பதுக்கி வைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு

திசையெங்கும் பறந்து சிறகு விரிக்கத் துடிக்கும் சிந்தனைப் பறவையை மெல்லக் கையிலேந்தி தலைவருடி யோசிக்கிறேன். எது குறித்த சிந்தனை எப்போதும் என்னால் தவிர்க்கமுடியாததாக இருக்கின்றது என்பது குறித்து.

குழந்தையொன்று பிறந்த செய்தி, பயணம், மேலே நகரும் மேகம், கண்ணீர் துளியின் வெதுவெதுப்பு, முத்தத்தின் சுவை, பணம்-கடன்-வட்டி, சமீபத்தில் போக வேண்டிய திருமணம், நேற்றுக் கிடைத்த பாராட்டு, வாசித்த கவிதை, அடுத்த வேளை சாப்பாடு என்னவாக இருக்கும், கரண்ட் இப்போ போகுமா போகாதா?.... என இது போன்ற சிந்தனைகள் ஒவ்வொரு நாளிலும் வரலாம் வராமலும் போகலாம். ஆனால் தினமும் ஒருமுறையேனும் மனதிற்குள் தவறாமல், தவறவே தவறாமல் வந்துபோவது ”மரணம்” என்பது குறித்த சிந்தனை மட்டுமே. அந்தச் சிந்தனையின் அளவு சூழலுக்கு ஏற்ப இமை முடியின் கனத்திலோ, ஒரு இரும்புப் பொதியின் அளவிலோகூட இருக்கலாம்.

பெரிதும் மரணம் என்பது வாசிக்கவும் நினைக்கவும் ஒரு கடுமையான கறுமை நிறைந்த சொல்லாகவே உணரப்படுகிறது. மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஒரு நிதர்சனமும்கூட. மரணம் குறித்துத் திட்டமிட்டுச் சிந்திப்பதில்லையெனினும் சிந்திக்காமல் இருந்துவிட முடிவதில்லை. காரணம் வாழ்க்கை என்பதே அதை நோக்கிய பயணம்தான்.

நாற்பதினை விரைவில் எட்டிப்பிடிக்கவிருக்கும் என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கிறேன். இதுவரை நான் என் குடும்பத்தில் நான்கு மரணங்களைச் சந்தித்திருக்கிறேன், ஆனால் அதற்கு ஈடு செய்யும் வகையில், ஒரே ஒரு ஜனனத்தைத்தான் வாழ்க்கை எனக்களித்திருக்கிறது. நான் சந்தித்த மரணங்கள் முதுமை, விபத்து, நோய் என வகைப்படுத்தப்பட்டாலும் மரணம் என்பது ஒன்றே ஒன்றுதான். மரணம் ஒன்றே ஒன்று என்றாலும் அது யாருடையது, எதனால் என்று பார்க்கும் போது அது தரும் உணர்வுகள் வேறுபட்டது.

ஒவ்வொரு தினமும் எப்படியாவது யாரையாவது நினைக்கையில், சந்திக்கையில், எதையாவது காணுகையில் என… எதன் வடிவத்திலாவாது மரணம் என்ற ஒரு சொல் சிந்தனைக் குளத்திற்குள் ’சொத்’ என விழுந்துவிடுகிறது. விழுந்த சொல் எதாவது அதிசயமான நேரங்களில் சலனமேதும் ஏற்படுத்தாமல் அமைதி காப்பதுண்டு. வழக்கமான அதிசயங்களற்ற பொழுதுகளில் சலனப்படுத்தவே செய்வதுண்டு. சில தருணங்களில் சலனம் அலைகளாகவும் மாறுவதும், எப்போதாவது அது ஒரு ஆழிப்பேரலையாக மாறுவதையும் தவிர்க்க இயலுவதில்லை.

ஒவ்வொரு மரணத்தையும் முதன்முதலில் எதிர்கொண்ட சூழல்களில் மனதிற்குள் விழுந்த பித்தினை காலம் கொஞ்சம் கொஞ்சமாக சலவை செய்திருக்கின்றது. எனினும் விழுந்த இடத்தில் ஏற்பட்ட தழும்பினை மட்டும் எதனாலும் சமன் செய்திடமுடிவதேயில்லை. அது விழும் நேரத்தில் தோன்றிய வலியும், காலப்போக்கில் அது நீர்த்து நீங்கியதன் நிதர்சனமும் சிறிது சிறிதாக மனதைப் பக்குவப்படுத்தவே செய்கின்றது.மரணம் தவிர்த்து எதனாலும் அத்தனை பக்குவத்தை, ஏற்றுக்கொள்ளும் மனோபாவத்தை தந்துவிட முடிவதில்லை. உறவுக்குள், அதுவும் உயிர் கலந்த உறவுக்குள் நிகழ்ந்த நிரந்தரப் பிரிவினால் தோன்றிய வெற்றிடத்திற்குள் எத்தனை செடிகள் முளைத்திடினும், ஒருபோதும் அந்தச் செடிகள் ஏனோ மலர்வதேயில்லை.

