கீச்சுகள்-48



நான் அங்கேயேதான் நின்று கொண்டிருக்கிறேன். அருகில் இருப்பதாகவோ, தூரத்திலோ இருப்பதாகவோ உணர்வதும், சொல்வதும் நீங்கள்தான்!
 
-

வனத்திற்குள் புகுவது போலிருக்கிறது, சில கவிதைகளுக்குள் தொலைந்துபோவது!

-

காற்றடைத்த பலூனை, பாறாங்கல்லெனச் சுமப்பதற்குப் பெயர் அறியாமை மட்டுமல்ல.... அறிவுகெட்டதனமும் கூட!

-

சொற்களைப் பொறுக்கி மௌனத்திற்குள் போடுகிறேன்



-

எதுவும் வேணாம்! எப்பவும் இரு!!” அன்பெனப்படுவது அழகியதொரு முரண்!

-

சூடு புடிச்ச குழந்தை ஒன்னுக்குப் போற மாதிரி நாலு துளி துளிக்கும்போதே, ”ஹைய்ய்யா.... மழைனு ட்விட் போடுற சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம்!

-

மௌனத்தை இதழ்களில் சேமித்தென்ன பயன், ஓயாத குரலொன்று உள்ளே ஒலித்தபடியே



-

நிலவைப் பார்த்து தன் போக்கில் நாய் குரைப்பதும்... அந்த நாயை நோக்கி காற்றில் கல் வீசுவதுமாய் சில நாட்கள் கரைகின்றன.

-

தற்கொலையில் வென்றவனை நாம் சந்திக்கவும், தற்கொலையில் தோற்றவனுக்கு நம்மைச் சந்திக்கவும் தைரியம் இருப்பதில்லை!

-


மனதில் கடலை நிறைத்துக் கொண்டு, அலைகளை மறுத்தல் நியாயமோ!? 


-



நகரில் வாழ்வோர் ஆற்றை நீந்திக் கடக்க முனைவதற்கு நிகரானது, கிராமத்துப் பெருசுகள் வேகம், நெரிசல் மிகு நகரத்து சாலையைக் கடப்பது!

-

தேவைப்படும் நேரத்தில் சில வார்த்தைகள் எத்தனை தேடினாலும் வசப்படுவதில்லை!

-

புருவத்துக்கும் கூடடைஅடிச்சு, அப்படி அந்த இளமையை யாருக்கு நிரூபிக்கப்போறீங்க தாத்தா! #மிடில_மொமெண்ட்

-

கோபத்திற்கான எல்லை வியப்பானவை. யார் மேல் கோபப்படுகிறோமோ, அதை அவர் எவ்வளவு தூரம் சகித்துக் கொள்கிறாரோ அதுவரை நீளும் கோபத்தின் எல்லைக்கோடு!

-

சளி காய்ச்சல் என யார் சொன்னாலும் உடனே அவர்களுக்கு கை வைத்தியம் சொல்லக்கூடாது என்பது, அவர்கள் நமக்கு இரண்டு மடங்காகச் சொல்லும்போது புரிகிறது!

-

விஷத்திற்கும் விலை உண்டு!

-


தன்னைப் போலல்லாத தன் நிழற்படமே எல்லோருக்கும் பிடிக்கிறது




-
ரோட்ல போறப்போ ஹார்ன் அடிச்சிட்டே இருந்தா மைலேஜ் அதிகம் கிடைக்கும்னும், எங்காச்சும் திரும்பும்போது இன்டிகேட்டர் போட்டா கரண்ட் பில் அதிகமாயிடும்னும் பலபேருக்கு லைசென்ஸ் எடுக்கிறப்போ ஆர்டிஓ ஆபிஸ்ல சொல்லிருப்பாங்களோ............!!!???

-

ஒன்று புரியவில்லையெனில்....
புரிந்துகொள்ள முயற்சித்தல் ஒரு வழி. நமக்கானதல்ல என ஒதுங்கிவிடுதல் மற்றொரு வழி. இரண்டையும் விட எளிது .... புரியாதது குறித்து கிண்டல் செய்துவிட்டு மறந்துவிடுதல்!

-

ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில வீட்டுமனைக்கு ரொம்ப பக்கத்திலேயே 'டோல்கேட்' அமைஞ்சிருக்குனு அடிச்சு விடுது ஒரு பக்கி.... #மிடில

-

நேரில் வந்து ஒன்னேமுக்கா மணி நேரம் கொலையாய் கொன்னு மொக்கை போட்ட நண்பரின் போனை வாங்கி 044-40504050க்கு ஒரு மிஸ் கால் கொடுத்துட்டேன்.

