்னைப் பார்த்த ஒருவர்
“சார் உங்களுக்கு எதும் டிஸ்டர்ப் ஆகுதா!?” என்றார்
”இல்லைங்க உங்க ஜாலியான சேட்டைகளை கவனிச்சிட்டு வர்றேன். இது பத்தி நாளைக்கு ப்ளாக்ல ஒரு ஆர்டிகள் எழுதனும். காலைல இறங்குறதுக்கு முன்ன ஒரு போட்டோ எடுத்துக்கலாமா!?” எனக் கேட்டேன்!
”இல்லைங்க உங்க ஜாலியான சேட்டைகளை கவனிச்சிட்டு வர்றேன். இது பத்தி நாளைக்கு ப்ளாக்ல ஒரு ஆர்டிகள் எழுதனும். காலைல இறங்குறதுக்கு முன்ன ஒரு போட்டோ எடுத்துக்கலாமா!?” எனக் கேட்டேன்!
லேசாய்த் திகிலடைந்தவர்களாய் அவர்களுக்குள்
பேசிக்கொண்டார்கள்.
”மாப்ள நீ போடா, நாங்களும் படுக்குறோம்!”
என சில நிமிடங்களில் விளக்கை அணைத்தார்கள்.
4 மணிக்கு அரக்கோணத்தைத் தாண்டும்போதே
விழிப்பு வந்துவிட்டது. சென்ட்ரலில் இறங்குவதென்றால் பயமில்லாமல் தூங்கலாம். பெரம்பூரில்
இறங்க வேண்டுமென்பதால் எப்பொழுதுமே முன்னரே விழித்துக் கொண்டு இப்ப வருமா அப்ப வருமா
என காத்திருப்பதுண்டு.
எழுந்துவந்து வாய் கொப்பளித்துவிட்டு
கதவோரம் கொஞ்சம் நேரம் காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். ரயில் பெரம்பூரை நெருங்குவதாகத்
தெரியவில்லை. சலிப்புடன் இருக்கைக்கு வந்தேன். விளக்கு போடப்பட்டிருந்தது. ஒரு பெண்ணும்
அப்பாவும் உட்கார்ந்திருந்தார்கள். நடு, மேல் படுக்கை இரண்டும் காலியாகக் கிடந்தது.
அந்த பெண்ணின் அப்பா “பெரம்பூர் எவ்ளோ
நேரமாகும்” எனக் கேட்டார்
”நானும் அங்கேதான்” என்றேன்
அந்த மூவரில் அடிக்கடி அந்த பெண்ணின்
படுக்கையைப் பார்த்துக் கொண்டிருந்தவர், எதிர்புறம் மத்தியில் இருந்த படுக்கையில் திறந்த
வாயோடு எச்சில் வழிய வித்தியாசமாய்த் தூங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்துவிட்டு,
ஒரு புன்னகையோடு எங்கள் இருவரையும் பார்த்த அந்தப் பெண், தன் பெரிய மொபைல் வழியே வாய்
திறந்து வித்தியாசமாய் தூங்கிக்கொண்டிருந்தவரின் முகத்தை ஒரு படம் எடுத்துக்கொண்டார்.
பயபுள்ள நாளையிலிருந்து ஃபேஸ்புக்,
ட்விட்டர்ல எத்தனை லைக்ஸ், கமெண்ட்ஸ் வாங்கப்போகுதோனு நினைக்க…. “ஆடிய ஆட்டமென்ன…..
பேசிய வார்த்தையென்ன!” பாடல் எனக்குள் ஓட ஆரம்பித்தது!
-
4 comments:
அருமை சார்.
Super sir
செம அனுபவம்ணா!! அந்த பசங்க பன்னதுல நானும் ஒருகாலத்துல பண்ணிருக்கேன்னு நினைக்கும்போது ஒரு மாதிரியான குற்ற உணர்ச்சியும் வருது
Super kathir sir...
Post a Comment