முலைப்பால் - ஆனந்தவிகடன் கவிதை

பெருநகரங்களின்
உயர்ந்தோங்கிய குடியிருப்பருகே
கட்டடம் முளைக்கா நிலத்தில்
எப்படியோ முளைத்துவிடுகின்றன
பச்சையோடு
கொஞ்சம் புற்கள்

தின்று பசியாறுவதாய்ப்
பாவனை புரிந்தபடி
எங்கிருந்தோ மேய்சலுக்கு வந்திருக்கும்
கிழவியின் ஆடுகள்

கான்க்ரீட் மர நிழலோரத்தில்
ஒதுங்கும் தாய் ஆட்டின்
கனிந்த முலைக் காம்புகளை
எட்டிச் சப்புகின்றன இரண்டு குட்டிகள்

மூன்று மாதத்தில்
பால் மறக்கடிக்கப்பட்டு
வேலைக்கார ஆயாவின்
மடியிலிறுத்தப்பட்ட பிள்ளையொன்று
அவளின் சுருங்கிய முலை போர்த்திய
ரவிக்கையை இழுத்துப் பிடித்தவாறு
ஆட்டின் முலைக் காம்புகளை
பார்த்துக் கொண்டிருக்கிறது

மனதை வீட்டில் தொலைத்தபடி
அலுவலகப் பணியிலிருக்கும்
அம்மாவின் மார்புகளில்
வலி கூடிக்கொண்டிருக்கிறது!

-
ஆனந்தவிகடன் (17.07.2014) சொல்வனத்தில் வெளியான கவிதை

5 comments:

Chellappa Yagyaswamy said...

படிக்கும்போதே வலிக்கிறது கவிஞரே!

lakshmi indiran said...

பல லட்சம் குழந்தைபேற்றுக்கு மருத்துவமனைக்கு செலவு செய்து கடனாளியாகி,அதை ஈடுகட்ட குழந்தையை ஆயாவிடம் கொடுத்துவிட்டு வேலைக்கு செல்லும் நவீனகால தாய்மார்களின் அவலநிலையும் காணமுடிகிறது...
கவிதையில் ஒரு பெண்ணின் மனம் தெளிவாக தெரிகிறது....வாழ்த்துக்கள் ..

Thiyagu Raj said...

Excellent.

சே. குமார் said...

வலியைச் சொல்லும் கவிதை...
அருமை அண்ணா...

பழமைபேசி said...

நன்று கவிஞரே!

கட்டிடம்
மடியிலிருத்தப்பட்ட‌