-

எதெல்லாம் செய்யக்கூடாதென்பது தெரிகிறது. செய்யாமல் இருப்பது எப்படியென்பது மட்டுமே புலப்படவில்லை!

-

பாவிகளா... அப்ப பாஸா, ஃபெயிலானு மட்டும்தானே கேட்பீங்க. இப்ப எடுத்தவுடனே மார்க் என்னனு கேக்குறீங்களே. எல்லாருமே முதல் மார்க் வாங்கமுடியுமா!?

-

வெறும் முந்தானை உரசலாய்த் தீண்டும் மழைக்கு மோகத்தின் உக்கிரத்தை யார் கற்றுத்தருவாரோ!?



-

லைலேண்ட் லாரி முன்பக்கம் மாதிரி இருந்த வயிறு, ’பழைய டாடா லாரிபோல மாறிட்டிருக்குது! #மாற்றம்_நிலையானது!

-

சாலை நெரிசல்களில், எதிரெதிரில் வாகனங்களில் சந்தித்துக்கொள்கையில் நொடிப்பொழுது தலையசைப்பு அல்லது உடல்மொழியைப் புரிந்துகொண்டு எதிரில் வரும்யாரோவுக்கு சட்டென வழி விடும் அதே சமூகம்தான், நெருங்கிய உறவு/நட்பில் எவ்வளவு விளக்கினாலும் சிலவற்றை புரிந்துகொள்ள மறுத்து முறுக்கிக்கொண்டே நிற்கிறது!

-

முலைப்பாலாய்ச் சொட்டும் கற்பனைகளை வடிகட்ட கருவியேதும் கண்டறியா கருணையாளனின் நீள் துயில் நீடிக்கட்டுமே!

-

கோபத்தை எப்படியெல்லாம் செலுத்தலாம் என்பதில் தெளிவாய் இருக்கும் மனுசப்பயலுக்கு, நேசத்தை எப்படிச் செலுத்துவதென்பதில் மட்டுமே பெருங்குழப்பம்!

-

நினைத்ததை நினைத்த கணத்தில் வெளிப்படுத்தாமல் தடுக்கச் செய்யும் சமரசத்தனம் () மொக்கைத்தனம் () கோழைத்தனம் () ______த்தனம் மிகும் பல கணங்களில், ஏதோ ஒரு நேர்மை மிளிரும் கணத்தில் இந்த எழுத்தை விட்டொழிந்து போகவேண்டும்!

-

குண்டுவெடிப்பு பேச்சில் இறந்தது ஒரு ஆள்தானா என ஏமாற்றத்தோடு வினவுகிறவனிடம் எப்படிக் கேட்பேன் அந்த ஒரு ஆளாய் ஏன் நீ இல்லாமல் போனாயென்று!

-


6 comments:

Pandiaraj Jebarathinam said...

கீச்சுகளும், சிந்தனைகளும் சிறப்பு..

nellai ram said...

மனதில் கடலை நிறைத்துக் கொண்டு, அலைகளை மறுத்தல் நியாயமோ!?

ராஜி said...

புருவத்துக்கும் கூட ’டை’ அடிச்சு, அப்படி அந்த இளமையை யாருக்கு நிரூபிக்கப்போறீங்க தாத்தா
>>
அதானே! நம் வயசு என்னன்னு நம் மனசுக்கு தெரியுமே! அப்புறம் எதுக்கு இந்த சாயம் அடிக்குறதுலாம்!?

சேக்காளி said...

//எல்லாருமே முதல் மார்க் வாங்கமுடியுமா//
மொத மார்க் னா 1மார்க்கா?

சேக்காளி said...

//போனை வாங்கி 044-40504050க்கு ஒரு மிஸ் கால் கொடுத்துட்டேன்//
எருமை மாட்டின் எண்ணெய் வந்துட்டா?

சேக்காளி said...

//கோபத்தை எப்படியெல்லாம் செலுத்தலாம் என்பதில் தெளிவாய் இருக்கும் மனுசப்பயலுக்கு, நேசத்தை எப்படிச் செலுத்துவதென்பதில் மட்டுமே பெருங்குழப்பம்//
என்ன கொழப்பம். 044-40504050 கொடுத்தா போதும்னு அழகான வழிய சொல்லிட்டீங்களே. ஒங்க போனு பத்திரம்பு.