”நாளி” காடு சிந்திய ரத்தம் - ஆனந்தவிகடன் கட்டுரை

வ்வொரு மலைப் பயணத்திலும் உயிர் தொட்டுத் தாலாட்டும் குளிரை அனுபவித்தபடி உயரச் செல்லச் செல்ல... நீளமான விறகுக்கட்டினைத் தலைச் சுமையுடன் கடந்துசெல்லும் பழங்குடியினப் பெண்கள் கண்களில் படத்தான் செய்கிறார்கள். அவர்கள், காட்டில் காய்ந்த விறகுகளைப் பொறுக்கிப் பிழைக்கிறார்கள். காடு அவர்களுக்கு இலவசமாக விறகு தருகிறது என்ற மனோபாவத்தோடு கடந்துபோகிறோம் நாம். ஆனால், இன்று அந்த சுள்ளிகளுக்காக அவர்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம்.


 
காடு... அவர்களின் தாய்மடி. பூமி...கருவறை. ஆனால், இன்று அவர்களே அங்கு அகதிகளாக மௌனம் சுமந்து இருக்கிறார்கள் என்பதை எத்தனை சுகவாசிகள் உணர்கிறோம்?

தமிழகத்தின் வடமேற்கு எல்லையில் கேரளா, கர்நாடகத்தோடு இணைந்து பிணைந்துகிடக்கும் நீலமலை எப்படி சிதைக்கப்பட்டது என்ற வரலாற்று ஆவணம்தான் 'நாளி’ ஆவணப்படம். இரா.முருகவேள், 'ஒடியன்’ லட்சுமணன் இணைந்து எழுதி, இயக்கி இருக்கிறார்கள்.

காடுகளில் வாழும் அத்தனை விதமான உயிரினங்களில், தானும் ஒரு உயிரினமாக வாழ்ந்துவருகிறார்கள் பழங்குடியினர். சமவெளிகளில் வாழும் நாகரிகம் (!) அடைந்ததாக நம்பும் அறிவுஜீவிகள் அவர்களை எப்படிச் சீரழித்தார்கள் என்பதை ஆவணப்படுத்துகிறது 'நாளி’. சமவெளியில் இருந்தவன் சந்தன மரத்தில் வீடுகளை இழைக்க, ஆதிவாசி, மூங்கில்களாலே தன் குடியிருப்பை அமைத்துக்கொண்டான். சமவெளியில் இருப்பவன் பொழுதுபோக்குக்காக வேட்டையாட... ஆதிவாசி தன் உணவின் அவசியம்  தவிர, வேறு எதன் பொருட்டும் விலங்குகளைத் தொடவே இல்லை. 1830-களில் ஆங்கிலேயன் அழித்த சோலைக் காடுகளால், ஓடைகளில் நீர்வளம் பாதிக்கப்பட்டதாக அப்போதைய கோவை ஆட்சியர் சல்லிலன் ஆவணப்படுத்தியதை நினைக்கும்போது, அதன் பின் அழிந்த சோலைக் காடுகளும் சிதைந்த ஓடைகளும் மனதில் ரத்தம்  வடியவைக்கின்றன.

பணத்துக்காக நடப்பட்ட தேக்கு மரங்கள் தன் அருகே எதையும் வளரவிடாமல், மண்ணை மணலாக மாற்றி வனங்களை அழிக்கிறது. சீனாவில் இருந்துவந்த தேயிலை தென் இந்தியா, அஸ்ஸாமில் இருந்த அடர் வனங்களை அழித்தது மட்டும்  அல்லாமல் அங்கு இருந்த பழங்குடியின மக்களையும் கொத்தடிமை ஆக்கியது. காட்டில் இருந்த மனிதர்கள் சமவெளி மனிதர்களால் இப்படி சிதைக்கப்பட்ட கசப் பான வரலாற்றைத்தான் விவரிக்கிறது 'நாளி’.


வரி செலுத்தாத விவசாயிகள் மலைப் பாதைகளை அமைக்க அடிமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்பதும் தேக்குக் காடுகளை அமைக்க ஒவ்வோர் இடமாக அழிக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட பழங்குடிகள் ஒருகட்டத்தில் தங்கள் பூர்வீக வசிப்பிடங்களையே தொலைத்ததும் திடுக்கிட வைக்கிறது.

தங்கவேட்டை என்ற பெயரில் தோண்டி அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டக் காடுகள், நீர் வளத்துக்கு எனத் தேக்கப்பட்ட அணைகளால் மூழ்கி அழிந்த காடுகள், நீர் மின் திட்டங்களுக்கு எனச் சுரங்கங்களில் புதைந்துபோன காடுகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் காடு சிந்திய ரத்தம் அடர்த்தியான கவிச்சிவாடை அடிப் பதாகத் தோன்றுகிறது.

குடியிருப்பு, சொகுசு விடுதிகளைச் சுற்றிப் போடப்படும் கம்பி வேலிகளில் காலம் கால மாகப் பயணப்பட்ட தடங்களைத் தொலைத்த யானைகள் பாதை மாறி, வேலிகள் அமைத்து பழக்கப்படாத பழங்குடியினரின் பகுதிகளுக்குள் புகுந்து, அவர்களின் விளை நிலத்தைத் துண்டாடும் அவலம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.

நாட்டில் 30 சதவிகிதம் காடுகள் இருக்க வேண்டும் என்னும் அரசியல்தனத்தில் இந்தச் சமூகத்துக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதைக்  கொதிப்பாகப் பதிவு செய்கிறது 'நாளி’.  

பூர்வகுடிகளை விரட்டிவிட்டுத் தேக்கு மர வீடு, காபி, தேநீர், சுற்றுலா, சொகுசுஅரசியல் எனச் சிலர் இப்போது வாழ்ந்துகொண்டு இருப் பது எல்லாம் ஒரு வாழ்க்கையா?

இந்தக் கருத்துகளை மிகுந்த மெனக்கெடலுடன் ஆவணப்படமாக்கி இருக்கும் கோவன் வெளியீட் டகத்துக்குப் பாராட்டுக்கள்!
-
விபரங்களுக்கு : 91590 33939

நன்றி : ஆனந்தவிகடன்

-

6 comments:

அகல்விளக்கு said...

:(

என்ன சொல்ல அண்ணா...

கண்ணெதிராகவே நிறைய பார்த்துவிட்டேன்...

arul said...

thanks for sharing an important film

பழமைபேசி said...

படம் பார்க்க ஆசை!

அதியா வீரக்குமார் said...

”நாளி” யைப்பார்க்க உதவியதற்கு நன்றி மச்சி...

'பரிவை' சே.குமார் said...

படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் பகிர்வு.

கிருத்திகாதரன் said...

படத்தை பார்க்க தூண்டும் பதிவு..