விடுபட்டாலும்





தாழ்வாரத்தில் தத்தித்தாவும்
சிட்டுக்குருவிக்கு
சில அரிசி மணிகள் வீசிடவும்

குடிக்க தண்ணி கேட்கும் வயசாளியிடம்
தண்ணீரோடு மேசை மேலிருந்த
கொய்யாப்பழங்களில் இரண்டு தந்திடவும்

பேருந்துக்குக் காத்திருக்கையில்
பக்கத்திலிருக்கும் பள்ளிச்சிறுவனின்
கழுத்து மடிப்பைச் சரி செய்திடவும்

வீட்டிலிருந்து புறப்படுகையில்
மென்மையாய் இணைக்கு ஒரு
முத்தம் பதித்து நகர்ந்திடவும்

வாகன நிறுத்த வரிசையில்
தடுமாறும் ஒருவருக்கு
சில விநாடிகள் உதவிடவும்

நெருங்கும் நொடியில் சிவப்பு போட்டு
ஒரு சுற்றின் பின் பச்சை போடும்
காவலரிடம் புன்னகை வீசிவிடவும்

தபால் கொடுக்க படியேறி
தளர்ந்து வரும் போஸ்ட்வுமனிடம்
தண்ணி வேண்டுமா எனக் கேட்டிடவும்

வங்கி வரிசையில்
முண்டியடிப்பவரிடம்
சரி போங்க என வழிவிடவும்

பசியாற்றிய மதிய உணவின்
ருசிகுறித்து மனைவிக்கு
ஒரு குறுந்தகவல் அனுப்பிடவும்

இழுத்துத்தடிக்கும் வேலை குறித்து
வாடிக்கையாளரை அழைத்து
நேர்மையாய் நிலையை விளக்கிடவும்

நீண்ட நாள் பேசாத
நட்பை அழைத்து நலம் விசாரித்து
குடும்பத்தோடு வீட்டுக்கு வரச்சொல்லிடவும்

பிள்ளைகள் விரும்பும் நொறுக்களோடு
வழக்கத்திற்கு முன்பாகவே
வீட்டுக்கதவு மணியை அழுத்திடவும்.

தூசு படிந்து கிடக்கும்
ஒரு புத்தகத்தின்
சில பக்கங்களை வாசித்திடவும்

படுக்கையில் பிள்ளையின் காலை
வயிற்றின் மேல் போட்டுக்கொண்டு
வகுப்புக் கதை கேட்டிடவும்

பூத்திருக்கும் இவ்விடியல் போதும்
விடுபட்டாலும்
பிறிதொரு விடியல் பூக்கும்!

-

9 comments:

Prapavi said...

வாழ்க்கையே ஒரு கவிதைதான்! அருமை கதிர்! :-)

உஷா அன்பரசு said...

ஒவ்வொரு விடியலும் வாழ்க்கை கவிதையோடு...!

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - கவிதை அருமை - இணைக்கு முத்தமும், மனைவிக்கு குறுந்தகவலும், நொறுக்குகளோடு வீட்டுக் கதவின் மணியினை அழுத்துதலும், வகுப்புக் கதை கேட்பதும் தொடர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Subasree Mohan said...

Excellent!!

ராமலக்ஷ்மி said...

அருமை!!

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்குங்க கதிர்.

இராய செல்லப்பா said...

மிகவும் ரசித்தேன்.

Babu said...

சுகமான எண்ணங்கள். அழகான வரிகள். மனதிற்கு மிகவும் இதமாய் இருக்கிறது

Anonymous said...

so.. admirable...