சமகால இடைவெளியில் விரும்பாலும் விரும்பியும் மரணங்களைக் கடந்து வந்து கொண்டேயிருக்கின்றேன். மரணம் குறித்த சிந்தனையும், உணர்வும் ஒரு பழகிய நாய்குட்டி போல மிக இயல்பாகவே உடனிருந்து கொண்டிருக்கின்றது. தினந்தோறும் அதுகுறித்த சிந்தனைச் சலனங்கள் ஏற்படுவதால், மரணம் குறித்த பயம் நீர்த்துப்போய், சகமனிதர்கள் மீதான கரிசனத்தின் அடர்த்தியைக் கூட்டச் செய்கின்றது.

கடந்துபோகும் ஒவ்வொருவரின் மரணமும் செல்லமாய்க் கண் சிமிட்டி என்னிடம் ரகசியமாய்ச் சொல்லும் வார்த்தைகள், “இன்னும் காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு. மரணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வந்துவிடும்”

-

8 comments:

அப்பாதுரை said...

மரணங்கள் வகைக்கொன்றானாலும் மரணத்தின் தாக்கம் ஒரே வகைதான் எனும் கருத்து பிடித்திருக்கிறது. பிரிவின் வேகம் தாக்கும் வரைக் காத்திருந்து துயர்படுவதை விட, பிரிவு தவிர்க்கமுடியாதது எதிர்பாராத வேளையில் தாக்கக் கூடியது என்பதை உணர்ந்து - நேயத்தோடு வாழ்வது எத்தனை முக்கியம் என்பதை உங்கள் கட்டுரை அழகாகச் சொல்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது போல் அந்தப் பக்குவம் தேவையானாலும் எளிதில் வருவதில்லை (நீர்த்து நீங்கிய நிதர்சனம் - அழகாகச் சொன்னீர்கள்).

Ganesh Kumar said...

மரணம் குறித்துத் திட்டமிட்டுச் சிந்திப்பதில்லையெனினும் சிந்திக்காமல் இருந்துவிட முடிவதில்லை. காரணம் வாழ்க்கை என்பதே அதை நோக்கிய பயணம்தான்.

anand kumar said...

கடந்துபோகும் ஒவ்வொருவரின் மரணமும் செல்லமாய்க் கண் சிமிட்டி என்னிடம் ரகசியமாய்ச் சொல்லும் வார்த்தைகள், “இன்னும் காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு. மரணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வந்துவிடும்”.........என்னை கவர்ந்த வரிகள்...........மிக மிக அருமை.

பழமைபேசி said...

1. www.erodekathir.comஇன் மறைவுக்கான காரணம்? அது மறுபிறவி கொள்ளுமா??

2. கவியரசு சொன்னது:

உயிர்த்த கணமே மரணத்திற்கான பயணமும் துவங்கி விடுகிறது. நாம் அனைவரும் சாவு ஊருக்குச் செல்லும் யாத்ரிகர்கள். ஒவ்வொருவரும் அவரவருக்கான பாதைகளில் சென்று கொண்டிருக்கிறோம்.

அன்புடன் அருணா said...

very true!

கோவை மு சரளா said...

மரணம் தவிர்க்க முடியாததுதான் வருவதற்குள் அன்பை வெளிப்படுத்த அறிவுறுத்தப்பட்ட இந்த வரிகளில் வாழ்வு உயிர்பிக்கிறது //“இன்னும் காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு. மரணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வந்துவிடும்” //

Amudha Murugesan said...

“இன்னும் காட்டாமல் பதுக்கி வைத்திருக்கும் அன்பை மரணத்திற்குள் செலுத்திவிடு. மரணம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வந்துவிடும்”\\ நிதர்சனம்...better late than never!

lakshmi indiran said...

என்னை கவர்ந்த பதிவு...எப்போது வேண்டுமானாலும் வர காத்திருக்கும் மரணத்தின் முன்பாக கொஞ்சமேனும் அன்பு செலுத்த கற்றுகொள்ளலாம்..